.

Pages

Thursday, June 18, 2020

பட்டுக்கோட்டையில் 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ரேஷன் அரிசியை பாலிஷ் செய்து விற்பனை செய்தவர் கைது!

பட்டுக்கோட்டை, ஜூன் 18
பட்டுக்கோட்டை பெரிய கடைத்தெருவில் எஸ்.பெரியசாமி (46) என்பவருக்குச் சொந்தமான அரிசிக்  கடையில் கள்ளத்தனமாக ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்து அதனை பாலிஷ் செய்து வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பட்டுக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் தென்னரசு தலைமையிலான தனிப்படை போலீஸார் பெரிய கடைத் தெருவில் உள்ள பெரியசாமி அரிசி கடையில் புதன்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.அப்போது, அந்த அரிசிக் கடையில் சுமார் 5 டன் ரேஷன் அரிசி பாலிஷ் செய்யப்பட்டு, சுமார் 50 கிலோ எடையில் 110 மூட்டைகளில் கட்டி இரண்டு வாகனங்களில் ஏற்றி அடுக்கப்பட்டு, புறப்படுவதற்கு தயாராக  தார்ப்பாய்கள் மூலம் மூடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, தனிப்படை போலீஸார் 5 டன் ரேஷன் அரிசி மற்றும் அதனை ஏற்றியிருந்த  2 லோடு ஆட்டோக்களையும் பறிமுதல் செய்து,  கடை உரிமையாளர் பெரியசாமியை கைது செய்தனர். அவரிடமிருந்து
ரூ.1 லட்சத்து 88 ஆயிரம் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர். வாகனம், பணம் மற்றும் கைது செய்யப்பட்ட பெரியசாமியை தஞ்சாவூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை உதவி ஆய்வாளர் கோகுல கண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

மொத்தமாக இவ்வளவு ரேஷன் அரிசி பெரியசாமிக்கு எப்படி கிடைத்தது? யார் மூலம் இவருக்கு வழங்கப்பட்டது. அதற்கு  யார் காரணம்  என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடரும் ரேஷன் அரிசி கடத்தல்:
கடந்த வாரம் தஞ்சாவூர் அருகே அம்மன்பேட்டை ரேஷன் கடையிலிருந்து ரேஷன் கடை விற்பனையாளர் உதவியோடு 880 கிலோ ரேஷன் அரிசி கடத்தப்பட்டது. இதை கண்டுபிடித்த போலீஸார் 3 பேரை கைது செய்தனர்.

கரோனா பொது முடக்க காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்கள் உணவுக்காக கஷ்டப்படக்கூடாது என மத்திய தொகுப்பிலிருந்தும், மாநில தொகுப்பிலிருந்தும் தனித்தனியாக அரிசி ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால் சில ரேஷன் கடைகளில் இந்த அரிசியை பொதுமக்களுக்கு குறைவான எடையில் வழங்கிவிட்டு, மீதமுள்ள அரிசியை வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு ரேஷன் கடைப் பணியாளர்கள் விற்பனை செய்வதாக தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருப்பதை பார்க்கும் போது, இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் உரிய கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.