1951 ஆம் ஆண்டு விவசாய குடும்பப் பின்னனியில் பிறந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அரசியலுக்கு வருமுன் பி.வி.கேண்டீன் என்ற பெயரில் தேநீர் கடையை நடத்தி வந்தார். அந்தக்கடை இன்றும் அவரது 80 வயதுடைய சகோதரர் ரோஸீ கேன்டீன் என்ற பெயரில் தொடர்ந்து நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் வாழ்வின் திருப்புமுனையாக 1996 ஆம் ஆண்டு பெரியகுளம் நகராட்சி தலைவராக அதிமுக சார்பாக வெற்றி பெற்றார். பின் 2001 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் முதன்முதலாக பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றவரை வருவாய்த்துறை அமைச்சராக்கினார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா என்றாலும் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதால், தான் வழக்கிலிருந்து விடுபடும்வரை தனது நம்பிக்கைக்குரிய விசுவாசியான பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார்.
மீண்டும் 2014 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டதால் மீண்டும் ஒருமுறை இடைக்கால முதல்வராக பதவி வகிக்கும் வாய்ப்பை 'அம்மா' விசுவாசம் பெற்றுத்தந்தது.
தற்போதும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடந்த இரண்டரை மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் இடைக்கால முதல்வராக நியமிக்கப்படாவிட்டாலும் கூட முதல்வரின் அனைத்து இலாக்காக்களையும் கூடுதலாக கவனித்ததுடன் சட்டமன்ற, மந்திரிசபை கூட்டங்களை நடத்தும் அதிகாரத்தையும் பெற்றிருந்தார்.
பொதுவாக முதல்வர்கள் யாரும் ஆட்சியிலிருக்கும் போதே மரணமடைந்தால் உடனடியாக இடைக்கால முதல்வர் என்று ஒருவர் நியமிக்கப்படுவார் பின்பு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பார்கள் ஆனால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணத்திற்குப்பின் இடைக்கால முதல்வராக ஒருவர் நியமனம் செய்யப்படுவதற்கு பதிலாக முழு அதிகாரமுள்ள முதல்வர் ஒருவரே தனது புதிய மந்திரிசபையுடன் பதவியேற்றுள்ளதன் மூலம் பழைய நடைமுறைக்கு விடைகொடுக்கப்பட்டு உட்கட்சி அரசியல் குழப்பங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.
செவ்வாய்கிழமை முதல் மீண்டும் முழுநேர முதல்வராக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள பன்னீர்செல்வம் முன் ஏராளமான சவால்கள் குவிந்துள்ளன.
மறைந்த அதிமுக முதல்வர்கள் எம்ஜியார் மற்றும் ஜெயலலிதாவை போல் கட்சியின், ஆட்சியின் சக்திமிக்க அதிகாரப்புள்ளியாக மாறுவாரா? தமிழக மக்களின் மனங்களை முன்னவர்களைப் போல் வெல்வாரா? கட்சியை சூழ்ந்துள்ள நிழலுலக சக்திகளிடம் சரணடைவாரா? மத்திய எஜமானர்களிடமும் வழமைபோல் வளைந்து கொடுத்து கட்சிக்கே காவியடிக்க துணைபோவாரா? எதிர்க்கட்சியும் ஆட்சியமைக்க உதவிடும் அளவுக்கு நல்லவராகி போவாரா? மக்களுக்காவது ஏதாவது செய்வாரா? என கேள்விகளின் பட்டியல் நீண்டாலும் தற்போதைக்கு சுயஅதிகாரமுள்ள புதிய முதல்வராக தேர்வுபெற்றுள்ள OPS என சுருக்கமாக அழைக்கப்படும் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை வாழ்த்தி வரவேற்போம்.
நம்ம ஊரான்

Ya welcome
ReplyDeleteYa welcome
ReplyDeleteசமாளிப்பார் என்றே நம்புவோம்.
ReplyDelete