.

Pages

Friday, June 30, 2017

அதிரையில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் முப்பெரும் விழா ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஜூன் 30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 சார்பில் சுற்றுச்சூழல் தின விழா, கல்வி விழிப்புணர்வு, பெருநாள் சந்திப்பு - கலந்துரையாடல் ஆகிய முப்பெரும் விழா அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு, அதிரை சுற்றுச்சூழல் மன்ற நிறுவனர் ஹாஜி எம்.எஸ் தாஜுதீன் தலைமை வகித்தார். முன்னாள் அதிரை சேர்மன் எஸ்.எச் அஸ்லம், சுற்றுச்சூழல் மன்ற மருத்துவ ஆலோசகர் டாக்டர் அப்துல் ஹக்கீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக 'சமூக நீதி முரசு' ஆசிரியர் சி.எம்.என் சலீம், கலந்துகொண்டு 'பொற்காலம் திரும்பட்டும்' என்ற தலைப்பில் பேசியது; 
'கடந்த 50 ஆண்டுகளில் பூமியின் இயற்கை வளங்கள் அதிகளவில் அழிந்து விட்டன. இயற்கை வாழ்வியல் முறையில் ஏற்பட்ட மாற்றம் தான் எல்லா துன்பங்களுக்கும் காரணம். நீர் நிலைகளை பராமரிப்பது, மரங்களை பாதுகாப்பது உள்ளிட்ட பணிகளில் நாம் ஈடுபட வேண்டும். மழைநீர் மட்டுமே சுத்தமான குடிநீர். மழை நீரை சேகரிப்பதில் அனைவரும் ஆர்வம் காட்ட வேண்டும். பள்ளிக்கூட வகுப்பறைகளில் தினமும் குறைந்த பட்சம் 1 மணி நேரமாவது சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு பாடத்தை போதிக்க வேண்டும். இயற்கை பாரம்பரிய வாழ்வியல் முறை, இறை மார்க்க போதனை ஆகியவை, அழிவின் விளிம்பில் இருந்து நம்மையும், எதிர்கால சந்ததினரையும் பாதுகாக்கும்' என்றார்.

மேலும், அதிராம்பட்டினம் சிஎம்பி லேன், இஜாபா பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி அப்துல் ஹாதி முப்தி, அதிரை ஈஸ்ட் கோஸ்ட் அகடமி சிபிஎஸ்இ பள்ளி இயக்குனர் டி.வி ரேவதி, 'தரமான கல்வியே, வளமான வாழ்வியலுக்கு மூலதனம்' என்ற தலைப்பிலும், அதிரை சுற்றுச்சூழல் மன்றத் தலைவர் வ.விவேகானந்தம், 'துளிர் விடும் விதைகள்' என்ற தலைப்பில், பவர்பாயிண்ட் ஒளித்திரை மூலம் பார்வையாளர்களுக்கு விளக்கிப் பேசினார்.

முன்னதாக, சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் வரவேற்றுப் பேசினார். விழா முடிவில் மன்ற செயலாளர் எம்.எஃப் முஹம்மது சலீம் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், அதிரை சுற்றுச்சூழல் மன்ற நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரிமா சங்கம், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழா துளிகள்:
1. அதிரை சுற்றுச்சூழல் மன்ற நோக்கம், செயல்பாடு, எதிர்கால திட்டங்கள் குறித்து, சுற்றுச்சூழல் மன்றத் தலைவர் வ.விவேகானந்தன் பார்வையாளர்களுக்கு பவர்பாயிண்ட் ஒளித்திரை மூலம் விளக்கிக் கூறினார்.

2. விழா மேடையில், அதிரை சுற்றுச்சூழல் மன்ற நிர்வாகிகள் பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

3. நிகழ்ச்சிகள் அனைத்தையும் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் தொகுத்து வழங்கினார்.

4. விழாவில் சுற்றுச்சூழல் மன்ற நிறுவனர் ஹாஜி எம்.எஸ் தாஜுதீன் உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்களும் சீருடை அணிந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.

5. கல்விமுறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொழில் ஈடுபாடு உள்ளிட்டவை குறித்து சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக 'சமூக நீதி முரசு' ஆசிரியர் சி.எம்.என் சலீம், நிகழ்த்திய உரை பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
 
 
 
 
 
 
 

அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஜூன் 30
புனிதமிகு ரமலான் பண்டிகையையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் தலைமை அலுவலகத்தில் 'ஈத்மிலன்' எனும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் ஜூன் மாத மாதந்திரக் கூட்டம் செவ்வாய்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், அதிரை பைத்துல்மால் தலைமை நிர்வாகிகள் - மஹல்லா நிர்வாகிகள், உறுப்பினர்கள், துபாய், சவூதி, குவைத் உள்ளிட்ட வெளிநாட்டு கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சந்திப்பில் அதிரை பைத்துல்மால் எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் குறித்து கலந்தாலோசனை செய்யப்பட்டன.
 
அதிரை பைத்துல்மாலின் ஜூன் மாத சேவைகள் மற்றும் செயல்பாடுகளின் விவரங்கள்:
 
 
 

குவைத்தில் போலி சான்றிதழுடன் விடுமுறை எடுத்த 31,000 அரசு ஊழியர்கள் !

அதிரை நியூஸ்: ஜூன் 30
குவைத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகள் வாராந்திர விடுமுறை நாட்களாகும். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வளைகுடா நாடுகளில் ஈதுல் பித்ரு எனும் ஈகைப் பெருநாள் கொண்டாடப்பட்டதால் ஞாயிறு முதல் செவ்வாய் வரை 3 நாட்களுக்கு அரசு விடுமுறை வழங்கப்பட்டது.

அடுத்த வார விடுமுறை நாட்களான வெள்ளி, சனிக்கு இடையில் புதன் மற்றும் வியாழன் ஆகிய 2 நாட்கள் இடைஞ்சலாக வர சுமார் 31,000 அரசு ஊழியர்கள் போலியான மருத்துவ விடுப்பு சான்றிதழ்களை சமர்ப்பித்து சுமார் 9 நாட்கள் தொடர் விடுமுறையை அனுபதித்துள்ளதை குவைத் தொழிலாளர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் ஹிந்த் அல் ஸபீஃஹ் வன்மையாக கண்டித்துள்ளார்.

அலுவலகங்களும் சாலைகளும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடியதால் அன்றாட அரசுப்பணிகளும் ஸ்தம்பித்தன. உயர் அதிகாரிகள் பலர் பொறுப்புடன் பணிக்கு திரும்பியிருக்கையில் பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள இளநிலை ஊழியர்களும் அதிகாரிகளும் பணிக்கு திரும்பாததை அதிகார துஷ்பிரயோகமாகவே கருத முடியும்.

நீண்ட ஓய்வு தேவைப்படுவோர் வேலையிலிருந்து விலகி ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும் மாறாக பொதுநிதியிலிருந்து சம்பளம் பெறுவோர் வரம்பு மீறுவதை அனுமதிக்க முடியாது என்றும், போலியான மருத்துவ விடுப்பு சான்றிதழ்களை சமர்ப்பித்தவர்கள் மற்றும் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய மருத்துவர்கள் யாரும் தப்ப முடியாது என்றும் எச்சரித்துள்ளார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

Thursday, June 29, 2017

சீனப் பாட்டியின் குசும்பு !

அதிரை நியூஸ்: ஜூன் 29
விமான எஞ்சினுக்குள் காசை எறிந்த சைனீஸ் பாட்டியால் 6 மணிநேரம் விமானம் புறப்படுவதில் தாமதம் ஆனது. சுமார் 80 வயதுடைய சைனீஸ் பாட்டி ஒருவர் விமான விபத்துக்கள் மற்றும் விமானங்கள் காணமல் போவதைப் பற்றி கேட்டறிந்திருப்பார் போல் தெரிகிறது, அவரும் ஒரு நாள் விமானத்தில் பறக்க வேண்டிய நிலை ஏற்பட்டவுடன் வாழ்ந்து முடித்த 80 வயது பாட்டிக்கும் உயிர் மேல் ஆசை ஏற்பட்டதால் தனது இஷ்ட தெய்வமான புத்தரை வணங்கி விட்டு வழமைபோல் உண்டியலை தேடியுள்ளார்.

அவர் தேடிய உண்டியல் ஷங்காய் உள்நாட்டு விமான சேவையில் ஈடுபட்டுள்ள ஒரு விமான எஞ்சின் ரூபத்தில் தட்டுப்பட 'பயணம் நல்ல விதமாக அமைய வேண்டும்' என வேண்டி காசை எஞ்சினுக்குள் விட்டெறிந்துள்ளார். விளைவு அந்த விமான எஞ்சினை சரிசெய்து மீண்டும் பறக்க 6 மணிநேரம் கூடுதல் தாமதமாகியுள்ளது.

ஷங்காய் போலீஸார் பாட்டியின் வயதை கருத்திற் கொண்டும், அவரது நோக்கத்தை மதித்தும், சமூக வலைத்தள போராளிகளின் வேண்டுகோளை ஏற்றும் அந்தப் பாட்டியை மன்னித்து விடுவித்துவிட்டனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

கல்லூரி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு !

தமிழக அரசின் கல்வி உதவித்தொகை பெற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை அரசால் வழங்கப்படுகிறது.

முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்றவற்றில் பயிலும் மாணவர்கள் அரசின் கல்வி உதவித்தொகை பெற, அவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் விண்ணப்பப் படிவங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களில் பெற்று, நிறைவு செய்து, உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களிலேயே சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும், www.tn.gov.in/bcmbcdept என்ற இணையதளத்திலும் கல்வி உதவித்தொகை குறித்து திட்டங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது.

இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை, வண்ண வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பட்டா மாற்றம் பெரும் வசதி !

தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும் இசேவை மையம் செயல்பட்டு வருகிறது. பொது மக்கள் பிளாஸ்டிக் ஆதார் அட்டை, வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெறலாம். மின் கட்டணம் செலுத்தலாம். வருமானச் சான்று, சாதிச்சான்று, இருப்பிடச் சான்று, முதல் பட்டதாரி சான்று, பட்டா மாற்றம், கடவுச்சீட்டு பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி மற்றும் கும்பகோணம், பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் பொது  இ-சேவை மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வட்ட அலுவலகங்களில் சான்றுகள் பெறுவதில் உள்ள குறைபாடுகளை களைவதற்காகவும், மக்களுக்கு சிறப்பான முறையில் சேவைகள் அளித்திட வேண்டும் என்பதற்காகவும் அரசால், பொது  இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் பொது இ-சேவை மையங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்ட அலுவலகங்களில் மட்டுமே இயங்கி வந்த நிலையில், பொதுமக்களுக்கு கூடுதல் சேவை அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம், பட்டுக்கோட்டை மற்றும் கும்பகோணம் நகராட்சி அலுவலகங்களிலும் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது. இந்த 13 பொது  இ-சேவை மையங்கள் மட்டுமே தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இம்மையங்களில் வருமானச்சான்று, சாதிச்சான்று, இருப்பிடச்சான்று, முதல் பட்டதாரி சான்று, பட்டா மாற்றம் ஆகியவற்றிற்க்கு மனு கட்டணமாக ரூ.60/-ம் சமூக நலத்துறை மூலம் பெறப்படும் உதவிதிட்டங்களுக்கான சான்றுகளுக்கு மனு கட்டணமாக ரூ.120/-ம் பெறப்படுகிறது மேலும் இம்மையத்தில் கடவுச்சீட்டு (Passport) புதிதாக பெற, மற்றும் புதுப்பிக்கும் சேவை கட்டணமாக ரூ.100/-ம் பெறப்படுகிறது.

இம்மையங்களில் ஆதார் அட்டை பெற ஆதார் மையங்களில் பதிவு செய்து பெற்ற ஒப்புகை சீட்டு இருந்தால், அதை பயன்படுத்தி பிரிண்ட் (Print) எடுத்துக் கொள்ள ரூ.10/-ம், பிளாஸ்டிக் கார்டு வழங்கிட ரூ.30/-ம் பெறப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் மூலமாக வழங்கப்படும் வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கிட ரூ.25/-ம், வாக்காளர் அடையாள அட்டைகளில் திருத்தங்கள் மேற்கொள்ள ரூ.10/- சேவைக்கட்டணமாக பெறப்படுகிறது.

மேலும் மின் கட்டணம் செலுத்தும் இம்மையங்களில் செய்யப்படுகிறது. மின் கட்டணத் தொகை ரூ.1-லிருந்து ரூ.1,000/-க்குள் இருந்தால் அதற்கான சேவைக்கட்டணம் ரூ.15/- ஆகவும், மின் கட்டணத் தொகை ரூ.1001-லிருந்து ரூ.3,000/-க்குள் இருந்தால் அதற்கான சேவைக்கட்டணம் ரூ.25/-ஆகவும், மின் கட்டணத் தொகை ரூ.3,001-லிருந்து ரூ.5,000/-க்குள் இருந்தால் அதற்கான சேவைக்கட்டணம் ரூ.40/- ஆகவும், மின் கட்டணத் தொகை ரூ.5,001-லிருந்து ரூ.10,000/-க்குள் இருந்தால் அதற்கான சேவைக்கட்டணம் ரூ.50/- ஆகவும், மின் கட்டணத் தொகை ரூ.10,000/-க்கு மேல் இருந்தால் அதற்கான சேவைக்கட்டணம் ரூ.60/- ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், மின்கட்டணத் தொகையுடன் வரையறுக்கப்பட்டுள்ள சேவைக்கட்டணத்தைத் தவிர கூடுதலாக கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

பொதுமக்கள் தற்பொழுது பயன்டுத்தி வரும் குடும்ப அட்டைக்கு பதிலாக புதிதாக மின்னணு குடும்ப அட்டையை தமிழ்நாடு அரசின் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வழங்கி வருகிறது. ஏற்கனவே பெறப்பட்ட மின்னணு குடும்ப அட்டை தொலைந்து போயிருந்தாலோ அல்லது சேதமடைந்து பயன்படுத்த இயலாத நிலையில் இருந்தாலோ தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இ-சேவை மையங்களில் ரூ.30/- கட்டணம் செலுத்தி புதிதாக மாற்று மின்னணு குடும்ப அட்டை பெற்றுக்கொள்ளலாம்.

பொதுமக்கள் மின்னணு குடும்ப அட்டைகளில் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை நீக்குதல், குடும்ப அட்டையின் வகை ( Ration Card Type ) மாற்றம் செய்தல், சிலிண்டர்களின் விவரத்தினை மாற்றம் செய்தல், குடும்ப தலைவர் பெயரை மாற்றம் செய்தல், முகவரி மாற்றம் செய்தல் ஆகிய சேவைக்காக இ-சேவை மையங்களில் ரூ.60/- செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

மேற்காணும் சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் 1800 425 2911 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் அளிக்கலாம் அல்லது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தனி வட்டாட்சியரிடம் புகார் அளிக்கலாம்.

அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு மையங்களிலும் பொது இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இம்மையங்கள் கூட்டுறவுத் துறையால் நிர்வகிக்கப்படுகிறது. இம்மையங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் இணை பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) அவர்களிடம் புகார் அளிக்கலாம்.

நிர்ணயிக்கப்பட்ட சேவை கட்டணங்களை மட்டும் செலுத்தி மேற்காணும் சேவைகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் அனைத்து  இ-சேவை மையங்களிலும் செய்யப்படும் சேவையில் குறைபாடு காணப்பட்டாலோ அல்லது கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தெரிய வந்தாலோ மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் அளிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

6.5 கிலோ எடையில் பிறந்த குண்டு குழந்தை!

அதிரை நியூஸ்: ஜூன் 29
பிறக்கும் பச்சிளம் குழந்தைகளின் எடை பொதுவாக 2.7 கிலோ முதல் 4.1 வரை இருக்கும் அதாவது சராசரி எடை 3.5 கிலோவாகும். சில குறைமாத குழந்தைகள் மற்றும் ஒன்றுக்கு மேல் சூல் கொண்ட குழந்தைகளாக இருப்பின் சராசரியாக 2.5 கிலோ வரை இருக்கும்.

இந்நிலையில், அமெரிக்காவின் தென் கரோலினாவின் லெக்ஸிங்டன் நகரில் பிறந்த ஆண் குழந்தை ஒன்று சராசரி எடைக்கும் மேல் இயல்பை மீறி சுமார் 6.5 கிலோ எடையுடன் பிறந்துள்ளது. விளைவு, பெற்றோர்கள் தங்களின் அசாதாரண குழந்தைக்கு சரியான அளவில் பிறந்த குழந்தைகளுக்கான ரெடிமேட் ஆடைகள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனராம்.

SOURCE: EMIRATES 247
தமிழில்: நம்ம ஊரான் 

மரண அறிவிப்பு ~ முகைதீன் பாதுஷா (வயது 36)

அதிரை நியூஸ், ஜூன் 29
அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் வி.கே.எம் முஹம்மது ராவூத்தர் அவர்களின் மகனும், அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனும், செய்யது முஹம்மது புஹாரி அவர்களின் சகோதரருமாகிய முகைதீன் பாதுஷா (வயது 36) அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா நாளை (30-06-2017 ) வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

Wednesday, June 28, 2017

அதிரை ஈசிஆர் சாலையில் 'ஈஸ்ட் கோஸ்ட் அகடமி சிபிஎஸ்இ பள்ளி' தொடக்க விழா: நேரடி ரிப்போர்ட் ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஜூன் 28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையையொட்டி ஏரிப்புறக்கரை கிராம ஊராட்சி பகுதியில், அதிராம்பட்டினம் கல்வி அறக்கட்டளையின், 'ஈஸ்ட் கோஸ்ட் அகடமி' சிபிஎஸ்இ கல்விக்கூடத்தின் தொடக்க விழா புதன்கிழமை காலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளித் தாளாளர் ஹாஜி எம்.எஸ் தாஜுதீன் தலைமை வகித்து பேசுகையில்;
'இக்கல்விக்கூடம் வியாபார நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது அல்ல. அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளைச் சேர்ந்த கல்வியில் பின்தங்கிய மாணவ, மாணவிகள் உலகத்தரத்தில் தரமான கல்வி பயின்று, எதிர்காலத்தில் ஒரு தொழில் முனைவோராகவும், தலை சிறந்த விஞ்ஞானியாகவும், மத்திய, மாநில அரசு உயர் பணிகளில் அங்கம் வகிப்பவராகவும், மருத்துவர், வழக்கறிஞர், பொறியாளர், பேராசிரியர், இராணுவத்தில் பணியாற்றுபவர்களாக உருவாகி நாட்டிற்கும், சமூகத்திற்கும் பயன் தரக்கூடியவர்களாக மாற வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது' என்றார்.

விழாவில் அதிராம்பட்டினம் சிஎம்பி லேன் இஜாபா பள்ளிவாசல் தலைமை இமாம் மவ்லவி அப்துல் ஹாதி முப்தி கலந்துகொண்டு பேசுகையில்; நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் பயன்தரக்கூடிய சிறந்த கல்வியாளர்களை உருவாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ள இக்கல்வி நிறுவனம், சிறந்த சமூகத்தினரை உருவாக்கும் சிறந்த கல்வி நிறுவனமாக விளங்க வாழ்த்துகிறேன்' என்றார்.

சிறப்பு விருந்தினராக திருச்சி சிவானி கல்விக் குழுமம் பதிவாளர் முனைவர் ஆர். ராஜேந்திரன் கலந்துகொண்டு கல்விக்கூடத்தை தொடங்கி வைத்து பேசுகையில்;
கல்வியில் உயர்ந்த நிலை அடைய மொழி அறிவு அவசியம். மொழிகளில் சிறந்து விளங்க 4 படிகள் உள்ளது. அவை காதில் கேட்பது (Listening), சரளமாக பேசுவது, (Speaking) வாசிப்பது (Reading), எழுதுவது (Writing) ஆகியன ஆகும். குழந்தைகள் பேசும் தாய் மொழி, பள்ளிகளில் கற்பிக்கும் மொழிகள் இவைகளின் ஒற்றுமை, வேற்றுமைகளை கற்றுக்கொடுத்தால் மொழிகளை எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும். நம்முடைய குழந்தைகளை நாம் வாழும் தேசத்தில், நாம் வாழும் பகுதியில் முழு அறிவு பெற்றவராக மாற்றுவது ஒன்றுதான் நம்முடைய வாழ்க்கையின் நோக்கமாக இருக்க வேண்டும்' என்றார்.

தொடக்கத்தில், பள்ளி அரபி ஆசிரியர் மவ்லவி சிராஜுதீன் கிராத் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பள்ளி இயக்குனர் டி.வி ரேவதி வரவேற்றுப் பேசினார். விழா முடிவில் பள்ளி முதல்வர் பாலமுருகன் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள், இமாம் ஷாஃபி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி நிர்வாகப் பொருளாளர் முஹம்மது இப்ராஹிம், இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி முதல்வர் மீனா குமாரி, பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்கள், சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பாளர்கள், ஊர் பிரமுகர்கள், கல்வியாளர்கள், ஜமாத்தார்கள், கிராம பஞ்சாயத்தார்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

விழா துளிகள்:
1. அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு 47 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் தற்போது இப்பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரத்தில் நவீன கட்டமைப்பில் புதிய கல்வி நிறுவனம் 9 புதிய வகுப்பறையுடன் தொடங்கி உள்ளது.

2. கல்விக்கூடத்தின் ஆசிரியர்களாக புதிதாக பொறுப்பேற்று இருக்கும் நன்கு பயிற்சியும், அனுபவமும் பெற்ற, உயர் கல்வி பயின்ற ஆசிரியர்கள் விழா மேடையில் பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

3. கல்விக்கூடத்தில் புதிதாக இணைந்துள்ள மாணவ, மாணவிகளுக்கு சீருடை, நோட்டு, புத்தகங்கள் உள்ளிட்டவை விழா மேடையில் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.

4. விழாவில் பெண்களுக்கு தனியாக இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

5. விழாவில் மாணவ, மாணவிகளின் புதிய சேர்க்கை தீவிரமாக நடைபெற்றது.

சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் கீழ்காணும் முகவரியில் பெறலாம்.
திருமதி டி.வி ரேவதி
ஈஸ்ட் கோஸ்ட் அகாடமி
கிழக்கு கடற்கரைச்சாலை
ஏரிப்புறக்கரை, அதிராம்பட்டினம்
91 98416 99789 / 86103 55806

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
அகமது அன்வர்
யுனைடட் பவுண்டேஷன்
நடுத்தெரு, அதிராம்பட்டினம்
0091 79043 74092

குறிப்பு:
1. கே.ஜி வகுப்பு முதல்  கிரேடு III வகுப்பு வரை இருபாலர் கல்வி முறை..
2. கிரேடு  IV வகுப்பு முதல்  VII வகுப்பு வரை மாணவர்களுக்கு மட்டும்..