.

Pages

Friday, January 31, 2014

அதிரையரை அசர வைக்கும் அரியமான் பீச் ! [ புகைப்படங்கள் ]

அதிரையிலிருந்து ஈசி ஆர் சாலை வழியாக 175 கிலோ மீட்டர் தொலைவில் இராமேஸ்வரம் செல்லும் பிராதன சாலையில் பாம்பனிலிருந்து 11 கிலோ மீட்டர் முன்பாக இடது பக்கமாக பிரியும் குறுக்கு சாலையை கடந்து சென்றால் அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் அரியமான் கடற்கரை பகுதி அமைத்துள்ளது. பாக் நீரிணைப்பின் ஒரு பகுதியில் 150 மீட்டர் அகலமும், 2 கிலோ மீட்டர் நீளமும் உடைய இந்த கடற்கரைக்கு வார இறுதி நாட்களை கழித்திட பெருவாரியான மக்கள் வருகை தருகின்றனர்.

அமைதியான சூழலில் மென்மையான குளிர்காற்று தவழ்ந்து வரும் இந்த கடற்கரையில் கண்ணாடி போன்று பளபளக்கும் கடல்நீரில் தினமும் குளித்து மகிழ்வோர் ஏராளம். குறிப்பாக இராமநாதபுரம், இராமேஸ்வரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வசிப்போர் அடிக்கடி வந்து செல்கின்றனர். இவர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல் அடிக்கடி அதிரையர்கள் இந்த கடற்கரைக்கு படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக ஒருமுறை அங்கு சென்றவர் மறுமுறை மீண்டும் செல்ல தவறியதில்லை.

தொலை தூரத்திலிருந்து இங்கு வருகை தரும் பெரும்பாலானோர் தாங்கள் எடுத்துவரும் உணவை குளித்து முடித்தவுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகின்றனர். அதேபோல் இங்கு வருகை தரும் சிலர் சமைப்பதற்கு தேவையான சாமான்களை எடுத்து வந்து சமைத்தும் சாப்பிடுகின்றனர். சமைப்பதற்கு ஏற்ற பரந்த இடம் இங்கு காணப்படுவதால் உணவு பிரியர்களுக்கு மகிச்சியை ஏற்படுத்துகின்றன. சமையலுக்கு தேவையான அனைத்து சாமான்களையும் மறக்காமல் எடுத்து செல்வது நமக்கு ஏற்படும் வீண் அலைச்சலோடு மன உளைச்சலையும் தவிர்க்க உதவும். 

இங்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக அங்கு கழிவறை - குளியலறையை பராமரிக்கும் நண்பர் தெரிவித்தார். மண்டபம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் இந்த கழிவறை - குளியலறை கட்டப்பட்டிருந்தாலும் சிறு நீர் கழிக்க ரூபாய் 5/- ம், குளிக்க ரூபாய் 10/- ம் கேட்டு வாங்கிக்கொள்கிறார். கடலில் குளித்துவிட்டு அருகில் உள்ள மற்றுமொரு நீச்சல் குளத்தில் [ குஷி பீச் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது ] மீண்டும் ஒருமுறை குளித்து மகிழ்கின்றனர். இங்கு கட்டணமாக 30/- ரூபாய் வசூலிக்கின்றனர். படகுகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்தாலும் சவாரிகள் இன்றி காணப்பட்டன. 

இங்கு சுற்றுலா வருவோர், இங்கிருந்து அடுத்தடுத்து அமைந்துள்ள சீனியப்பா கடற்கரை, பாம்பன் பாலம், பாம்பன் படகு சவாரி, இராமேஸ்வரம், தனுஸ்கோடி, அரிய வகை நீர்வாழ் உயிரினங்களை உள்ளடக்கிய அழகிய தீவுகள் மற்றும் மாங்குரோவ் காடுகள் அமைந்துள்ள மன்னார் வளைகுடா தேசிய பூங்கா ஆகிய பகுதிகளை காணச்செல்ல தவறியதில்லை.












ஆதார் அட்டை மூலம் மானியம் வழங்கும் திட்டம் ரத்து ! வழக்கறிஞர் Z. முஹம்மது தம்பி தகவல் !!

ஆதார் அட்டை மூலம் மானியம் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

ஆதார் அடையாள அட்டை திட்டத்தின் கீழ், சமையல் கியாஸ் சிலிண்டருக்கான மானிய தொகையை பயனாளிகளின் வங்கி கணக்குக்கு நேரடியாக செலுத்தும் முறையை 18 மாநிலங்களில் உள்ள 289 மாவட்டங்களில் மத்திய அரசு அமல்படுத்தியது.

இந்த திட்டத்தின்படி, சமையல் கியாஸ் சிலிண்டர் வாங்குவோர் சந்தை விலையான 1,258 ரூபாய் கொடுத்து சிலிண்டரை வாங்கிக்கொள்ளவேண்டும். அந்த சிலிண்டருக்கு உரிய மானிய தொகையை அவர்களுடைய வங்கி கணக்கில் அரசு செலுத்திவிடும். இதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதால், இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த சூழ்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் இதுபற்றி வீரப்ப மொய்லி நிருபர்களிடம் கூறுகையில்;

ஆதார் அடையாள அட்டையின் அடிப்படையில் சமையல் கியாஸ் சிலிண்டருக்கான மானிய தொகையை பயனாளிகளின் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கும் திட்டத்தை ரத்து செய்வது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.

எனவே பொதுமக்கள் யாரும் ஆதார் அட்டைக்காக அலைந்து தங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு,
Z. முஹம்மது தம்பி BA., BL
9865997450

மாணவர் இந்தியா அமைப்பினர் நடத்திய பயங்கரவாத எதிர்ப்பு நாள் சிறப்பு கருத்தரங்கம் !

பயங்கரவாத எதிர்ப்பு  நாளான நேற்று மாலை சென்னையில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்க நிகழ்ச்சியில் திராவிட கழக தலைவர் கீ.வீரமணி, மனித நேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் M. தமீம் அன்சாரி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். 

மாணவர் இந்தியா அமைப்பினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மாணவர் இந்தியா அமைப்பின் செயலாளர் புதுமடம் அனீஸ், மாணவர் இந்தியா அமைப்பின் துணை செயலாளர் அதிரை சேக் அப்துல் காதர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




மரண அறிவிப்பிற்கு நன்றி அறிவிப்பு !

அன்புக்குரிய அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பு [ AAF ]  நிர்வாகிகள் மற்றும் அனைத்து சகோதரர்கள்-சகோதரிகள் மற்றும் அதிரை வலைத்தளங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.

கடந்த பத்து தினங்கள் என் மாமா நெய்னா முஹம்மது அவர்கள் திடீர் சுகவீனப்பட்டு,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நாட்டப்படி மரணமடைந்தது வரை, எங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் நீங்கள் அனைவரும் காட்டிய பாசம்,நேசம்,உபசரிப்பு,உதவி,துஆ இப்படி எங்களை ஆறுதல் படுத்தினீர்கள்.மருத்துவமனை,ஜனாஸா தொழுகை,நல்லடக்கம் என்று பெருந்திரளாக கலந்து கொண்டீர்கள்.உங்கள் வேலைகளை ஒதுக்கினீர்கள்,தூக்கம் தொலைத்தீர்கள்.இப்படி எல்லா வகையிலும் ஆறுதல் தந்தீர்கள், இதற்கு கைமாறு கிடையாது.மனிதனுக்கு நன்றி செலுத்தாதவன், இறைவனுக்கு நன்றி செய்ய முடியாது.

இதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கும்,உங்கள் குடும்பங்களுக்கும் இரண்டு உலகிலும் வெற்றி தருவானாக,ஆமீன்.

இன்ஷா அல்லாஹ்,இன்னும் இந்த அமைப்பை அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பு [ AAF ]  கட்டி எழுப்ப வேண்டும்.நாமும்,நம் சந்ததிகளும் பயன் பெற வேண்டும்,இன்ஷா அல்லாஹ் முஸ்லிமாக வாழ்ந்து,முஸ்லிமாக மரணிக்க வேண்டும்.ஆமீன்.

மேலும் அதிரை நியூஸ், அதிரை எக்ஸ்பிரஸ், அதிரை போஸ்ட் போன்ற தளங்கள் மரணம் பற்றிய செய்தியை வெளியிட்டு,உலக முழுதும் உள்ள அதிரை மக்களின் துவாக்கள் கிடைக்க காரணமாக அமைந்தன,அவைகளுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரின் மக்ஃபிரத்துக்கு துவா செய்யுங்கள்.

அல்லாஹ் மட்டுமே என்றென்றும் உயிரோடு இருப்பவன்,நாம் அனைவரும் மரணமடைய வேண்டியவர்களே.அல்லாஹ்வுக்காக,இந்த மரணத்தை-இழப்பை பொருந்திக் கொண்டோம், அல்லாஹ் நமக்கு முன் சென்ற அன்னாரையும்,பிறகு போக போகிற நம்மையும் மன்னிப்பானாக,ஆமீன்.

அர. அப்துல் லத்தீப் 

2014 ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்பு !

இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஹஜ் 2014–ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து, சில விதி முறைகள் மற்றும் வரையறைகளுக்குட்பட்டு, மும்பை இந்திய ஹஜ் குழு சார்பில் ஹஜ் விண்ணப்பங்களை தமிழ்நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது. சென்னை, எண்.13, மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸிடவர், மூன்றாம் தளத்திலுள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் செயலாளர் மற்றும் செயல் அலுவலரிடமிருந்து ஹஜ் 2014–ற்கான விண்ணப்பப் படிவங்களை பிப்ரவரி 1–ந் தேதியில் (நாளை) இருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை www.hajcommittee.com என்ற இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப்படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மனுதாரர்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 15 ஆகும்.

வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயற்படுத்தி வருகிறது. மார்ச் 15–ந் தேதியன்று அல்லது அதற்கு முன்பு வழங்கப்பட்டு, குறைந்தது 31.3.15 வரையில் செல்லத்தக்க பாஸ்போர்ட்டை விண்ணப்பதாரர்கள் வைத்திருக்கவேண்டும். ஐ.எப்.எஸ். குறியீடு உடைய வங்கியிலுள்ள தங்களின் கணக்கு விவரங்களை மனுதாரர்கள் அளிக்கவேண்டும். ஹஜ் 2014 பற்றிய விவரங்களுக்கு ஹஜ் 2014–ற்கான வழிமுறைகளைப் படிக்கவும் அல்லது இந்திய ஹஜ் குழுவின் மேற்கூறப்பட்ட இணையதளத்தை அணுக வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு 300 ரூபாயை திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியின் இணைப்பு வங்கி திட்டத்தின் மூலம் இந்திய ஹஜ் குழுவின் கணக்கு எண். 33564923057–ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகலை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு மார்ச் 15–ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

நன்றி : தினத்தந்தி

Thursday, January 30, 2014

என்னமோ நடக்குதுங்க! என்னான்டு கேட்டா அடிக்க வருதுங்க!!


மதூர் ஒரு பாரம்பரியமிக்க ஊர் என்றால் அது மிகையாகாதுங்க, வந்தவர்களை வாழவைத்துக் கொண்டிருக்கும் ஊர் நமது அதிரைங்க, இங்கு எல்லா மக்களும் அண்ணன் தம்பிகளாக சகோரத்துவம் ஓங்கி இருக்கின்ற ஊருங்க.

மார்க்க வல்லுனர்கள், கவிஞர்கள், படித்தவர்கள், அறிவுடையோர், நல்ல சிந்தனையுடையோர், செல்வமுடையோர், பொதுநல போக்குடையோர், சமூக ஆர்வலர்கள், எந்த பிரதி பலனும் எதிர்ப்பார்க்காமல் சமூக சேவை செய்பவர்கள், ஆசிரியப் பெருமக்கள், கல்விக்கூடங்கள், மருத்துவ மனைகள், திருமண கூடங்கள், இன்னும் எத்தனையோ அம்சம்சங்களை பெற்ற ஊருங்க.

பொழுது போகவில்லை என்று அலையத் தேவை இல்லைங்க, மற்ற ஊருகளைப் போல் இல்லாமல் இந்த அதிரை அந்த அளவுக்கு உன்னதமான சுகந்தமான ஒரு அம்சமான ஊருங்க.

ட்டுமான பணிகளை எடுத்துகொண்டால் அதுவும் அதிகம்க, கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களின் விலைகளும் அதிகம்க, கட்டுமான கூலியைப் பார்த்தால் அது மிக மிக அதிகம்க, வேலை செய்கின்றவருக்கு ஒரு கூலிங்க, அவரை கூட்டி வருகிறவருக்கு வேறு ஒரு கூலிங்க, செய்கின்ற வேலைகளெல்லாம் அவ்வளவு தரம் என்று சொல்ல முடியாதுங்க, முன்பெல்லாம் டீ வடை எல்லாம் அவங்கலோடங்க, இப்போ நம்மலோடங்க, இனிவரும் காலங்களில் டீக்கு பதில் நாட்டு முட்டைதானுங்க, வடைக்கு பதில் ஹல்வாங்க.

டைத்தெருவுகளில் உணவுக்காக கடல் சார்ந்த உணவோ, பறவை இன உணவோ, கால்நடை உணவோ, மரம் செடி கொடிகளில் காய்க்கின்ற உணவோ, நீரை சூடேற்றி பருகுகின்ற பானமோ எல்லாமே அதிகம்க, விலைகளும் வானத் தொடும் அளவுங்க.

ரையூர்தெருவில் உள்ள மீன் மார்கெட்டுக்கு நம் பெண்கள் கூட்டு கூட்டாக சேர்ந்து ஆட்டோ பிடித்து போய் மீன் மற்றும் காய்கறி வாங்கி வருகிறாங்கங்க. ஒரு ஆட்டோ சவாரிக்கு அங்கு போய்திரும்பி வர கட்டணம் 100ரூபாய். ஒரு நாளைக்கு சராசரியாக முப்பது-நாற்பது ஆட்டோ சவாரி. கட்டணத்தை கணக்கு பாருங்க. 3000-4000ரூபாய்தானுங்க. நம் ஊருக்கு மத்தியில் பெண்களுக்கென்று ஒரு மார்கெட் திறந்து இருந்தால் எவ்வளவு மிச்சம். பணம் ஒரு பக்கம் மிச்சமாக இருந்தாலும் அவதி, வேதனை, இல்லாமல் இருக்குமுங்க, நேரமும் மிச்சமுங்க.

ங்கு வீட்டு மனைகளெல்லாம் தீப்பெட்டி அளவுதானுங்க, விலையை கேட்டா அது ஒரு கன்டைனர் அளவுங்க இது ரொம்பவே அதிகம்க, மீன்களும் ஒன்னும் சரி இல்லைங்க, விலையைக் கேட்ட அதுவும் அதைவிட அதிகம்க, இருந்தாலும் விற்றுப் போய்டுதுங்க, அது என்ன தங்கமான்னு கேட்ட பல்லை இறுக்கிக்கொண்டு ஒரு முறை முறைக்குதுங்க.    

ண்களும் சரி, பெண்களும் சரி காசுகளை சிலவு செய்வதில் இளம்வயது ஆண்களும் பெண்களும் மிக மிக அதிகம்க, சிலவு செய்வதில் சரிக்கு சரி சமம்ங்க, சிக்கனம் என்பது மிக மிக குறைவுங்க, இதற்கெல்லாம் காரணம் யாரென்று பார்த்தால் கண்டு கொள்ளாத ஒரு சில தகப்பன்மார்களும் கணவர்மார்களுமுங்க.

வாகன போக்குரத்தும் மிக மிக அதிகம்க, அதன் கட்டணங்களும் போகின்ற வேகங்களும் அதைவிட அதிகம்க.

ரண்டு சக்கர வாகனம் கடனுக்கு கிடைக்குது என்று அதை வாங்கி கண்ணா பின்னா என்று ஓட்டி பல விபத்துக்கு ஆளாகி மிகுந்த துயரம். அவசியம் ஏற்பட்டால் வாகனம் ஓட்டியே ஆகணும் அதில் தவறேதும் இல்லைங்க, இருந்தாலும் இவ்வளவு கவனக்குரைவோடு இந்த வேகம் தேவையா? வாகனம் ஓட்ட வயது வரம்பு என்று ஏதும் இல்லையா? என்னங்க இது?

ந்த ஊரிலும் இல்லாத அளவுக்கு நமதூரில் விளம்பர வண்டிகள், பழ வண்டிகள், தெருவுக்கு தெரு அதிகம்க, அதன் ஒலி எழுப்புதலும் காது குருத்தெல்லாம் தெறிக்கின்ற அளவுக்கு இருக்குதுங்க, வாங்கித் தின்ன ஆள் இருக்குதுங்க, என்னான்டு கேட்க ஆள் இல்லைங்க.  

மதூர் பெற வேண்டிய அனேக அரசு சார்ந்த சலுகைகள் தடைபட்டு கிடக்குதுங்க, அதெல்லாம் கிடைக்குமா? அல்லது கிடைக்காமல் போய்விடுமா? நீள அகல உயர  இரயில் பாதை அமைத்து இரயில் வண்டிகள் எப்போது ஓடப்போகுதுங்க? இன்னும் எவ்வளவோ காரியங்கள் நடக்கப்போகுது என்று சொல்றாங்க, ஆனால் நடக்களைங்க.

தார் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டர் ஐடி, ரேசன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், வீட்டு வரி, வாட்டர் பில், எலெக்ட்ரிக் பில், டெலிபோன் பில், மொபைல் போன் பில், வங்கி பாஸ்புக், இன்ஸ்யூரன்ஸ், வீட்டு பத்திரம், வீட்டு பட்டா, பிறந்த சான்றிதழ், படித்த சான்றிதழ், கேபிள் இணைப்பு பில், ஒரே கடையில் வாடிக்கையாக வாங்கும் மளிகை சாமான்கள் பில், காய்கறி பில், இறைச்சி மீன் இறால் பில், மருத்துவ பில், இவை எல்லாம் பக்காவாக ஒரே பெயரில் இருக்குதுங்க, இருந்தாலும் நம்புவதற்கு அரசு அதிகாரிகள் யோசிக்கின்றாங்கங்க. இந்தப் பிரச்னையை போக்க எல்லாத்தையும் ஒருங்கிணைத்து ஒரே அட்டையாக கொடுத்தால் எவ்வளவு வசதிங்க. யாருங்க யோசிப்பது? சொல்லுங்க.

மதூரில் உள்ள அனைத்து வங்கிகளும் நல்லபடியாக சம்பாதிக்குதுங்க, ஆனால் இன்றுவரை எந்த வங்கியாவது ஒரு மரத்தையாவது நட்டுருக்குதாங்க?

ங்கு நடக்கின்ற சங்கதிகளை இப்படி ஒவ்வொன்றாக பட்டியல் போட்டு பார்த்தால் எல்லாமே அதிகம். இருந்தாலும், எதுவும் தடை இல்லாமல் நிறைவேறிவிடுகின்றதுங்க.

மதூரில் எல்லாமே அதிகம்க ஆனால் ஒற்றுமை இல்லைங்க. ஒற்றுமை இல்லாததினால் விழிப்புணர்வு அறவே இல்லைங்க.

ன்னங்க இது? நாமெல்லாம் எப்போதுங்க ஒற்றுமையாக விழிப்புணர்வோட செயல்படப் போறோம்முங்க? விருந்து சோறுன்ன ஒற்றுமையை பாருங்க, உலகமே அசந்துவிடுமும்க.

ன்ஷா அல்லாஹ், என்று நாம் எல்லோரும் சொல்றோமுங்க, சொல்லிப்புட்டு முயற்சி இல்லைங்க.

நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டால் முடியாதது ஏதும் உண்டோ? எல்லாவற்றையையும் ஒரு கட்டுக்குள் கொண்டுவரணும் என்றால் ஒற்றுமை வேண்டும், ஒற்றுமையோடு செயல்பட இருக்கின்ற பெலன் போதாதா? இருக்கின்ற பெலத்தோடு செயல்படுவோம்.

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம். அதுபோல் குடும்பம் செழிக்க குடும்ப ஒற்றுமை வேண்டும், குடும்ப ஒற்றுமை வேண்டும் என்றால் இளையவர்கள் பெரியவர்களுக்கு கீழ்படிந்து மதித்து நடக்க வேண்டும்.

பெரியவர்கள் இளையவர்களுக்கு அறிவுரை ஆலோசனை சொல்வது நல்லதுக்குதானே அன்றி தீயதுக்கு அல்ல.

ன்னமோ நடக்குதுங்க, நமக்கு ஒண்ணுமே புரியலைங்க, என்னான்டு கேட்டா அடிக்க வருதுங்க, 20-25வருடங்களுக்கு முன்னாடி இப்படி இல்லைங்க, எல்லாமே இப்பதானுங்க.

இப்படிக்கு.
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். கோ.மு. முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை 13வாடி, வண்டிப்பேட்டை.


Wednesday, January 29, 2014

பிலால் நகர் ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியளித்த அதிரை நகர தமுமுக வினர் !

அதிரை பிலால் நகரைச் சேர்ந்த சமிபத்தில் தனது கணவனை இழந்து, பள்ளி செல்லும் 3 பெண் குழந்தைகளோடும், மற்றொரு குழந்தையை இன்னும் 4 மாதத்தில் ஈன்றெடுக்கும் தருவாயில் ஏழ்மை  நிலையில் வாடகை வீட்டில் வசித்து வரும் ஏழை சகோதரி ஒருவருக்கு வாழ்வாதார உதவியை த.மு.மு.க தஞ்சை தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சாகுல் ஹமீது, அதிரை நகர இணைச்செயலாளர் கமாலுத்தீன் மற்றும் பிலால் நகர் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் வழங்கப்பட்டது.


அதிரைக்கு மழை வேண்டி செடியன் குளத்தில் 'மழை தொழுகை'


மழை தொழுகை நடைபெற உள்ள இடத்தின் புகைப்படங்கள்

நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்த அடிப்படையில்,

இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் சனிக்கிழமை (01/02/2014) அன்று, தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் செழியன் குளத்தில் 'மழை தேடித் தொழுகை' நடத்த முன்னேற்பாடுகளை அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) செய்து வருகின்றது.

அனைவரும் திரண்டு வாரீர் என அன்போடு அழைக்கின்றோம்.

மேலும் விபரங்களுக்கு:
சகோதரர் ஜமாலுதீன் 9488111121

தகவல் : அதிரை அமீன்
Source : http://aimuaeadirai.blogspot.ae/2014/01/01022014.html

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டிகள் [ புகைப்படங்கள் ]

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் 65 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் இன்று [ 29-01-2014 ] காலை 9 மணியளவில் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.

வரவேற்புரை நிகழ்த்திய பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி அவர்கள் வந்திருந்த அனைவரையும் அன்புடன் வரவேற்றார்.

முன்னதாக அதிரை காவல்துறை உதவி ஆய்வாளர் சுந்தர் ஏற்றி வைத்த ஒலிம்பிக் சுடரை விளையாட்டு வீரர்கள் கையில் ஏந்தியவாறு அதிரை பேருந்து நிலையத்திலிருந்து பள்ளி மைதானத்தை நோக்கி விரைந்து வந்தனர். இதைதொடர்ந்து அணிவகுப்பு மரியாதையுடன் விளையாட்டு போட்டிகள் ஒவ்வொன்றாக நடைபெற்றது.

விளையாட்டு போட்டிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி மற்றும் உதவி தலைமை ஆசிரியர் ஹாஜி முஹம்மது ஆகியோரின் மேற்பார்வையில் உடற்கல்வி ஆசிரியர்கள், ராஜா, ஜெயகாந்தன் ஆகியோர் வழிநடத்தினர்.

நிகழ்சிகளை தமிழ்துறை ஆசிரியர்கள் அஜீமுதீன், உமர் பாரூக், கோப்பெருஞ்சோழன் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசியர் கழக பொறுப்பாளர்கள், , முன்னாள் ஆசிரிய பெருமக்கள், மாணவர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளியின் விளையாட்டு வீரர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்களின் தனித்திறமையை வெளிப்படுதினார்கள். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெறும்.










அதிரையின் முக்கிய பகுதிகளில் AAMF காலண்டர்கள் விநியோகம் !

அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு [ AAMF ] சார்பாக கடந்த இரு வருடங்களைபோல இந்த வருடமும் அதிரையில் உள்ள முக்கிய பகுதிகளுக்கு காலண்டர்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

இக்காலண்டரில் அரசின் விடுமுறை தினங்கள், அதிரையின் முக்கிய தொலைப்பேசி எண்கள், தஞ்சை - சென்னை- தஞ்சை வந்து செல்லும் இரயில்களின் கால நேரங்கள், அவசரகால தொலைப்பேசிச் தொடர்புகள் குறிப்பாக அதிரை, பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சை மருத்துவமனைகளின் தொடர்புகள், மேலும் தினம் ஒரு ஹதிஸ் என ஒவ்வொரு நாளிதழிலும் அச்சிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதார் பதிவு எண் கட்டாயமில்லை ! கேஸ் உரிமையாளரை சந்தித்த எஸ்டிபிஐ கட்சியினர் தகவல் !

அதிரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மானிய விலையில் கியாஸ் சிலிண்டர் வழங்குவதற்கு ஆதார் எண் கேட்டு சமையல் எரிவாயு நிறுவனம் பொதுமக்களிடம் பெற்று வந்தது. 

இது குறித்து உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காக அதிரை நகர எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக அதன் தலைவர் அப்துல் ரஹ்மான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் நிஜாம் ஆகியோர் அடங்கிய குழுவினர்கள் கடந்த அன்று [ 23-01-2014 ] அதிரையில் இயங்கி வரும் இன்டேன் கேஸ் அலுவலகத்திற்கு சென்று அதன் உரிமையாளரிடம் பேசினார்கள். பேசிய வகையில் தற்போது ஆதார் பதிவு எண் கட்டாயமில்லை என்ற தகவலை தந்ததாக நம்மிடம் தெரிவித்தனர். 

இதையடுத்து எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக இந்த தகவலை அதிரை மற்றும் அதிரையை சுற்றி வாழக்கூடிய பொதுமக்கள் அறிந்துகொள்வதற்காக ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலமாக விளம்பரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நேற்று அதிரை நகரில் ஆங்காங்கே ஒட்டப்பட்ட நோட்டீஸ்

Tuesday, January 28, 2014

அதிரையில் பழனிபாபா நினைவாக விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் பொதுக்கூட்டம் !

தலித் - இஸ்லாமிய ஒற்றுமைக்காகவும், உரிமைக்காகவும் போராடிய பழனி பாபா அவர்களின் நினைவாக விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக இன்று இரவு 7 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகில் பொதுக்
கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு பேச்சாளர்களாக விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், துணைத்தலைவர் அதிரை மு.மு. இப்ராஹீம், வழக்கறிஞர் வேங்கை சந்திர சேகர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

இந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் அதிரை நகர பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். போலீசார் பாதுக்காப்பு பணிகளை வழங்கினார்கள்.

அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் கட்டுமான பணிக்கு பொறுப்பாளர்கள் நியமனம் !

அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் கட்டுமானம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நமதூர் ஜாவியாவில் கடந்த [ 26-01-2014 ] அன்று இலங்கை காத்தான்குடி ஜாதமி அத்துல்ஃபலாஹ் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் முஹம்மது அப்துல்லா ஆலிம் அவர்கள் தலைமையிலும், அதிரை ரஹ்மானியா அரபிக்கல்லூரியின் முதல்வர் முஹம்மது குட்டி ஆலிம், லெ.மு.செ. அப்துல் காதர் ஆலிம் ஆகியோர் முன்னிலையில் இனிதே துவங்கியது.

இந்த கூட்டத்தில் அல் அமீன் ஜாமிஆ பள்ளியின் கட்டுமான பணிகள் குறித்து ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கத்தின் துணைத்தலைவர் குலாப்ஜான் அன்சாரி அவர்களால் எடுத்துக்கூறப்பட்டது.

கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு தரப்பின் ஆலோசனைக்கு பிறகு இறுதியில் ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளோடு, ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுமான கமிட்டியினர் இணைந்து பள்ளி கட்டுமானத்திற்குரிய பணிகளை தொடர்வார்கள் என முடிவு செய்யப்பட்டது.

முன்னதாக வரவேற்புரையை வழக்கறிஞர் அப்துல் முனாப் நிகழ்த்தினார். இறுதியில் துவாவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. இந்த கூட்டத்தில் அதிரையின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

மரண அறிவிப்பு [ மேலத்தெரு அப்துல் ஹாதி லெப்பை ]


மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் நெய்னா முஹம்மது லெப்பை அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி உபையதுல்லா ஆலிம், முஹம்மது இப்ராஹீம், அப்துல் மஜீத் ஆகியோரின் சகோதரரும், அசனா மரைக்காயர் லெப்பை அவர்களின் மருமகனும், ஜாஹிர் ஹுசைன், சேக் தாவூது ஆகியோரின் மாமனாரும், அபு ஹனிபா, அபுதாலிப், அபு யூசுப் ஆகியோரின் தகப்பானாருமாகிய அப்துல் ஹாதி லெப்பை அவர்கள் இன்று பிற்பகல் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

அதிரையர் பங்களிப்பில் ஜித்தா IAS-IPS-IFS விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உரையாற்றிய மெளலானா ஷம்சுதீன் காசிமி ! [ காணொளி ]

சென்னை மக்கா மஸ்ஜித் தலைமை இமாம். மவுலானா ஷம்சுதீன் காஷிமி அவர்களின் மேற்பார்வையில் செயல்பட்டு வரும் IAS அகாடமி குறித்த விளக்கம் மற்றும் அதன் செயல்பட்டுகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக ஜித்தா ஷரஃபியா ஃப்ரண்ட்ஸ் சகோதரர்களின் முயற்சியில் கடந்த 17.01.204 வெள்ளிக்கிழமை விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஏற்கனவே கோடை விடுமுறைக்காலங்களில் இளைஞர்களுக்காக இந்நிகழ்ச்சி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நடத்தப்பட்டாலும், வெளிநாடடில் வசிக்கும் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை தம் தொட்டில் பூமியில் அரசு உயர் அதிகாரிகள் பதவியில் வீற்றிருக்கும் விதமாக  அவர்களுக்கு ஊக்கம் மற்றும் விழுப்புணர்வு ஏற்படுத்த பெற்றோர்களுக்காக நடத்தப்பட முதல் நிகழ்ச்சி இதுவாகும்.

இதில் கலந்துகொண்டு பவர்பாயிண்ட் மூலம் கலந்துரையாடல் செய்த மவுலானா ஷம்சுதீன் காசிமி அவர்கள் மிகச்சிறப்பாக உரையாற்றி அரபிய தேசத்திற்கு இனி உங்கள் பிள்ளைகளை பணிக்கு அனுப்பாதீர்கள் என்ற கோரிக்கையுடனும் நம் சமுதாயம் அனைவரும் அரசு உயர் அதிகாரிகள் கல்வியைக் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஊட்டினார்.

இதில் கலந்துகொண்ட பெற்றோர் அனைவரும் இந்நிகழ்ச்சி குறித்து பெருமிதம் அடைந்ததோடு ஜித்தாவில் நடந்த மிக சிறந்த நிகழ்ச்சிகளில் ஒன்று என இதனை பாராட்டினர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை.. சகோ.அதிரை ரஃபியா, சகோ. ஹாஜா முகைதீன், சகோ.நூருல் அமீன், சகோ.அப்துல் அஜீஸ் மற்றும் ஷரஃபிய்யா நண்பர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இரவு உணவுடன் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுற்றது.

தகவல் : அதிரை ஜாஃபர் - ஜித்தா