.

Pages

Thursday, November 26, 2015

இடுப்பு வலி!? ஆ, ஊ, என்ன பெத்த உம்மா, ஆ! தாங்க முடியலம்மா, புள்ளே இப்போ வாணாம்னு சொன்னேனே, கேட்டாரா அவரு?

இடுப்பு வலி!? ஆ, ஊ, என்ன பெத்த உம்மா, ஆ! தாங்க முடியலம்மா, புள்ளே இப்போ வாணாம்னு சொன்னேனே, கேட்டாரா அவரு?

இங்கே பாருமா, இப்போ புள்ளே பெத்துகிறது எல்லாம் நல்லதுக்குதாம்மா, உன்னே கையே பிடிச்ச கையோடு மொத சபுறு போயிருக்காரு, அவரு வரும்போது புள்ளேயே பார்க்கணும்னு ஆசைப் பட்டிருப்பாரு, அவருடைய எல்லாத்துக்கும் ஒத்துப் போனது மாதிரி, இதையும் லேசாக எடுத்துக்கோமா.

பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன.

உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.

வயிற்றில் கருவறையில் இருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன சத்தம் ஏதேதோ கேட்டது, நமக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஊசலாடியது,

அமைதியாக ஆனந்தமாக மிதந்துக் கொண்டிருந்த நமக்கு என்ன ஆகப்போகிறது? வழக்கமாக நாம் உரையாடும் இந்த கருவறை இடமே கேட்டு விடலாம் என்று, குழந்தை கருவறை இடம் பேச்சு கொடுத்தது.

குழந்தை: வழக்கத்து மாறான ஏதேதோ சத்தம் கேட்கிறதே எனக்கு ஒன்றும் புரியவில்லையே, அது என்ன சத்தம்?

கருவறை: நீ உலகத்துக்கு புதுசாக போறதினாலே உங்க உம்மாவுக்கு இடுப்புவலி எடுத்துருக்கு, அதுதான் அந்த சத்தம்.

குழந்தை: உம்மாவா? இடுப்புவலியா? உலகமா? என்ன சொல்றா? நீ சொல்றதைப் பார்த்தால் எனக்கு ஒன்றுமே புரியலையே! புரியும்படி சொல்லேன்.    

கருவறை: குழந்தாய் இவ்வளவு காலம் நீ என்னுடைய அரவணைப்பில் இருந்தாய், இதுக்குமேல் நீ இங்கு இருக்க முடியாது, ஆகவே நீ உலகத்துக்கு போகப் போகிறாய், உன்னுடைய வருகைக்காக மக்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள், உன் உம்மாவின் சத்தமும் அவர்களின் சத்தம்தான் அது. மேலும் நீயும் உலத்துக்குள் நுழையும்போது சத்தம் போட்டுக் கொண்டேதான் நுழைவாய்.   

குழந்தை: உலகமா? எனக்கு ஒன்றுமே புரியவில்லயே! அதை ஏன் முன்னாடியே சொல்லவில்லை? நான் இங்கு சந்தோசமாகத் தானே இருக்கிறேன் நான் ஏன் நீ சொன்ன உலகத்து நான் போக வேண்டும்?

கருவறை: இல்லை குழந்தாய், உனக்கு இங்கு சில காலம் மட்டும்தான் வாழ முடியும், இப்போது உனக்கு உலகத்தில் வாழ  தகுதி வந்து விட்டது, அதனால் நீ உலகத்துக்கு போயே ஆக வேண்டும்.

குழந்தை: நான் உலகத்துக்கு போகாமல் இங்கேயே இருக்க முடியுமா? அதற்கு ஏதாவது வழிகள் உண்டா?

கருவறை: முடியவே முடியாது, நோ சான்ஸ் குழந்தாய்.

குழந்தை: அப்படீன்னா! என்ன செய்வது?

கருவறை: உன்னைப் படைத்த இறைவன் வகுத்த விதி, நீ உலகத்துக்கு போயிதான் ஆக வேண்டும்.

குழந்தை: இறைவனா! அவன் யாரு?

கருவறை: நீ உலகத்து போனதும், உன்னை அன்போடு அரவணைக்க உனக்கு ஒரு தாய் உண்டு தந்தை உண்டு, அவர்கள் உனக்கு படிப்படியாக மார்க்க நெறிகளையும், உலக நெறிகளையும், இன்னும் சகல நெறிகளையும் கற்றுத் தருவார்கள், அந்த தருணத்தில் உனக்கு விளங்கும் உன்னைப் படைத்த இறைவன் யார் என்று.

குழந்தை: தாய் தந்தையா? அது யாரு? அவர்கள் எப்படி இருப்பார்கள்?

கருவறை: நீ, இங்கு உருவாக அவர்கள்தாம் காரணம்.

குழந்தை: அப்படியா? நான் உருவாக அவர்கள்தாம் காரணமா?

கருவறை: ஆமாம் குழந்தாய், அவர்களும் ஒரு நேரத்தில் உன்னைப்போல் கருவறையில் இப்படி வளர்ந்து உலகத்துக்கு சென்றவர்கள்தாம்.

குழந்தை: என்ன சொல்றா, கேட்கவே ஆச்சர்யமா இருக்கே.

கருவறை: ஆமாம் குழந்தாய், இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னுடைய நிலைமையும் அப்படித்தான் அமையப் போகுது. நீ உலகத்து சென்றதும் படிப்படியாக இன்னும் வளருவாய், அப்படியே படிப்படியாக வளர்ந்து பெரிய ஆண் பிள்ளையாக இருப்பாய். நீ வளரும்போதே அனேக சங்கதிகளை எதிர்கொள்வாய்.

குழந்தை: நீ சொல்றத வைத்துப் பார்த்தால் எனக்கு பயமாக இருக்குது, எனக்கு அந்த உலகத்துக்கு போக இஷ்டம் இல்லாமல் இருக்குது. நீ சொன்னியே என்னைப் படைத்த இறைவன் என்று, அவனிடம் கேட்டு என்னை இங்கேயே இருக்கச் செய்து விடு.

கருவறை: அது நீ நினைத்தபடி ஒருக்காலும் அப்படி நடக்க முடியாது குழந்தாய், அவனுடைய விதி, நீ உலகத்துக்கு சென்றே ஆகவேண்டும். அந்த உலகத்தில் உனக்காக இறைவன் எதை எதையெல்லாம் ஆகுமானதாக தயாராக வைத்துள்ளானோ அவை அனைத்தையும் நீ சந்தித்தே ஆகவேணும். அது சில சமயம் சுலபமாகவும் இருக்கலாம், அல்லது கஷ்டமாகவும் இருக்கலாம். இதுக்கெல்லாம் நீ பயப்படாதே. நீ பயப்படவேண்டியது, உன்னைப் படைத்த இறைவனுக்கு மாடும்தான், அடுத்தது உன்னுடைய தாய் தந்தைக்கு.

குழந்தை: அப்படியா? சரி, இருந்தாலும் பரவாயில்லை, ஓரளவுக்கு நான் மனதை தேத்திக் கொள்கிறேன், அது என்ன புதுசு புதுசா “ட்ராங், கிணிங், நங். என்றெல்லாம் சத்தம் கேட்குதே?

கருவறை: அது செல் போனின் சத்தம்.

குழந்தை: செல் போனா? நீ என்ன புதுசு புதுசா சொல்லிக் கொண்டே போராய், செல் போனை பற்றி கொஞ்சம் சொல்லேன், எனக்கும் ஆறுதலாக இருக்குமே!

கருவறை: ஆமா! செல் போன்தான், பல பேர் உன்னுடைய வருகையை எதிர்பார்த்து வெளிநாடுகளில் உள்ளவர்கள், வெளியூர்களில் உள்ளவர்கள் செல் போனில் பேசிக்கொள்வார்கள், அவர்கள் அழைக்கும் போது செல்போன் அலறும், அந்த சத்தம்தான் அது. உலகத்தில் செல் போன் மட்டும் இல்லை, எல்லாம் இருக்குது, நீ போய் பாரு, அதையெல்லாம் பார்த்ததும் நீ என்னை மறந்து விடுவாய்.

குழந்தை: நானும் உலகத்துக்கு போனதும் செல் போனில் பேச முடியுமா? நீ சொன்னபடி எல்லாத்தையும் பார்க்க முடியுமா?

கருவறை: தாராளமாக பேசலாம், பார்க்கலாம், ஆனால் ஒரு கண்டிஷன், உன்னுடைய தாய் தந்தைக்கு கட்டுப்பட்டு, இறைவனுக்கு பயந்து நன்மை தீமை அறிந்து நடந்தால் உன்னுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும், இல்லையேல் பாதாளம் படுகுழிதான்.

குழந்தை: அது என்ன? நன்மை, தீமை? கொஞ்சம் விளங்கும்படியாக சொன்னால்தானே நானும் ஜாக்கிரதையாக இருக்க முடியும்.

கருவறை: நேரம் இல்லை குழந்தாய், சுருக்கமாக சொல்றேன் கேள், உலகத்தில் இரண்டு வழிகள் இருக்குது, ஒன்று நன்மையான வழி, மற்றது தீமையான வழி. நன்மையான வழி எது, தீமையான வழி எது என்று, உன்னுடைய தாய் தந்தைக்கு நன்கு தெரியும், அவர்கள் உனக்கு கற்றுத் தருவார்கள்.

குழந்தை: அப்படியா? அப்போ அவர்களுக்கு எல்லாம் தெரியுமா?

கருவறை: உன்னுடைய தாய் தந்தை இருவரும் மிகவும் நல்லவர்கள், அவர்களுக்கு நன்மையைத் தவிர தீமையானது எதுவும் தெரியாது, தாய் தந்தை சொல்கேட்டு நீ நடந்ததால் நீ உலகத்தில் நல்லவன் என்று பெயர் எடுக்க முடியும். இல்லையென்றால் உனக்கு கெட்ட பெயர்தான் கிடைக்கும்.

குழந்தை: அப்புறம்?

கருவறை: மேலும் நீ ஆண் குழந்தையாக இருக்கின்றாய், இன்ஷா அல்லாஹ் நல்லபடியாக வளர்ந்து நல்ல பெயர் எடுக்கணும், இறைவனுக்கு பயப்படனும், இறைவன் சொன்னபடி நடக்கணும், நன்றாக படிக்கணும், மரியாதையாக நடந்து கொள்ளனும், குடும்பத்தை தாங்கனும், வரதட்சணை வாங்கக் கூடாது, மஹர் கொடுத்து மணப்பெண்ணை கல்யாணம் முடிக்கணும். எது செய்தாலும் நல்லதுக்கே செய்யனும். தாய் தந்தை சொல்கேட்டு நடக்க தவறக் கூடாது.

மேலும் நீ போகின்ற உலகம் தற்காலிகமானது, அதுக்கு பிறகு இன்னும் ஒரு வாழ்க்கை இருக்குது, அதுதான் நிரந்தரம். அதை மறுமை வாழ்க்கை என்று சொல்லுவார்கள்.

குழந்தை: இன்ஷா அல்லாஹ் நீ சொன்னபடி நடப்பேன், நல்ல பெயர் எடுப்பேன்..

கருவறை: எல்லோரும் இப்படித்தான் சொல்லிவிட்டு போகின்றார்கள். ஆனால், உலகத்து போனதும் மாறி விடுகின்றனர், ஷைத்தானின் மாயையில் விழுந்துவிடுகின்றனர். யார் தாய் தந்தையின் அறிவுரையை கேட்டு மதித்து நடக்க வில்லையோ, அவர்களுக்கு உலகத்திலேயே நரகம்தான்.

குழந்தை: அது யாரு ஷைத்த்தான்?

கருவறை: நான் எல்லாத்தையும் இப்பவே சொல்லிவிட்டால் நல்ல இருக்காது, நீதான் இன்னும் சற்று நேரத்தில் உலகத்தில் போய் பாய போகிறாய், படிப்படியாக நீயும் அறிந்து கொள்வாய்.   

குழந்தை: உலகில் கெட்ட மனிதர்கள் இருப்பார்கள் என்று நீ இரண்டு மாதம்களுக்கு முன் சொன்னியே, அவர்களிடமிருந்து என்னை யார் காப்பற்றுவார்.

கருவறை: உலகத்தில் உனக்கு தாய் தந்தை இருக்கிறார்கள், அவர்களும், அவர்களுடைய அறிவுரையும் உன்னை அந்த கெட்ட மனிதர்களிடம் இருந்து காப்பாற்றும்.

குழந்தை: (மிகவும் சோகமான முகத்துடன்) இனி நான் உன்னை பார்க்கவோ பேசவோ முடியாதா.

கருவறை: (குழந்தையை அன்பாக அணைத்து) இல்லை குழந்தாய், நீ உலகத்துக்கு சென்றதும் நான் தனியாகத்தான் இருப்பேன், எல்லாம் வல்ல இறைவன் நாடினால் உன்னுடைய தம்பியையோ அல்லது தங்கச்சியையோ உன்னைப்போல் அவர்களையும் நான் அரவணைத்து உலகத்து அனுப்புவேன்.

குழந்தை: சரி! சரி!! போகப் போகப்போக சத்தம் அதிகமாகவே கேட்க்குதே?

கருவறை: ஆமாம் குழந்தாய், நீ உலகத்துக்கு போற நேரம் நெருக்கிக் கொண்டே இருத்துது.

குழந்தை: (மிகவும் பிரியும் சோகத்துடன்) நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னை விட்டு பிரியப் போகிறேன் என்று நினைக்கிறேன்.

கருவறை: குழந்தாய் தைரியமாக இரு, நான் சொன்ன அறிவுரைகளை மறந்து விடாதே. கடைசியாக உனக்கு ஒரு அறிவுரை நீ வளர்ந்து பெரியவனானதும் உன்னுடைய தாய் தந்தையின் மனம் புண்படும் படி எதுவும் பேசி விடாதே, நடந்து விடாதே.

குழந்தை: யாரோ என்னை தள்ளுகிற மாதிரி இருக்குதே, மெதுவாக தள்ளச் சொல்லு.

கருவறை: நான் தான் தள்ளுகிறேன், லேசாக வலிக்கும், தாங்கிக்கொள், ஆ!ஆஆஆ!! அதோ நீ உலகத்து போற பாதை திறந்து விட்டது, போய்விடு, இன்னும் கொஞ்சம் அப்படியே மெதுவாக போய்விடு. .

குழந்தை வீறிட்டு அழுதபடி உலகில் பிறந்தது

அல்ஹம்து லில்லாஹ்

மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை.


K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.
தேசிய நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம்.
National Consumer Protection Service Centre.

1 comment:

  1. தாயின் கருவறைக்கும் , குழந்தைக்கும் உண்டான மிக அருமையான உரையாடல் தொகுப்பை படித்து உண்மையில் கண்களில் சிறு துளிகள் ததும்ப மெய்சிலிர்த்துப் போய்விட்டேன்..

    உண்மையில் எவரும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தான் தாயின் கருவறை...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.