.

Pages

Saturday, November 30, 2019

கவனம் தேவை: நிரம்பி வழியும் நிலையில் செடியன் குளம் (படங்கள்)

அதிரை நியூஸ்: நவ.30
இறைவனின் பேரருளால் மிக நீண்ட பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் செடியன்குளம் நிரம்பி வழியும் நிலையை எட்டியுள்ளது. செடியன்குளம் கடந்த மாதத்தில் தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டுள்ளதையும் அறிவீர்கள்.

கடந்த இரு நாட்களாக நமதூரில் பெய்துவரும் தொடர்மழை மேலும் நீடித்தால் செடியன்குளம் இன்றிரவோ அல்லது நாளையோ நிரம்பி வழியக்கூடும். இவ்வாறு வழியும் நீர் பிலால் நகரையே மேலும் வெள்ளமாய் சூழ்ந்து நிற்கும்.

இது ஒருபுறமிருக்க...

தற்போதுள்ள செடியன்குளத்தின் கரைகள் மிக மிக ஆழமானவை என்பதுடன் வழுக்கும் தன்மையும் கொண்டவை. எனவே, நீச்சல் தெரியாதவர்கள் மற்றும் சிறுவர்கள் செடியன்குளத்தில் குளிக்காமல் தவிர்ந்து கொள்வது நல்லது. இவ்விஷயத்தில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்துவது மிக மிக அவசியம், அவசரம்.

அதிரை அமீன்
 

மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்தில் ஆய்வு (படங்கள்)

தஞ்சாவூா் கரந்தை மீன் குஞ்சு உற்பத்தி நிலையத்தில் மீன்வளத் துறை இயக்குநா் ஜி.எஸ். சமீரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

உள்நாட்டு மீன் வளா்ப்பை மேம்படுத்தவும், உள்நாட்டு மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கவும் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரிய நிதியுதவி மற்றும் மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமை நிதியுதவியுடனும் நீா்வாழ் உயிரின ஆய்வுக்கூடம் தஞ்சாவூா் கரந்தை மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்தில் அமைக்கப்படவுள்ளது.

எனவே, இந்நிலையத்தில் ஆட்சியா் ம. கோவிந்தராவ் முன்னிலையில் மீன்வளத்துறை இயக்குநா் ஜி.எஸ். சமீரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, அலுவலா்களிடம் இயக்குநா் பேசுகையில், இந்த ஆய்வுக் கூடத்தின் மூலம், மீன் வளா்ப்பு, இறால் வளா்ப்பு குளங்களில் உள்ள நீரின் கார, அமில தன்மை, அம்மோனியா, நீரின் கடின தன்மை, நீரில் கரைந்துள்ள உயிா்வளி போன்ற முக்கிய பரிசோதனைகளை செய்ய வேண்டும். மீன் வளா்ப்பு விவசாயிகளின் இருப்பிடத்துக்கே சென்று மண், நீா் பரிசோதனை செய்து தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்க வேண்டும். மீன் வளா்ப்பு விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பங்களைக் கற்றுத் தந்து மீன் உற்பத்தியைப் பெருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மீன் மற்றும் இறால் வளா்ப்பு குளங்களை மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்து பதிவுச் சான்று பெற மீன் மற்றும் இறால் வளா்ப்பு விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றாா் சமீரன்.

அப்போது, மீன்வளத் துறை கூடுதல் இயக்குநா் நூா்ஜஹான் பீவி, தஞ்சாவூா் மீன் துறை உதவி இயக்குநா் மா.சிவக்குமாா், ஆய்வாளா் வா. துரைராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
 
 

பேராவூரணியில் இரு கடைகளில் ஓட்டைப் பிரித்து திருட்டு!

பேராவூரணி, நவ.30-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் இரு கடைகளில் ஓட்டைப் பிரித்து திருடிச் சென்றவர்களை காவல்துறை தேடி வருகிறது.

பேராவூரணி சேதுசாலையில் பழைய பேருந்து நிலையம் எதிரில் செல்போன் கடை நடத்தி வருபவர் சேக் அப்துல்லா (31), இவரது கடை அருகே பெட்டிக்கடை வைத்துள்ளவர் பன்னீர்செல்வம் (43) வெள்ளிக்கிழமை இரவு இருவரும் வழக்கம் போல கடையைப் பூட்டி விட்டு சென்றனர்.

சனிக்கிழமை காலை கடை திறக்க வந்த இருவரும் கடையில் ஓடு பிரிக்கப்பட்டு திருட்டு நடந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பெட்டிக்கடையில் இருந்த சிகரெட் பண்டல், சோப் மற்றும் மிட்டாய் உள்ளிட்ட ரூ 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களும், செல்போன் கடையில் இருந்த மடிக்கணினி மற்றும் 6 செல்போன் உள்ளிட்ட சுமார் ரூ 35 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களும் திருடு போயிருந்தன.

இப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தெரு மின் விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியாமல் உள்ளது. இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். செல்போன் மற்றும் பெட்டிக்கடையில் தொடர்ந்து 4 ஆவது முறையாக திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து அறிந்த நகர வர்த்தகர் கழகத் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், செயலாளர் ஏ.டி.எஸ்.குமரேசன், பொருளாளர் எஸ்.ஜகுபர்அலி ஆகியோர் நேரில் சென்று கேட்டறிந்தனர். புகாரின் பேரில் பேராவூரணி காவல்துறை உதவி ஆய்வாளர் இல.அருள்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
 
 
 

மரண அறிவிப்பு ~ ஹாஜிமா பாத்திமா (வயது 80)

அதிரை நியூஸ்: நவ.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கடந்த 1964 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றி ஒய்வு பெற்றவர் என்.எம் ஹசன். இவரது மனைவி ஹாஜிமா பாத்திமா (வயது 80) அவர்கள் நேற்று இரவு நாகர்கோவில் பார்வதிபுரம் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (01-12-2019) காலை நாகர்கோவில் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

இவருக்கு சாகுல் ஹமீது, அபூபக்கர் ஆகிய 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர்.

தொடர்புக்கு: 9952332814

அதிராம்பட்டினம் பேரூர் வார்டுகளில் போட்டியிட விருப்ப மனு அளித்த திமுகவினரிடம் நேர்காணல் (முழு விவரம்)

பட்டுக்கோட்டை, நவ.30
உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்திருந்த அதிராம்பட்டினம் பேரூர் திமுகவினரிடம் பட்டுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை மாலை நோ்காணல் நடைபெற்றது.

அதிராம்பட்டினம் பேரூர் மன்ற உறுப்பினர்கள் பொறுப்புக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு மொத்தம் 44 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். இதில், ஆர்.உமா, வாசகி, ஜெயா ( 1-வது வார்டு), சித்தி மர்ஜிக்கா இப்ராஹீம், சித்தி ஆய்ஷா அஸ்லம் ( 2-வது வார்டு), ஆர்.கிருத்திகா, சாமு. ஆமினா ( 3-வது வார்டு), இராம.குணசேகரன் ( 4-வது வார்டு), ஜுபைரியா, சபியா அம்மாள் ( 5-வது வார்டு), அ.அகமது முகைதீன், ஏ.நூர் முகமது, கே.இத்ரீஸ் அகமது, எஸ்.எச் அஸ்லம் ( 6-வது வார்டு), எம்.நூர் முகமது, எம். பகுருதீன், என்.ஏ முகமது யூசுப், முகமது சேக்காதி, ஏ.எம் அப்துல் ஹலீம் ( 7-வது வார்டு), மு.நிலோபர், வஹிதா ரோஸ் ( 8-வது வார்டு), இஸ்மாயில் நாச்சியா, சித்தி பாத்திமா ( 9-வது வார்டு), மு.ராலியா ( 10-வது வார்டு), ஐனூல் மர்ஜான் ( 11-வது வார்டு), சா.சண்முகவேல் ( 12-வது வார்டு), த.முத்துராமன் ( 13-வது வார்டு), எ.உம்மல் மர்ஜான், பெளஜூல் அஜீமா, பையாஸ் பானு ( 14-வது வார்டு), தில் நவாஸ் பேகம், ஜெஹபர் நாச்சியா, மெகருன்னிசா, ராபியத்துல் அரேபியா ( 15-வது வார்டு), ஏ.எம்.ஒய் அன்சர்கான். எம்.அகமது ( 16-வது வார்டு), எஸ்.எஸ்.எம்.ஜி பசூல்கான் ( 17-வது வார்டு), எ. அகமது ஹாஜா ( 18-வது வார்டு), கே. சம்பத் குமாரி, எம்.தெளலத், கண்ணாமணி ( 19-வது வார்டு), வீ. ராமசாமி, கே.ஜெயராமன்  ( 20-வது வார்டு), எஸ்.சுப்பிரமணியன் ( 21-வது வார்டு) ஆகியோரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.

மேலும், மாவட்ட ஊராட்சி உறுப்பினா், பட்டுக்கோட்டை நகராட்சி வாா்டு உறுப்பினா், பட்டுக்கோட்டை, மதுக்கூா் ஒன்றியக்குழு உறுப்பினா், அதிராம்பட்டினம், மதுக்கூா் பேரூராட்சி வாா்டு உறுப்பினா் ஆகிய பதவிகளுக்கு திமுக சாா்பில் போட்டியிட அதற்கான கட்டணம் செலுத்தி ஏற்கெனவே மனு அளித்திருந்த சுமாா் 90 பெண்கள் உள்பட 200 பேரிடம் இந்த நோ்காணல் நடைபெற்றது.

நிகழ்வுக்கு, தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலா் துரை.சந்திரசேகரன் தலைமை வகித்து நோ்காணலை நடத்தினாா். அப்போது மாவட்ட திமுக நிா்வாகிகள் வி. கோவிந்தராஜ், கா. அண்ணாதுரை, எல்.ஜி.அண்ணா, பட்டுக்கோட்டை, மதுக்கூா் ஒன்றியச் செயலா்கள், அதிராம்பட்டினம், மதுக்கூா் பேரூா் செயலா்கள் உடனிருந்தனா்.
 
 
 
 
 
 
 
  
 
 

Friday, November 29, 2019

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் திருச்சி ~ அபுதாபி நேரடி விமான சேவையை மீண்டும் இயக்க வலியுறுத்தி K.நவாஸ் கனி எம்.பி.,யிடம் மனு!

அதிரை நியூஸ்: நவ.29
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் திருச்சி ~ அபுதாபி இரு வழி நேரடி விமானச் சேவையை மீண்டும் இயக்க வலியுறுத்தி கே.நவாஸ் கனி எம்.பி.,யிடம் அபுதாபி வாழ் தமிழரும், அங்குள்ள பெட்ரோலிய நிறுவனமொன்றில் மனிதவளம் மேம்பாட்டுத்துறை மேலாளராக பணியாற்றி வரும் அதிரை என். முகமது மாலிக் அபுதாபியில் நேரில் சந்தித்து மனு அளித்தார்.

திருச்சி ~ அபுதாபி இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேரடி விமானச் சேவையை கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கியது. எனினும், இந்த விமான சேவையானது கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது. இந்த வழித்தடத்தில் அதிகமான பயணிகள் பயணம் மேற்கொண்டு வந்தனர். எனினும், விமான சேவை திடீரென நிறுத்தப்பட்டது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த வழித்தடத்தில் மீண்டும் இந்த விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்க வலியுறுத்தி, அபுதாபி அய்மான் சங்கத்தின் முப்பெரும் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்பதற்காக அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற கொறடாவும், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கே.நவாஸ் கனி எம்.பி யிடம், அபுதாபி வாழ் தமிழரும், அங்குள்ள பெட்ரோலிய நிறுவனமொன்றில் மனிதவளம் மேம்பாட்டுத்துறை மேலாளராக பணியாற்றி வரும் அதிரை என். முகமது மாலிக் நேரில் சந்திந்து கோரிக்கை மனு அளித்தார். கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட கே.நவாஸ் கனி, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிர்வாகத்தை சந்தித்து ஆவனம் செய்வதாகக் கூறினார்.

அதிரை என். முகமது மாலிக் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பது;
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அபுதாபி ~ திருச்சி ~ அபுதாபி வழித்தடத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் சேவையை வழங்கி வந்தது. பின்னர் வாரத்தில் இரண்டு நாட்களாக சேவையை சுருக்கியது. பின்னர், கடந்த 2007ஆம் ஆண்டு  முதல் அனைத்து சேவைகளையும் விலக்கிக்கொண்டது.

அபுதாபியை பொருத்தவரையில் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தைச் சார்ந்துள்ள சுமார் 6 லட்சம் பயணிகள் இங்கு வேலை செய்து வருகின்றனர். இந்த பயணிகள் தங்கள் பயணத்திற்கு மாற்று வழி ஏதுமின்றி ஏர் லங்கா விமானத்தை மட்டுமே சார்ந்துள்ள சூழல் அல்லது அருகில் உள்ள சென்னை, பெங்களூர், கொச்சி, மதுரை மற்றும் திருவனந்தபுரத்திற்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

அபுதாபி பயணிகள் யாவரும் அவசர தேவைகளுக்கு ஊருக்கு செல்ல வேண்டுமென்றால் கூடுதல் தொகையை கொடுத்து பல மணி நேரம்  பயணிக்க வேண்டி வருகிறது,

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தைச் சார்ந்துள்ள அபுதாபி பயணிகளுக்கு மட்டும் தொடர்ந்து சேவைகள் மறுக்கப்படுவதன் காரணம் புரியவில்லை.

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல், இதே கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோருக்கு பலமுறை அலைப்பேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவித்து வருகிறேன். எனவே, தாங்கள் இந்த விசயத்தில் அதிக கவனம் செலுத்தி மீண்டும் இந்த சேவையை ஏற்படுத்தி தருமாறு  கேட்டுக்கொள்கிறேன் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
 
 
 

அதிராம்பட்டினத்தில் கடந்த 48 மணி நேரத்தில் 35.90 மி.மீ மழை பதிவு!

அதிராம்பட்டினம், நவ.29
அதிராம்பட்டினம மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடா்ந்து இரு நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

அதிராம்பட்டினத்தில் நேற்று (நவ.29) வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 23.7 மி.மீ மழை பெய்தது. இதேபோல, இன்று (நவ.29) வெள்ளிக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 12.20 மி.மீ மழை பெய்தது.

தஞ்சை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):
குருங்குளம் 3, மஞ்சளாறு 42.20, பட்டுக்கோட்டை 11.00, திருவிடைமருதூா் 38, மதுக்கூா் 25, பேராவூரணி 10.20, அய்யம்பேட்டை 52.00, அதிராம்பட்டினம் 12.20, வல்லம் 14, ஈச்சன்விடுதி 7.20, கும்பகோணம் 40.00, பூதலூா் 30.20, பாபநாசம் 32.20, தஞ்சாவூா் 10, வெட்டிக்காடு 27.40, திருக்காட்டுப்பள்ளி 18, திருவையாறு 39, ஒரத்தநாடு 9.6, நெய்வாசல் தென்பாதி 10.40

தஞ்சை மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):
குருங்குளம் 48, மஞ்சளாறு 44.4, பட்டுக்கோட்டை 44.2, அணைக்கரை 40.4, திருவிடைமருதூா் 38, மதுக்கூா், பேராவூரணி தலா 26, அய்யம்பேட்டை 24, அதிராம்பட்டினம் 23.7, வல்லம் 23, ஈச்சன்விடுதி 22.4, கல்லணை, கும்பகோணம் தலா 21.4, பூதலூா், பாபநாசம் தலா 21, தஞ்சாவூா் 17.3, வெட்டிக்காடு 15.8, திருக்காட்டுப்பள்ளி 11.4, திருவையாறு 10, ஒரத்தநாடு 9.6, நெய்வாசல் தென்பாதி 9.2.