.

Pages

Monday, March 23, 2015

அன்புள்ள மத்திய அரசே, எங்கள் ஊரில் அந்த “சடக் தடக், சடக் தடக், சடக் தடக்” சத்தத்தை மீண்டும் எப்போது கேட்போம்?

நான் பிறக்கும்போது இரயிலின் சடக் தடக், சடக் தடக் என்ற சப்தத்தையும், கரும்புகையின் வாசனையையும் அறிந்தவாறே பிறந்தேன், காரணம் நான் பிறந்த வீடு கடற்கரை தெருவில் இரயில்வே நிலையத்திற்கு அருகில் இருந்தபடியினால்.

எனக்கு விபரம் தெரிந்த வகையில் நமதூரில் காலை ஏழுமணிக்கு சென்னையிலிருந்து வரும் ரயில், காலை எட்டரை மணி ரயில், காலை ஒன்பதரை மணி ரயில், காலை பதினொன்றரை மணி ரயில், மதியம் இரண்டரை மணி ரயில், மாலை ஐந்தரை மணி ரயில், மாலை ஆறரை மணி ரயில், இரவு எட்டு மணி ரயில். இதற்கு இடையில் சரக்கு ரயிலின் அணிவகுப்பும் நடந்தவாறு இருக்கும், இப்படி பல நேரங்களில் அதிரை இரயில்வே ஸ்டேஷேன் பரபரப்பாக காணப்படும்.    

அந்தக் கால ரயில் என்றாலே புகை விட்டபடி போகும் ரயில் என்ஜின்தான் நினைவுக்கு வரும். ரயில் பற்றிய சித்திரங்கள் அப்படித்தான் வரையப்பட்டன. இலங்கையில் புகை விட்டபடி செல்லும் ரயில்களை "புகை ரதங்கள்' என்றே சொல்வார்கள். என்ன ஒரு கவித்துவமான சொல்லாட்சி!

புகைவண்டிகளில் இருந்து இறங்கும் பயணிகள் கண்களைக் கசக்கிக் கொண்டுதான் இறங்குவார்கள். புதிதாகத் திருமணமான பெண்கள் ரயில்களில் கண்களைக் கசக்கிக் கொண்டு பயணிப்பதைப் பார்த்தால் கண்களில் ரயில் கரி விழுந்து விட்டதா அல்லது பிறந்த வீட்டை விட்டுச் செல்வதால் ஏற்படும் பிரிவாற்றாமை காரணமா என்று கண்டுபிடிப்பது கஷ்டம்.

நான் மிகவும் சிறுவனாக இருக்கும்போது அதாவது 1965-களில், என்னுடைய தாய்மாமா “ஹாஜி-(மர்ஹூம்)-(S.O)எஸ்.ஓ.சாகுல்ஹமீதுஅவர்கள் முதன் முதலாக மலேஷியா தேசத்துக்கு பயணமாக வேண்டி சென்னை செல்லுவதற்காக இரவு எட்டுமணி ரயிலுக்கு நமதூர் ரயில்வே ஸ்டேஷனில் என் உம்மா(மர்ஹூமா-உம்மாகனி) என் உம்மம்மா(மர்ஹூமா-ஆசியாம்மா) கூடவே நானும் நின்று கொண்டிருந்தேன். பயண காசாக மாமா எனக்கு ஒரு ரூபாய் நோட்டு கொடுத்தார்கள், கையை நீட்டி வாங்குவதற்குள் வீசிக் கொண்டிருக்கும் காற்றில் ஒரு ரூபாய் நோட்டு பறந்துபோய் கருவமரத்தில் சிக்கிக் கொண்டது, உடனே மாமா அவர்கள் ஓடிப்போய் அதை எடுத்து வந்து என் கையில் வைத்து விரல்களை நல்லா பொத்திக்கோ என்று சொன்னது இன்றளவும் நினைவு இருக்கின்றது, மேலும் சுவர் கடிகாரத்தில் நேரத்தை எப்படி பகுத்து பார்ப்பது என்ற முறையும் கற்றுத் தந்தவர் என்னுடைய தாய்மாமாதான்.

ரயில் என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல குழந்தை மனம் கொண்ட எல்லாருக்குமே சலிப்புத் தராத வியப்புதான். பாசஞ்சர் வண்டிகள் எல்லா ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். அதுவும் கிராமங்களிலிருக்கும் சிறிய அழகிய ரயில் நிலையங்களில் நின்று புறப்படும்போது அந்தக் கிராமத்தை விட்டுப் புறப்பட மனமே இல்லாமல் புறப்படுவது போல் தோன்றும்.

கிராமத்து ரயில் நிலையங்களின் அழகு சொல்லி மாளாது. அவற்றின் பிளாட்பாரம் நெடுகிலும் மரநிழல் படுக்கையாய் விரிந்திருக்க அதன் மீது ஆங்காங்கே பூக்களும் இலைகளும் உதிர்ந்து அழகை அதிகரிக்கும்.

சில ஸ்டேஷன்களில் விழுதுகளைத் தொங்க விட்டபடி நிற்கும் அழகிய ஆல மரங்கள். அவற்றின் நிழல் எப்போதும் குளுமையாக இருக்கும். ஸ்டேஷன் மாஸ்டர் வெள்ளைச் சீருடையுடன் கையில் பச்சைக் கொடியும் கக்கத்தில் சுருட்டி வைத்திருக்கும் சிவப்புக் கொடியோடும் சிலைபோல் நிற்பார். அவர் கொடியை ஒரு சொடுக்கு சொடுக்கி காண்பிக்கும் லாவகம் வியப்பளிக்கும். எக்ஸ்பிரஸ் ரயில்கள் கிராமத்து ரயில் நிலையங்களை புழுதிப்புயலுடன் கடகடத்தபடி சடக் தடக், சடக் தடக் என்ற சத்தத்தோடு கடந்து செல்லும்.

1978-களில் நான் புஸ்தகங்களுக்கு பைண்டிங் செய்வதும், பல வண்ணங்களில் கிடைக்கும் இங்க் வில்லைகளை மொத்தமாக வாங்கிவந்து நன்றாக காய்ச்சி, அதை விகிதாசார அடிப்படையில் கலந்தால் ஊதா(Violet)நிறம், காக்கி(Brown)நிறம், மயில்தோகையின் நீல(Skyblue)நிறம், இந்த வகைகளான இங்க்கள் கிடைக்கும், அதை விற்பதற்காகவும், பைண்டிங் செய்ததை கொடுப்பதற்காகவும் தினமும் பட்டுக்கோட்டை சென்று ஒவ்வொரு பள்ளிக் கூடம், டுடோரியல் காலேஜ், சிறிய அலுவலகங்கள் இப்படி இந்த இடங்களுக்கு கால்நடையாக சென்று ஏறி இறங்குவேன், அப்போது அதிகம் பயன்படுத்தியது காலை ஒன்பதரை மணி ரயிலைத்தான், அது மகிழங்கோட்டை கிராமத்து ஸ்டேஷனில் நின்று செல்லும், அந்த ஸ்டேஷனை சுற்றி அன்று இருந்த அடர்ந்த பூச்செடிகளும் மரங்களும் அழகோ அழகுதான், அழகும் அமைதியும் கொஞ்சும் அந்த சின்னஞ்சிறு ரயில்வே ஸ்டேஷனைப் பார்க்கும்போது ஒரு இனம்தெரியாத புத்துணர்வு தெரியும், மேலும் பள்ளிகொண்டா ரயிவே கிராசிங் கேட்டிலும் அடர்ந்த மரங்களும் பூஞ்செடிகளும் சூழ்ந்துகொண்டு அங்கேயும் ஒரு ரம்மியமான சூழலை உண்டு பண்ணும். ஆனால் இன்று எந்த ஒரு தடயமும் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கின்றது.       

"கூஜா' என்கிற பாத்திரம் ரயில் பயணத்துக்கென்றே தயாரிக்கப்பட்டதோ என்று எண்ணத் தோன்றும். சற்று பெரிய ரயில் நிலையங்களில் ரயில் நிற்கும்போதெல்லாம் ஒரு கையில் கூஜாவில் காபியை வாங்கிக் கொண்டு மறு கையால் வேட்டி நுனியைப் பிடித்தபடி ஓடி வரும் நடுத்தர வயது குடும்பஸ்தர்களைத் தவறாமல் பார்க்கலாம்.

முன்பெல்லாம் ரயில்வே ஸ்டேஷன்களில் மின்சார வசதி கிடையாது. அப்போதெல்லாம் ஒரு நபர் கையில் தீவட்டியுடன் நின்று கொண்டு ஓடுகிற ரயில் என்ஜின் டிரைவரிடம் மூங்கில் வளையத்தில் கோத்த சாவியை பிளாட்பாரத்தில் நிற்பவர் லாவகமாக ஒப்படைக்கும் காட்சி ஆச்சரியமூட்டும்.

சிலநேரம் ரயில் பயணங்களில், மற்றொரு ரயிலுக்காக நமது ரயிலை நிறுத்தி வைத்து, அந்த ரயில் போனதும் நம்ம ரயிலை போக விடுவார்கள், இதுவும் ஒருவகையில் நமக்கு சலிப்பு தட்டினாலும், அந்த ரயில் போட்டுக் கொண்டு ஓடும் “சடக் தடக், சடக் தடக், சடக் தடக்” சத்தத்தால் எல்லா சலிப்பும் பறந்தோடிவிடும்.

ரயில் போகும்போது "சடக் தடக்,' சடக் தடக் என்ற சத்தம் ஒரு தாள லயம்போலக் கேட்கும். ரயிலின் இந்தத் தாலாட்டைக் கேட்டுக்கொண்டே தூங்குவதும் விழிப்பதும் தனி சுகம். இதற்கு இடையே ஜன்னல் வழியே நம் காதுகளில் விழும் “டீ காபி, டீ,டீ,. சூடான வடை, காபிஇவர்களின் குரலே தனித் தொனியில் ஒலிக்கும்.

அந்தக் காலத்து கருப்பு வெள்ளைத் திரைப்படங்களில் ஒரு குடும்பம் ஊரைவிட்டு பட்டணத்துக்கு குடிபெயர்வதைச் சொல்ல, குபுகுபுவென்று புகை விட்டுக் கொண்டு போகும் ரயிலைக் காட்டுவதே வழக்கம்.

1964-ல் வெளியான பச்சை விளக்கு திரைப்படத்தில் "ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது' என்று பாடியபடி ரயிலை ஓட்டி செல்லும் சிவாஜியின் முகபாவங்களையும் நாகேஷின் சேட்டைகளையும் மறக்கத்தான் முடியுமா?

1968-ல் வெளியான தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் ஓடிக் கொண்டிருக்கும் ரயில் பெட்டிக்குள் சிவாஜியும் பத்மினியும் பாலையாவும் சி.கே. சரஸ்வதியும் அரங்கேற்றிய நகைச்சுவையுடன் கூடிய காவிய ரசத்தை மறக்கத்தான் முடியுமா?

ரயிலில் ஜன்னலோரம் உட்கார இடம் கிடைத்துவிட்டால் மனசு மகிழ்ச்சியில் துள்ளும். கூடவே எதையாவது சாப்பிட்டுக்கிட்டு ஜன்னலுக்கு வெளியில் நம்மக்கு எதிரே இயற்கை மரங்கள் நகருவதை பார்த்துக் கொண்டும் “சடக் தடக், சடக் தடக் சத்தத்தோடு நேரம் போறது தெரியாமல் இருந்ததை மறக்கத்தான் முடியுமா?

பாசஞ்சர் வண்டியின் பெட்டிகள் தனித்தனி மரத்துண்டுகள் கோக்கப்பட்ட இருக்கைகளுடன் பார்க்கவே நேர்த்தியாகவும் அழகாகவும் இருக்கும். ரயிலில் விற்கப்படும் ஆரஞ்சுப் பழங்கள் போன்ற பல பழங்களும், வறுத்த கடலை, சுண்டல், முறுக்கு, இன்னும் பிற உணவுப் பொருள்களும் ரயில் புகையும் கலந்த வாசனை, ரயில் பூராவும் பரவி இருக்கும். இது அலாதியானது.

இப்படியே எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டே போகலாம், இருந்தாலும் கொஞ்சம் ஓய்வு வேண்டும்.

ரயில் போக்குவரத்து சாமானியர்களின் பயணத்துக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. அறுநூறும் எழுநூறும் கொடுத்து ஆம்னி பேருந்தில் பயணம் செய்ய வசதியில்லாத ஏழை எளிய நடுத்தர மக்களின் பயணத்திற்கு எப்போதும் ரயில்தான் உதவுகிறது.

அந்த மாதிரி நாட்கள் இனி மீண்டும் வருமா? என்ற ஏக்கத்தோடு இக்கால தலைமுறையினர்களை என்னும் போது! அவர்கள் எங்களைப்போல் அனுபவிப்பார்களா? அப்படி அனுபவிக்க வழிகள் இருந்தாலும் நேரம் இருக்குமா? என்ற கேள்வியோடு........!?........!?.

இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.