.

Pages

Tuesday, March 31, 2015

கந்தூரி ஆதரவாளர்களை மீட்டெடுக்க அதிரை சாகுல் அழைப்பு ! [ காணொளி இணைப்பு ]

அதிரையில் அமைந்துள்ள காட்டுப்பள்ளி மற்றும் கடற்கரைதெரு தர்ஹாக்களில் வருடந்தோறும் கந்தூரி விழா நடைபெற்று வருகிறது. இவற்றை அதிரையில் வாழுகின்ற ஒரு சாரார் ஆதரிப்பதும் மற்றொரு சாரார் கடுமையாக எதிர்த்து வருவதுமாக இருந்துவரும். இதுதொடர்பாக அதிரையில் வாழுகின்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், தங்களின் எதிர்ப்பையோ அல்லது ஆதரவையோ கந்தூரி ஆதரவாளரிடமோ அல்லது எதிர்ப்பாளரிடமோ அல்லது பொதுமக்களிடமோ பகிரங்கமாக தெரியப்படுத்தியதில்லை.

கடந்த சில வருடங்களாக ஊரில் நடக்கும் கந்தூரி விழாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிரையில் இயங்கிவரும் தவ்ஹீத் அமைப்புகள் அவ்வப்போது துண்டு பிரசுரங்களும், தெருமுனை பிராசாரங்களும், பொதுக்கூட்டங்கள், கந்தூரி விழாவிற்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து வேட்டைகளும், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்குதல், கந்தூரி விழாவின்போது விநியோகிக்கும் மின்சாரத்தை தடை ஏற்படுத்தாமல் இருக்க மின்சார வாரியத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட தங்கள் தரப்பு எதிர்ப்புகளை பகிரங்கமாக தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்னும் சில வாரங்களில் காட்டுப்பள்ளி கந்தூரி விழா நடைபெற இருக்கிறது. கந்தூரியை பகிரங்கமாக ஆதரிக்கும் ஆதரவாளர்களை மீட்டெடுக்க உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் அன்பர்களின் ஒத்துழைப்பை கோருகிறார் அதிரை சாகுல். இதுதொடர்பாக அதிரை சாகுல் நமக்கு அளித்த காணொளி விளக்கம்.

மேலும் கந்தூரி எதிர்ப்பாளர் - ஆதரவாளர் கந்தூரி தொடர்பாக மேலதிக விவரங்கள் - விளக்கங்கள் பெற விரும்புவோர் நம்மை ( அதிரை சாகுல் ) அலைப்பேசியில் 0091 9894973416 தொடர்பு கொண்டு கேட்டறியலாம் என தெரிவித்துள்ளார்.

மரண அறிவிப்பு ! ( வாவண்ணா ஸார் )

நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் வா.மு.செ அப்துல் ஹமீது அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி லெ.மு.செ இப்ராஹீம் மரைக்காயர் அவர்களின் மருமகனும், 'தமிழ் கணினியின் தந்தை' மர்ஹூம் ஹாஜி உமர் தம்பி அவர்களின் சகோதரரும், முஹம்மது யூசுப், ஜமாலுதீன் ஆகியோரின் தகப்பனாரும், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஓவியம் மற்றும் வரலாற்று ஆசிரியராக பணிபுரிந்த 'வாவண்ணா ஸார்' என்கிற முஹம்மது அப்துல் காதர் அவர்கள் ( வயது 74 ) இன்று பகல் 12.35 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8.30 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

அதிரை பேரூர் தமுமுகவின் மனித நேயம்!

அதிரையில் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருபவர் முஹம்மது காசிம். ( வயது 65 ). இவர் இன்று காலை உடல் நலக்குறைவால் மரணமடைந்து விட்டார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

தகவலறிந்த அதிரை பேரூர் தமுமுக நிர்வாகிகள் நேரடியாக இருப்பிடத்திற்கு சென்று உடலை மீட்டு தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் தக்வா பள்ளிக்கு கொண்டு வந்தனர். ஜனாஸா கடமைகள் முடிந்தவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

அதிரை பேரூர் தமுமுகவினர் நேரடியாக களத்தில் இறங்கி ஜனாஸா நல்லடக்கம் செய்ய தேவைப்படும் அனைத்து பணிகளையும் உடனிருந்து செய்து முடித்தனர். ஓடோடி சென்று உதவும் இவர்களின் மனித நேயத்தை பலரும் வியந்து பாராட்டினர்.
 
 

ராஜாமடம் அண்ணா பல்கலைகழக பொறியியல் கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு !

அதிரை அடுத்துள்ள ராஜாமடம் அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பி. ஈஸ்வர மூர்த்தி, கே. சதிஸ்குமார், பி. மணிகண்டன் ஆகியோர் பழுதடைந்த லேப்டப் பேட்டரிகளை கொண்டு எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களை இயக்கலாம் என்பதை புதிதாக கண்டுபிடித்துள்ளனர்.

இந்த மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புக்களை கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.

புதிய கண்டுபிடிப்பு குறித்து பொறியியல் கல்லூரி மாணவர்கள் நம்மிடம் கூறுகையில்...
'பழுதடைந்த லேப்டப் பேட்டரிகளின் செல்களை தனியாக பிரித்து அதில் எந்த செல்களை மீண்டும் இயங்க வைக்க முடியும் என்பதை கண்டறிந்து அவற்றை ஒன்றினைத்து இதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை இன்வேர்ட்டர் பயன்படுத்தி வோல்டேஜ் பவரை அதிகப்படுத்துகிறோம். இதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை கொண்டு எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களை இயங்க வைக்கிறோம். சுமார் 3 மணி நேரம் வரை இயங்க வைக்க முடியும்' என்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் 'சேனா மூனா' ஹாஜா முகைதீன் நம்மிடம் கூறுகையில்..
'பயன்தர தகுதியற்றவை என தூக்கி வீசக்கூடிய ஒரு பொருளின் மூலம் ஏன் பயனை பெறமுடியாது ? என்பதை நிருபித்துள்ளனர். மாணவர்களின் புதிய முயற்சிக்கு முதலில் எனது வாழ்த்துக்கள். இன்றைய மாணவர்கள் பலர் புதிய தேடல் முயற்சியில் ஈடுபட்டு வருவது மகிழ்வை தருகிறது' என்றார்.
 
 
 
 

Monday, March 30, 2015

301 கிலோ எடையுடன் வாழும் அதிசய மனிதர் !

ஈராக்கை சேர்ந்த நபர் ஒருவர் 301 கிலோவையும் தாண்டி அதிகரித்து கொண்டே செல்வது அந்நாட்டு மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஈராக்கை சேர்ந்த அலி சதாம் என்ற நபர், அந்நாட்டிலேயே 301 கிலோ எடையுடன் வாழும் அதிசய மனிதர் ஆவார்.

இவர் காலை உணவாக 24 முட்டைகள், மதிய உணவாக 2 முழு கோழிகள் மற்றும் 12 சப்பாத்திகள், இரவு உணவுக்கு ஒரு முழு ஆடு, 2 லிட்டர் பால் மற்றும் 15 அரேபிய ரொட்டிகளை சாப்பிட்டு வருகிறார்.

இந்நிலையில் அலியால் உணவை கட்டுப்படுத்த முடியாததால், நிரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் தூக்க குறைபாடுகளால் அவதிக்குள்ளாகியுள்ளார். மேலும் இவரது உடல் எடை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் அவசர சிகிச்சை மேற்கொள்ள, கடந்த மார்ச் 16 ம் தேதி அங்குள்ள பி.எல்.கே சூப்பர் ஸ்பெஷலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அலியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது உடலின் ஒவ்வொரு உறுப்பை சுற்றியும் அதிக அளவில் கொழுப்பு இருந்ததை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து அவருக்கு லேப்ராஸ்கோபி சிகிச்சையை மேற்கொள்ள மருத்தவர்கள் முடிவு செய்தனர்.

சமீபத்தில் இந்த சிகிச்சையை, இரண்டு மருத்துவர்களை கொண்ட மருத்துவக்குழு ஒன்று வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.

இதுகுறித்து சிகிச்சை அளித்த மருத்தவர் டீப் கோயல் பேசுகையில், சிகிச்சை முடிந்த 5 நாட்களில், அலியின் 20 கிலோ எடை குறைந்திருக்கிறது. மேலும் அடுத்த ஓராண்டிற்குள் 151 கிலோ எடை வரை குறைய வாய்ப்புள்ளது என பேசியுள்ளார்.

இது தொடர்பாக அலி கூறுகையில், அதிக எடையுடன் நான் ஒவ்வொரு நாளும் அவதியுற்று வந்தேன். தற்போது மருத்துவர்கள் எனக்கு திரவ உணவுகளை அளித்துவருவதால் எடை குறைவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் விரைவில் நான் ஒரு சராசரி மனிதரை போல் வாழ்க்கையை தொடங்குவேன் எனவும் மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.

முத்துப்பேட்டையில் தமுமுகவின் 2-வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா !

முத்துப்பேட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் 2-வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நேற்று முன்தினம் முகைதீன் பள்ளி திடலில் நடைபெற்றது. நகர செயலாளர் சம்சுதீன் தலைமை வகித்தார். அல்மஹா பெண்கள் அரபி கல்லூரி ஆசிரியை ஜெசீரா பேகம் திருகுர்ஆன் விளக்கி பேசினார். ம.ம.க தலைவர் வழக்கறிஞர் தீன்முகம்மது தொகுத்து பேசினார். முன்னதாக ஒன்றிய செயலாளர் நெய்னா முகம்மது வரவேற்று பேசினார். இதில் மாநில பொது செயலாளர் அப்துல் சமது, தலைமை கழக பேச்சாளர் பழனி பாருக், மாநில செயற்குழு உறுப்பினர்கள் நாச்சிக்குளம் தாஜுதீன், மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாவட்ட செயலாளர் நூர் தீன், முன்னால் மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் பேசினார்கள்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட த.மு.மு.க மூத்த தலைவர் எஸ்.ஹைதர் அலி ஆம்புலன்ஸ் சாவியை நிர்வாகியுடன் வழங்கி பின்னர் ஆம்புலன்ஸ் சேவையை அர்பணித்து வைத்து பேசுகையில்: 
முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தங்களது உரிமைகளை பெற நீங்கள் நிலையை மாற்றி கொள்ள வேண்டும். முத்துப்பேட்டையில் இங்குள்ள முஸ்லிம்களுக்கு போராட்டம் நடத்த முதன்முதலில் நான்தான் கற்றுக் கொடுத்தேன். ஆனால் அன்றைய நாள் முதல் இன்று வரை அதே நிலையில்தான் உள்ளது என்று பார்க்கும் போது வேதனையாக உள்ளது. அன்றைக்கு ஆரம்ப சுகாதார நிலையமாக இருந்த அதே நிலையில் தான் முத்துப்பேட்டை அரசு மருத்துவ மனை உள்ளது. இதற்காக நமது இயக்கத்தினர் போராட வேண்டும். இந்தியாவை தூக்கி நிலை நிறுத்துவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த மோடியின் செயல்பாடு இன்றைக்கு வெரும் வித்தையாகி விட்டது. இதனை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழகத்தில் த.மு.மு.க சார்பில் 120 ஆம்புலன்ஸ் இது வரை அர்ப்பணித்துள்ளோம். இதில் ஜாதி, மதம், பார்ப்பது கிடையாது. ராஜபக்சேவிடம் நான் தான் கூறி தமிழக மீனவர்களையும,; படகுகளையும் பிடிக்க சொன்னேன் என்று சுப்பிரமணிய சாமி வெட்டவெளிச்சமாக கூறினார். ஏன் அவர்களை தமிழக மக்கள் இன்னும் விட்டு வைத்துள்ளனர். இவ்வாறு ஹைதர் அலி பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் குத்புதீன். மாவட்ட பொருளாளர் பஜ்லுல் ஹக், மாநில செயற்குழு உறுப்பினர் ஜெகபர் சாதிக், மாணவர் அணி மாவட்ட செயலாளர் பைசல், துணைச் செயலாளர் நியாஸ் அகம்மது, ஆசாத்நகர் ஜாமத் தலைவர் ஜின்னா, முகைதீன் பள்ளி ஜமாத் தலைவர் முகமது ராவுத்தர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். வார்டு செயலாளர் ஜெகபர் சாதிக் நன்றி கூறினார்.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
  
 

அதிரையில் கிழக்கன் மீன் சீசன் துவங்கியது !

அதிரையை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். அதே போல் அருகில் உள்ள மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடல் பகுதிகளிலும் மீன்கள் அதிகளவில் பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதிரை கடலோரப்பகுதியில் குறிப்பாக ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட கடலில் அதிகளவில் கிழக்கன் மீன்கள் சிக்குகிறது. இந்த மீன்கள் அதிரை கடைத்தெரு மீன் மார்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கிழக்கன் மீன் சீசன் துவங்கியதை அடுத்து மீன் வியாபாரம் களைகட்ட துவங்கியுள்ளது. அதிக ருசியை தரும் கிழக்கன் மீன்களை வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்குகின்றனர்.
 
  
 
 
 

காணாமல் போன அதிரை பெண் திண்டிவனம் அருகே கொலை !

அதிரை அருகே உள்ள கரிசைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சித்திரவேலு. இவரது மனைவி கலைச்செல்வி ( வயது 30 ) . கடந்த 18 ந் தேதி முதல் தனது மனைவியை காணவில்லை என்றும், கண்டுபிடித்து தருமாறு அதிரை காவல்நிலையத்தில் கடந்த 26 ம் தேதி புகார் அளித்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பல்வேறு பகுதிகளிலும்  தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் திண்டிவனம் அருகே உள்ள ரோசனை காவல் நிலைய எல்லையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். தகவலறிந்த ரோசனை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக அதிரை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவத்தை தொடர்பு கொண்டு தெரியப்படுத்தினார்.

இதையடுத்து அதிரை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த பெண் காணாமல் போன கலைச்செல்வி என்பது தெரியவந்தது. இது தொடர்பாக ரோசனை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர மருத்துவ சேவை கேட்டு தீவிரமாக களத்தில் இறங்கிய அதிரை சேர்மன் !

சேது பெருவழிச்சாலையில் அமையப்பெற்றுள்ள ஊர்களில் அதிரையும் ஒன்று. ஏறக்குறைய ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டு வாழ்கின்ற இந்த ஊரைச் சுற்றி ஏரிப்புறக்கரை, ராஜாமடம், மகிழளங்கோட்டை, தொக்காலிக்காடு, பழஞ்சூர், மளவேனிக்காடு, நடுவிக்காடு, விலாரிக்காடு, உள்ளூர் புதுக்கோட்டை, மாளியக்காடு, சேண்டாக்கோட்டை, பள்ளிகொண்டான், முதல் சேரி, நரசிங்கபுரம், போன்ற கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. இரவு நேரத்தில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவ முதலுதவி என்பது பெரும் குறையாகவே காணப்பட்டு வருகின்றது.  மருத்துவர்களும் இரவு நேரங்களில் கண் விழித்து நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்வது என்பது அரிதாகவே இருகின்றது. இதற்காக அவசர . மருத்துவத்திற்காக பெரும் சிரமத்துடன் தொலைதூரத்தில் உள்ள குறிப்பாக திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை போன்ற ஊர்களுக்கு செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுகின்றன. அதோடு மட்டுமல்லாமல் இப்பகுதியில் அமைந்துள்ள சேது பெருவழிச்சாலையில் அடிக்கடி வாகன விபத்துகளும் நடந்து வருகின்றன. விபத்தில் பாதிக்கப்பட்டோரை நீண்ட தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் போதே உயிர் இழப்புகளும் ஏற்பட்டு விடுகின்றன. இதுபோன்ற சிரமங்களை கருத்தில் கொண்டு அதிரை அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியை தொடரவும், அதற்காக கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கவும், தேவையான முதலுதவி உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமையில் அதிரையின் அனைத்து மஹல்லா ஜமாத் நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், ஊர் பிரமுகர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர்கள் 15 க்கும் மேற்பட்ட வாகனங்களில் தஞ்சை புறப்பட்டு சென்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அதிரையிலிருந்து புறப்பட்ட வந்த பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
 
 
 

சிறந்த சேவைக்காக முன்னாள் MP அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது !

இந்திய பாராளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மூத்த தலைவரும், வேலூர் பாராளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினருமாகிய எம். அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு அமெரிக்கா உலக தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் நேற்று மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

Sunday, March 29, 2015

பட்டுக்கோட்டையில் தோல்நோய் மற்றும் தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் !

பட்டுக்கோட்டை குரும்பகுளம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தோல்நோய் மற்றும் தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

முகாமை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு என்.ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார். பட்டுக்கோட்டை நகர் மன்ற தலைவர் திரு எஸ். ஜவஹர் பாபு, நகராட்சி ஆணையர் கே. அச்சையா, 17 வது வார்டு உறுப்பினர் லதா பாஸ்கர், 18 வது வார்டு உறுப்பினர் மாஸ்கோ, 19 வது வார்டு உறுப்பினர் கே நாடிமுத்து, ஜேசிஐ பட்டுக்கோட்டை விங்ஸ் தலைவர் கே. வெங்கடேஷ் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

முகாமில் தொழு நோயின் அறிகுறிகள் சிவந்த வெளிர்ந்த வலியில்லாத தேமல்கள் மற்றும் கை கால் பலவீனம், மதமதப்பு போன்றவை இருப்பின் அரசு வழங்கும் இலவச மருந்துகளை தமிழ்நாடு அரசு அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் ஆகியவற்றில் பெற்றுக்கொள்ளலாம்' என துணை இயக்குனர் டாக்டர் குணசீலன் விளக்கி பேசினார். முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிகிச்சை அளித்தார். 3 புதிய தொழுநோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

முகாமிற்கான ஏற்பாடுகளை 17 வது வார்டு உறுப்பினர் லதா பாஸ்கர், 18 வது வார்டு உறுப்பினர் மாஸ்கோ, 19 வது வார்டு உறுப்பினர் கே நாடிமுத்து, ஜேசிஐ பட்டுக்கோட்டை விங்ஸ் தலைவர் கே. வெங்கடேஷ் , பட்டுக்கோட்டை நகராட்சி மற்றும் நலகல்வியாளர் ராஜரெத்தினம் மற்றும் துறை அலுவலர்கள் செய்து இருந்தனர்.
 
 
 

துபாய் அரசின் மனிதாபிமானம் !

வெட்டவெளியில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு தினந்தோறும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை துபாய் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
’மொபைல் சுகியா’ என்ற திட்டத்தின்படி, வரும் ஏப்ரல் 15-ம் திகதியில் இருந்து டிசம்பர் மாதம் 31 வரை கோடைக் காலத்தில் வெட்டவெளி பகுதிகளில் கூலி வேலை செய்துவரும் வெளிநாட்டு தொழிலாளிகளில் 4 ஆயிரம் பேருக்கு சத்து மிக்க உயர்தரமான சிறந்த உணவு, இயற்கை சாறு வகைகள் மற்றும் குளிரூட்டப்பட்ட குடிநீர் போன்றவை தினந்தோறும் இலவசமாக வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை துபாய் அரசின் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் அறக்கட்டளை பணிகளை நிர்வகித்துவரும் துறை செய்துள்ளது.

இந்த திட்டத்தின்படி, சுமார் 7 லட்சம் தொழிலாளிகளுக்கு இதைப்போன்ற இலவச உணவு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என இத்துறையின் தர்ம காரியங்களுக்கான மேலாளர் அலி ஹஸன் அல் மர்ஸவுக்கி தெரிவித்துள்ளார்.