.

Pages

Saturday, May 30, 2015

அதிரை நியூஸின் நன்றி அறிவிப்பு !

கடந்த 25/05/2015 ஆம் நாள் மாலை அதிரை சாரா திருமண மண்டபத்தில் அதிரை நியூஸ் சார்பாக நடைபெற்ற கல்வி மற்றும் சேவைகளுக்கான விருதுகள் வழங்கும் விழாவில் பங்கெடுத்து சிறப்பித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கும் எண்ணத்தோடு இதனை அன்புடன் பதிவதில் மகிழ்கின்றோம்.

அதிரையின் வரலாற்றில், முதன்முதலாக ஒரு இணையதளத்தின் மூலம் இப்படி ஒரு கவின் மிகு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த கருணை புரிந்த இறைவனுக்கு முதலில் எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து வரும் வரும் ஆண்டுகளிலெல்லாம் இதேபோல் நிகழ்ச்சியை நடத்த அந்த வல்லவன் தனது கருணை மழையைப் பொழிய வேண்டுமென்று இருகரமேந்தி இறைஞ்சி நிற்கிறோம்.

இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டுமென்று ஆலோசனையை முன்வைத்தபோது அதனை ஏற்றுக் கொண்டு உடனே ஆர்வமூட்டிய அதிரை நியூஸின் பங்களிப்பாளர்கள், கல்வியாளர்கள் அனைவருக்கும் எமது நன்றியை கூறிக் கொள்கிறோம். அவர்களின் ஆர்வமூட்டும் வார்த்தைகளும் அவர்கள் தந்த தைரியமும் ஒத்துழைப்பும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்ய எங்களுக்குத் துணை நின்றன என்பதை நான் சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறோம்.

இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க நாங்கள் அணுகிக் கேட்டபோது மனமுவந்து ஒப்புக் கொண்ட மரியாதைக்குரிய அதிரையின் பெருமகன்களில் ஒருவரான சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் ஹாஜி A.J அப்துல் ரஜாக் B.A. B.L அவர்களுக்கு நன்றி என்கிற ஒரு வார்த்தை மட்டும் போதாது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிகழ்ச்சிக்கு அவர்கள் தலைமை தாங்க ஒப்புக் கொண்ட தருணமே இந்த நிகழ்ச்சி வெற்றி பெற்றுவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். நிகழ்ச்சி துவங்கும் முன்பே வந்து நிகழ்ச்சியை சிறந்த முறையில் நடத்திக் கொடுத்த மூத்த வழக்கறிஞர் ஹாஜி A.J அப்துல் ரஜாக் அவர்களுக்கு அதிரை நியூஸ் மிகவும் கடமைப்பட்டிருக்கிறது.

எங்களின் அன்பான அழைப்பை ஏற்று நிகழ்ச்சியில் 'சிகரம் தாண்டுவோம்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் முனைவர் பி.எம் மன்சூர் அவர்களுக்கும், நிகழ்ச்சி நடைபெற்ற திங்கட்கிழமை அன்று கடுமையான பணிச்சுமை இருந்த போதிலும் எங்களின் கனிவான அழைப்பை ஏற்று நிகழ்ச்சியில் பரிசு மற்றும் பொருத்தமான துறை விருதுகளை தமது பொற்கரங்களால் வழங்க மனமுவந்து ஒப்புக்கொண்டு வருகை தந்து நிகழ்ச்சி நிறைவுறும் வரை இருந்து சுருக்கமாக இருந்தாலும் பலமுறை பார்வையாளர்களால் கைதட்டி ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த உரையாற்றிய மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் D. மீனாட்சி அவர்களுக்கும், கல்வி விருதுகளை தனது அன்புக்கரங்களால் வழங்கி உரையாற்றிய இராஜாமடம் அண்ணா பொறியியல் கல்லூரியின் புல முதல்வர் முனைவர் திரு. இளங்கோவன் அவர்களுக்கும், ஆங்கிலப் பாடத்தில் முதன்மை இடம் பெற்ற மாணவ மாணவியருக்கு தனது அன்பான கரங்களால் பரிசுகள் மற்றும் விருதுகளை வழங்கி உரையாற்றிய அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்களுக்கும், காதிர் முகைதீன் கல்லூரி துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன் அவர்களுக்கும், அன்புடன் விழாவில் கலந்து கொண்டு விருதுகளையும் பரிசுகளையும் வழங்கிய மாவட்ட கல்வி அலுவலர் முனைவர் கோ. ராஜசேகரன் அவர்களுக்கும், மாவட்ட துணை இயக்குனர் ( தொழுநோய் பொறுப்பு ) டாக்டர் குணசீலன் ஆகியோருக்கு எங்களது அழைப்பினை ஆனந்தமாக ஏற்று விழாவில் கலந்துகொண்டமைக்கு மிகவும் நன்றி கூறுகிறோம்.

அதிரை நகரின் பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் திரண்டு வந்து நிகழ்ச்சிகளின் தொடக்கம் முதல் நிறைவு வரை அமர்ந்திருந்து பரிசுகளும் விருதுகளும் பெற்றவர்களை உற்சாகமூட்டிப் பாராட்டிய காட்சிகளை நாங்கள் மறக்கவே இயலாது. உணமையில் சொல்லப்போனால் நாங்கள் அளித்த     பரிசுகளும் விருதுகளும் அளித்த உற்சாகத்தைவிட பொதுமக்கள், பைத்துல்மால், அரிமா, சுழற் போன்ற தன்னார்வத் தொண்டு அமைப்புகள், சகோதர வலைதள நண்பர்கள், அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள், அனைத்து சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், பத்திரிக்கை நிருபர்கள்  பக்கத்து ஊர்களிலிருந்து இந்தப் பாராட்டில் பங்கு கொள்ள வந்திருந்த ஊடகவியலாளர்கள் ஆகியோர் ஆர்வமுடன் கைதட்டி ஊட்டிய உற்சாகமே வானளாவியதாகும். அதற்காக அவர்கள் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்.

குறிப்பாக நிகழ்ச்சி நடைபெற்ற சாரா மண்டபத்தின் மேல் தளத்தில் திரண்டு வந்து அமர்ந்து இருந்த தாய்மார்கள், அனைத்துப் பள்ளிகளில் இருந்தும் திரண்டு வந்திருந்த மாணவ மாணவிகள், ஆசிரிய ஆசிரியைகள், பேராசிரியப் பெருமக்கள், அனைத்து மஹல்லா ஜமாத் நிர்வாகிகளுக்கும், கிராம பஞ்சயத்தார்களுக்கும், அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கும், சமுதாய அமைப்பு நிர்வாகிகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் நிகழ்வின் நிறைவு வரை காத்திருந்து கலந்து கொண்டு காட்டிய ஆர்வமும், ஊட்டிய உற்சாகமும் எங்களை மகிழ்வுக்கடலில் ஆழ்த்தின. அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறோம்.

இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் கிராத் ஓதி அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய சிறுவன் முஹம்மது ஃபாதில், இனிய தமிழில் வரவேற்புரையாற்றிய அதிரை நியூஸ் ஆலோசகர் இப்ராஹீம் அன்சாரி, அழகுபட அறிமுக உரை ஆற்றிய காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம் ஏ முஹம்மது அப்துல் காதர், நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்ததோடு மட்டுமல்லாமல் அனைத்து பணிகளையும் முன்னின்று எடுத்து செய்த அதிரை நியூஸ் நிர்வாகி மரைக்கா இத்ரீஸ் அஹமது மற்றும் நன்றியுரையாற்றிய அபுல் ஹசன் சாதலி ஆகியோருக்கு நன்றி கூறும் அதே வேளை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் அவர்களுக்கு அதிரை நியூஸ் தனது நன்றிகளை சொல்ல வார்த்தைகளே இல்லை என்பதை இதயத்தின் அடித்தளத்தின் உணர்வாக இங்கே பதிய விரும்புகிறோம். எங்களின் இந்த உணர்வே இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகவும் பார்வையாளர்களாகவும் கலந்து கொண்ட பலரின் உணர்வாக இருந்தது என்பதைக் கூறி இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்காக தனது மதிப்பிடமுடியாத ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் நல்கியதுடன் எங்களுடன் ஓடியாடி உழைத்த பேராசியர் செய்யது அகமது கபீர்  அவர்களுக்கு எந்த வார்த்தையால் நன்றி சொல்வது என்றே எமக்குப் புரியவில்லை.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களை பெரும் போட்டிகளுக்கிடையே தேர்ந்தெடுக்க உதவிய தேர்வுக்குழு உறுப்பினர்கள், தங்களின் பெயர்களை வெளியிட சம்மதித்ததும் சம்மதிக்காமலும் பரிசுகளை வழங்கிய வள்ளல்கள், விழாவின் முழுமையான இதர செலவுகளின் ஒரு பகுதியினை ஏற்றுக்கொண்ட அனைத்து அன்பு நெஞ்சங்கள், நாங்கள் கேட்டதும் முழுமனதுடன் மண்டபத்தை ஒதுக்கித்தந்ததோடு மட்டுமல்லாமல் அவ்வபோது ஆலோசனைகளையும் வழங்கிய சாரா திருமண மண்டபத்தின் உரிமையாளர் லயன் அஹமது, நிகழ்ச்சிகள் அனைத்தையும் வீடியோ மற்றும் கேமிராவில் பதிவு செய்து நமக்கு வழங்கிய நண்பர்களுக்கும், சிறப்பான முறையில் ஒலி ஒளி அமைத்து தந்தவர்களுக்கும், இந்த நிகழ்ச்சியை அனைவரிடத்திலும் எடுத்துச்செல்லும் விதமாக ஃப்ளக்ஸ் பேனர்கள், துண்டு பிரசுரங்கள், வால் போஸ்டர் ஆகியவற்றின் மூலம் விளம்பர உதவிகள் செய்த வர்த்தக உரிமையாளர்கள் மற்றும் தங்களின் உணர்வாலும் உழைப்பாலும் இந்த நிகழ்வை வெற்றிகரமாக்கிட உதவிய ஒவ்வொரு நல்ல நெஞ்சங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை நெகிழ்வுடனும் அன்புடனும் சமர்ப்பித்துக் கொள்கிறோம்.

அதேபோல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருக்கும் அனைவரையும் கனிவுடன் வரவேற்ற அதிரை நியூஸ் பங்களிப்பாளர்கள் கே.எம்.ஏ ஜமால் முஹம்மது, மு.செ.மு சபீர் அஹமது ஆகியோருக்கு நன்றி. விழா சிறக்க அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிறந்த ஆலோசனைகளை வழங்கிய அதிரை நியூஸ் நிர்வாகிகள் அதிரை மெய்சா, ஜபருல்லாஹ் மற்றும் பங்களிப்பாளர் அதிரை சித்திக் ஆகியோருக்கு நன்றி.

மேலும் உள்ளூரிலிருந்தும் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் இந்த நிகழ்ச்சியின் பதிவுகளைப் பார்த்தும் வீடியோ பதிவுகளைக் கேட்டும் பாராட்டிய அன்பான நண்பர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களின் இந்தப் பாராட்டுக்கள் எங்களை இன்னும் அதிகம் இந்த தன்னலமற்ற சேவையில் ஈடுபடுத்திக் கொள்ள தூண்டுகோலாக அமையும் என்பதை அறிவிப்பதில் ஆனந்தமடைகிறோம்.

இனி வரும் வருடங்கள் தோறும் தொடர்ந்து இத்தகைய சிறப்பான நிகழ்வை நடத்திடும் வல்லமையை வழங்கிட இறைவனை வேண்டி அனைவருக்கும் மீண்டும் நன்றி கூறிக்கொள்கிறோம்.

அதிரை நியூஸ் குழு      

9 comments:

  1. எந்த இயக்கத்தையும் அமைப்பையும் கட்சியையும் சாராமல் இந்த நிகழ்ச்சியை நடத்தியதால்தான் "சாரா" மண்டபத்தில் நடத்தினீர்களா?

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. எந்த இயக்கத்தையும் அமைப்பையும் கட்சியையும் சாராமல் இந்த நிகழ்ச்சியை நடத்தியதால்தான் "சாரா" மண்டபத்தில் நடத்தினீர்களா?

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. விழா சிறக்க வைத்த அனைவர்களுக்கும் ஜசக்கல்லாஹ் ஹைர் விழாவின் தொகுப்பாளர் அஹமது கபீர் சார் அவர்களுக்கு SPECIAL வாழ்த்துக்கள் தம்பி சேக்கன்னா நிஜாமின் பணி சிறக்க துஆச்செய்கிறேன்

    ReplyDelete
  4. துவக்கம் முதல் காணொளி வெளியிட்டு நிறைவு செய்ததுவரை ஒரு நேர்த்தியான செயல்முறையைக் கண்டு வியந்தேன்.

    பாராட்டுகள்!

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி.
    அதிரை நியூஸின் நன்றிக்கும், நன்றி.

    முறையாக திட்டமிட்டு, சரியாக வரிசைப்படுத்தி, அன்பாக அழைத்து, ஆழமாக கவனித்து, உள்ளங்கவர அனுசரித்து, இனியும் இப்படியொரு விழாவும் உண்டோ என்று வியப்பதற்கு, ஒரு விழா நடத்துவது என்றால் அது இலேசான காரியமா?

    வந்து கண்ணுற்றவர்கள் கண்ணின் பிம்பத்தோடு நின்று விட்டாலும், கண்ணுற்றவர்களுக்கு கடுகளவேனும் குறையேதும் வந்து விடாமல் இருக்க கண் இமைக்காமல் நடத்திச் சென்ற விதம் அருமை.

    பட்டால் தான் தெரியும் அதன் கஷ்டமும் பாடும், அந்த வகையில் தம்பி நிஜாம் அவர்களுக்கு எல்லாம் வல்ல நாயன் எந்த அளவுக்கு திறமையும், சிந்தனையும், பெலனும் கொடுத்து இருக்கின்றானோ, அந்த அளவுக்கு அதில் சிறப்பாக நின்று இந்த விழா நடத்தேறி இருப்பது மிகவும் பாராப்படவேண்டியது.

    வந்தவர்களுக்கு வியக்கும் வண்ணம் இருந்தது அரங்கில் கொடுக்கப்பட்ட ஜூஸ், சொன்னால் தான் தெரியும் ஜூஸின் தன்மை, சொல்லாவிட்டால் தெரியாது அதன் உண்மை, ஆனால் எல்லோருக்கும் தெரிந்து விட்டது அதன் சுவை.

    நான் எல்லோருக்கும் தெரிந்து குடித்தது மூன்று கப்.
    நைசாக குடித்தது நான்கு கப்.

    ஆக மொத்தத்தில், எல்லாமே ஓகே.

    இன்ஷா அல்லாஹ், மீண்டும் மீண்டும் சந்திக்க இப்படியொரு விழா வேண்டும்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.

    ReplyDelete
  6. உங்கள் நன்றி மழையில் நனைந்த அனைவரின் மனத்திரையில் சேக்கனா நிஜாம் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவர்களின் வாழ்வு சிறக்க இறைவனை வேண்டுகிறோம்.

    ReplyDelete
  7. தமிழ்தாய் வாழ்த்து,கிராத்,ஜனகனமண
    கல்வித்துறை,நீதித்துறை,சுகாதாரம்.முக்கிய துறைகளில்
    சிறப்புஅழைப்பாளர்கள்
    அனைத்து மதத்தைசார்ந்தவர்களுக்கும் மரியாதை
    விருதுகளில் நடுநிலைமை
    தன்னைமறைத்து பிறரை அழகுபார்க்கும் பெருந்தன்மை
    அணுகுமுறை,எழுத்துப்பதிவில் தனேக்கே உரியபாணி
    புதினா(புதினமான) ஜூஸ்
    WELLDONE ADIRAI NEWS WELLDONE
    நான் விருதுவாங்கியதில் பெருமை அடைந்ததை விட,உன்னைப்போன்ற உள்ளங்களில்
    இடம்பெற்றதை பாக்கியமாக கருதுகிறேன்

    ReplyDelete
  8. விழா ...நடைபெற்ற அன்று ...எதோ சொந்த வீட்டில் நடை பெறும் சுப காரியம் போன்ற உணர்வு ..காணொளி காணும் முன்பே நண்பர் மு.சே.மு.சபீரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன் ...ஒவ்வொரு நிகழ்வுகளையும் போனில் விவரித்தார் .இன்னும் பல சிகரத்தை அதிரை நியூஸ் ..தொடும் என்பதில் ஐயம் இல்லை ..தம்பி சேகனா நிஜாம் ..வாழ்விலும் வெற்றி வாகை சூட இறைவனை இறைஞ்சுகிறேன் ..

    ReplyDelete
  9. பாராட்டபடவேண்டியதைபாராட்டியேஆகவேண்டும்!இதுவும் பாராட்டதகுதியானநிகழ்வே!கடுஉழைப்பு!ஆதாயம்புகழ்தேடாத உழைப்பு!தொடருங்கள்நற்ப்பணியே!வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.