பிலால் நகரில் ரூ.17.11 லட்சத்தில், புதிய தார்சாலை அமைக்கும் பணி இம்மாத இறுதிக்குள் தொடங்க இருப்பதாக பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் தகவல் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகர் பகுதியில், சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான மழைநீர்/கழிவு நீர் வடிகால் வசதி அறவே இல்லாததால், ஆண்டுதோறும் பெய்யும் மழையால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு நிலவும். மேலும், இப்பகுதியின் பிரதான சாலைகள் முற்றிலும் சேதமடைந்து, சேரும் சகதியுமாகக் காட்சியளிக்கும். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனர். மேலும், மழைநீர் குடியிருப்புகளில் புகுந்து விடுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்து வந்தனர். இதுகுறித்து, தினமணி நாளிதழில் செய்திகள் அவ்வப்போது பிரசுரமாகி இருந்தது.
மேலும், பிலால் நகரில் புதிதாக தார் சாலை, மழைநீர் / கழிவு நீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ மற்றும் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் இப்பகுதி ஜமாஅத் நிர்வாகிகள், பொதுமக்கள் மனுக்கள் அளித்து, தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அனுமதியின் பேரில், 2018-2019 ஆம் ஆண்டு Scheme Component of Pooled Assigned Revenue (SCPAR) திட்டத்தின் கீழ், பிலால் நகரில் ரூ.8.87 லட்சத்தில், 350 மீட்டர் நீளத்தில் புதிய தார்சாலை, ரூ.8.24 லட்சத்தில், 325 மீட்டர் நீளத்தில் மற்றொரு புதியதார் சாலை அமைக்கும் பணி இம்மாத இறுதிக்குள் தொடங்க இருப்பதாக பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும், பிலால் நகரில் ரூ.26 லட்சத்தில், மழை / கழிவு நீர் வடிகால் அமைப்பதற்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அல்ஹம்துலில்லாஹ். விரைவில் திட்டம் நிறைவேற்றப்பட்டு மக்கள் நிம்மதி அடைய துஆ செய்வோமாக.
ReplyDelete