.

Pages

Thursday, March 26, 2015

மனோராவில் நடைபெற்ற மீனவர் விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு !

அதிரை அடுத்து மல்லிபட்டினம் மனோராவில் உள்ள குளோபல் மண்டபத்தில் கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல்நிலையம் இணைந்து விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைப்பு மீனவர்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தியது.
     
இன்று நடைபெற்ற கூட்டத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் மருத்துவர் என்.சுப்பையன் தலைமை வகித்தார். கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை தலைவர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தர்மராஜன் ஆகியோர் உரையாற்றினர்.
         
நிகழ்ச்சியில் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் தீபா காணேகர், கடற்படை அதிகாரிகள் மனீஸ் அகர்வால், பூதா நாத் சேதி, வருவாய் கோட்டாட்சியர் அரங்கநாதன், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் சேதுராமன், கடலோர காவல்படை டிஎஸ்பி அகஸ்டின் பீட்டர், இன்ஸ்பெக்டர் சந்திரபோஸ், மீன்வளத்துறை உதவி இயக்குநர் திருநாவுக்கரசு , மீன் வளத்துறை ஆய்வாளர் கதிரேசன், வனத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
     
மாவட்ட ஆட்சியர் தலைமையுரையில், " மீனவர் கிராமங்களுக்கு நான் அடிக்கடி வருகிறேன். உங்களுக்கான குறைதீர் கூட்டம் தனியாக நடத்தப்படவில்லை என்றீர்கள். எப்பொழுது வேண்டுமென்றாலும் உங்கள் குறைகளை என்னிடம் தெரிவிக்கலாம். ஆதார் அடையாள அட்டை, மீனவர் அடையாள அட்டை, நலவாரிய அட்டைகளை ஒவ்வொருவரும் பெற வேண்டும். மீனவர்கள் என்னிடம் கொடுத்துள்ள கோரிக்கைகளை பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்"  இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்.  
                     
கடலோர பாதுகாப்பு குழுமத்தின் காவல்துறை தலைவர் சொக்கலிங்கம் பேசுகையில், " கடலோர பாதுகாப்பு பணியில் கடந்த மூன்று வருட காலமாக செயல்பட்டு வருகிறேன். என்னுடைய 30 வருடத்திற்கும் மேலான பணிக்காலத்தில், கடலோர பகுதிகளில் பணியாற்றி உள்ளேன். மீனவர்கள் அரசால் தடைசெய்யப்பட்ட 52 வகையான கடல் வாழ் உயிரினங்களை பிடிக்க கூடாது. தவறி வலையில் பிடிபட்டாலும் கடலிலேயே விட்டுவிடுங்கள். இந்த 52 வகை உயிரினங்கள் தான் கடல் மாசுபடுவதை தடுத்து மீன்வளத்திற்கு காரணமாக அமைகிறது. மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலை, சுருக்குமடி வலையை பயன்படுத்தக்கூடாது. நீண்ட பெரிய கடல்பகுதி அமைந்துள்ள தமிழக கடலோரத்தில் 591 மீனவ கிராமங்களும், கிட்டத்தட்ட 8 லட்சம் மீனவ குடும்பங்களும் உள்ளன. நாட்டின் பாதுகாப்புக்கு உங்கள் ஒத்துழைப்பு மிக முக்கியமானது" இவ்வாறு பேசினார்.
     
சிஐடியு மீனவர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.சுப்பிரமணியன், சிஐடியு நாட்டுப்படகு மீனவர் சங்க நிர்வாகி குத்புதீன் மீனவர்களின் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினர். தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயலாளர் மல்லிபட்டினம் தாஜூத்தீன், ஒன்றியக் கவுன்சிலர் அப்துல் வஹாப், ராவுத்தன்வயல் ஊராட்சி தலைவர் தஸ்தகீர், சரபேந்திர ராஜன் பட்டினம் ஊராட்சி தலைவர் மருதமுத்து, மீனவர் சங்க நிர்வாகி ராஜமாணிக்கம் உள்ளிட்ட 24 மீனவர் கிராம நிர்வாகிகள், 14 கடலோர கிராம ஊராட்சி மன்றத்தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மல்லிபட்டினத்திலிருந்து நமது நிருபர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.