.

Pages

Friday, August 22, 2014

பள்ளிவாசல்களை பன்முக காரியங்களுக்கு பயன்படுத்த சிந்திப்போமா !?

“அல்லாஹு அக்பர் என்று முழங்கும் 
அழகிய தலமே பள்ளிவாசல் 
எல்லா மாந்தரும் தொழவாருங்கள்
என்றே அழைப்பது பள்ளிவாசல் – மிக 
நன்றாய் அழைப்பது பள்ளிவாசல் “

என்ற பாடல் முழங்காத இடமில்லை. இறைவனின் இல்லம் என்று அழைக்கப்படும் பள்ளிவாசல்கள், இறைவனின் பெரும் கருணையினால் இதுவரை பள்ளிவாசல்கள் இல்லாத  கிராமங்கள் மற்றும் தெருக்கள்  தோறும் கட்டப்பட்டு வருகின்றன. பல பெரிய ஜமாத்கள் இருக்கும் ஊர்களில் ஏற்கனவே இருக்கும் பள்ளிவாசல்கள் விரிவுபடுத்தப்படுவதுடன் குளிர்சாதனங்கள் போன்றவைகள் பொருத்தப்பட்டு நவீன வசதிகள் கொண்டவைகளாகவும் ஆக்கப்படுகின்றன. அரபுநாடுகளுக்கு சென்று நம்மில் பலர் பொருள் ஈட்டத் தொடங்கியதன் விளைவாக அந்த நாடுகளில் அமைந்திருக்கும் பாணிகளிலும் டிசைன்களிலும்  பல ஊர்களிலும் பிரம்மாண்டமான பள்ளிவாசல்கள்    அமையத் தொடங்கிவிட்டன. மேலும், கருத்து மாறுபாடுகளால் தோன்றிய பல்வேறு இயக்கங்களினால் சமுதாயத்துக்கு எவ்விதப் பயனும் இல்லை என்று சொல்லப்பட்டாலும் ஏறக்குறைய ஒவ்வொரு ஊரிலும் புதிய பள்ளிகள் ஊருக்கு வெளியேயாவது நிர்மாணிக்கப்படுவதையும் நாம் மறுக்க இயலாது.

அதே நேரத்தில் பள்ளிவாசல்கள் என்பவை ஐந்து நேரம் ஒன்று கூடி இறைவனை வணங்க மட்டும்தானா அல்லது சமுதாயத்துக்குப் பயன்படும் வேறு பல காரியங்களுக்கும் பள்ளிவாசல்களைப் பயன்படுத்தலாமா என்பது பற்றி நாம் விவாதிக்க வேண்டி இருக்கிறது. இன்றும் கூட,  பள்ளிவாசல்கள் வேறு சில காரியங்களுக்கும் பொதுவாகப் பயன்படத்தான் செய்கின்றன.

எடுத்துகாட்டுக்களாக,
தெரு அல்லது ஊரில் ஏற்படும் தனி நபர்  அல்லது குடும்பப்பிரச்சனைகளை பள்ளிவாசல்களில் கூடி பஞ்சாயத்தாகப் பேசுவதற்கு கூடுமிடமாகப் பள்ளிவாசல்கள் பயன்படுகின்றன.

திருமணம் போன்ற காரியங்கள் பள்ளிவாசல்களில் நடைபெற்று வருகின்றன.

பல ஊர்களில் விருந்து போன்ற காரியங்களுக்கான சமையல்கூடமாகவும் விருந்து பரிமாறப்படும் இடங்களாகவும்  பள்ளிவாசல்கள் பயன்படுத்தப் படுகின்றன.

இயல்பாகவே பள்ளிவாசல்களில் மதரசாக்கள் இயக்கப்படுகின்றன.
குழந்தைகள் காலை மாலை வேளைகளில் வந்து திருக்குர்-ஆன் பயின்று வருகிறார்கள்.

இவை போக அஸருக்கு பாங்கொலிக்கும் வரை காற்றாடப் படுத்து உறங்கும்/ ஒய்வு எடுக்கும் இடங்களாகவும்  பள்ளிகள் பயன்படுத்தப்படுவதையும் நாம் மறுக்க இயலாது.

இந்தப் பயன்பாடுகள் மட்டும் போதுமா ?
பள்ளிவாசல்களை  இன்னும் அதிகமான நன்மையான காரியங்களுக்குரிய இடமாகவும் பயன்படுத்த வேண்டும்.

பெருமானார் ( ஸல் ) அவர்களின் காலத்தில் பள்ளிவாசல்கள் கல்விக் கூடங்களாகவும், நல்லொழுக்கப்பயிற்சிகளைக் கற்றுக் கொடுக்கும் இடங்களாகவும், இலக்கியம் முதலிய நிகழ்வுகள் அரங்கேறும் இடமாகவும், உடல்நலம் சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்ளும் இடமாகவும் , பொதுவான பிரச்சனைகள் அல்லது இடர்பாடுகள் நேரிடும்போது ஊரெல்லாம் ஒன்று கூடி தொழுகை நடத்தும் இடமாகவும், மருத்துவமனையாகவும், வெளியூர்களிலிருந்தும் பல சமயங்களில் வெளிநாட்டிலிருந்து வருபவர்களை தங்க வைக்கும் இடமாகவும் , போர்களுக்குத் தயாராவதற்கான வியூகங்களை விவாதிக்கும் இடமாகவும், நீதிமன்றமாகவும் பயன்படுத்தப்பட்டதாக நாம் அறிகிறோம். அதுமட்டுமல்லாமல் பள்ளிவாசல்கள் சிறைச்சாலைகளாகவும் பயன்படுத்தப்பட்டதாகவும் நாம் சரித்திரத்தில் படித்து தெரிந்து கொள்கிறோம்.  

இன்றைக்கு இந்த சமுதாயத்துக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அருட்கொடைகள் மூலம் உயர்ந்த மினாராக்கள்,  அருமையான அலங்காரங்கள்  , வண்ண வண்ண விளக்கு வெளிச்சங்கள், ஆகியவற்றை அமைத்து தேவைக்கும் அதிகமான இடங்களை எல்லாம் வளைத்துப் பெரிய அளவில் பள்ளிகளைக் கட்டி வருகிறோம். பெரும்பாலான நேரங்களில் தொழுகை நேரம் அல்லது மதரசா நேரம் முடிந்ததும் பள்ளிகள் பூட்டுப் போட்டுப் பூட்டி வைக்கப்படுகின்றன.

பள்ளிவாசல்களை  என்னென்ன நன்மையான காரியங்களுக்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி நமது மனதில் தோன்றும் சில எண்ணங்கள்.

நூலகம்:-
பள்ளிவாசல்களில் நூலகங்கள் அமைக்கலாம். இன்றும் பல பள்ளிகளில் குர் ஆன்,  ஹதீஸ்,  துஆக்கள் அடங்கிய  அரபு மற்றும் தமிழ் மொழியில் உள்ள நூல்கள் சேகரிக்கப்பட்டு அல்லது வக்பு செய்யப்பட்டு அலமாரிகளில் அடுக்கிவைக்கப்பட்டு இருக்கின்றன. அவற்றை எடுத்துப் படிப்போர் என்று பார்த்தால் மிகவும் குறைவானவர்களே. காரணம் இந்த நூல்கள் பெரும்பாலும் மார்க்கம் சார்ந்த நூல்கள் மட்டுமே. நாம் கூற வருவது மார்க்கக் கல்வி மற்றும் மார்க்கத்துக்கு முரண் இல்லாத பொதுக் கல்வி தொடர்பான நூல்களும் சேகரிக்கப்பட்டு ஒரு பகுதி நேர நூலகமாவும் பள்ளிவாசலின் ஒரு பகுதி இயங்கலாம்.

உதாரணமாக மார்க்கம் தொடர்பான        சட்டங்கள், வரலாறுகள், பொதுச் சட்டம் ,  பொருளாதாரம் தொடர்பான நூல்கள், வருமானவரி மற்றும் விற்பனை வரி  போன்ற நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நூல்களை சேகரித்து வைத்து நாமும் மற்றும் நமது மாணவர்களும் படித்துக் கொள்ள மற்றும் குறிப்பெடுக்க உதவலாம். அரசு மற்றும் தனியார் வேலைகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டி நூல்களை இந்த நூலகத்தில் வாங்கி வைக்கலாம்.  எவ்வித இயக்கங்களையும் சாராத பொதுவான நடுநிலையான சஞ்சிகைகள், வார இதழ்களை அந்தந்த முஹல்லாவில் உள்ளவர்களின் ஆதரவுடன் வரவழைத்து வைக்கலாம். அமர்ந்து படிப்பவர்களுக்கு வசதியாக நாற்காலி , மேஜை, காற்றாடி ஆகிய வசதிகள் அங்கு செய்து தரப்பட வேண்டும்.  பல பள்ளிவாசல்களில் நிறைய இடங்கள் பயன்படுத்தப் படாமல் ஒதுக்குப் புறமாக இருப்பதை  நாம் பார்க்கிறோம் . அவைகளை இத்தகைய நூலகத் தேவைக்கு பயன்படுத்தலாம் என்பதை நாம் பரிசீலிக்க  வேண்டும்.

ஆய்வரங்கம் மற்றும் பயிலரங்கம்:-
பெங்களூர் நகரத்தில் இருக்கும் சிடி ஜாமி ஆ பள்ளிவாசலில் சமுதாயத்தில் ஆய்வுப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்காக அருமையான ஏற்பாடுகளை அமைத்துக் கொடுத்து இருக்கிறார்கள். இந்த நகருக்கு வருகை தரும் அறிஞர்களை அங்கு வரவழைத்து மாணவர்களுக்காக உரையாற்றச் செய்கிறார்கள். செமினார்  என்கிற  கருத்தரங்களை நடத்துகிறார்கள். கேள்வி பதில் நிகழ்வுகளை நடத்துகிறார்கள்.

இன்றைய நவீன யுகத்தில் கணினியின் தேவை மற்றும் பயிற்சின் தேவை ஆகியவை இன்றியமையாதாகி விட்டது. அனைவரும் இவற்றைப் பயின்று கொள்ளும்படி  பள்ளிகளில் ஒரு இடத்தை ஒதுக்கி இந்த வசதிகளை செய்து கொடுக்கலாம். கணினியை பயன்படுத்த வருகை தரக் கூடிய மாணவர்களையும் அவர்கள் கணினியைப் பயன்படுத்தும்போது வருகை தரும் தளங்களையும் கண்காணித்துக் கொள்ள வேண்டும். கரையான் புற்றெடுக்கப் பின் கருநாகம் குடி புகுந்த கதையாக மாறிவிடக் கூடாது.
மாணவர்களுக்காக நமதூரில் இருந்து வெளிநாடுகளை உயர் பதவிகளை வகிப்போர்கள் விடுமுறையில் வரும்போது அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் கூடமாக பயன்படுத்தலாம். வேலைவாய்ப்புகள் இருந்தால் அவற்றைப் பற்றிய தகவல் தரும் கூடமாகவும் பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு வருடமும் தேர்வுகள் முடிந்ததும் ஊரில் இருக்கும் கல்வியாளர்கள் பள்ளி வாசல்களில் ஒன்று கூடி மாணவர்களுக்கு , அவர்களின் தொடர் கல்விக்கான ஆலோசனைகளை வழங்கும் கலந்துரையாடல்கள் நிகழ்த்தும்  இடங்களாகவும் பள்ளிவாசல்களைப் பயன்படுத்தலாம். படித்து முடித்த இளைஞர்களின் ஒத்துழைப்புடன் தேவையான சான்றிதழ்களை பெற்றுத்தரும் கேந்திரமாகவும் பள்ளிவாசல்கள் பயன்படுத்தப்படலாம்.

ஜகாத் விநியோக மையம் :-
பள்ளிவாசல்கள்  நோன்புக் கஞ்சி பரிமாறும்   இடங்களாக மட்டுமல்லாமல் ஜகாத் மற்றும் பித்ரா மற்றும் சதக்காக்களை பங்கீடு செய்யும் கேந்திரமாகவும் செயல்படலாம். அந்தந்த முஹல்லாவில் ஜகாத் தருவதற்கு தகுதிபடைத்தோர்  பற்றிய தகவல்களை திரட்டி பதிவு செய்து வைப்பதுடன் அவர்களிடம் தேவையானால் கவுன்சளிங்க் செய்து ஜகாத்தை வசூலித்து தகுதியான ஏழைகளுக்கு வழங்கிட உதவும் நிலையங்களாக பள்ளிவாசல்கள் செயல்படலாம்.

மருத்துவ முகாம்கள் நடைபெறும் மையம் :-
இலவச கண் சிகிச்சை மற்றும் பொது வியாதிகளுக்கான சோதனைக் கூடங்களின் முகாம்களை அவ்வப்போது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் பள்ளிவாசல்களின் வெளிப் பகுதிகளில் ஏற்பாடு செய்யலாமே!

ஷரீஅத்  நீதி மன்றங்கள் :-
குடும்ப வழக்குகள், சொத்துப் பிரச்சனைகள் ஆகியவற்றைத்  தீர்த்துக் கொள்ள காவல்துறை மற்றும் நீதிமன்றங்களை நாடி நமக்குள் விரோதங்களையும் செலவினங்களையும்  வளர்த்துக் கொள்வதைவிட  நமக்குள் பேசி நடுநிலையாகத் தீர்த்துக் கொள்வதற்குரிய இடங்களாகப் பள்ளிவாசல்களைப் பயன்படுத்தலாமே!

இத்தகைய ஆக்கபூர்வமான காரியங்களைச்  செய்யாமல் பள்ளிவாசல்களில் வீணாகக் கூடி வீண் பேச்சுக்களை பேசி ஷைத்தானைக் கூட்டளியாக்கிக் கொள்ளாமல் பள்ளிவாசல்களை பன்முகக் காரியங்களுக்கும் பயன்படுத்துவதைப் பற்றி நாம் சிந்திப்போமா ?

7 comments:

  1. சிந்தனை தரும் தலையங்கம் !

    ஓவ்வொரு ஊரிலும் சமூக சங்கங்கள், அமைப்புகள் அதிகமாக உருவான பிறகு தலையங்கத்தில் குறிப்பிடும் சிலவற்றை சங்கங்கள் - அமைப்புகள் பொறுப்பேற்று செயல்படுத்தி வருவதால் பள்ளிவாசல்கள் தொழுகைக்காக மாத்திரம் பயன்படுத்தப்படும் இடமாக தற்போது இருந்து வருகிறது. இதில் சில பள்ளிவாசல்கள் விதிவிலக்கு.

    தொழுகைக்கு இடையூறு ஏற்படாதவாறு தலையங்கத்தில் கூறும் சேவைகள் முழுதும் பள்ளிவாசல்களின் பொறுப்பில் ஏற்று செயல்படுத்துவது எந்தளவு சாத்தியம் என்பது தெரியவில்லை. ஆனால் நிச்சயம் சேவை குறைபாடு பெருமளவில் குறையும் என்பதில் ஐயமில்லை. நிச்சயம் ஒற்றுமை - கட்டுப்பாடு நிலைத்து நிற்கும்.

    வழிபாட்டு தளங்கள் / சமூக கூடங்கள் மூலம் என்னென்ன சமூக காரியங்கள் செயல்படுத்த முடியும் என்பதையும் இதனால் ஏதேனும் நிகழும் சட்ட சிக்கல்கள் குறித்தும் முதலில் ஆராய வேண்டும்.

    ReplyDelete
  2. பிஸ்மில்லாஹ்ஹிற்றஹ்மான்னிற்றஹீம்

    وَمَنْ أَظْلَمُ مِمَّن مَّنَعَ مَسَاجِدَ اللَّهِ أَن يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَىٰ فِي خَرَابِهَا ۚ أُولَٰئِكَ مَا كَانَ لَهُمْ أَن يَدْخُلُوهَا إِلَّا خَائِفِينَ ۚ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ
    இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு. 2:114

    ஸஹீஹுல் புகாரி 421. அனஸ்(ரலி) அறிவித்தார். பஹ்ரைன் நாட்டிலிருந்து சில பொருள்கள் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டன. 'அவற்றைப் பள்ளிவாசலிலேயே கொட்டுங்கள்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட பொருட்களிலேயே அதுதான் மிக அதிக அளவாக இருந்தது. அதற்கு எந்த மதிப்புமளிக்காமல் நபி(ஸல்) அவர்கள் தொழச் சென்றார்கள். தொழுது முடிந்ததும் அப்பொருட்களின் அருகில் அமர்ந்து கொண்டு காண்பவர்களுக்கெல்லாம் வழங்கி கொண்டிருந்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ்(ரலி) வந்து 'இறைத்தூதர் அவர்களே! (பத்ருப் போரில் முஸ்லிம்களால் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட) நானும் (என் சகோதரர் அபூ தாலியுடை மகன்) அகீலும் வடுதலை பெறுவதற்காக (நான் பெறும் தொகையை)ப் பணயமாக வழங்கியுள்ளேன். எனவே எனக்கு (தாராளமாக) வழங்குங்கள்!' என்று கேட்டார்கள். "(உமக்குத் தேவையான அளவுக்கு) அள்ளிக் கொள்வீராக!" என்று நபி(ஸல்) கூறியதும் அப்பாஸ்(ரலி) தங்களின் துணியில் அது கொள்ளுமளவுக்கு அள்ளினார்கள். பின்னர் அதைத் தூக்க அவர் முயன்றபோது அவரால் இயலவில்லை. 'இறைத்தூதர் அவர்களே! யாரையாவது என் மீது இதைத் தூக்கி விடச் சொல்லுங்களேன்' என்று அவர் கேட்டதற்கு 'முடியாது" என்று நபி(ஸல்) கூறினார்கள். 'அப்படியானால் நீங்களாவது என் மீது இதைத் தூக்கி வையுங்கள்!' என்று அவர் கேட்க, நபி(ஸல்) அவர்கள் 'முடியாது" என்றனர். அதில் சிறிதளவை அள்ளி வெளியே போட்டுவிட்டு அவர் தூக்க முயன்றார். அப்போதும் அவரால் இயலவில்லை. 'இறைத்தூதர் அவர்களே! யாரையாவது என் மீது தூக்கி வைக்கச் செய்யுங்கள்!' என்று அவர் கேட்க, நபி(ஸல்) அவர்கள் 'முடியாது" என்றனர். 'நீங்களாவது தூக்கி விடுங்களேன்' என்று அவர் கேட்க, அதற்கு 'முடியாது" என்றனர். மேலும் சிறிதளவை அள்ளி வெளியில் போட்டுவிட்டு அதைத் தம் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு அப்பாஸ்(ரலி) நடக்கலானார். அவர் மறையும் வரை நபி(ஸல்) அவர்கள், 'அவரின் பேராசையை எண்ணி வியந்தவர்களாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விடத்திலிருந்து எழும்போது ஒரு வெள்ளிக் காசு கூட மீதமாக இருக்கவில்லை.
    Volume:1,Book:8.

    ஸஹீஹுல் புகாரி 439. ஆயிஷா(ரலி) அறிவித்தார். ஓர் அரபுக் கோத்திரத்திற்கு அடிமையாக இருந்து, பின்னர் அவர்களால் விடுதலை செய்யப்பட்டு, அவர்களுடன் வசித்து வந்த கறுப்பு அடிமைப் பெண் தன் கடந்த கால நிகழ்ச்சியைப் பின் வருமாறு என்னிடம் தெரிவித்தார். 'நான் அவர்களுடனிருக்கும்போது அவர்களைச் சேர்ந்த சிறுமி ஒருத்தி சிவப்புத் தோலில் முத்துப் பதிக்கப் பட்ட ஓர் ஆபரணத்துடன் வந்தாள். அதை அவள் கழற்றி வைத்தான். அல்லது அது தானாகக் கீழே விழுந்தவிட்டது. அப்போது அவளருகே வந்த சிறு பருந்து ஒன்று, கீழே போடப்பட்ட அந்த ஆபரணத்தை மாமிசம் என எண்ணித் தூக்கிச் சென்றது. அவர்கள் தேடிப் பார்த்தபோது கிடைக்கவில்லை. அவர்கள் என்னைச் சந்தேகிக்கலானார்கள். என்னுடைய மர்மஸ்தானம் உட்படப் பல இடங்களிலும் அவர்கள் தேடிப் பார்த்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் அவர்களுடன் நின்றிருந்தபோது அந்தச் சிறிய பருந்து (திரும்பவும்) வந்த அதைக் கீழே போட்டதும் அவர்களுக்கருகில் அது விழுந்தது. எதைப் பற்றி என்னைச் சந்தேகித்தீர்களோ அதுதான் இது. நான் அதைத் திருடுவதைவிட்டுப் பரிசுத்தமானவள் என்று கூறினேன். இதன்பிறகு நபி(ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை தழுவினேன்' அந்தப் பெண்ணுக்குப் பள்ளி வாசலில் கூடாரம் ஒன்று இருந்தது. அதிலிருந்து என்னிடம் வந்து அப்பெண் பேசிக் கொண்டிருப்பாள். என்னைச் சந்திக்கும் போதெல்லாம் பின்வரும் பாடலை அவள் பாடாமலிருந்ததில்லை. 'அந்த ஆபரணம் சம்பந்தப்பட்ட அந்த நாள் நம்முடைய இறைவனின் அற்புதங்களில் ஒன்றாகும். தெரிந்து கொள்ளுங்கள்! அவன்தான், இறைமறுப்பாளர்களின் ஊரிலிருந்து நிச்சயமாக என்னைக் காப்பாற்றினான்'. (இது கவிதையின
    V

    ReplyDelete
  3. பள்ளிவசல்களின் நமதூர் நிலை குறித்து மிகத் தெளிவாக அலசியுள்ள தலையங்கம்

    கிராமங்களில் குறிப்பாக ஓரிரு பள்ளிவாசல்கள் மட்டுமே உள்ள ஊர்களில் முஸ்லிம்களின் அடையாளம், அல்லது முஸ்லிம்கள் ஒன்று கூடும் இடம் பள்ளிவாசல்கள் என்பதால் அங்கு மேற்சொன்ன சிலவகைகள் பின்பற்றப் படுகின்றன.

    எனினும் நமதூரில் பள்ளிவாசல்கள் அதிகமகாகக் காணப்படுவதால் மேற்சொன்ன அனைத்தையும் கட்டயமாக பின்பற்றுவது இல்லை என்றே நினைக்கிறேன்.

    நான் சிறுவனாக இருந்த காலத்தில் உறுவாக்கப்பட்ட ஆஸ்பத்திரித்தெரு புதுப்பள்ளியை தலைமையகமகக் கொண்டு இயங்கிய ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கம் கிட்டத்தட்ட மேற்சொன்ன செயல்பாடுகளுக்காக உறுவாக்கப்பட்டு செயல்பட்டன. இன்று அதிரை பைத்துல்மால் செய்யும் பல சேவைகளை அன்று ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கம் செய்தது. ஆனால் அதன் அடையாளம் புதுப்பள்ளிதான் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அந்த ஹிமாய்த்துல் இஸ்லாம் சங்கம் இன்று?!

    சமீபத்தில் விடுமுறையில் ஊர் வந்திருந்தபோது புதுப்பள்ளி நுலகத்தைத் தேடினேன். புத்தகங்கள் அடுக்கப்பட்டிருக்கும் பீரோ இன்றும் இருக்கிறது. ஆனால் அதனை முறையாக புதுப்பித்து பயன்படுத்த வேண்டும் என்பதே என் ஆவல். இது பல பள்ளிவாசல்களுக்கும் பரந்து விரிய வேண்டும் என்பதும் என் ஆவல்.

    நினைத்ததை செயல்படுத்த ஊக்கப்படுத்தும் மிகச்சிறந்த தலையங்கம்.

    ReplyDelete
  4. நபிதாஸ் கூறிய மின்னஞ்சல் வழி கருத்து...

    கட்டுரையின் கருத்து நல்ல சிந்தனை. ஆனாலும் பள்ளிவாசலின் கண்ணியம் எந்தவிதத்திலும் சிறு துரும்பளவிர்க்கேனும் பாதிக்கப்படக்கூடாது. ஏனென்றால் தொழுதபின் பள்ளியில் தங்காமல் உன்னை நம்பியோர்களின் பாதுகாப்பிற்கு சம்பாதிக்க வெளியே சென்றுவிடவேண்டும் என்ற ஹதீசும் உண்டு என்பதை மறக்கலாகாது. இறையச்சம் குறைக்கும் எந்த செயலும் தவிர்க்கப்பட வேண்டியதே. மனித சுபாவம் நிலைமாறிக்கொண்டே இருக்கும்.

    ReplyDelete
  5. பள்ளிவாசல்களின் முக்கிய நோக்கமான தொழுகைக்கு இடையூறு இல்லாத அளவில் நூலகம் முதலிய அமைப்புகள் அமைவது வரவேற்கத் தக்கதே.

    திருச்சியில் உள்ள நவாப் பள்ளியில் திருச்சியில் பயிலும் மாணவர்கள் தங்குவதற்கு வாடகைக்கு அறைகள் கட்டி விட்டு இருக்கிறார்கள். ஏழை முஸ்லிம் மாணவர்கள் குறைந்த வாடகையில் தங்குவதற்கும் தொழுகை நேரங்களில் தொழுது கொள்வதற்கும் அவை பயனுள்ளவையாக இருக்கின்றன.பள்ளிக்கும் ஒரு நல்ல வருமானம் தரும் வழியாக அவை இருக்கின்றன.

    கணினி பயிற்சி அரங்கம் ஆகியவை புதிய சிந்தனை. நவீன காலத்துக்கு தேவையான சிந்தனை. ஆனால் மிகவும் கவனமாக கையாள வேண்டிய துறை.

    ஆக்கப்பணிகளுக்காக்வும் சமுதாயத்தின் உயர்வின் நோக்கோடும் கலந்து பேச பொது இடமின்றி தவிப்பவர்கள் பள்ளிவாசல்களின் நிர்வாகத்தின் அனுமதியுடன் தொழுகைக்கு இடையூறு இல்லாமல் பயன்படுத்தலாம்.

    புதிய சிந்தனையைப் பாராட்டுவோம். அதே நேரம் எதிர்ப்புகளும் வரக்கூடும். ( எதற்குத்தான் வரவில்லை?)

    ReplyDelete
  6. பள்ளிவாசல்களின் முக்கிய நோக்கமான தொழுகைக்கு இடையூறு இல்லாத அளவில் நூலகம் முதலிய அமைப்புகள் அமைவது வரவேற்கத் தக்கதே.

    திருச்சியில் உள்ள நவாப் பள்ளியில் திருச்சியில் பயிலும் மாணவர்கள் தங்குவதற்கு வாடகைக்கு அறைகள் கட்டி விட்டு இருக்கிறார்கள். ஏழை முஸ்லிம் மாணவர்கள் குறைந்த வாடகையில் தங்குவதற்கும் தொழுகை நேரங்களில் தொழுது கொள்வதற்கும் அவை பயனுள்ளவையாக இருக்கின்றன.பள்ளிக்கும் ஒரு நல்ல வருமானம் தரும் வழியாக அவை இருக்கின்றன.

    கணினி பயிற்சி அரங்கம் ஆகியவை புதிய சிந்தனை. நவீன காலத்துக்கு தேவையான சிந்தனை. ஆனால் மிகவும் கவனமாக கையாள வேண்டிய துறை.

    ஆக்கப்பணிகளுக்காக்வும் சமுதாயத்தின் உயர்வின் நோக்கோடும் கலந்து பேச பொது இடமின்றி தவிப்பவர்கள் பள்ளிவாசல்களின் நிர்வாகத்தின் அனுமதியுடன் தொழுகைக்கு இடையூறு இல்லாமல் பயன்படுத்தலாம்.

    புதிய சிந்தனையைப் பாராட்டுவோம். அதே நேரம் எதிர்ப்புகளும் வரக்கூடும். ( எதற்குத்தான் வரவில்லை?)

    ReplyDelete
  7. இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் தலைப்பு ,நம் சமுதாயத்தால் விடுப்பட்ட அல்லது ஒதுக்கப்பட்ட பல காரியங்களை மீண்டும் பள்ளிவாசலை மையமாக கொண்டு செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை சார்ந்த தலைப்பாக நான் கருதுகிறேன்.
    நபி ஸல் அவர்களின் காலத்தில் பள்ளிவாயில் பல்வேறு துறை சார்ந்த செய்பாடுகளை கொண்டிருந்தது என்பதை அனைவரும் அறிவோம்,அந்நாள்களில் வாழ்ந்த சகாபாக்கள் ஒழுக்கமும்,கட்டுப்பாடும் மிகுந்த தோழர்களாக வாழ்ந்தார்கள்,எனவே நபி ஸல் அவர்களால் அன்றைய தினம் பள்ளிவாயிலை பல்வேறு காரியங்களுக்கு பயன்படுத்தினார்கள்.
    ஆனால், இன்று சாதாரணமாக நம் இளைஞர்கள் பலரின் போக்கு கட்டு கடங்காத ,தான்தோன்றித்தனமாக இருக்கிறது,இப்படிப்பாட்டவர்கள் தகாத செயலை செய்வதற்கு பள்ளிவளாகத்தை பயன்படுத்தினால் ;அதற்காக பாதிக்கப்படுவது ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயம் என்பதை கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.ஏற்கனவே பாசிஸ்டுகள் இல்லாத சந்தேகங்களை பள்ளிவாயில்கள் மீதும்,மதரசாக்கள் மீதும் கூறி வருவதை நாம் அனைவரும் அறிவோம்.ஆதலால் எல்லா செயல்களையும் செய்ய முயற்சிக்காமல்,சமுதயாத்திற்கு இடையூறு இல்லாத செயகல்களை மிகுந்த கட்டுப்பாட்டுடன் செய்யாலாம்.
    எக்காரணத்தை கொண்டும் உள் பள்ளியில் தொழுகை மற்றும் அது தொடர்புடைய திக்ர்,குரான் ஓதுதல் தவிர எதையும் அனுமதிக்கக் கூடாது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.