.

Pages

Monday, March 31, 2014

முத்துப்பேட்டையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு !

முத்துப்பேட்டை ஆசாத் நகரில் மளிகை கடை வைத்து இருப்பவர் அப்துல் வகாப். இவரது மகன் முகம்மது சபியுல்லாவுக்கும, புதுக்கோட்டை மாவட்டம் பி.ஆர்.பட்டிணம் அபுல்பரக்கத் மகள் சபினா பேகத்திற்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்தை முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜும்ஆ பள்ளிவாசலில் சுன்னத் ஜமாத் முறைபடி திருமணமும், அதே பள்ளிவாசலில் சாப்பாடு நடைபெறுவதாக முடிவு செய்யப்பட்டு திருமண பத்திரிக்கையில் அடிக்கப்பட்டன. அதனால் திருமணத்திற்கான ஏற்பாடுகளை பள்ளிவாசலில் இரண்டு நாட்களாக செய்யப்பட்டன. இந்த நிலையில் மணமகன் மற்றும் பெண் வீட்டார் திடீர் என்று தவ்ஹீத் கொள்கை படி திருமணத்தை நடத்த திட்டமிட்டு கருமாரியம்மன் கோவில் அருகே உள்ள மணமகனின் உறவினர் வீட்டில் வைத்து நேற்று காலை 11.30 மணியளவில் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில் திருமணத்தை நடத்தினர். பள்ளிவாசலில் சுன்னத் ஜமாத் முறைபடி திருமணம் நடத்த தயாராக எதிர்பார்த்து காத்து இருந்த ஜமாத் நிர்வாகிகள், ஊர்காரர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளிவாசல் சுன்னத் ஜமாத் நிர்வாகிகள், திருமணத்தை ஜமாத்துக்கு மாறாக தவ்ஹித் கொள்கைப்படி நடத்தியதால் பள்ளிவாசலில் சாப்பிட அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தனர். இதனால் பெரும் பதற்றமானது. உடன் மனமகன் வீட்டாரும், தவ்ஹித் ஜமாத் பிரமுகர்களும் முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தொவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தலைமையில் போலீசார் ஆசாத்நகர் பள்ளிவாசல் சுன்னத் ஜமாத் நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் பிரச்சனை பெரிதாகி ஆத்திரம் அடைந்து சுன்னத் ஜமாத் நிர்வாகிகள் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்ட மதரஸாவை பூட்டுப்போட்டு பூட்டினார்கள். இதனால் மணமகன் உறவினர்கள் தவ்ஹித் ஜமாத் முன்னாள் மாவட்ட தலைவர் அன்சாரி தலைமையில் சாலைமறியலில் ஈடுப்பட்டனர். இதனால் திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் சிறிது நேரம் போக்கு வரத்து தடைப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை டி.எஸ்.பி.கணபதி தலைமையில் போலீசார் வந்து சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களை அப்புறப்படுத்தினர். அதன்பிறகு மாப்பிள்ளை தந்தை அப்துல் வகாப் மற்றும் இவரின் தந்தை பக்கிர் ராவுத்தர் ஆகியோர் பள்ளிவாசல் சென்று சுன்னத் ஜமாத் நிர்வாகிகளிடம் நான் செய்தது தவறு மன்னித்து கொள்ளுங்கள். ஜமாத் என்னா முடிவு எடுத்தாலும் கட்டுப்படுகிறேன், வந்தவர்களுக்கு சாப்பாடு வழங்க அனுமதி தாருங்கள் என்று கண்ணீர் விட்டு கேட்டனர். அதனால் சமாதனம் அடைந்த பள்ளிவாசல் சுன்னத் ஜமாத் நிர்வாகிகள், ஜமாத் கூட்டத்தை கூட்டினார்கள். இதில் நூற்றுக்கணக்கான இளைஞர்களும் கலந்துக் கொணடனர். அப்பொழுது பள்ளிவாசலில் நடந்த கூட்டத்தில் போலீசார்கள் மணிகண்டன், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் தனது செல் போனில் படம் எடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் போலீசாரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால் இளைஞர்களுக்கும், போலீசுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு சமாதானம் செய்யப்பட்டன. அப்பொழுது நடந்த கூட்டத்தில் மாப்பிளை தந்தை பள்ளிவாசலுக்கு, செய்த தவறுக்காக ஒரு லட்சம் அபராதம் கட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டன. இதற்கு மாப்பிள்ளை தந்தை அப்துல் வகாப் சம்மதம் தெரிவித்து கையெழுத்து போட்டார். அதன் பிறகு திருமணத்துக்கு சாப்பிட வந்த ஆண்கள் மற்றும் பெண்களை சாப்பிடும் மதரஸாவின் பூட்டை திறந்து அனுமதித்தனர். இது குறித்து திருத்துறைப்பூண்டி தாசில்தார் ராஜகோபால், வருவாய் ஆய்வாளர் ராமச்சந்திரன் உட்பட அதிகாரிகள் விசாரனை நடத்தினார்கள். மேலும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பள்ளிவாசல் அருகே துப்பாக்கி ஏந்திய போலீசார் உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர். இச்சம்பவத்தால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நன்றி: நிருபர் முத்துப்பேட்டை மொய்தீன் பிச்சை


11 comments:

  1. திருமண அழைபிதழில் தெளிவாக திருமணம் எங்கே நடைபெறும் என்று குறிப்பிட பிறகு ஏன் குழப்பம் ஏற்படுத்த வேண்டும்? மாப்பிள்ளை வீட்டார் உங்க பக்கம் இருந்தால் முன்பே இடத்தை மாற்றி இருக்கலாம் அவர்கள் உங்கள் கொள்கை இல்லாதவர்கள் என்று தெரிகிறது. இது யாருடைய தூண்டுதல்? ஜாதி மாறி கல்யாணம் பண்ணினால் என்னவாகும் என்பதை தினசரி பார்க்கிறோம், உங்களால் அது போல் இனி நம் சமுதாயத்தில் நடக்கும். பெண் வீட்டார்கள் இந்த மாறி விசயத்தில் இனி உஷாராக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இயக்கங்கள் சமுதாயத்தை காக்க வேண்டுமே தவிர காட்டி கொடுக்க கூடாது!!! நல்ல வேலை 144 போடலையாம்.

    ReplyDelete
  2. பாவம். நம்பிக்கை துரோகங்கள்.
    கல்யானத்திர்க்குமுன்
    இருவரும் வெவ்வேறு மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் போலும்.
    இனிமேல் கவனமுடன் செயல்பட்டால் இது போன்ற அவமரியாதைகள் தவிர்க்கலாம்.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    மணமக்கள் ஒன்றாக இணைந்து பல்லாண்டு வாழ்க.
    வந்தவர்கள் வேலை முடிந்ததும் பிரிந்து செல்க.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  4. முத்துப்பேட்டை ஆசாத் நகர் ஜும்ஆ பள்ளிவாசலில் சுன்னத் ஜமாத் முறைபடி திருமணமும், அதே பள்ளிவாசலில் சாப்பாடு நடைபெறும் என்று பேசி, திருமண அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்ட பின்னர் தவ்ஹீத் பள்ளியில் திருமணத்தை நடத்தினால் அந்த அழைப்பிதழுக்கு என்ன மரியாதை இருக்கு, ஒன்று மட்டும் நமக்கு புரிகிறது இரு வீட்டாரின் பெரியவர்கள் கலந்து பேசாமால், மனம்விட்டு பேசாமல், சரியான திட்டம் தீட்டாமல், யோசனை இன்றி இந்த திருமணத்தை நடத்திருக்கிறார்கள். விட்டில் உள்ள பெரியவர்கள் முன்னமே திட்டம் போட்டு செயலில் இறங்கி இருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது. இந்த பிரச்சனைக்கு மூலக்காரணமே இருவிட்டரின் பெரியவர்கள் தான். சரி அதை விட்டு தள்ளுங்க மணமக்கள் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் நாம் அனைவரும் வேண்டுவோமாக.

    ReplyDelete
  5. முத்துபேட்டையில் தவ்கித் ஜமாஅதுக்கும், சுன்னத்துவல் ஜமாஅதுக்கும் சண்டையும் சச்சரவும அதுவும் ஒரு கல்யாணத்தில் தானாம்..........

    ReplyDelete
  6. இந்த நிகழ்வுகள் நமக்கு தரும்படிப்பினை..... பெரும்தன்மையும், விட்டுகொடுக்கும் மனப்பான்மையும் முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொள்ளும் நம்மிடம் இல்லை என்பதை காட்டுகிறது (.லக்கும் தீனுக்கும் வலியதீன்.)

    ReplyDelete
  7. Aiyaiyo,,,,,,annea katchche
    aaanda eppade pochche?

    ReplyDelete
  8. முத்துப்பேட்டை போன்ற ஊர்களில் மற்றவர்கள் எள்ளி நகையாடும் விதத்தில் - கேலிச்சிரிப்புக்கு இடம் கொடுத்த அனைவரையும் கண்டிக்க வேண்டும். சாப்பிட வந்த அம்மா பட்டினம் போன்ற ஊர்களில் இருந்து வந்தவர்கள் நடு ரோட்டில் பசியோடு நின்றது பெரும் அவமானம். விருந்தினருக்கு கண்ணியக் குறைவு.

    ஒரு குடும்பத்துக்குள் இப்படி குழப்பம் செய்து சமுதாயத்தை ஊராரின் முன்பும் பிற மதத்தினர் முன்பும் தலை குனியச் செயதவர்களை யாராக இருந்தாலும் அல்லாஹ்தான் மன்னிக்க வேண்டும்.

    இப்படி ஒரு குழப்பம் ஏற்படப் போகிறது என்று தெரிந்து இருந்தால் ஒரு திருமண மண்டபத்தில் வைத்து செய்து இருக்கலாமே! ஏன் பள்ளிவாசல் பெயர் போட்டு பத்திரிகை அடிக்க வேண்டும்? பள்ளிவாசலின் திருமணக் குழுவுக்கு அழைப்புக் கொடுக்க வேண்டும்? பிறகு மாப்பிள்ளை, பெண்ணை குடும்பத்தின் மூத்தவர்களின் அனுமதியும் தகவலும் இன்றி வேறு இடத்துக்கு கொண்டு சென்று திருமணம் செய்ய வேண்டும்? குடும்பப் பெரியவர்கலின் யெதிர்ப்பையும் மீறி சிலர் தூண்டுதலால் பெரிய தலைக்குனிவு.

    ReplyDelete
  9. பல கடவுள்களைக் கும்பிடும் பல கொள்கை உடையவர்கள் ஆன பிஜெபி மதிமுக விசயகாந்த் கட்சி பாமாக ஆகியோர் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள். ஆனால் ஒரே அல்லாஹ்வை வணங்கும் முஸ்லிம்கள் சுன்னத் ஜமாத் தவ்ஹீது ஜமாத் யென்று பிரிந்து னின்று இப்படி சமுதாயத்தை கேவலப் படுத்துகிறார்கள். யார் கல்யாணம் செய்தாலும் அல்லாஹ் பெயரில்தானே செய்கிறார்கள்? அல்லது மாங்கல்யம் தந்துனானே யென்று செய்கிறார்களா?

    ReplyDelete
  10. வேதனை.சமூதாயம் குள்ளனரிகளால் குதறப்படுகிறது. இறைவன் உருவம் உள்ளவன் அல்லது உருவம் இல்லாதவன் என்று ஆரம்பத்திலே பிரிந்து நிற்கின்றார்கள். இப்படி ருசி ருசியாகப் பேசி சமுதாயம் பிரிந்து போய்விட்டது. பணம் கண்ணுக்கு தெரிகிறது. குணம் குப்பைக்கு போய்விட்டது. இனி எப்போ நம் வாழ்வில் அந்த ஒற்றுமையான காலத்தைப் பார்ப்போமோ ? புதுசு புதுசா பேசி புதைகுழியில் தள்ளிவிட்டார்கள். அண்ணன் ஒரு வழி. தம்பி ஒரு வழி. பிரித்துவிட்டார்கள். வேதனை. பாவம் அந்த பெண் வீட்டார் தாய் தந்தை எப்படி வேதனை பட்டிருப்பார்கள். இது தான் மார்க்கமா ? இஸ்லாம் என்றால் சாந்தி. இது தான் சாந்தியா ? அடுத்தவர் மனம் நோகும் படி பேச கற்றுக்கொண்டவர்கள். இப்படித்தான் செயல்கள் இருக்கும். இந்த அவமானம் தாங்கிக் கொள்ளமுடியாதது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.