நூறு ஆண்டுகளுக்கு முன்பும் வறட்சி ஏற்பட்டது. அப்போதெல்லாம் தண்ணீரின் தேவை குறைவாக இருந்தது. இப்போது நிலைமையே வேறு. மக்கள்தொகை பெருக்கம், தொழில் வளர்ச்சியால் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் ஆண்டுக்கு ஆண்டு, உலகுக்கு கிடைக்கும் நல்ல நீரின் அளவு குறைகிறது. மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று வருமானால் அது தண்ணீருக்காகதான் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். குடிநீர், சுகாதாரம், விவசாயம், கால்நடைகளுக்கு என பல வழிகளில் தண்ணீரின் தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது.
தண்ணீர் சிக்கலின் கோரமுகம் இனியும் சகித்துக்கொள்ள முடியாத நிலையை அடைந்துவிட்டது. நகரங்களில் மட்டுமே விலை கொடுத்து வாங்கிய தண்ணீர் ( கேன் தண்ணீர் ) நிலை மாறி அதிரையிலும் தண்ணீர் வியாபாரம் கொடி கட்டிப் பறக்கிறது. தண்ணீரை, பணம் கொடுத்து வாங்குவது சாதாரண மக்களைப் பொறுத்தவரை ஆடம்பரச் செலவே ! இந்தத் தண்ணீர் பஞ்சம், சாதாரண மக்களை அவலத்திலும் அவலமாகத் தாக்குகிறது. ஆனால், அவர்களால் இதை எதிர்த்து எதுவுமே செய்ய முடியவில்லை.
தொழில் முறையில் நகரங்களில் மட்டுமே இருந்து வந்த தண்ணீர் சுத்திகரிப்பு வியாபாரம் அதிரை போன்ற சிறு ஊர்களுக்கும் வந்துவிட்டதால் நிலத்தடி நீர் ஆதாரத்தை இரக்கமின்றி இடைவிடாமல் உறிஞ்சுகிறோம். போதாக்குறைக்கு கழிவுகள், அனைத்தையும் முறையாகச் சுத்திகரிக்காமல் நீர்நிலைகளிலும் நிலத்துக்குள்ளும் விடுகிறோம். இவ்வளவு கொடுமைகளையும் செய்துவிட்டு, பூமிக்குள் இருந்து இடைவிடாமல் பாலும் தேனும் வர வேண்டும் என்று எதிர்பார்த்தால் எப்படி?
அதுமட்டுமா ? அதிரையில் போர்வெல்களின் எண்ணிக்கைத் தாறுமாறாக அதிகரித்துவிட்டன. சமீப காலங்களில் அதிரையின் போர்வெல்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் அது நம்மை மலைக்க வைக்கும்.
"தண்ணீர் பிரச்சனையால்தான் தெருவை மாற்றினேன்" என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், தண்ணீர் பிரச்னை எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதால் எங்கு ஓடினாலும் இந்தப் பிரச்னையில் இருந்து நமதூர் மக்களால் தப்பிக்க முடிவதில்லை.
'விதைநெல்லை விற்றுத் தின்றவனின் இரவு விடியாது’ என்பார்கள். இன்று நம்மைச் சூழ்ந்துள்ள கரிய இருள் அதுதான். சிலர், மழை பெய்தால் இந்த நிலை சரியாகிவிடும் என்று நினைக்கின்றனர். சரியானாலும்கூட அது மிக மிகத் தற்காலிகமானதே. ஏனெனில், மழைநீரைச் சேமிக்கும் நீர் ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்ட நிலையில், பெய்யும் மழைநீரை எதில் சேமித்து வைப்பது ? பெய்யும் மழைநீரில் 16 சதவிகித நீராவது நிலத்துக்குள் செல்ல வேண்டும். அப்போதுதான் நிலத்தடி நீர் சரியான மட்டத்தில் பராமரிக்கப்படும்.
தங்கத்தை விட தண்ணீரின் விலை மதிப்பு அதிகரித்தாலும் ஆச்சரியப் பட எதுவுமில்லை அதுவும் ஒருநாள் வரலாம் அந்த 'ஒருநாள்’ நூற்றாண்டுகளுக்குப் பின் வரப்போவது இல்லை. நம் காலத்திலேயே மிக விரைவில் வந்துவிடலாம். அந்தச் சமயத்தில் தண்ணீர் மேலும் விலைமதிப்பற்ற செல்வமாக மாறும்.
ஒட்டுமொத்த அதிரையும் தாகத்தால் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், இது தனிநபர்களின் முயற்சியால் மட்டும் தீர்க்கக்கூடிய சிக்கல் அல்ல. அரசாங்கம் முழு வீச்சில் இறங்கிச் செயலாற்ற வேண்டும். ஏரி, குளங்களைச் சீரமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றுக்கு நீர் கொண்டுவந்து சேர்க்கும் வாய்க்கால்கள், ஓடைகளைச் சீர் செய்வதில்தான் நமது தற்போதைய சிக்கலுக்கான நிரந்தரத் தீர்வு இருக்கிறது.
குளங்களையும் ஏரிகளையும் முறையாக சீரமைக்காமல் விட்டோம். அதுமட்டுமல்லாமல் குளங்களுக்கு நீர் கொண்டு வருவதில் முயற்சி செய்வதாகக் கூறி அதில் வீண் அரசியல் செய்து இறுதியில் எந்த குளத்திற்கும் தண்ணீர் இல்லாமல் வறண்ட பூமியாக்கிய பெருமையும் நமதூர் பிரமுகர்களையே சேரும்.
வரலாற்று நோக்கில் ஏரிப்பாசனம்தான் தமிழ்நாட்டின் முக்கியமான நீர் ஆதாரம். ஏனெனில், 73 சதவிகிதம் பாறைப்பரப்பைக் கொண்ட தமிழ்நாட்டில், ஆண்டு முழுவதும் மழை பெய்வது இல்லை. ஆகவே, பெய்யும் மழையைச் சேமித்து வைத்தாக வேண்டிய கட்டாயம், தமிழர்களுக்குப் புவியியல் ரீதியாகவே இருக்கிறது. இதனால் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே ஏரிகளை உருவாக்கி ஏரிப் பாசன முறையில் உலகுக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தனர்.
இப்போதுகூட அரசு கறாராக நடவடிக்கை எடுக்குமானால் தற்காலிகத் தீர்வுகளில் தொடர்ந்து கவனம் செலுத்தும் அரசு, நிரந்தரத் தீர்வை நோக்கிய முதல் அடியை இப்போதேனும் எடுத்து வைக்க வேண்டும்.
இனியாவது இதையெல்லாம் உணர்ந்து இனியும் தாமதிக்காமல் அரசும், சமூக அமைப்புகள், கட்சிகள் சமூக ஆர்வலர்கள் என பாகுபாடின்றி, ஒற்றுமையுடன் துரிதமாக செயல்பட்டு அதிரையின் நீர்வலத்தை காக்க முயற்சி மேற்கொள்ள வில்லையெனில், அதிரை மற்றும், அதைச் சுற்றியுள்ள மக்கள், தண்ணீருக்காக கண்ணீர் விடும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
தற்போது மேட்டூர் அணை திறக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் நாலைந்து தினங்களில் கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் வந்து சேர வாய்ப்பு இருக்கிறது. அந்தத் தண்ணீர் முறையாகப் பங்கீடு செய்யபட்டால் நமது ஊரில் இருக்கும் நீர் நிலைகள் நிரம்ப வாய்ப்புண்டு. சி எம் பி வாய்க்காலுக்குத் தண்ணீர் வரும் வழிகளின் தடைகளை சீர் செய்து முதலில் ஊரின் எல்லைக்குத் தண்ணீரை வரவழைத்துப் பின் காட்டுக் குளம் தொடங்கி கடைசியாக இருக்கும் வெட்டிக் குளம் வரை ஒவ்வொன்றாக நிரப்ப அந்தந்த தெரு முஹல்லாவில் வசிக்கும் இளைஞர்கள் ஒன்று கூடி இரண்டு மூன்று நாட்கள் இணைந்து பணியாற்றினால் இந்தப் பிரச்னை தீர வாய்ப்புண்டு. இப்போது மேட்டூரிலிருந்து வெளியேற்றப் படும் நீரின் அளவு அதிகரிக்கப்படுமென்று தெரிகிறது. கையில் உள்ள வெண்ணையை விட்டுவிட்டு பிறகு நெய்க்கு அலைய வேண்டாமென்று வேண்டிக் கொள்ளலாம்.
இதற்காக அரசை எதிர்பார்க்காமல் தெருவினர்கள்தான் கைகளில் கடப்பாரை மண்வெட்டிகளுடன் கைலிகளை மடித்துக் கட்டிக் கொண்டு களத்தில் இறங்க வேண்டும்.
சரியான நேரத்தில் வந்த தலையங்கம்.
ReplyDeleteபொய்த்து போன மழையால் நீர் மட்டம் குறைந்துகொண்டே செல்கிறது. ஆழமாக தோண்டினாலும் வெறும் காற்றுதான் வருகிறது. எப்போதும் இல்லாத அளவிற்கு அதிரையின் அனைத்து குளங்களும் வறண்டு காட்சியளிக்கின்றன. இனிவரும் காலங்களில் கிடைக்ககூடிய தண்ணீர் வளத்தை சேமிக்க செய்வது ஒவ்வொரு அதிரையைனின் தலையாயக் கடமை. அதற்குரிய முயற்சியில் இன்றிலிருந்து ஒன்றாக இணைந்து துவங்குவோம்.
இப்போதுல்ல காலகட்டத்திர்க்கு முகவும் அவசியமான பதிவு. பூமி நிகழ்வாராச்சியாளர்களின் கனிப்பு இன்னும் பத்துவருடங்களில் நம்மதூர் பக்கம் நில அதிர்வை நாம் எதிர் நோக்கலாம் என்பது உண்மை.
ReplyDeleteஅதைக்கொண்டு தண்நீருக்காக ஒரு கலவரம் கூட நடக்க வாய்ப்புள்ளது காரணம். பெரும்பாலும் அதிரை மக்களுக்கு குடிநீர் விநியோகம் மப்ரூர் நகர் (அதாவது மிலாரிக்காடு) ஏரியாவில் இருந்து ஆழ்துளை மோட்டார் மூலம் நமது பேரூராச்சி நிர்வாகம் அக்காலத்திலிருந்து.
இக்காலம் வரை மாற்றுத்தீர்வை யோசிக்காமல் எல்லா தேவைகளுக்கும் மிலாரிக்காடு ஏரியாவை பயன்படுத்துவதால். அங்குள்ள மக்கள் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடுகளால் அவதிப்படுகின்றனர்.
மாற்று வழி என்பது. மிலாரிக்காடு அருகாமையில் வியாபார நோக்கத்துக்காக, சுவீட் வாட்டர் தாயாரிக்கும் பேக்டரி இதன் மூலம் எத்துனை ஆயிரம் லட்ச்சம் லிட்டர் தண்ணீர் அவர்களின் இலாபத்துக்கு ஒரு நாளைக்கு உருஞ்சுகின்றனர். மேலும், மேலும் இதனால் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கின்றது.
மேலும், நமதூரில் இருந்து இப்போது காணாமல் போன, CMP வாய்க்கால், அதில் வந்துக்கொண்டிருந்த தண்ணீர், இப்போது அதை பற்றியாரும் நினைப்பதும் இல்லை அதை எந்த ஒரு நிர்வாகமும் கவணம் செலுத்தாமல் அலட்சியப்போக்கில் விட்டதும் மிகப்பெரிய தண்நீர் பஞ்சத்துக்கு முக்கிய காரணம். ஆகயால் இவ்விரண்டு விஷயங்களில் நம்மூர் சமுதாய அக்கரை உள்ளவர்கள் முயற்ச்சி செய்து நிவர்த்தி செய்தால் ஒரளவு தண்நீர் பற்றாக்குரையிருந்து நமது ஊரை ஓரளவு காக்களாம். இன்ஷா அல்லாஹ்.
மிக முக்கியமான நேரத்தில் அவசியமான பதிவு,..
ReplyDeleteதண்ணீரின்றி அவதியுறும் மக்களின் வலிகளை அனுபவரீதியாக உணர்ந்து வருபவன் நான். இயற்கையின் ஏமாற்றியுள்ளமை ஒருபுறம் இருக்க, சுயநலம் மட்டுமே குரிக்கோளாகக் கொண்டிருக்கும் சிலர் அதற்கு எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் எவன் கெட்டால் எனக்கென்ன என்பதுபோல் தண்ணீரை இரக்கமின்றி உரிஞ்சி தொழில் செய்வது ஒருபுறம்.
இதற்கெல்லாம் மக்களை ஏமாற்றிவிடலாம் ஆனால் அல்லாஹ் ஒருநாள் தண்டிப்பான் என்ற அச்சம் அறவே அற்றுப் போய்விட்டதே. கண்ணீர் விடும் மக்களை தண்ணீரை உரிஞ்சும் சிலர் நினைத்துப் பார்க்க வேண்டும்.
இதையெல்லாம் விட சமீபத்தில் அதிரையின் புதிய அரசியல்வாதிகள் சிலர் நாமும் அரசியல் செய்கிறேன் பேர்வழி என்று போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காகவே கொஞ்சம் தண்ணீரைக் கொண்டு வந்து அரசியல் செய்து மக்களை முட்டாள்களாக்கியதை மறக்க முடியுமா? . இவர்களின் ஈகோவுக்கு மக்களை பலிகடா ஆக்குகின்றனர் என்று. ஊரில் சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது.
இந்த புதிய அரசியல்வாதிகளுக்கு இது நல்ல தருணம் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொண்டு, பெருமைக்கும், போட்டோவுக்கும் ஆசைப்படாமல், மக்கள் நலனில் அக்கரைகொண்டு, மேட்டூரில் தண்ணீர் திறந்துவிட்டுள்ள இந்த தருணத்தில் அனுக வேண்டியவர்களை அனுகி ஒற்றுமையுடன் எந்த பாகுபாடுமின்றி ஊருக்கு தண்ணீர் கொண்டுவர முயற்சி மேற்கொள்வீர்களானால், மக்கள் மனதிலும், அல்லாஹ்வின் மனதிலும் மிகப்பெரிய இடம் பிடிப்பீர்கள்.
மிக மிக தேவையான நினைவூட்டல் அதுவும் தேவையான நேரத்தில், அரசியல்வாதிகள் எத்தரப்பினரும் உட்புகா வண்ணம் அதிரையர்கள் ஒன்றிணைந்து தண்ணீரை நமதூருக்கு கொண்டு வர தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டுகிறேன்.
ReplyDeleteகடந்த வாரமே இதுகுறித்து என்னுடைய நண்பர்கள் சிலரை உடனடியாக களத்தில் இறங்க தூண்டியுள்ளேன்.
மேலும், மழை வரும் காலங்களிலும், கடைமடைக்கு காவிரி நீர் வரும் காலங்களில் மட்டும் கவலை கொள்வதால் பயனில்லை மாறாக கடலில் வீணாக கலக்கும் நீரை சேமிக்கவும், நிலத்தடி நீரை சேமிக்கவும் அதிரையர்கள் ஒவ்வொருவரும் முன் வர வேண்டும்.
கடந்த முறை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கொண்டு வந்த மிகச்சிறந்த திட்டமான வீட்டுக்கு வீடு மழைநீர் சேகரிப்பு திட்டம் இன்று வெறும் ஏட்டுச் சுரைக்காயாக உறங்கிக் கொண்டுள்ளது. இதை தூசி தட்டி கட்டாயமாக செயல்படுத்திட பேருராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.
(இதிலும் அரசியல் கலந்து விடாமல் தலைவர், துணை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி, திட்டம் நிறைவேறிய பின் பெருமையை அனைவரும் பகிர்ந்து கொள்ளட்டும்).
This comment has been removed by the author.
ReplyDeleteதெளிவான அலசல். உயிர்காக்கும் தண்ணீரை சேமிக்க உறுதி ஏற்போம்.
ReplyDeleteஅனுமதியின்றி ஆழ்குழாய் கிணறு தோண்டினால் 7 ஆண்டு சிறை !
ReplyDeleteதமிழகத்தில் அனுமதியின்றி ஆழ்குழாய் கிணறு தோண்டினால் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் சட்ட திருத்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஊராட்சிகள் சட்ட திருத்த முன் வடிவை தாக்கல் செய்தார்.
அதில், ஆழ்குழாய் கிணறுகள் தோண்டுபவர்கள், அந்த கிணறுகளின் உரிமையாளர்களின் அக்கறையற்ற தன்மையினால் சிறு குழந்தைகள் அதில் விழுந்து இறக்கின்றன. எனவே தோண்டப்படும் ஆழ்துளை கிணறு, ஆழ்குழாய் கிணறு, திறந்தவெளி கிணறு ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் பொருட்டு சட்டத்தை திருத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி அனுமதியின்றி ஆழ்குழாய் கிணறுகளை தோண்டினால் அவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு குறையாத 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.
இந்த சட்ட திருத்தம் மாநகராட்சிகள் சட்டம், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் ஆகியவற்றிலும் திருத்தம் செய்யப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
//இதற்காக அரசை எதிர்பார்க்காமல் தெருவினர்கள்தான் கைகளில் கடப்பாரை மண்வெட்டிகளுடன் கைலிகளை மடித்துக் கட்டிக் கொண்டு களத்தில் இறங்க வேண்டும். //
ReplyDeleteஅடித்துக் கொள்ள அல்ல ஆக்கப்பணி செய்து நீர் நிலைகளை நிரப்பும் வண்ணம் ஒற்றுமையுடன் பணியாற்ற. இப்போதே இதற்காக தெருவினர் திரளவேண்டும்.
வாழ்வாதாரப் பிரச்னை.
குளங்களில் நீர் இருந்தால் வீடுகளில் நீரின் தேவை குறையும் ; தெருக்களில் சாக்கடைகள் ஓடுவதும் கணிசமாக குறையும். கொசுக்கள் குடியிருக்க இடம் தேடி அலையும்.
நல்ல விழிப்புணர்வு பதிவு. பாராட்டுக்கள். இணையத்தில் மீசைகளை முறுக்காமல் செயலில் இறங்கும் இளைஞர்களை ஆர்வமூட்டுவோம்.
நமதூரின் தண்ணீர் பிரச்னையை தீர்க்க வாயளவில் சொல்வதுடன் நிறுத்திக் கொள்ளாமல் பொதுநல அமைப்புக்கள் ஊர்வாசிகள் மற்றும் நமதூரின் அனைத்து அரசியல் வாதிகளும் பாகுபாடின்றி ஒத்துழைத்து தீவிர முயற்சி எடுத்தோமேயானால் நிச்சியமாக நமதூரின் தண்ணீர் பிரச்னையை தீர்த்துவிடலாம்.
ReplyDeleteஉட்பூசலும் ஒற்றுமையும் இல்லாதவரை தண்ணீர் மட்டுமல்ல எந்த காரியத்தையும் செயல்படுத்த முடியாது.
thts true story becarefull adirai people for water matter.
ReplyDeleteதெளிவான அலசல். உயிர்காக்கும் தண்ணீரை சேமிக்க உறுதி ஏற்போம்.
ReplyDelete