உண்மையில் முள்ளோ, கல்லோ, நிலைப்படியோ தானாக வந்து மனிதனை காயப்படுத்துவதில்லை. மாறாக, தனது பாதைகளைப் பார்த்து நடக்கத் தெரியாத மனிதன்தான் தானே சுயமாக முள்ளிலும் கல்லிலும் காலை வைத்து காயப்படுத்திக் கொண்டு பழியை திசை திருப்பிவிடுகிறான்.
குனிய வேண்டிய நேரத்தில் குனிந்தும் பணிய வேண்டியபோது பணியாமலும் நடப்பதால் நடுத்தலையில் நிலைப்படியில் இடித்துக் கொள்கிறான். ஆழம் தெரியாமல் ஆற்றில் காலைவிடுபவன் ஆற்று வெள்ளத்தில் அடித்தே செல்லப்படுவான் . அது ஆற்றின் குற்றமல்ல; அந்த மனிதனின் குற்றம். படிக்கட்டுகளில் இறங்கும்போது பாசி வழுக்குமென்று பார்த்து இறங்காமல் வழுக்கி விழுந்த பிறகு படிக்கட்டை குறை சொல்லலாமா ? இதே போல்தான் மனிதன் தனது தவறுகளினாலும் கவனக்குறைவாலும் வாழ்வில் ஏற்படும் இழப்புகளுக்கு விதியைக் காரணமாகக் காட்டித் தனது தவறுகளில் இருந்து தப்பிக்கப் பார்க்கிறான்.
தங்களது வெற்றிக்கும் தோல்விக்கும் விதியைக் காரணமாகக் காட்டாதவர்களே உலகில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார்கள். நோபல் பரிசு பெறுகிறார்கள்.
காலம் கண் போன்றது; கடமை பொன் போன்றது என்பதை உணர்ந்து, காலத்தை சரிவர உணர்ந்தவர்களும் கடமையைக் கண் போலக் கருதிச் செய்தவர்களும் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
நான் உப்பு விற்கப் போனால் மழை பெய்கிறது; மாவு விற்கப் போனால் காற்றடிக்கிறது நான் என்ன செய்வேன் என்றும் நான் கயிற்றைப் பிடித்தாலும் அது பாம்பாக மாறிவிடுகிறது நான் என்ன செய்வேன் என்றும் விதியின் கரங்களில் வாழ்வை ஒப்படைத்துவிட்டுப் புலம்பும் பலரைப் பார்க்கிறோம். உப்பு விற்கப் போகும் போதும் மாவு விற்கப் போகும் போதும் புத்தியைப் பயன்படுத்தி அவைகளை பாதுகாப்பாக பைகளில் கட்டி வைத்து விற்கப்போனால் காற்றடித்தால் என்ன? மழை பெய்தால் என்ன? முள் இல்லாத ரோஜா எந்த நாட்டிலும் பூத்ததாக சரித்திரம் இல்லை. முள் குத்தாமல் ரோஜாவைப் பறிக்கும் நுணுக்கத்தில்தான் மனிதனின் ஆற்றல் இருக்கிறது.
எந்த மனிதனும் காலம், செல்வம், சக்தி ஆகியவற்றை விரயம் செய்யக் கூடாது என்று புரிந்து கொள்ள வேண்டும். “ காலத்தை ஒரு போதும் குறை கூறாதீர்கள் ஏனென்றால் காலத்தை நான்தான் சுழலச் செய்கிறேன் என்று அல்லாஹ் அறிவுறுத்தி இருக்கிறான் “ என்று பெருமானார் ( ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“ஞாலம் கருதினுங் கை கூடும் காலம்
கருதி இடத்தார் செயின்” – என்று திருவள்ளுவர் அறிவுறுத்துகிறார். ஒரு செயலை நிறைவேற்றுவதற்கு ஏற்ற காலத்தை அறிந்து செய்யபப்டும் இடத்திற்கு ஏற்றபடி செய்தால் இந்த உலகமே உனது கையில் வந்து விடும் என்பது இந்தக் குறளின் கருத்தாகும்.
காலத்தின் மீது சத்தியமாக என்று சத்தியம் செய்து அல்லாஹ் காலத்தின் சிறப்பை சிந்திக்கத் தூண்டுகிறான். ஆகவே காலத்தின் மீது குறை காணாமல் மனிதன் தன்னில் உள்ள குறைகளை அறிந்து அவைகளைக் களைந்து செய்ய வேண்டியவைகளை செய்தாலே வெற்றி கிடைக்கும் அதைவிட்டு விட்டு விதியின் மீது பழியைப் போடுவது வேடிக்கையானது.
அது போகட்டும் விதி என்று ஒன்று இருப்பது உண்மையா?
உண்மைதான். இறைவன் அவரவருக்கு விதிகளை தனது கைகளால் ஏற்படுத்தி வைத்திருக்கிறான். ஆனால் அந்த விதியை தனது நற்செயல்களாலும், பிரார்த்தனைகளாலும் மாற்றிக் கொள்ளும் முயற்சி மனிதனின் கரங்களில்தான் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.
கவிஞர் அல்லாமா இக்பால் அவர்கள்
“ இறைவனிடத்தில் உனக்காக
பல விதிகள் உள்ளன.
உனக்கு வேண்டிய விதி எது என்று
நீ கேட்டுப் பெற்றுக் கொள் “ - என்று கூறுகிறார். து ஆ க்களும் பிரார்த்தனைகளும் நாம் செய்யும் தர்மங்களும் நற்காரியங்களும் புத்திசாலித்தனமும் இறைவனிடத்தில் இருக்கும் நமது விதியை மாற்றும் வல்லமை படைத்தவை.
“ கருமத்தைச் செய்- பலனை எதிர்பாராதே “ என்று பகவத் கீதையில் சொல்லி இருப்பதாகக் கூறுகிறார்கள். ஒருவகையில் இந்த வார்த்தைகளும் விதிகளின் மீது பாரத்தை தூக்கிப் போட்டுவிட்டு உனது கடமை மற்றும் காரியங்களில் இருந்து வழுவியும் நழுவியும் செல்லாதே என்றே எச்சரிக்கிறது. நமது கடமைகளை சரிவரச் செய்து கொண்டிருந்தால் அதற்கான பலன் நிச்சயம் கிடைக்குமென்றே இதுவும் பொருள் தருகிறது.
“கேளுங்கள் தரப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்; தேடுங்கள் கிடைக்கும்” என்று பைபிளின் வாசகங்கள் கூறுவதாக சொல்கிறார்கள். எதுவும் நமது மடிகளில் தானாக வந்து வீழ்ந்து நமது பெட்டகங்களை நிரப்பி விடாது நமக்கு வேண்டியவைகளைத்தேடி அவைகளுக்காக நாம் முயற்சி செய்ய வேண்டுமென்றே அவ்வார்த்தைகள் நமக்கு உபதேசிக்கின்றன.
காஞ்சிக்கு சென்று காலாட்டினால் கஞ்சி கிடைக்குமென்று ஒரு சொலவடை உண்டு. இதன் உண்மைப் பொருள் காஞ்சிபுரம் நெசவுத் தொழிலுக்குப் பெயர் பெற்றது – அங்கு போய் நெசவுத் தொழிலைக் கற்றுக் கொண்டு காலால் செய்கிற நெசவு வேலைகளைச் செய்தால் சோற்றுக்கு வழி கிடைக்கும் என்பதுதான். ஆனால் காஞ்சிபுரத்தில் ஒரு வீட்டுத் திண்ணையில் காற்றாட உட்கார்ந்து காலை ஆட்டிக் கொண்டு இருந்தால் சோறு கிடைத்துவிடுமா என்பதை சிந்திக்க வேண்டும்.
விதைக்கிற காலத்தில் வீதிகளில் சுற்றிவிட்டு அறுவடை காலத்தில் அரிவாளை எடுத்துக் கொண்டு போகிறவனுக்கு புல்லும் பூண்டும் கூட கிடைக்காதே!
அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் அல்லாஹ்வை நம்புகிறேன். அவனை நம்பி எனது ஒட்டகத்தை கட்டாமல் அவிழ்த்து விட்டுவிடுவதா அல்லது கட்டி வைத்துவிட்டு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதா என்று கேட்ட ஒரு நபித் தோழருக்கு முதலில் உனது ஒட்டகத்தைப் பாதுகாப்பாக கட்டி வை ; அத்துடன் அல்லாஹ் மீதும் நம்பிக்கை வை என்று பெருமானார் ( ஸல்) அவர்கள் பதில் அளித்ததாக அறிகிறோம்.
விதி தொடர்பாக பல அறிஞர்களும் பல விளக்கங்களைத் தந்தாலும் ஒரு செய்தியை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். விதி என்பது உண்மை என்று இருந்தாலும் அந்த விதியை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யாமல் இருப்பது அறிவீலிகளின் செய்கையாகும்.
விதிகளை முன் கூட்டி அறிவிக்கும் சோதிடம் முதலியவைகளை நம்பி வாழ்நாட்களை வீணாக்கிவிடாமல் , விதிகளின் நாட்டம் என்பதை இறைவனின் நாட்டம் என்றே நம்ப வேண்டும். மாறாக விதி என்பதைக் காரணம் காட்டி சோம்பிப் போய் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு மூலையில் முடங்கிக் கிடப்பதும் முயற்சிகளை முறித்துப் போட்டுவிட்டு கையறு நிலையில் கதறுவதும் தவறு.
இந்தக் கணினி யுகத்தில் கூட சோதிடங்களை கணினியில் காது வைத்துக் கேட்கும் பத்தாம் பசலிகளைக் காண்கிறோம். சோதிடத்துக்காக ஒரு மென்பொருளே உருவாக்கப்பட்டு இருக்கிறதாம். நாளும் நட்சத்திரமும் முகூர்த்தமும் பார்க்காமல் திருமணங்கள் நாட்டில் நடைபெறுகின்றனவா? அப்படியெல்லாம் பார்த்துப் பார்த்து செய்யப்பட்ட திருமணங்கள் யாவும் வெற்றியளிக்கும் என்றால் நாட்டில் இத்தனை விவாகரத்து வழக்குகள் ஏன்?
மகாகவி பாரதியார் , “ சோதிடம் தனை இகழ்” என்றார். பண்டித நேரு போன்ற மேதைகளுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை கிடையாது. பெரியார், அண்ணா போன்றோர் காலமெல்லாம் சோதிடத்தை நம்பி வாழ்வைத் தொலைப்பதை கண்டித்துப் பிரச்சாரங்கள் செய்தார்கள். “ மொரார்ஜியை நீங்கள் ஏன் பிரதமராக தேர்ந்தெடுக்கவில்லை ? “ என்று காமராஜரிடம் கேட்டபோது “ தனிப்பட்ட விரோதம் இல்லை. ஆனால் சோதிடத்தையும் சோதிடரையும் நம்பி நாட்டை நடத்துபவரிடம் நாட்டை ஒப்படைக்க நான் விரும்பவில்லை “ என்றாராம்.
தேவகவுடா பிரதமரானதும் நாமக்கல் சோதிடர் ஒருவர் ஐந்தாண்டுகளுக்கு உங்களை அசைக்க முடியாது என்று சொன்னாராம். அதனால் தன்னிச்சையாக தேவகவுடா எடுத்த முடிவுகள் அவரை சிலமாதங்களிலேயே ஆட்சியை விட்டு அப்புறப்படுத்தியது.
செவ்வாய் தோஷம் பிடித்தவர்கள் என்று சொல்லப்படும் பெண்கள் தங்களுக்கு திருமணம் ஆகாது என்று சோதிடர்கள் சொன்னதைக் கேட்டு தற்கொலை செய்துகொண்ட செய்திகளும் நிரம்ப உள்ளன.
சோதிடப்பரிகாரங்களுக்காக தங்களின் நகைகளை இழந்த செய்திகளும் செய்தித்தாள்களில் வெளிவந்தன. சோதிடர்கள் சொன்னதை நம்பி பெற்ற தலைப் பிள்ளைகளை நரபலி கொடுத்தவர்களும் நாட்டில் இருந்தனர்.
தாமஸ் ஆல்வா எடிசன் , “ எனது ஆய்வு முயற்சிகளில் தோல்விகள் வரும்போது நான் மனமொடிந்து போவது கிடையாது; காரணம் எனது ஒவ்வொரு தவறான முயற்சியும் என்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் படிக்கட்டு “ என்று சொன்னார். விழுவது விதியால் அல்ல; மீண்டும் எழுவதற்கே என்று எண்ண வேண்டும். எடுத்து வைக்கும் அடிகளில் கவனம் வேண்டும் . கூடவே இறைவனின் கருணையையும் கேட்டுப் பெற வேண்டும்.
ஆகவே, துன்பங்கள் துயரங்கள் வரும்போது இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்வதில்லை. பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை. தோல்விகளை வெற்றிக்கான படிகளாக்கினால் வெற்றி நிச்சயம். அந்த மனநிலை வரும்போதும் வளரும்போதும் அங்கு விதிக்கு வேலை இல்லை.
முயற்சிப்போம் ! முன்னேறுவோம் !
உங்கள் எல்லா கருத்தும் ஏற்புடையதே .ஆனால் விதி பற்றிய உங்கள் தலைப்பும்,அளவுகோளும் மிக தவறு .
ReplyDeleteவிதியை எவனாலும் வெல்ல முடியாது.அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி செய்யும் துவாவை அவன் ஏற்றால் மட்டுமே சாத்தியம்.அல்லாஹ் மட்டுமே விதியை மாற்ற முடியும், மதியால் முடியாது.
அவனன்றி அணுகூட அசையாது. ஒரு மனிதனுக்கு மதியைக் கொடுப்பது கூட இறைவன்தான். இதைத்தான் ஹிதாயத் என்கிறார்கள். கட்டிரையின் ஆசிரியர் இறைவனிடம் கை ஏந்துங்கள் என்று சொல்கிறார். ஆகவே இறைவனிடம் கையேந்தும் மதி விதியை வெல்லும் என்று உடன்பாடாக எடுத்துக் கொள்ளலாம். எதிலும் குறை காணும் போக்கைவிட்டு இத்ந்தக் கட்டுரையில் சொல்லபட்டிருக்கிற நல்ல ஊக்கமான நற்செய்திகளை கடைபபிடிக்கலாம்.
ReplyDeleteநல்ல தொரு தலைப்பு .நல்லதொரு மெஸ்ஸேஜ்.
ReplyDeleteஎந்த ஒரு சம்பவமாயினும் நடந்து முடிந்தவையே விதியென நினைக்க வேண்டும் நடப்பதற்கு முன் முயற்ச்சிக்க வேண்டும்..விதிப்படி த்தான் நடக்கும் என நினைப்பது தவறு.விதிக்கு முக்கியத்துவம் கொடுத்தோமேயானால் இவ்வுலக வாழ்வில் நாம் எதையுமே சாதிக்க முடியாமல் போய்விடும். ஆகவே விதியை மதியால் வெல்வோம்.
சிறந்த தலையங்கம் !
ReplyDeleteஅனைத்தும் அறிந்தவன் இறைவன் !
இனி எந்தவொரு நபரும் விதியை சொல்லி தப்பிக்க முடியாது. இறைவன் நமக்கு தந்துள்ள அறிவை கொண்டு அவற்றை வெல்வோம்.
விதியை மதியால் வெல்லலாம் என்பதும் இறைவன் வகுத்த விதியாகத்தான் இருக்கும் .....
ReplyDeleteவிதியை மதியால் வெல்லமுடியாது என்பது முடக்கிவிடும்.
ReplyDeleteஇறைவனிடம் கை ஏந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லவில்லை.
இங்கு மதியால் கேட்க்க விதிகள் மாற்றப்படுகிறது.
முள் குத்தும். அதனால் காலை அதில் வைக்காமல் கவனமாகச் சென்றால் பாதுகாப்பு. பார்க்காமல் நடந்தால் கவனக்குறைவு.
முள் அதில் காலை வைத்தால் அது குத்தும் அது விதி. காலைவைக்காவிட்டால் குத்தாது என்பது மதி.
அவன் நாட்டம் இருந்தால் அதுவும் குத்தாது. அப்படியானால் அவன் நாட்டத்தைப் பெறுவதும் மதிதானே.
இறை நெருக்கத்தை, இறைப் பொருத்தத்தைப் பெற்றதால் அன்று கத்தி கழுத்தை அறுக்கவில்லை.
இறை நெருக்கம், இறைப் பொருத்தம் பெறாதவர்கள் கத்தி எப்பொழுதும் அறுக்கும்.
இவைகள் விதி. இறை நெருக்கத்தை, இறைப் பொருத்தத்தைப் பெறுவது மதி.
மனிதனுக்கு மதியை தந்ததே விதியை வெல்லத்தான் என்பதை மறுக்கத்தான் இயலுமா ?
ஒருவனால் தூக்கமுடியாததை பலர் சேர்ந்து தூக்குவது மதி. இன்று தானே தூக்குவேன் வேறு யாரும் வேண்டாம் என்று தூககுவதையே மறந்து செல்லுவதும் நடக்கத்தான் செய்கிறது. இதுவும் மதிதானே....!?
மதியால் வெல்லவும் முடியும் தோற்றுப்போகவும் முடியும். அது மதியைப் பயன்படுத்தும் விதியில் உள்ளது.
இரும்பு பறக்காது. இரும்பு மிதக்காது. இது விதி.
ReplyDeleteஇன்று இரும்பு பறக்கும். இரும்பு மிதக்கும். இது மதி.
விதி விதி என்றால் முயற்சிக்கு வேலையில்லை. இன்று செல்போன் வந்திருக்காது.
விதியை மதியால் வெல்லலாம் என்பதுதான் விதி.
அவன் செய்த செயல் இவன் அனுபவிக்கின்றான். இது விதிதான். நல்ல செயலுக்கு நல்ல பலன். தீய செயலுக்கு தீயப் பலன். இப்படித்தான் விதி. இதில் மதிதானே உள்ளது.
ஆக எழுதிய தலையங்கம் சிறப்பானது.
ஒரு அறிஞர் கூறுகிறார். மண்ணெண்ணெய் இருக்கும்வரை விளக்கு எரியும். மண்ணெண்ணெய் தீருவதற்குள் மீண்டும் மண்ணெண்ணெய் ஊற்றினால் விளக்கு அணையாது. ஊற்றாவிட்டால் அணைந்துவிடும். இப்படித்தான் விதி உள்ளது என்கிறார்.
ReplyDelete