.

Pages

Tuesday, February 28, 2017

அதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் 2 ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம் !

அதிராம்பட்டினம், பிப்-28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் 2 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி கட்சியினர் 2 இடங்களில் கட்சிக்கொடி ஏற்றிவைத்து உற்சாகமாகக் கொண்டாடினர்.

நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் குவைத் மண்டல ஊடகச் செயலாளர் அப்துல் சமது தலைமை வகித்தார். அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் முகமது செல்லராஜா, பொருளாளர் ஸ்மார்ட் சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாநில துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இதில் தக்வா பள்ளிவாசல் மற்றும் ஈசிஆர் சாலை பிஸ்மி மெடிக்கல் அருகில் ஆகிய இரண்டு இடங்களில் கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கப்பட்டன.

பின்னர் கட்சி அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் மாணவர் இந்தியா அமைப்பின் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இதில் மஜக அதிரை பேரூர் துணைச் செயலாளர்கள் அபுபைதா, கான் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 

காதிர் முகைதீன் கல்லூரியில் வளாக நேர்காணல் !

அதிராம்பட்டினம், பிப்-28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் தொழில் வழி காட்டி மற்றும் வேலை வாய்ப்பு மையத்தின் சார்பாக வளாக நேர்காணல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் சென்னையைச் சேர்ந்த Alcance Technologies எனும் BPO நிறுவனம்
Customer Support Executive என்ற பணிக்கு நேர்காணல் நடத்தியது. இதில் சுமார் 200 க்கும் மேற்பட்ட இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

இந்நேர்காணலில் கல்லூரி முதல்வர் முனைவர்.ஏ.எம்.உதுமான் முகையதீன் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதில் தொழில் வழிகாட்டி மற்றும் வேலை வாய்ப்பு மையத்தின் அமைப்பாளர் முனைவர்.ஏ.சேக் அப்துல் காதர், முனைவர்.ஏ.முகம்மது சித்திக் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஏ.ஹாஜா அப்துல் காதர் ஆகியோர் நேர்காணலுக்கான ஏற்பாட்டினை செய்தனர். மூன்று நிலைகளில் நடந்த நேர்காணலில் 10 மாணவ, மாணவியர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இம்மாணவர்களுக்கான பணி ஆணைகளை இன்னும் ஒரு வாரத்திற்குள் வழங்க இருக்கின்றனர்.
 
 

2018 ஆம் ஆண்டில் நிலவுக்கு சுற்றுலா செல்லும் இருவர் !

அதிரை நியூஸ்: பிப்-28
அமெரிக்காவின் நாஸா (NASA) விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பாக 1960 மற்றும் 70 ஆம் ஆண்டுகளில் நிலவுக்கு அப்பல்லோ ராக்கெட்களில் (Apollo Missions) சென்று வந்ததுடன் மீண்டும் நிலவை அமெரிக்கர்கள் எட்டிக்கூடப் பார்க்கவில்லை, சுமார் 45 வருடங்களாக மறந்தே போய்விட்டார்கள் என்றும் சொல்லலாம்.

தற்போது ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) என்ற தனியார் நிறுவனத்தின் சார்பாக விண்வெளி வீரர்கள் அல்லாத தனிப்பட்ட மனிதர்களை சந்திரனுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டம் அறிவிக்கப்பட்டு தலைக்கு 2.5 லட்சம் டாலரும் முன்பதிவு செய்துள்ள சுமார் 600 பேரிடம் வசூலிக்கப்பட்டுவிட்டது, அவர்களில் குறிப்பிடத்தக்க சினிமா பிரபலங்கள் 'லியனார்டோ டி காப்ரியோ (டைட்டானிக்) மற்றும் அஷ்டோன் குட்சர்' ஆகிய இருவரும் அடங்குவர்.

2018 ஆம் ஆண்டில் நிலவுக்கு சுற்றுலா செல்லப்போகும் அந்த முதல் இரு நபர்களைப் பற்றிய விபரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை என்றாலும் அவர்களுக்கு விண்வெளிக்கு செல்வதற்கான பயிற்சிகள் மற்றும் மருத்துவ ஆய்வுகள் இந்த வருடமே துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) என்ற தனியார் விண்வெளி நிறுவனத்தின் CEO எலன் மஸ்க் (Elon Musk) என்பவரின் சொந்த நிறுவனமே சர்வதேச பணப்பரிவர்த்தனையில் புகழ்பெற்ற Paypal கூடுதலாக டெஸ்லா மோட்டார்ஸ் (Tesla Motors) வாகன நிறுவனத்தின் தலைவராகவும் செயலாற்றி வருகிறார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு இவரது தனியார் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சரக்குகளை கொண்டு செல்லும் திட்டம் வெற்றியடைந்ததை தொடர்ந்தே நிலவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

மேலும், 2018 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்வெளி ஓடம் ஒன்றை அனுப்பவும் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டுவாக்கில் செவ்வாய் கிரகத்திற்கு (Planet Mars) ஒரே நேரத்தில் சுமார் 100 பேர் கொண்ட குழுவை அனுப்பி காலனி நாடு ஒன்றை செவ்வாயில் உருவாக்கும் திட்டமும் மஸ்க்கிடம் குடிகொண்டுள்ளது.

Source: AFP / Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

காதிர் முகைதீன் கல்லூரியில் நேர்காணல் மற்றும் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

அதிராம்பட்டினம், பிப்-28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் நேர்காணல் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான ஒரு மாத கால பயிற்சி வகுப்புகளின் தொடக்க விழா 26.02.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர்.ஏ.எம்.உதுமான் முகையதீன் தலைமை வகித்து விழாவை தொடங்கிவைத்து பேசுகையில்; இந்த பயிற்சி வகுப்பினுடைய முக்கியத்துவம் பற்றியும், நேர்காணலில் எப்படி நடந்து கொள்வது என்பது பற்றியும் விளக்கமாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இப்பயிற்சி வகுப்புகளை 31.03.2017 வரை காதிர் முகைதீன் கல்லூரியும், பட்டுக்கோட்டை சாய் பயிற்சி நிறுவனமும் இணைந்து நடத்துகின்றன. இதில் Communication Skills மற்றும் Spoken English ஆகியவை குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி வகுப்புகள் தொழில் வழிகாட்டி மற்றும் வேலை வாய்ப்பு மையத்தின் அமைப்பாளர் முனைவர்.ஏ.சேக் அப்துல் காதர் அவர்களின் வழிகாட்டுதலோடு நடைபெற்று வருகிறது.

இவ்வகுப்பில் 100 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சி முடிவில் ஒருங்கிணைப்பாளர் ஏ.ஹாஜா அப்துல் காதர் நன்றி கூறினார்.
 
 
 

மீண்டு... வருகிறது புதிய வடிவில் நோக்கிய 3310 மொபைல் போன்

அதிரை நியூஸ்: பிப்-28
2000 ஆம் வருடத்தில் பின்லாந்து (Finland) நாட்டின் நோக்கியா மொபைல் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டு உலகெங்கும் விற்பனையிலும் நீண்ட உழைப்பிலும் சக்கைபோடு போட்ட மாடல் தான் 3310.

உலகெங்கும் சுமார் 120 மில்லியன் மொபைல் போன்கள் 2004 ஆம் ஆண்டுவரை விற்கப்பட்டதன் மூலம் உலகில் அதிகமாக மக்களால் விரும்பப்பட்ட மொபைல் போன்களின் பட்டியலிலும் நிரந்தர இடத்தையும் பெற்றுள்ளது.

1998 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை உலக மொபைல் சந்தையை தனது கைக்குள் வைத்திருந்தது நோக்கியா, இத்தனை சிறப்புக்கள் இருந்தும் தென் கொரியாவின் சாம்சங் ஸ்மார்ட் போன்களின் வருகையால் தனது மார்க்கெட்டை மொத்தமாக இழந்து மூடுவிழா கண்டது நோக்கியா நிறுவனம்.

நோக்கியா நிறுவன உரிமைகள் மைக்ரோசாப்ட் மொபைல் போன் பிரிவுக்கு 2014 ஆம் ஆண்டு விற்கப்பட்டதை தற்போது HMD குளொபல் எனும் நிறுவனம் கைப்பற்றியுள்ளதுடன் மக்களின் மனங்கவர்ந்த 3310 மொபைல் போன் மாடலை இன்டெர்நெட்டை பயன்படுத்தும் வசதியுடன் மாற்றியமைத்து மறு அறிமுகம் செய்யவுள்ளது.

மேலும், நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஆகிய புதிய மாடல் ஸ்மார்ட் போன்களையும் களத்தில் இறக்கி மீண்டும் சந்தையில் குதித்துள்ளது புதிய நோக்கியா நிறுவனம்.

பழமை கை கொடுக்குமா பார்ப்போம்...

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

சவூதி உள்நாட்டு சில்லறை பெட்ரோல் விலையில் 30 சதவீதம் உயர்த்த முடிவு !

அதிரை நியூஸ்: பிப்-28
உலகின் முதல்நிலை பெட்ரோல் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியா தனது உள்நாட்டு குறைந்த விலை சில்லறை விற்பனையிலும் முதன்மையாகவே திகழ்கிறது. சவுதியில் கடைசியாக 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் லிட்டர் 0.60 ஹலாலாவிலிருந்து (சவுதி காசுகள்) 0.90 ஹலாலாவாக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், 2030 ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலியம் அல்லாத மாற்றுப் பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் என்ற அடிப்படையிலும், 2020 ஆம் ஆண்டுக்குள் சர்வதேச அளவில் பெட்ரோலிய சந்தை நிலவரத்திற்கு ஏற்ப படிப்படியாக உள்நாட்டு பெட்ரோல் சில்லறை விலையில் 30 சதவிகிதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த விலை உயர்வு எதிர்வரும் 2017 ஜூலை மாதம் முதல் அமுலுக்கு வரும் எனவும் பலமாக எதிர்பார்க்கப்படுகிறது.

சவுதி பெட்ரோலிய அமைச்சகமும் சில்லறை விலை விற்பனையில் ஐக்கிய அரபு அமீரகம் பின்பற்றும் நடைமுறையை பின்பற்ற ஆலோசித்து வருவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

மரண அறிவிப்பு ( ரஷீதா அம்மாள் அவர்கள் )

அதிரை நியூஸ்: பிப்-28
அதிராம்பட்டினம், புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் வா.மு சேக்தாவூது அவர்களின் மகளும், மர்ஹூம் எஸ். ஜமால் முஹம்மது அவர்களின் மனைவியும், வா.மு முஸ்தபா கமால் அவர்களின் சகோதரியும், மீரா சாஹிப், செய்யது இப்ராஹீம் ஆகியோரின் மாமியாருமாகிய ரஷீதா அம்மாள் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா இன்று ( 28-02-2017 ) மாலை 5 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

மரண அறிவிப்பு ( சல்மா அம்மாள் அவர்கள் )

அதிரை நியூஸ்: பிப்-28
அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹும் சேக் முகமது தம்பி அவர்களின் மகளும்,  மர்ஹூம் மக்தூம் நெய்னா அவர்களின் மனைவியும்,
மர்ஹூம் சேக் அப்துல் காதர் அவர்களின் சகோதரியும், முகம்மது காசிம்
அவர்களின் தாயாருமாகிய சல்மா அம்மாள் அவர்கள் சிஎம்பி லேன் இஜாபா பள்ளி அருகே உள்ள இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா இன்று ( 28-02-2017 ) மக்ரிப் தொழுகைக்கு  பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

பெற்றோர்களே கவனம் ! வாஷிங்மெஷினில் சிக்கி இரட்டை குழந்தைகள் மரணம்

அதிரை நியூஸ்: பிப்-28
புது டெல்லியின் வடமேற்கில் உள்ள ரோஹினி என்ற பகுதியில் வசிப்பவர்கள் ரவீந்தர், ரேகா தம்பதியினர். இவர்களுக்கு 3 வயதில் நக்ஷ், நீஷூ என்ற பெயரில் இரட்டை ஆண் குழந்தைகள் இருந்தனர்.

நேற்று இக்குழந்தைகளின் தாய் 'டாப் லோடிங் வாஷிங் மெஷினில்' சுமார் 15 லிட்டர் தண்ணீரை நிரப்பி வைத்துவிட்டு சோப்புத்தூள் வாங்க அருகேயிருந்த கடைக்கு சென்றுள்ளார். கடையிலிருந்து திரும்பி வந்தவர் வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை காணாமல் அதிர்ந்து போய் தேடியுள்ளார் மேலும் அவரது கணவரும் அலுவலகத்திலிருந்து உடனே வீடு திரும்பி தேடியுள்ளார்.

இறுதியாக, குழந்தைகள் இருவரும் டாப் லோடிங் வாஷிங் மெஷினுக்குள் இறங்கி விளையாடியபோது அதிலிருந்த தண்ணீரில் முழ்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு பின்பு மருத்துவமனையில் அவர்கள் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டனர்.

இறைவன் விதித்த விதி வலியது என்றாலும் பெற்றோர்களே பொதுவாக விளையாட்டுப் பருவக் குழந்தைகள் ஆபத்தை உணராதவர்கள் அவர்களுடைய விஷயத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி கவனமுடன் இருக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

சவூதியர்கள் தாய்லாந்து செல்ல விதித்த தடை நீக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு மறுப்பு !

அதிரை நியூஸ்: பிப்-28
1989 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் பணிபுரிந்த தாய்லாந்து நாட்டுக்காரன் ஒருவன் அரண்மனைக்குள் புகுந்து பிரசித்திபெற்ற 'நீள வைரம்' (Fabulous Blue Diamond) உட்பட சுமார் 100 கிலோ தங்கத்தை திருடிவிட்டு தப்பிச் சென்றான்.

மேலும், அதே தினத்தில் தாய்லாந்தில் பணியாற்றிய சவுதி தூதரக அதிகாரிகள் 3 பேரும், இரு தினங்களுக்குப் பின் சவுதி வணிகர் ஒருவரும் தாய்லாந்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொள்ளை மற்றும் கொலைகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை தாய்லாந்து அரசு ஒப்படைக்க மறுத்ததாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததாலும் சவுதி அரசு தனது தூதரக உறவுகளை முறித்துக் கொண்டது. மேலும் தாய்லாந்து நாட்டவர்களை வேலைக்கு எடுப்பதையும் முற்றிலும் நிறுத்தியது ஆண்டுகள் பல கடந்தும் தொடர்கிறது. இத்தடைகள் விதிக்கப்படும் வரை வருடத்திற்கு சராசரியாக 77,782 சவுதியர்களும் தாய்லாந்து செல்லக்கூடியவர்களாக இருந்தனர்.

இந்நிலையில், சமூக இணையதளம் ஒன்று, தாய்லாந்து மீதான தடைகள் விலக்கிக் கொண்டுள்ளதாக 'போலியான ஸ்க்ரின் ஷாட்' ஒன்றை பரப்பியதை அறிந்த சவுதி அரசு இச்செய்தியை மறுத்துள்ளதுடன் கீழ்க்காணும் 3 நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்களை மட்டுமே அனுமதிக்க முடியும் எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.

1. தாய்லாந்து பெண்ணை மணமுடித்திருக்கும் சவுதியர் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

2. ஸ்டெம் ஸெல் மாற்று (Stem Cell Transplant) அறுவை சிகிச்சைகள் போன்ற வியாதிகளுக்கு தாய்லாந்து மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெற முடியும் என்ற கட்டாய நிலை ஏற்படும் போது ஆவணங்களை சரிபார்த்து நோயாளி மற்றும் அவருக்கு துணையாக செல்பவருக்கு அனுமதி.

3. தாய்லாந்து வழியாக விமான பயணம் செய்ய நேரிடும் சமயத்தில் மாற்று விமானத்திற்காக (Transit Passenger) குறைந்தபட்சம் 24 மணிநேரம் முதல் அதிகப்பட்சம் 72 மணிநேரம் வரை காத்திருக்கும் சூழல் ஏற்பட்டால் மட்டும் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் விளக்கத்தை பெற்றும் விசா பெற அனுமதிக்கப்படுவர்.

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

அமீரகத்தில் மார்ச் மாத பெட்ரோல் விலையில் சிறிய ஏற்றம் !

அதிரை நியூஸ்: பிப்-28
அமீரகத்தில் மாதம்மாதம் பெட்ரோல் விலை சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப ஏற்றம் இறக்கம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், எதிர்வரும் 2017 மார்ச் மாதத்திற்கான பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 3 பில்ஸூம் (காசுகள்), டீசலின் மீது 2 பில்ஸூம் (Fils) உயர்த்தப்பட்டுள்ளன.

குறிப்பு: ஒப்பீட்டுக்காக 2017 பிப்ரவரி மாத விலை அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது.

1. சூப்பர் 98 – புதிய விலை 2.03 திர்ஹம் (2 திர்ஹம்)
2. சூப்பர் 95 – புதிய விலை 1.92 திர்ஹம் (1.89 திர்ஹம்)
3. ஈ பிளஸ் 91 – புதிய விலை 1.85 திர்ஹம் (1.82 திர்ஹம்)
4. டீசல் - புதிய விலை 2.02 திர்ஹம் (2 திர்ஹம்)

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்று 56.65 டாலருக்கும், அமெரிக்காவில் பேரல் ஒன்று 54.47 டாலருக்கும் விற்பனையாகிக் கொண்டுள்ளது.

Source: Gulf News 
தமிழில்: நம்ம ஊரான் 

அதிரையில் TNTJ கிளை-1 சார்பில் 2 இடங்களில் தெருமுனைப்பிரசாராக் கூட்டங்கள் !

அதிராம்பட்டினம், பிப்-28
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் அதிரையில் எதிர்வரும் ஏப்ரல் ( 09-04-2017 ) அன்று 'முகமதுர் ரசுலுல்லாஹ்' மாவட்ட மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி TNTJ அதிரை கிளை-1 ஏற்பாட்டின் பேரில் மாநாட்டின் நோக்கம் குறித்து விளக்கி கூறுவதற்காக தெருமுனைப் பிரசாரக்கூட்டம் அதிரையில் 2 இடங்களில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு அவ்வமைப்பின் அதிரை கிளை-1 தலைவர் எம்.கே.எம் ஜமால் முகமது தலைமை வகித்தார். மேலத்தெரு அல்பாக்கியத்துஸ் ஸாலிஹாத் பள்ளிவாசல் அருகில் நடந்த கூட்டத்தில் அவ்வமைப்பின் மாநிலச் செயலர் சேப்பாக்கம் அப்துல்லாவும், ஆதம் நகரில் நடந்த கூட்டத்தில் அதிரை அவ்ன், செய்யது ஆகியோர் கலந்துகொண்டு 'முகம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாடு ஏன்?' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 

அதிரையில் நடந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆலோசனைக்கூட்டம் ( படங்கள் )

அதிராம்பட்டினம், பிப்-28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி செயல்வீரர்களின் ஆலோசனைக்கூட்டம் திங்கட்கிழமை இரவு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். மூத்த உறுப்பினரும், முன்னாள் செயலாளருமாகிய முகமது சாலிகு, செயலர் வழக்கறிஞர் முனாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடந்த 26-02-2017 அன்று சென்னையில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்டத்தில் தேசியத் தலைவராக பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவிப்பது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 70வது ஆண்டு நிறுவனநாளையொட்டி வரும் மார்ச் 11ந் தேதி திருநெல்வேலியில் பொருட்காட்சி மைதானத்தில் நடைபெறும் சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பு மாநில மாநாடு - வரலாற்று கண்காட்சியில் திரளாக பங்கேற்பது, உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக அக்கட்சியின் அதிரை பேரூர் செயலர் சேக் அப்துல்லா வரவேற்றார். முடிவில் மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் சாகுல்ஹமீது நன்றி கூறினார். இக்கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.