.

Pages

Saturday, April 19, 2014

மல்லிபட்டினம் கலவரம் - எஸ்டிபிஐ - மமக - முஸ்லீம் லீக் கட்சிகளின் நிர்வாகிகள் நேரில் ஆய்வு ! [ படங்கள் இணைப்பு ]

தஞ்சை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேதுபாவசத்திரம் ஒன்றியத்தின் கீழ்வரும் மல்லிபட்டினம் பகுதிகளில் வாக்கு சேகரிப்பதற்காக பிஜேபி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் கருப்பு (எ) முருகானந்தம் நேற்று தனது ஆதரவாளர்களுடன் சென்றபோது ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான பொருட் சேதத்துடன் பலரும் பாதிப்படைந்தனர்.

அதன் தொடர்ச்சியாக மனித நேயமக்கள் கட்சியின் சார்பில் மாநில பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி.அப்துல் ஹமீது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தஞ்சை மாவட்டதலைவர் பிஎஸ் ஹமீது ஆகியோர் தலைமையில் அந்தந்த கட்சிகளின் நிர்வாகிகள் நேரில்சென்று ஆய்வு செய்தனர்.

மனிதநேய மக்கள் கட்சியின் செய்திகுறிப்பு :
கலவரம் நடைபெற்ற மல்லிப்பட்டினத்திற்கு மமக பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி கடந்த (16-04-2014) அன்று காலை சென்றார். அவரை ஜமாத் நிர்வாகிகளும், மமகவினரும் வரவேற்று சங்க அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

நடைபெற்ற சம்பவங்கள் குறித்து பொதுச் செயலாளர் கேட்டறிந்தார். இரு கட்சிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதல், சமூக மோதலாக ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டதாகவும், தினத்தந்தி பத்திரிக்கை, அப்பட்டமாக பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளதாகவும் ஜமாத்தினர் குறைகூறினர். தற்போது 22 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை ஜாமீனில் எடுப்பதற்கு மமக சட்ட உதவிகளை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

நேற்று நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில், மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த இந்துக்களும், முஸ்லிம்களும் ‘ஒற்றுமையாக இருப்போம்’ என வாக்குறுதிகளை பரிமாறிக் கொண்டதாகவும், சேதப்படுத்தப்பட்ட தர்ஹாவை இந்துக்கள் தங்கள் செலவில் சரிசெய்து தருவதாக கூறியுள்ளதாகவும் ஜமாத்தினர் கூறினர்.

மமக பொதுச் செயலாளரை சந்திக்க அவ்வூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் வருகை தந்தனர். அவர்களிடம், ‘அமைதியைப் பராமரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென்றும், பல சமூக மக்களும் வாழும் ஜனநாயக நாட்டில் மிகுந்த பொறுப்போடு நாம் செயல்பட வேண்டும்’ என்று பொதுச் செயலாளர் கூறினார்.

இச்சந்திப்பின்போது ஜமாத் தலைவர் முகம்மது ரபீக், செயலாளர் எச். சேக் அப்துல்லா, தமிழ்நாடு விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் எச். அஹமது கபீர், செயலாளர் எச். ரஹ்மத்துல்லா, பொறுப்பாளர்கள் அப்துல் ஜப்பார், கே.எச்.எச். முகம்மது ஹனீபா, அப்துல் மஹ்ரூப், எம்.கே.எம். அபுதாஹிர் மற்றும் மமக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

144 தடை உத்தரவு அமுலில் இருந்த போதிலும், மமக பொதுச் செயலாளர் மற்றும் அதிரை மமக நிர்வாகிகள் ஜமாத்தாரை சந்தித்துள்ளார்கள். இச்சந்திப்பு தங்களுக்கு ஆறுதலாகவும், மன நிம்மதியாகவும் இருப்பதாக ஜமாத் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

எஸ்டிபிஐ கட்சியின் செய்தி குறிப்பு :
மல்லிப்பட்டினத்தில் நடந்த சம்பவத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியினர்தான் காரணம் என்று வேண்டுமென்றே தவறான செய்தி பரப்பப்பட்ட நிலையில், கடந்த ஏப்ரல்,16 அன்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி.அப்துல் ஹமீது அவர்கள் தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகளுடன் மல்லிப்பட்டினம் ஜமாத்தார்களையும், ஊரின் முக்கியஸ்தர்களையும் நேரில் சந்தித்து பேசினார்.

அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளிடம், ஏப்ரல்,14 அன்று நடந்த சம்வத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சிதான் காரணம் என்று கூறியதை அவர்கள் தவறு என ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ கட்சி குறித்தும் பல்வேறு செய்திகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சுமார் 3 மணி நேரம் நடந்த இச்சந்திப்பு ஜமாத்தார்கள், பொதுமக்கள் மத்தியில் மன நிறைவையும், ஆறுதலையும் ஏற்படுத்தியது.

மேலும் சம்பவத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்கு தொடர்பாக, சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.

இதனைத் தொடர்ந்து பா.ஜ.கவின் கலவர தாக்குதலில் பாதிக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்ட மாநில பொது செயலாளர் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தர்மராஜை சந்தித்தனர். அப்போது பிஜேபினரால் திட்டமிடப்பட்டு சேதப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் படகுகள், வாகனங்கள் மற்றும் பெட்ரோல் பங்க் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது உடனே வழக்குப் பதிவு செய்து எஃப்.ஐ.ஆர் அளிக்கப்பட வேண்டும் எனவும், இதுபோன்ற சம்பவங்களின் போது பிஜேபி யினர் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்க்கொள்ள வேண்டும் என மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை வைத்தார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் செய்தி குறிப்பு :
கலவரம் நடைபெற்ற மல்லிப்பட்டினத்திற்கு முஸ்லீம் லீக் கட்சியின் தஞ்சை மாவட்டதலைவர் பிஎஸ் ஹமீது தலைமையில் மாநில இளைஞர் அணி துணைதலைவர் வழக்கறிஞர் முனாப், 'மணிச்சுடர் நிருபர்' சாகுல் ஹமீது ஆகியோர் கடந்த (17-04-2014) அன்று மாலை ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து பேசினார்கள். இதில் கலவரத்தால் கைது செய்யப்பட்ட அனைவரையும் வெளியே கொண்டுவர தேவையான நடவடிக்கையை மேற்கொள்வது எனமுடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

  1. நமது சமுதாய அமைப்புகள் ஒன்று கூடியது நமக்கு முதல் வெற்றி . வாழ்த்துக்கள் சகோதர்களே...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.