.

Pages

Sunday, August 31, 2014

அதிரையில் அமைதியாக நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் [ படங்கள் இணைப்பு ]


இன்று மாலை அதிரை மற்றும் அதனை சுற்றி காணப்படும் கிராமங்களிலிருந்து எடுத்து வரப்பட்ட சிலைகள் ஊர்வலமாக சென்று கடலில் கரைக்கப்பட்டது.

முன்னதாக பட்டுக்கோட்டையிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் சேண்டாக்கோட்டை, மாளியக்காடு, உள்ளூர் புதுக்கோட்டை வழியாக வண்டிப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே வந்தடைந்தது. இதை தொடர்ந்து இந்து முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளர் முருகானந்தம் சிறப்புரை ஆற்றினார். இதையடுத்து ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வண்டிபேட்டையிலிருந்து புறப்பட்டு அதிரையின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று ஏரிபுறக்கரை கடலில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

ஊர்வலம் அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்காக தஞ்சை மாவட்ட டிஐஜி சஞ்சய் குமார் தலைமையில், தஞ்சை மாவட்ட எஸ்.பி தர்மராஜன், திருவாரூர் எஸ்பி காளிராஜ் மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு காவல்படை, அதிரடிப்படை வீரர்கள் என சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

பாதுகாப்பு பணிக்காக நகரின் முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். ஊர்வலம் செல்லும் பாதைகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தது. முக்கிய பகுதிகளின் இணைப்பு சாலைகளில் வாகன தடுப்பு தட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. வண்டிப்பேட்டை, பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. வஜ்ரா போலீஸ் வாகனம், தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனம் ஆகியன தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எனினும் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாமல் அமைதியாக ஊர்வலம் நடந்து முடிந்தது.






முத்துப்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து 14 பேர் படுகாயம் !

முத்துப்பேட்டை அருகே உள்ள நாச்சிக்குளத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவருடைய மகன் ராஜ்குமார் (வயது27). இருவரும் துபாயில் வேலை பார்த்து வருகிறார்கள். ராஜ்குமாருக்கும், நாகை மாவட்டம் தகட்டூரை சேர்ந்த கணேசன் மகள் ஹேமாவிற்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது.

இதையொட்டி பெண்ணை அழைப்பதற்காக நாச்சிக்குளத்தில் இருந்து பக்கிரிசாமி மற்றும் உறவினர்கள் 17 பேர் ஒரு வேனில் தகட்டூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். வேனை நாச்சிக்குளத்தை சேர்ந்த குமார் என்பவர் ஓட்டி சென்றார்.

இடும்பாவனம் வேன் வாடியக்காடு அருகே ஒரு திருப்பத்தில் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த மணமகனின் தந்தை பக்கிரிசாமி, திருத்துறைப்பூண்டியை சேர்ந்த பிரியா (27), முத்துகிருஷ்ணன் மகன் தாரீஸ்வரன் (9 மாத குழந்தை), திருச்சியை சேர்ந்த பொன்னீஸ்வரி (54), மேரிமல்லிகா(55), மேபில்(31), பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராஜசேகர் (58), தங்கம்மா (34), ரகுபதி(48), வேதாரண்யத்தைச் சேர்ந்த ராமன் மகள் துளசி (3), தம்பிக்கோட்டையை சேர்ந்த கோவிந்தராஜ் (46), தோப்புதுறையைச் சேர்ந்த கலாராணி (30), காங்கேயத்தை சேர்ந்த கமலா(35), எடையூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு சிவசங்கிரி (31) உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு முதல் உதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அதைதொடர்ந்து 3 பேர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்தை அடுத்து வேன் டிரைவர் குமார் தப்பி ஓடிவிட்டார். அவர் செல்போன் பேசியபடி ஓட்டியதால் வேன் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய டிரைவர் குமாரை தேடி வருகிறார்கள். விபத்தில் காயம் அடைந்து திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களை முத்துப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் நடராசன் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். அப்போது மன்னார்குடி உதவி கலெக்டர் சுப்பு, திருத்துறைப்பூண்டி தாசில்தார் மதியழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.


நன்றி : முத்துப்பேட்டை பிபிசி

மனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் !

பட்டுக்கோட்டையை அடுத்த கோட்டாகுடி-கார்காவயல் மனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம், ரத்த தான முகாம் ஆகியவை நடைபெற்றது.
     
கோட்டை ரோட்டரி சங்கம், இந்திய மருத்துவ கழக பட்டுக்கோட்டை கிளை, மனோரா பாலிடெக்னிக் கல்லூரி, துணை இயக்குநர்-தொழுநோய் பிரிவு தஞ்சை ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற இம்முகாமிற்கு கோட்டை ரோட்டரி சங்கத்தலைவர் பொறியாளர் ஏ.ராமலிங்கம் தலைமை வகித்தார். ரோட்டரி துணை ஆளுநர் (மண்டலம்-21) டாக்டர் சி.வி.பத்மானந்தன், மனோரா பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் பொறியாளர் ஐ.நாடிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கார்காவயல் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமேகலை வெங்கடாசலம், ஒன்றியக்குழு உறுப்பினர் புஷ்பநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
                   
மருத்துவர்கள் செல்லப்பன், சுப்பிரமணியன், அய்யாசாமி, குணசீலன், ரெத்னா சுப்பிரமணியன், கிளாடிஸ் காமராஜ், முருகானந்தன், ராஜேஸ், புகழேந்தி, லெட்சுமிகாந்த், சங்கீதா கணேஷ், மேகலா, அறிவழகன், சரண்யா, ஶ்ரீநாத் உள்ளிட்ட 15 பல்துறை மருத்துவ நிபுணர்களும் சுமார் 410 நோயாளிகளுக்கு அனைத்து வகை நோய்களுக்கும் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர்.

முகாமில் 30 செவிலியர்களும், ஜீவன் நர்சிங் நிறுவனம், அன்னை ரத்த பரிசோதனை மையம் மற்றும் கிரேஸ் மருத்துவ மைய மாணவிகள் இணைந்து இசிஜி, ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்தனர்.
         
ரத்த தான முகாமில் மாணவ,மாணவியர்,ஆசிரியர்கள் உட்பட
35 பேர் குருதிக்கொடை அளித்தனர். மேலும் முகாமில் டெங்கு காய்ச்சல், அதன் அறிகுறிகள், தடுப்பதற்கான வழிமுறைகள், சித்த வைத்திய முறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
           
ரோட்டரி கிளப் நிர்வாகிகள் இமானுவேல் ராஜ், கணேசன், தேவசகாயம், டாக்டர் சம்பத்குமார், மொகிதீன் அப்துல் காதர், ஜெயசீலன், பூபதி, கிக்காராம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள்  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.டெங்கு கொசுக்கள் உற்பத்தியை
தடுக்கும் வழிமுறைகள் குறித்த கையேடு வழங்கப்பட்டது.கோட்டை ரோட்டரி சங்க செயலாளர் எம்.சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.

செய்தி : எஸ்.ஜகுபர்அலி 
பேராவூரணி.

திமுக நகர துணை செயலாளர் அன்சர்கான் இல்லத் திருமண விழாவில் ஏராளமானோர் பங்கேற்பு !

இன்று காலை அதிரை லாவண்யா திருமண மஹாலில் திமுக நகர துணை செயலாளர் A.M.Y. அன்சர்கான் அவர்களின் புதல்வி தஹ்சின் பேகம் மணமகளுக்கும், ஒரத்தநாடு சேக் மைதீன் அவர்களின் புதல்வர் சாதிக் அலி மணமகனுக்கு திருமணம் நடந்து முடிந்தது.

இதில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. N.R ரெங்கராஜன MLA, திமுக நகர செயலாளர் இராம. குணசேகரன், அவைத்தலைவர் அப்துல் காதர், முன்னாள் பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் ஏனாதி பாலசுப்பிரமணியன், அதிரை நகர காங்கிரஸ் தலைவர் M.M.S. அப்துல் கரீம், அதிரை பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், ஜமாத்தார்கள், இரு வீட்டார் உறவினர்கள் - நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வந்திருந்த அனைவரையும் திமுக நகர துணை செயலாளர் A.M.Y. அன்சர்கான் அன்புடன் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தார்.

ஆஸ்பத்திரிதெரு புதுப்பள்ளியில் தினமும் ஓய்வுதாரர்களுக்கு குரான் ஓதும் பயிற்சி !

அதிரை ஆஸ்பத்திரிதெருவில் அமைந்துள்ள புதுப்பள்ளியில் தினமும் இஷா தொழுகைக்கு பிறகு வீட்டில் ஓய்வில் இருக்கும் சகோதரர்களுக்கு சுமார் 1 மணி நேரத்திற்கு குரான் ஓதும் பயிற்சியை நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தீனியாத் ஆசிரியராக பணியாற்றி வரும் நஜ்முதீன் அவர்கள் வழங்க முடிவு செய்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் இவரை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்

மேலதிக விவரங்களுக்கு நஜ்முதீன் அவர்களின் அலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டுக்கொள்ளலாம்.

0091 9894348321      

அதிரை காட்டுக்குளத்திற்கு ஆற்று நீர் வந்தடைந்தது ! மகிழ்ச்சியில் மக்கள் !!

மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது. கல்லணையிலிருந்து டெல்டா சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து கடைமடை பகுதிகளில் தண்ணீர் தவழ்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் வறண்டு கிடக்கும் அதிரையின் அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் திறந்துவிடக்கோரி மாவட்ட பொதுப்பணித்துறை அலுவலர்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அதிரை பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதில் முக்கிய நீர் ஆதாரப் பகுதியாக இருந்து வரும் காட்டுகுளத்திற்கு சிஎம்பி வாய்க்கால் வழியாக இன்று அதிகாலை முதல் ஆற்று நீர் வந்தடைந்தது. தவழ்ந்து வரும் தண்ணீரை கண்ட இப்பகுதியினர் மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

முன்னதாக அதிரை பேரூராட்சி ஊழியர்களை கொண்டு வாய்க்காலில் உள்ள அடைப்புகள் மற்றும் குளக்கரையில் மண்டிக்காணப்பட்ட முட்புதர்கள் அகற்றப்பட்டன. இந்த பணிகளுக்காக ஜேசிபி இயந்திரங்கள்  பயன்படுத்தப்பட்டது. மேலும் குமிந்து காணப்படும் முட்புதர்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இந்த பணிகளை அதிரை இளைஞர்கள் தானாக முன்வந்து ஆர்வத்துடன் செய்கின்றனர்.

இதுகுறித்து 'சமூக ஆர்வலர்' ஜபருல்லா நம்மிடம் கூறியதாவது.... 
'கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு சிஎம்பி வாய்க்கால் வழியாக காட்டுகுளத்திற்கு நேரடியாக தண்ணீர் வருவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதே வேகத்துடன் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நீர் வந்தால் குளம் முழுமையடைந்துவிடும். மேலும் அதிரையில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடும் நீங்கும். நிலத்தடி நீர் மட்டமும் உயரும். காட்டுக்குளம் நிரம்பியவுடன் அடுத்தடுத்த அதிரையின் அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்பட வேண்டும்.  தண்ணீர் தவழ்ந்து வரும் வாய்க்காலின் பாதையின் எந்த பகுதியிலும் உடைப்பு ஏற்படாதவாறு அதிரை இளைஞர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

இந்த பணிகளுக்காக இரவு பகலாக உழைத்த அனைத்து தலைவர்களுக்கும், கட்சி பிரமுகர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், மஹல்லா சங்க நிர்வாகிகளுக்கும், அதிரை இளைஞர்களுக்கும் நன்றியை கூறிக்கொள்கிறேன் இதே போல் அனைத்து தரப்பினரும் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுகிறேன்' என்றார்.






முஸ்லீம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அதிரை நிர்வாகிகள் பங்கேற்பு !

தஞ்சையில் இன்று மாலை முஸ்லீம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

முஸ்லீம் லீக் கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர் அப்துல் ஹமீது அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன், மாநில பொதுசெயலாளர் அபூபக்கர், துணை தலைவர் அதிரை SSB நசுருதீன், துணைசெயலாளர் ஆடுதுறை ஷாஜஹான், மாவட்ட பொருளாளர்   மதுக்கூர் அப்துல் காதர், மாநில இளைஞர் அணியின் துணை செயலாளர் வழக்கறிஞர் அப்துல் முனாப், அதிரை நகர தலைவர் K.K. ஹாஜா  A. சேக் அப்துல்லா, மாவட்ட பிரதிநிதி ஜமால் முஹம்மது, 'மணிச்சுடர் நிருபர்' சாகுல் ஹமீது  உள்ளிட்ட ஏராளமான மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தில் தமிழகமெங்கும் உள்ள அனைத்து வார்டுகளிலும் கட்சியின் நிர்வாக தேர்தலை நடத்தி புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மாநில முஸ்லிம் லீக் நிர்வாகக் குழுப் பரிந்துரையின்படி தஞ்சாவூர் வடக்கு, தெற்கு என இரு மாவட்டங்களாகப் பிரித்து அமைப்புக் குழு அமைப்பது, மாவட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் உறுப்பினர் சேர்க்கும் பணியைத் தீவிரப்படுத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






Saturday, August 30, 2014

அதிரையில் நாளை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ! முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் !!

அதிரையில் நாளை நடைபெற உள்ள விநாயக சதூர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

நாளை 31-08-2014 மாலை விநாயக சதூர்த்தி ஊர்வலம் அதிரையின் முக்கிய பகுதிகளின் வழியாக கடந்து செல்ல இருப்பதால், இப்பகுதிகளில் எவ்வித அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக முக்கிய பகுதிகளின் இணைப்பு சாலைகளில் வாகன தடுப்பு தட்டிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிரை வண்டிப்பேட்டை, பேருந்து நிலையம் போன்ற இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் அதிரை காவல் துறையின் சார்பில் இருதரப்பினரை தனித்தனியாக அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் விநாயக சதூர்த்தி ஊர்வலத்தை ஏற்று நடத்தும் அமைப்பினர், அதிரையில் செயல்படும் அனைத்து சமூக அமைப்புகள், அதிரை வர்த்தக சங்க நிர்வாகிகள், அனைத்து மஹல்லா ஜமாத் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டரிடம் ஆலோசனைகள் பெறப்பட்டது. ஊர்வலத்தில் எவ்வித அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் ஒத்துழைப்பு வழங்கிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும் எவ்வித அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊர்வலம் செல்லும் பகுதிகளில் உள்ள வியாபார கடைகளை அடைக்கும்படியும் வர்த்தகர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆங்காங்கே கூட்டம் கூடி நிற்பதை தவிர்த்துக்கொள்ளும்படி காவல்துறையின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






முத்துப்பேட்டையில் மறைந்த தொழில் அதிபர் ஹாஜி கொய்யா. அப்துல் ரெஜாக் வீட்டிற்கு சென்று த.பாண்டியன் ஆறுதல் !

முத்துப்பேட்டையை சேர்ந்தவர் தொழில் அதிபர் கொய்யா. அப்துல்ரெஜாக், மூத்த கம்யூனிஸ்ட் பிரமுகரான இவர் சமீபத்தில் உடல் நலம் இன்றி காலமானார். இந்த நிலையில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் த.பாண்டியன் மறைந்த அப்துல் ரெஜாக் வீட்டிற்கு சென்று அங்கு இருந்த அவரது மகன்கள் கட்டி தாஜுதீன், சாதாத்பாட்சா, மூத்த மருமகன் முகம்மது இபுராஜிம் மற்றும் அவரது குடும்பத்தினரை சத்தித்து ஆறுதல் கூறினார். அப்பொழுது முன்னால் சட்ட மன்ற உறுப்பினர்கள் பழனிச்சாமி, சிவபுன்னியம், முன்னால் மாவட்ட ஊராட்சி தலைவர் வை.செல்வராஜ், ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான முருகையன், நகர செயலாளர் மார்க்ஸ் மற்றும் ஈனாகான நாசர் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தி மற்றும் படங்கள் :
'நிருபர்' முத்துப்பேட்டை மொய்தீன் பிச்சை
 

மாணவர்களை அடிக்கவோ, திட்டவோ கூடாது ! ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவுரை !

மாணவர்களை ஆசிரியர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் திட்டவோ, அடிக்கவோ கூடாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.

பள்ளிக்கூடங்களுக்கு காலதாமதமாக வரும் மாணவர்கள், வீட்டுப்பாடத்தை எழுதிவராத மாணவர்கள், நன்றாக படிக்காத மாணவர்கள், வகுப்பில் பேசிக்கொண்டிருக்கும் மாணவர்கள் இப்படி ஏதாவது தவறு இழைக்கும் மாணவர்களை வெயிலில் மணிக்கணக்கில் நிற்கவைத்தல், பிரம்பால் அடித்தல், ஸ்கேல் கொண்டு தாக்குதல், குனிய வைத்து முதுகு மீது செங்கற்களை வைத்தல் இப்படி பல வகையான தண்டனைகளை ஆசிரியர்கள் கொடுத்து வந்தனர்.

அப்படிப்பட்ட நேரங்களில் சில மாணவர்கள் உயிரிழக்கக்கூடும். சில நேரங்களில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவது உண்டு. இப்படி எந்த துன்பமும் மாணவ-மாணவிகளுக்கு நேரக்கூடாது என்பதில் பள்ளிக்கல்வித்துறை அதிக அக்கறை கொண்டுள்ளது. இதற்காக மாணவர்களை கம்பு கொண்டு தண்டிக்கக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்தது.

அதன் காரணமாக மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கும் பிரச்னை பெரும்பாலும் ஓய்ந்துவிட்டது. இருப்பினும் சில பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பது நீடிக்கிறது.

சமீபத்தில் ஸ்கேல் கொண்டு ஆசிரியர் தாக்கியதில் ஒரு மாணவர் கண்பாதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதில், மாணவ-மாணவிகளை எந்த காரணம் கொண்டும் மன ரீதியாகவோ, உடல்ரீதியாகவோ பாதிக்கும்படி ஆசிரியர்கள் நடந்து கொள்ளக்கூடாது. அதாவது மாணவர்களை ஆசிரியர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் திட்டக்கூடாது. ஸ்கேல், கம்பு, கை உள்ளிட்ட எதைக்கொண்டும் அடிக்கக்கூடாது. அவ்வாறு மாணவர்களை ஆசிரியர்கள் அடித்ததாக உறுதி செய்யப்பட்டால் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

மரண அறிவிப்பு !

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது யூசுப் அவர்களின் பேத்தியும், ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும், காதர் முகைதீன் அவர்களின் மனைவியும், இப்ராஹிம்ஷா, ஜமால் முஹம்மது ஆகியோரின் சகோதரியும், பஷீர் அஹமது, ஹாஜா முகைதீன் ஆகியோரின் தாயாரும், ஜாபர் கான், முத்தலிப் ஆகியோரின் மாமியாவுமாகிய ஐனூல் என்கிற ஐனூல் பஜீரியா அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரை தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

AJ பள்ளி 2 வது வார ஜும்மா தொழுகையில் திரண்ட அதிரையர்கள் ! [ படங்கள் இணைப்பு ]

AJ நகரில் அமைந்துள்ள AJ பள்ளியில் முதல் வார ஜும்மா தொழுகை கடந்த வாரம் வெள்ளியன்று சிறப்பாக நடந்து முடிந்தது. இதையடுத்து நேற்று 2 வது வார ஜும்மா நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான அதிரையர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.








செய்தி மற்றும் படங்கள் : 

நூர் முஹம்மது ( நூவன்னா )