.

Pages

Saturday, January 18, 2014

செடியன் குளத்து இருட்டில் மாட்டிக்கொண்ட நான் !?

ஒரு நாள் பகல் நேரத்தில் பஸ்ஸில் மல்லிப்பட்டினம் போவதற்காக ஆயத்தமாகி பிலால் நகர் பஸ் நிறுத்தம் போக வேண்டியிருந்தது, என் வீட்டிலிருந்து நடையாக சி.எம்.பி.லைன் தொடங்கி, மரைக்கா குளக்கரையை கடந்து, மேலத் தெருவுக்குள் நுழைந்து, சற்று தூரத்தில் இருந்த நீர்தொட்டியை அண்ணார்ந்து பார்த்துவிட்டு, செடியன் குளக்கரையை அடையும்போது நண்பகல் நேரம், நடந்து வந்ததினால் சற்று களைப்பாக இருந்தது, அந்த பெரிய மரத்தடியில் அப்படியே நின்று விட்டேன், அழகான அருமையான நிழல், மேலும் குளத்தின் ஆழத்தை பார்வை இட்டதில் தண்ணீருக்கு பதிலாக மணல்கள் என் கண்களில் பட்டது, கீழே இறங்கி போய் அந்த மணலில் உட்கார்ந்தேனே அவ்வளவுதான் ஆஹா! என்ன சுகம்!! மணலும் ஜில்லென்று இருந்தது, காற்றும் சல்லென்று வீசியது, அப்படியே கொஞ்சநேரம் அசர வைத்துவிட்டது.

பல வருடங்களாக இந்தக் குளத்தில் எத்தனை பேர்கள் குளித்து இருப்பார்கள், நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு இந்த குளம் ஒரு பழமை வாய்ந்தது என்று நினைத்து பிரமிப்பு அடைந்தேன், தற்போது இந்தக் குளம் தண்ணீரையும் குளிக்க வருபவர்களையும் இழந்து தவித்துக்கொண்டிருக்கின்றது, பார்க்க சங்கடமாக இருக்கின்றது.

நான் புதுமனைத் தெருவில் வசிக்கும்போது அன்று 1965களில் என் குடும்பத்தார்கள்கூட சுபுஹு நேரத்தில் வந்து குளித்து இருக்கின்றேன், மாணவப் பருவத்திலும் சரி, இளைஞன் பருவத்திலும் சரி  நண்பர்களோடு சேர்ந்து வந்து குளித்து இருக்கின்றேன். அப்போது அதனைச் சுற்றி பச்சை பசேல் என்று மரங்களும் செடிகளும் கொடிகளும் சூழ்ந்து கொண்டு காட்டைப்போல் அழகான காட்சியாக இருக்கும், தண்ணீரும் ஜில்லென்று இருக்கும். அங்கு அன்று கோவைப்பழம், பாலப்பழம்(கருப்பு நிறத்தில் சிறியதாக இருக்கும்), இதெல்லாம் பறித்து சாப்பிட்டதை மறக்கத்தான் முடியுமா ?

என் சிறு வயதில் கந்தூரி ஆர்வத்தில் காட்டுப்பள்ளி கந்தூரி என்றால் எனக்கு மிகவும் அருகாமையில் உள்ளதல்லவா அந்த கந்தூரி நாட்கள் முழுக்க அங்குதான் கிடப்பேன், இரவு நேரங்களில் நாங்கள் பயலுக எல்லோரும் சேர்ந்து ஒரு பத்து பேர் இருப்போம், இரவு முழுக்க ஒரே கலக்கல்தான், மதுரை பஞ்சநாதன் கம்பெனி இங்கு வந்து பீம புஷ்ட்டி ஹல்வா கடை போட்டிருப்பார்கள், நாங்கள் ஒருத்தர் பின் ஒருத்தராக சாம்பிள் தாங்க என்று கையை நீட்டுவோம், ஒவ்வொரு கையிலும் 50 கிராமுக்கு குறையாமல் ஹல்வா கிடைக்கும். நாங்கள் இலவசமாக திருப்தியாக சாப்பிட்டுருக்கோம்.

மேலும் பல பீடி கம்பெனிகள் வந்து விளம்பரம் செய்வதோடு பீடிகளையும் விற்பனை செய்வார்கள், அதில் ஒன்று தான் “ஜீஜிவா ஒரு கட்டு பீடி கம்பெனி”, ஒரு கட்டுக்கு 20 பீடிகள் இருக்கும் வெறும் 10 காசுகள்தாம், அங்கும் இங்கும் பார்த்துவிட்டு யாரும் பார்த்திராதவண்ணம் நாங்கள் ஒருகட்டு பீடியை நைசாக வாங்கிக் கொண்டு திருட்டுத்தனமாக செடியன் குளக் காட்டுக்குள் மறைந்து விடுவோம். பிறகு பாட்டுக்கச்சேரி அது இதுன்னு பொழுது விடிந்து விடும்.

மல்லிப்பட்டிணத்திலிருந்து திரும்பி வர இரவு நேரமாகி விட்டது, பிலால் நகர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி, பகலில் நடந்து வந்த பாதை வழியே என் வீட்டை நோக்கி திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தேன், செடியன் குளக்கரை வந்ததும் ஒரு அடர்த்தியான கும்இருட்டு என்னை வந்து கவ்வியது, எந்த ஒரு வெளிச்சமும் என் கண்களுக்கு புலப்படவில்லை, என்ன நடந்தாலும் தெரியாது, கரடு முரடாக இருந்தது, சற்று தடுமாறி கீழே விழப் பார்த்தேன், 60ஐ நெருங்குகின்ற வயசாச்சே என்ன செய்வது, இருந்தாலும் சுதாரித்துக் கொண்டு அந்த அடர்த்தியான கும்இருட்டு பகுதியை கடந்து வந்து மேலத்தெரு நீர்தொட்டிக்கு அருகில் வந்துவிட்டேன், ஏன் இந்த அவல நிலைமை அந்த இடத்திற்கு?

அந்த செடியன் குளத்தைச் சுற்றி காடுகளும் மரங்களும், செடி கொடிகளும் அன்று சூழ்ந்து இருந்தது, இன்று அதே செடியன் குளத்தைச் சுற்றி சூழ்ந்து இருந்த காடுகளையும் மரங்களையும், செடி கொடிகளையும் அழித்துவிட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக பல குடும்பங்களாக வீடுகளைக் கட்டிக் கொண்டு வாழ்கின்றனர், இந்த அடர்த்தியான கும்இருட்டு யாரையும் கவ்வ வில்லையா ? அல்லது அந்த பகுதியைக் குறித்து யாருக்கும் ஒரு அச்சமும் கிடையாதா? அச்சம் இருந்தாலும் அக்கறை கிடையாதா ? என்னங்க நீங்க ?

பகல் நேரங்களில் அப்பகுதி ஜனங்களோடும், இரண்டு சக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களோடும் மிகவும் பரபரப்பாக காணப்படுகின்றதே, ஆனால் இரவு நேரங்களில் எப்படிங்க இது !?

எது எப்படி இருந்தாலும், அந்த அடர்த்தியான கும்இருட்டு பகுதிக்கு ஏறிப்புரக்கரை ஊராட்சியோ அல்லது அதிரை பேரூராட்சியோ, இதில் யார் பொறுப்புதாரி ? சம்பத்தப்பட்ட நிர்வாகிகளும் வார்டு மெம்பர்களும் உடன் நடவடிக்கை எடுத்து இரவு நேரங்களில் அப்பகுதியில் போதுமான வெளிச்சத்தை தருமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை கலந்த சிந்தனையோடு பத்திரமாக வீடு வந்து சேர்ந்தேன்...

இப்படிக்கு,
K.M.A. ஜமால் முஹம்மது
Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். கோ.மு. முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை 13வாடி, வண்டிப்பேட்டை.

8 comments:

  1. குளத்திலே தண்ணீர் வரத்து அறவே இல்லையில்லோ அதேன் ஆள் நடமாட்டம் குறைவா ஈக்கிது.

    யான் ஜமாலாக்கா அந்த பக்கம் தனியா போனிங்க ? இருட்டு கடுமையாவுலோ இருக்கும் !

    கூடவே கள்ள வெளக்க கையோடு கொண்டு போயிருக்கலாமே :)

    ReplyDelete
  2. சிந்தனை தூண்டும் அருமையான கட்டுரை, சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

    ReplyDelete
  3. நல்ல விழிப்புணர்வு கட்டுரை. செடியன் குளம் யாராலும் மறகமுடியாதக் குளம். அந்நாட்களில் காலையில் அக்குளத்தில் குளிக்க போவதே ஒரு சுகம். இந்நாட்களில் அதனைப்பற்றி ஒரு சிலரே வேதனைபடுகின்றனர். எழுத்து, கருத்து இதன் நடை மிக நன்று.

    ReplyDelete
  4. nice to hear histories arround kattupalli st... i hope other people also will share their old memories about adirai please...it's good know this generation people about adirai....மதுரை பஞ்சநாதன் கம்பெனி hats of u still remember this company

    ReplyDelete
  5. மலரும் நினைவுகள். அருமை. ஜமால் காக்கா.

    தாங்கள் எழுதியுள்ள இக்கட்டுரைப்படியான அனுபவம் நிறையப் பேருக்கு ஏற்ப்பட்டு இருக்கும். அந்தக்கால நினைவுகளையும் நிகழ்வுகளையும் யாராலும் மறக்க முடியாது.

    அன்று செடியன்குளத்தில் சுத்தமான தண்ணீர் வருடம் முழுதும் கிடந்தது. இப்படி வறண்டு கிடக்கும் பரிதாப நிலைக்கு யார் காரணம்.???


    மீண்டும் பழைய நிலைக்கு செடியன்குளத்தை ப்பார்ப்பது எப்போது.??

    ஏக்கத்தில் உங்களுடன் நானும் ஒருவன்.!

    ReplyDelete
  6. விடிகாலை விசிலுடன் கம்பனும்
    செடியன் குளத்தில் குளியலும்
    கிடைக்காமல் ஏங்கி
    உடைகின்ற மனத்துடன்
    அதிரையின்பால் அக்கறையுடன்
    அதிரைக்கு அப்பால் அக்கரையில்...

    ReplyDelete
  7. அன்று அதிரையில்
    நன்று என்றே
    விடிவெள்ளி முளைக்கும் பொழுதினில்
    பொடிநடையில் பெண்டீர்
    விளித்தும் விழித்தும்
    குளித்திடச் சென்றார்கள்

    இன்று அதிரையில்
    நன்று குளிக்கின்றனர்
    அதிகாலையிலும் அந்திப்பொழுது வரையிலும்
    பதி அனுமதி உடன்
    தண்ணீர் இருக்குமிடமெல்லாம்
    பெண்டீர் சூழ்ந்தே.

    ReplyDelete
  8. செடியன் குளக்கரை ஒரத்தில் இருக்கும் போஸ்ட்மரத்தில் விளக்குகள் எறிந்தால் சமூக விரோதிகளுக்கு இடைஞ்சலாக இருப்பதால் அதை உடைத்துவிடுகின்றனர். இது வாடிக்கையாக நடந்து கொண்டு இருப்பதே உண்மை.....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.