.

Pages

Sunday, April 30, 2017

அதிரையில் வாழ்வியல் கண்காட்சி: நேரடி ரிப்போர்ட் ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஏப்-30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், மானுட நல மையம் சார்பில், 'அமைதியை நோக்கி' எனும் தலைப்பில் 3 நாள் வாழ்வியல் கண்காட்சி அதிராம்பட்டினம், சேர்மன் வாடி, பழைய தனலட்சுமி வங்கி வளாகத்தில் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இக்கண்காட்சியில் நவீன விஞ்ஞானம், மனித படைப்பு, குழந்தை வளர்ப்பு, குடும்பவியல், பெண்ணுரிமை, மரணத்திற்குப் பின், புத்தக அரங்கம், வீடியோ அரங்கம் ஆகியன குறித்து காட்சி விளக்கங்கள் மூலம்   பார்வையாளர்களுக்கு விளக்கி கூறப்பட்டது. மேலும் ஒளித்திரை காட்சி மூலம் விளக்கி கூறப்பட்டன. கண்காட்சி அரங்கில் 150 தலைப்புகளில் 1000 க்கும் மேற்பட்ட நூல்கள் இடம்பெற்றுள்ளன.

கண்காட்சி அரங்கில் இலவச பல் மருத்துவ முகாம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இலவச பொது மருத்துவ முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் ஏ. அன்பழகன், மருத்துவர்கள் எஸ்.ஹாஜா முகைதீன், ஏ.சீனிவாசன், எஸ்.கார்த்திகேயன், டி.சுதாகரன் ஆகியோர் கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனை வழங்கினார்கள். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். கண்காட்சி தினமும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்று வருகிறது. நிறைவு நாளான நாளை மே.1 ந் தேதி திங்கட்கிழமை பெண்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் பிரத்தியோக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண்காட்சி துளிகள்:
1. கண்ணைக்கவரும் கருவியல், வியக்க வைக்கும் விஞ்ஞானம், ஆராயத் தூண்டும் ஆன்மிகம், நலமுடன் வாழ நற்போதனைகள் உட்பட  90 வகை காட்சி விளக்கங்கள் அடங்கிய பிளக்ஸ் பதாகைகள் அரங்கில் இடம்பெற்றன.

2. 'அமைதியை நோக்கி' பிரச்சாரக்குழுவினர் 15 பேர் பார்வையாளர்களுக்கு காட்சி படங்களுடன் விளக்கி கூறினர்.

3. பார்வையாளர்களுக்கு திருக்குர் ஆன் தமிழாக்கம் உட்பட 8 வகை நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

4. வெயில் தாகத்தை தணிக்க இலவச மோர் / குளிர் பானங்கள் வழங்கப்பட்டன.

5. வாழ்வியல் குறித்து பார்வையாளர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

6. கண்காட்சி குறித்து பார்வையாளர்களுக்கு கருத்துப்படிவம் வழங்கப்பட்டு கருத்துரைகள் பெறப்பட்டன.

7. பார்வையாளர்களை கண்காட்சி குழுவினர் அரங்கின் முகப்பில் நின்றவாறு வரவேற்று மகிழ்ந்தனர்.

8. கண்காட்சி அரங்கு சுமார் 5000 சதுர அடியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்தது.
 

துபாய் ஷேக் ஜாயித் ரோட்டில் நெரிசலை சமாளிக்க பல அடுக்கு பைபாஸ் மேம்பாலங்கள் (வீடியோ)

அதிரை நியூஸ்: ஏப்-30
துபையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பல்வேறு மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும் ஷேக் ஜாயித் நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து தேக்கத்தை பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஷேக் ஜாயித் ரோட்டிலும் அதனோடு இணையும் துணை சாலைகளிலும் சிக்னல்களால் ஏற்படும் போக்குவரத்து தேக்கத்தை சரிசெய்ய புதிய பல அடுக்கு பைபாஸ் மேம்பாலங்கள் அமைக்க திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

சுமார் 800 மில்லியன் திர்ஹம் செலவில் அமையவுள்ள இந்த பைபாஸ் பல அடுக்கு மேம்பால சாலைகள் ஜூமைராவிலிருந்த துவங்கி அல் கைல் (வடக்கு) பகுதியில் நிறைவடையவுள்ளன. இந்த மேம்பாலங்கள் தற்போது 2 மற்றும் 3 ஆம் இன்டர்சேஞ்ச் இடையில் அமையவுள்ளன.

இதன் முதற்கட்டப் பணிகள் ஏற்கனவே நடந்து வரும் நிலையில் அது 2018 ஆம் ஆண்டு நிறைவுறும் என்றும், 2 மற்றும் 3 ஆம் கட்டப்பணிகள் 2019 ஆம் ஆண்டிற்குள் முழுமையடையும் என துபை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

அபுதாபியில் டேக்ஸிகளுக்கான புதிய வாடகை விபரங்கள் அறிவிப்பு

அதிரை நியூஸ்: ஏப்-30
அபுதாபியில் இயங்கும் டேக்ஸிகளுக்கான உயர்த்தப்பட்ட புதிய வாடகை விபரங்களை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பகலில் இயங்கும் டேக்ஸிக்களின் மீட்டர் 5 திர்ஹம் முதல் துவங்கும். இரவில் இயங்கும் டேக்ஸிகளுக்கு 5.50 திர்ஹத்திலிருந்து ஆரம்பமாகும்.

டேக்ஸிக்கள் இயங்கும் போது 1 கி.மீ தூரத்திற்கான கட்டணம் 1.80 திர்ஹமாகும். அதுவே காத்திருக்கும் போது நிமிடத்திற்கு 50 காசுகள் வசூலிக்கப்படும். பகலில் டேக்ஸிக்களுக்கான முன்பதிவு கட்டணம் 4 திர்ஹம் என்றும் இரவில் 5 திர்ஹம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி விமான நிலைய வேன்களுக்கான டேக்ஸி வாடகை 25 திர்ஹத்திலிருந்து ஆரம்பமாகும், செடான் கார்களுக்கான டேக்ஸி வாடகை 20 திர்ஹமாகும். குறைந்தபட்ச மீட்டர் கட்டணம் 12 திர்ஹமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய கட்டண உயர்வுகள் அனைத்தும் அபுதாபி அரசு கெஜட்டில் பிரசுரிக்கப்பட்ட நாளிலிருந்து 30 ஆவது நாளில் நடைமுறைக்கு வரும்.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

அல் அய்ன் மண்டல தமுமுக-மமக நிர்வாகிகள் தேர்வு !

அதிரை நியூஸ்: ஏப்-30
அல் அய்ன் மண்டல தமுமுக செயற்குழு 28 -04-2017 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பின்னர், அல் அய்ன் தமுமுக நூலகத்தில், அமீரகத் தலைவர் அதிரை அப்துல் ஹாதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அமீரக நிர்வாகிகள்,சகோதரர் யாசீன் நூருல்லாஹ்,டாக்டர் அப்துல் காதர் மற்றும் துபை மண்டல தமுமுக செயலாளர் சகோதரர் ஷேக் தாவூத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சகோ அஸ்கர் அலி திருமறை வசனங்கள் ஓதி நிகழ்வை துவக்கி வைத்தார்.

இந்த அமர்வில் அல் அய்ன் மண்டல தமுமுக-மமகவின் புதிய நிர்வாகிகளாக கீழ்காணும் சகோதரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மண்டல தமுமுக-மமக தலைவர் : பூதனுர் M. அப்துல் மாலிக்
(தொடர்பு எண் 050- 6634083)

மண்டல தமுமுக செயலாளர்: ஹாஃபிழ் கொள்ளுமேடு F. முஹம்மது ரிஃபாயி (தொடர்பு எண் 050- 7113989)

மண்டல தமுமுக-மமக பொருளாளர் : வடகால் S. புர்ஹானுத்தீன்
(தொடர்பு எண் 050- 5130247)

மண்டல மமக செயலாளர் : அதிரை அ.அ. அப்துல் ரஹ்மான்
(தொடர்பு எண் 050 - 821 3245 )

மண்டல துணைத் தலைவர் : காட்டுமன்னார்குடி அஸ்கர் அலி
( தொடர்பு எண் 052 113 7137 )

மண்டல துணைச் செயலாளர்கள்:
1. பாம்பன் ஜலால்
2. அபிராமம் ஜாஹிர் உசேன்
3. அறந்தாங்கி பக்ருதீன்

மருத்துவ சேவைப் பிரிவு செயலாளர் : கீழை அ.முஹம்மது இபுனு

தாஃவா குழு பொறுப்பாளர்கள் :
1. திருபுவனம் A. ஷாஜஹான்
2. தஞ்சை சாதிக்
3. மேலப்பாளையம் மெளலவி பஷீர்

மக்கள் தொடர்பாளர் : ஆத்தூர் S.ஷேக் முஹம்மது.

நிர்வாகிகள் தேர்வைத் தொடர்ந்து அமீரகத் தலைவர், நிர்வாகிகளுக்கான பண்புகள் குறித்து நிறைவுரையாற்றினார். துஆவுடன் செயற்குழு நிறைவுற்றது.

மரண அறிவிப்பு ( முஹம்மது செய்யது அவர்கள்)

அதிரை நியூஸ்: ஏப்-30
அதிராம்பட்டினம், மேலத்தெருவை சேர்ந்த கவிஞர் ஹுசைன் அவர்களின் மருமகனும், சம்பைபட்டினம் மர்ஹூம் கா.மு ஹபீப் முஹம்மது அவர்களின் மகனும், முஹம்மது அலி, சகாபுதீன் ஆகியோரின் சகோதரரும், சாதிக் பாட்சா அவர்களின் மச்சானும், அசாருதீன், அலாவுதீன், அஜ்முதீன் ஆகியோரின் தகப்பனாரும், சுபானுதீன் அவர்களின் மாமனாருமாகிய முஹம்மது செய்யது அவர்கள் இன்று காலை மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோம்.

அமீரகத்தில் அன்னப்பிளவு, முகக்குறைபாடு குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை!

அதிரை நியூஸ்: ஏப்-30
அமீரகத்தில் 2011 ஆம் ஆண்டு முதல் செயல்படும் 'ஆபரேசன் ஸ்மைல் யூஏஈ' (Operation Smile UAE) என்ற லாபநோக்கமற்ற மருத்துவ சேவை அமைப்பு சர்வதேச அளவில் 1982 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் ஜோர்டான், எத்தியோப்பியா, பிலிப்பைன்ஸ், மொராக்கோ, ஈக்குவேடார், வியட்னாம், இந்தியா, சீனா, மடாகஸ்கர் உட்பட பல நாடுகளில் இதுவரை 16 முகாம்களை அமீரக அரசின் செலவில் நடத்தியுள்ளது.

உலகில் பிறக்கும் சுமார் 700 குழந்தைகளில் ஒன்று இத்தகைய குறைபாடுகளுடன் பிறப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அமீரக அரசின் ஆதரவுடன் இயங்கிவரும் இந்நிறுவனம் இதுவரை சுமார் 3,500 அன்னப்பிளவு, கன்னங்கள் மற்றும் முகங்களில் காணக்கூடிய குறைகளை (cleft lips, cleft palates and other facial deformities) இலவச ஆபரேசங்கள் மூலம் சரிசெய்துள்ளது.

அமீரகம் 2017 ஆம் ஆண்டை 'வழங்கி மகிழும் ஆண்டு' (year of Giving) என அறிவித்து பல்வேறு தர்ம காரியங்களில் ஈடுபட்டு வருவதின் ஒரு அங்கமாக, இந்த ஆண்டு அமீரகத்தில் அன்னப்பிளவு போன்ற முகக்குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை மூலம் இக்குறைகளை சரிசெய்ய முன்வந்துள்ளது 'ஆபரேசன் ஸ்மைல் யூஏஈ' அமைப்பு. இதுவரை சுமார் 50 பேர் முன்பதிவு செய்துள்ளார்கள்.

பொதுவாக இத்தகைய ஆபரேசன்களை மருத்துவமனைகளில் செய்ய சுமார் 10,000 திர்ஹம் முதல் 70,000 திர்ஹம் வரை செலவாகின்றன மேலும் பல இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இத்தகைய ஆபரேசன்களை செய்து கொள்ள அனுமதிப்பதில்லை ஆனால் இத்தொண்டு நிறுவனம் மூலம் செய்யப்படும் ஆபரேசன்களுக்கான செலவாக அவர்களுக்கு ஆவது 880 திர்ஹங்களே, உலகெங்கும் தேவை ஜெனிரிக் மருத்துவம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

துபாயில் போலீஸாரால் முடக்கப்பட்ட கார்கள் பகிரங்க ஏலம்!

அதிரை நியூஸ்: ஏப்-30
துபையில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக போலீஸாரால் முடக்கப்பட்ட கார்களை அதன் தண்டனை காலம் முடிந்தும் அதன் உரிமையாளர்களால் மீட்கப்படாதவை மொத்தம் 645 போலீஸார் வசம் உள்ளன. இந்தக் கார்களில் விலைமதிப்புமிக்க 13 ரேஞ்ச் ரோவர், 3 போர்சே, 1 அல்பா ரோமியோ உட்பட சில மெர்ஸிடஸ், பிஎம்டபிள்யூ, லெக்ஸஸ், மின் கூப்பர், ஜாகுவர் போன்றவைகளும் அடக்கம்.

முடக்கப்பட்டுள்ள 645 கார்கள் குறித்த விபரங்களை கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதிய நாளிதழ்களிலும் விளம்பரம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் துபை போலீஸாரின் இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் உடனடியாக பர்துபை அல்லது தேராவிலுள்ள போக்குவரத்து துறை அலுவலகங்களுக்கு சென்று தங்களுடைய கார்களை மீட்டுக்கொள்ள வேண்டும் அல்லது மீட்க முடியாமல் போனதற்கான தகுந்த காரணங்களை தெரிவிக்க வேண்டும்.

மேற்சொன்னவாறு செயல்படத் தவறுபவர்களின் கார்களை எதிர்வரும் மே 25 ஆம் தேதி பகிரங்க ஏலம் மூலம் விற்கப்பட உள்ளன. இந்த ஏலத்தை துபையில் செயல்படும் ஏல மையங்கள் மூலமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் சகோதரர்கள் யாருடைய வாகனமாவது பட்டியலிடப்பட்டிருந்தால் உடனே அதை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபடவும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

ஆசிரியர் தகுதித் தேர்வு: தஞ்சை மாவட்டத்தில் 21,761 பேர் தேர்வு எழுதினர் !

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வி துறை சார்பில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு இரண்டாம் தாள் தேர்வு  நடைபெற்றதை தூய இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் இன்று (30.4.2017)ஆய்வு மேற்கொண்டார்கள்.

மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் ஆய்விற்கு பின் தெரிவித்ததாவது;
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தஞ்சாவூர் மாவட்ட அளவில் ஆசிரியர் தகுதி தேர்வு 29.04.2017 அன்று தாள் 1 நடைபெற்றது.  30.04.2017 இன்று தாள் 2 நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டங்களில் தாள் 1 தேர்வினை 8213 தேர்வாளர்கள் 20 தேர்வு மையங்களில் தேர்வு எழுதியுள்ளனர்.

தஞ்சாவூர்  மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டங்களில் தாள் 2 தேர்வினை 21,761 தேர்வாளர்கள் 54 தேர்வு மையங்களில் தேர்வு எழுதகின்றனர்.

தேர்வாளர்கள் தேர்வறைக்குள் நுழைவுச் சீட்டு, நீல மற்றும் கருப்பு பேனாக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், வேறு எந்த அச்சிடப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட தாள்கள் எவற்றையும் தேர்வு அறைக்கு வைத்திருக்க கண்காணிப்பாளர்கள் அனுமதி அளிக்கக் கூடாது எனவும்,  கவனமாக 100 சதவிகிதம் கண்காணிக்க வேண்டும் என கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  கைபேசி, கைக்கணினி, மடிக்கணினி, தரவி அல்லது கணக்கிடும் கருவிகள் போன்றவற்றை தேர்வு அறைக்குள் அனுமதிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வறைக்குள் அறைக் கண்காணிப்பாளர் அல்லது சத தேர்வர் ஆகியோருடன் முறை தவறி நடப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது.

தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. காவல் துறையினர் தேர்வு மையங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

ஒழுங்கீனமாக நடக்கும் தேர்வர்கள் இன்றைய தேர்வினை தொடர்ந்து எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.  ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளை தொடர்ந்து எழுத நிரந்தர தடை விதிக்கப்படுவதுடன் காவல் துறையின் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வில் தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ்,  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருவளர்செல்வி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

அதிரை அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் !

அதிராம்பட்டினம், ஏப்-30
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் கடந்த ஏப்- 2 ந் தேதி இந்தியா முழுவதும் முதல் சுற்று தவணை வழங்கப்பட்டது. இரண்டாம் சுற்று தவணை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிக் கூடங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், புகை வண்டி நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், சுங்கச் சாவடிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சொட்டு மருந்து முகாம்கள் அமைக்கப்பட்டு சொட்டு மருந்து வழங்கப்படுகின்றன.  இம்மையங்கள் காலை முதல் இரவு வரை செயல்படும்.

இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஏ. அன்பழகன், மருத்துவர்கள் எஸ்.ஹாஜா முகைதீன், ஏ.சீனிவாசன், எஸ்.கார்த்திகேயன், டி.சுதாகரன் ஆகியோர் கலந்துகொண்டு 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்திணை வழங்கினார்கள்.

சென்னையில் அதிரை சகோதரி வஃபாத் ( மரணம் )

அதிரை நியூஸ்: ஏப்-30
அதிராம்பட்டினம், ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி செ.அ.மு சேக்கா மரைக்காயர் அவர்களின் மகளும், ஹாஜி மு. க.செ அகமது அஸ்ரப் அவர்களின் மனைவியும், ஹாஜி அப்துல் வஹாப், அப்துல் அஜீஸ் ஆகியோரின் சகோதரியும், அபூபக்கர் அவர்களின் மாமியாரும், முஹம்மது உமர், அகமது பிர்தெளஸ் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா உம்மல் ஜோஹ்ரா அவர்கள் சென்னை மண்ணடி பவளக்காரத் தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்  பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோம்.

Saturday, April 29, 2017

அமீரக பாலைவன மண்ணில் நெல் பயிரிட்டு அறுவடை செய்த மாணவர்கள் ( படங்கள் )

அதிரை நியூஸ்: ஏப்-29
கேரளாவைச் சேர்ந்த சுதீஷ் குருவாயூர் என்கிற எலக்ட்ரிக்கல் எஞ்சினியராக இருந்து தற்போது விவசாய மேற்பார்வையாளராக உவப்புடன் அமீரகத்தில் பணியாற்றி வருபவர்,இவர் அமீரகத்தில் பல்வேறு விவசாய சார்ந்த சாதனைகளை நிகழ்த்தியதற்காக 5 உலக சாதனைகளை தன்னகத்தே வைத்திருப்பவர். தன்னுடைய வீட்டின் கொல்லைப்புற பகுதியை சுமார் 4 மாதங்கள் விவசாயம் செய்ய ஏற்றவகையில் சீர்படுத்தினார். பின்பு அதில் இந்திய பள்ளி மாணவர்களை கொண்;டு நெல்லை விதைத்து வளர்த்து வந்தார்.

5 மாத வளர்ச்சிக்குப் பின் அறுவடைக்கு ஏற்ற வகையில் நன்கு வளர்ந்திருந்த நெல்லை 3 இந்தியப் பள்ளிகளின் மாணவ, மாணவிகளை கொண்டே நேற்று அறுவடை செய்ய வைத்து விவசாயத்தையும், விவசாயிகளின் அருமையையும் செயல்முறை பயிற்சி ரீதியாக உணரச் செய்தார். நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற அறுவடை நிகழ்ச்சியை ஒரு திருவிழாவைப் போல் ஏற்பாடு செய்தும் அதில் விவசாயிகளின் ஆடையை உடுத்தியும் நாட்டுப்புற பின்னனிப் பாடல்களுடன் 'களத்து மேடு' நிகழ்வுகளை கண்முன்னெ கொண்டு வந்தார். சுதீஷ் அவர்களின் சீரிய முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

சவூதி அரேபியாவில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திய எண்ணெய் வளம் (படங்கள்)

அதிரை நியூஸ்: ஏப்-29
1938 ஆம் ஆண்டு பாலைவன நாடான சவுதி அரேபியாவில் எண்ணெய்வளம் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து சவுதியின் பொருளாதாரம் மட்டுமல்ல வெளிநாட்டினரின் வாழ்விலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது.

புதிதாக கச்சா எண்ணெய் விற்பனை மூலம் பணம் கொட்டத் துவங்கியதால் அதுவரை உடல் உழைப்புக்கள் மூலம் அடிமட்ட வேலைகள் வரை செய்து வந்த அரபிகள் தங்களின் பாரம்பரிய வேலைகளை உதறிவிட்டு அரசு வேலைகளுக்கு தாவியதால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிறைக்கவும், புதிய கட்டுமானங்களுக்கு அது தொடர்பான தொடர் பராமரிப்பு பணிகளுக்காகவும் தேவைப்பட்ட பொறியாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் பிற வெளிநாட்டினரை நம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

இதில் அமெரிக்கா என்ற நாடு மட்டும் சவுதியை சுரண்டி கொளுத்தது, இன்றும் கண்முன்னே ஏமாற்றி வருவதும் தனி விஷயம். (இதைப் பற்றி ஒரளவு அறிந்து கொள்ள ஜான் பெர்கின்ஸ் என்ற அமெரிக்கர் எழுதிய 'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்' என்ற புத்தகத்தை வாசிக்கவும்)

ஒரு பக்கம் சவுதியர்கள் மற்றும் வெளிநாட்டினர் என இருதரப்பாருக்கும் பொருளாதார ரீதியில் பயனளித்தாலும் இடையில் பெயரளவு சவுதி முதலாளிகளின் பெயரில் வெளிநாட்டினர் சொந்த வியாபாரம் செய்தும், சட்ட விரோதமாகவும் தங்களுடைய நாடுகளுக்கு பணத்தை அனுப்புவது, போலி படிப்புச் சான்றிதழ்களுடன் சவுதிக்குள் ஊடுருவது, வேலைக்கு எடுத்த அரபியிடம் அல்லது நிறுவனத்தில் வேலை செய்யாமல் ஓடுவது போன்ற ஒழுங்கீனங்களும் சவுதியை பாதிப்பதாக சவுதி மீடியாக்கள் குறைபட்டுக் கொள்கின்றன.

எது எப்படியோ, படிப்பறிவில்லாத வெளிநாட்டினரும் கைநிறைய சம்பாதிக்க இயலும் என உலகமே உணரும் வகையில் நிரூபித்ததில் சவூதி பிற வளைகுடா அரபு நாடுகளுக்கும் இன்றும் ஒரு சிறந்த முன்மாதிரியே.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 
 
 
 

அதிரையில் மஜக 2 ஆம் ஆண்டு துவக்க விழா, அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் !

அதிராம்பட்டினம், ஏப்-29
மனிதநேய ஜனநாயக் கட்சியின் 2 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, அக்கட்சியின் அதிரை பேரூர் கிளை சார்பில், அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் அதிரை பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் எம். அகமது கபீர் தலைமை வகித்தார். அதிரை பேரூர் செயலாளர் எம்.ஐ முஹம்மது செல்லராஜா வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அக்கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரஷீது சிறப்புரை ஆற்றினார். மேலும் மாநில துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் கே. ராவூத்தர்ஷா, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாநில இளைஞர் அணி செயலாளர் ஜே. சமீம் அகமது, கொள்கை பரப்புச் செயலாளர் மன்னை செல்லச்சாமி, அதிரை ஜியாவூதீன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். கூட்டத்தை மஜக குவைத் மண்டல ஊடகச் செயலாளர் அப்துல் சமது வழிநடத்தி சென்றார்.

கூட்டத்தில் அதிராம்பட்டினம் பகுதிகளில் இயங்கி வரும் மதுக்கடைகளை மூட வேண்டும், அதிரையில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும், அதிரையில் 108 ஆம்புலன்ஸ் வசதி, அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களுடன் 24 மணி நேர சேவை, அதிரை பகுதிகளின் பழுதடைந்த சாலைகளை சீரமைத்தல், திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டப்பணிகளை விரைந்து முடித்தல் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்ட முடிவில் அக்கட்சியின் அதிரை பேரூர் பொருளாளர் எச். சாகுல் ஹமீது நன்றி கூறினார். கூட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த எஸ். அப்துல் ஜப்பார், எஸ். அப்துல் காதர், ஹனி ஷேக், எஸ். முகைதீன், ஜே. ஜுபைர், ஜே. முகமது யூனுஸ், எஸ். தக்பீர் நைனா முகமது, குதுபுதீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 

10 தென்னை மரங்கள்... மாதம் 1 லட்சம் வருமானம்... நீரா கொடுக்கும் நம்பிக்கை!

தென்னை மரத்திலிருந்து 'நீரா' பானம் இறக்கிக் கொள்ள தமிழக அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து விவசாய சங்கங்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றன. நீரா என்பது தென்னை மரங்களில் உள்ள பாலைகளில் இருந்து எடுக்கப்படும் ஒருவகை பானம்தான் இந்த நீரா. பதநீருக்கும், கள்ளுக்கும் இடைப்பட்ட பான வகையைச் சேர்ந்தது. மண்கலயங்களில் சேகரிப்பதற்குப் பதிலாக அதற்கென வடிவமைக்கப்பட்ட ஐஸ் பானைகளை மரத்தில் பொருத்த வேண்டும். ஐஸ் பானைகளில் சேகரிக்கும் நீராவை ப்ரீஸர் உள்ள வாகனத்தில் ஏற்றி கடைகளில் விற்பனை செய்யலாம். அதேபோல கடைகளிலும் ஐஸ்பெட்டி உள்ள கடைகளில் மட்டுமே நீரா பானத்தை விற்பனை செய்ய முடியும். இதனை மூன்று மாதங்களுக்கு இருப்பு வைத்து விற்றாலும் கெட்டுப்போகாமல் இருக்கும். கேரளாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக நீரா விற்பனை சக்கைபோடு போட்டு வருகிறது. கேரளாவில் ஒரு விவசாயி 25 மரங்களில் இருந்து நீராவை இறக்க முடியும். தமிழக விவசாயிகள் வேளாண்மைத்துறை ஆத்மா திட்டத்தின் மூலம் கேரளாவுக்குச் சென்று நீரா பானம் இறக்குவது பற்றி பயிற்சி பெற்றும் வருகிறார்கள். கேரளா சென்று பயிற்சி பெற்றவர்களில் ஒருவரும், சுருள்பாசி உற்பத்தியாளருமான ரத்தின ராஜசிங்கம் நீரா பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

நீரா பானம்
"தமிழகத்தில் எளிதாக நீரா பானத்தை இறக்கலாம். முன்னர் மண்பானைகளில்தான் பதநீர் இறக்குவார்கள். ஆனால் நீராவை தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்ட ஐஸ்பெட்டியில் பிடித்துத்தான் விற்பனை செய்ய வேண்டும். நீராவை பதநீரைப்போல இறக்க முடியாது. அந்தப் பெட்டி பால்கேன் வடிவில் இருக்கும். அதை மரத்தில் கட்டிவிட வேண்டும். அதன்பின்னர் தென்னை பாலையைச் சீவிவிட்டு வடியும் பதநீரை பாலித்தீன் பைகள் மூலமாக கேன்களில் சேகரமாகும். இப்படிச் சேகரிக்கும்போது அதன் உண்மைத்தன்மை மாறாமல் இருக்கும். இப்படிச் சேகரிக்கும் நீரா பானத்தை 5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு பாலையில் இருந்து 5 லிட்டர் நீரா எடுக்கலாம். இதுவே ஒரு மரத்துக்கு இரண்டு பாலைகளில் எடுத்தால் நீரா வடியும் தன்மையை பொருத்து அளவுகள் மாறுபடும். வெறும் 10 மரங்கள் கொண்ட ஒரு விவசாயிக்கு நீரா நிச்சயமாக வரப்பிரசாதம்தான். ஒரு மரத்தில் தினமும் 5 லிட்டர் நீரா கிடைக்குமானால் 10 மரத்துக்கு 50 லிட்டர் நீரா கிடைக்கும். ஒரு லிட்டர் 50 ரூபாய்க்கு விற்பனை செய்தால் 50 லிட்டருக்கு 2500 ரூபாய் தினமும் வருமானம் கிடைக்கும். மொத்தமாக 30 நாட்களும் விற்பனை செய்தால் 75,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுவே இரண்டு பாலைகள் உள்ள மரங்களில் வடியும் நீராவை விற்பனை செய்யும்போது இன்னும் கூடுதலாக வருமானம் கிடைக்கும். இந்த முறையைத்தான் எங்களுக்கு கேரளாவில் பயிற்சியாகக் கொடுத்தனர். மொத்த வருமானமாக (தேங்காய் விற்பனை, மட்டைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்) பத்து தென்னை மரங்களுக்குக் கிட்டத்தட்ட ஒரு லட்சம் வரை வருமானம் பார்க்கலாம். இது உடலுக்கு நன்மை தரக்கூடிய பானமும் கூட. இந்த முறை பின்பற்றினால் விவசாயிகளுக்கு நஷ்டம் வராது. நீரா தமிழகத்தில் இறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டால் பன்னாட்டு நிறுவன குளிர்பானங்களுக்கு சரியான சவாலாக இருக்கும்.

கொச்சியில் இயங்கிவரும் மத்திய தென்னை வளர்ச்சி வாரியத்தில் நீரா இறக்கப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், நீராவை இறக்கிப் பதப்படுத்தி தொழில்நுட்பக் கல்வி மற்றும் மதிப்புக்கூட்டிய பொருட்கள் தயாரிப்பு பயிற்சிகளை ஊக்கத்தொகை கொடுத்து பயிற்சி அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

நன்றி: விகடன்

அதிரையில் 49 நாட்களுக்கு பிறகு 'மினி டிப்பர் லாரி' பயன்பாட்டிற்கு வந்தது ( படங்கள் )

அதிராம்பட்டினம், ஏப்-29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 21 வரை உள்ள வார்டுகளில் அன்றாடம் சேருகின்ற குப்பைகளை அப்புறபடுத்த பேரூராட்சி சார்பில் வாங்கப்பட்ட மினி டிப்பர் லாரி 49 நாட்களுக்கு பிறகு இன்று சனிக்கிழமை காலை முதல் பயன்பாட்டிற்கு வந்ததுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 21 வரை உள்ள வார்டுகளில் அன்றாடம் சேருகின்ற குப்பைகளை பேரூராட்சிக்கு சொந்தமான 2 டிராக்டர் மற்றும் 1 வாடகை டிராக்டர் வாகனங்களில் அப்புறப்படுத்தப்படுகிறது.

அதிரை பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை ஒருபுறமிருந்தாலும், டிராக்டர் வாகனங்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் குப்பைகளை முழுமையாக அகற்றுவதில் பெரும் சிரமம்
இருந்து வந்தது. மேலும் அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளில் குடியிருப்புகள் அதிகரித்துவரும் நிலையில் குப்பைகளை முழுமையாக அப்புறப்படுத்த கூடுதல் வாகனங்கள் வாங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் தொடர் கோரிக்கை வைத்துவந்தனர்.

இந்நிலையில், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதி குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு, 2015-16 நபார்டு நிதி உதவியில், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் 2015-16 கீழ் ரூ. 12.50 லட்சம் மதிப்பில் புதிதாக மினி டிப்பர் லாரி வாங்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, புதிய மினி டிப்பர் லாரி வாகனம் கடந்த மார்ச் மாதம் 11 ந் தேதி  பேரூராட்சி அலுவலகத்திற்கு கொண்டுவந்து நிறுத்தப்பட்டது.

கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக இந்த வாகனத்தை பயன்படுத்தாமல் பேரூராட்சி அலுவலக வரண்டாவில் காட்சிப் பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பொதுமக்களை கடும் அதிருப்தியடைய வைத்தது.
குப்பைகள் ஆங்காங்கே தேங்கிக் காணப்பட்டன. இக்குப்பைகளை அகற்ற மினி டிப்பர் லாரி வாகனத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்த கோரிக்கை பிரபல தினமணி நாளிதழில் சென்ற ஏப்.15 ந் தேதி பிரதான செய்தியாக வெளிவந்தது.

இந்நிலையில், அதிரை பேரூராட்சி அலுவலக வரண்டாவில் நிறுத்தப்பட்டு இருந்த மினி டிப்பர் லாரி வாகனம் 49 நாட்களுக்கு பிறகு இன்று சனிக்கிழமை காலை முதல் பயன்பாட்டிற்கு வந்தது. அதிரை பேரூராட்சி பகுதிகளில் தேங்கி காணப்பட்ட குப்பைகளை அள்ளிச்சென்றதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.