சீன தேசத்தையும் மேற்கத்திய உலகையும் வணிகரீதியில் இணைத்த 'சில்க் ரூட்' எனப்படும் பட்டுச்சாலை சுமார் 2000 வருடங்களுக்கு முன் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கியது என்பதை வரலாற்றின் வழி அறிவோம். அதேபோல் இன்றைய நவீன காலத்திலும் பல நாடுகளின் சாலைத் தடங்களே அந்நாடுகளின் பொருளாதார முதுகெலும்பாய் திகழ்ந்து வருகின்றன என்பதும் நிதர்சன நிஜமே!
அமீரகத்தில் சுமார் 560 கி.மீ தொலைவுக்கு நீண்டும், பல்வேறு பகுதிப் பெயர்களை சுமந்தும் படுத்திருக்கும் E-11 எனும் சாலை இணைப்பிற்குப் பிந்தைய ஐக்கிய அரபு அமீரகத்தை தலை நிமிரச் செய்வதில் கடந்த 45 ஆண்டுகளில் முக்கிய பங்காற்றியுள்ளது, பங்காற்றி வருகிறது இனியும் பங்கு பெறும்.
இந்த சாலை அனைத்து வளைகுடா அரபு நாடுகளையும் தரைவழியாய் உறவில் ஒன்றுபடுத்துவதுடன், வர்த்தக வளர்ச்சிக்கும் மிகப்பெரும் இரத்த நாளமாகவும் விளங்குகின்றது.
இன்று ஒருவர் காலையில் துபையிலிருந்து அபுதாபி சென்று விட்டு பகல் உணவுக்கெல்லாம் பிற்பகலில் மீண்டும் துபை வந்துவிட முடியும் ஆனால் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் 5,6 மணிநேரங்கள் பயணம் செய்து அபுதாபியின் மக்தா (பிரிட்ஜ்) நுழைவாயில் அருகேயிருந்த சோதனைச்சாவடியில் உங்களுடைய பொருட்களை எல்லாம் வாகனத்திலிருந்து இறக்கி வைத்து விட்டு கஸ்டம்ஸ் மற்றும் இமிக்கிரேசன் (பாதுகாப்பு) பணிகளை முடித்து பாஸ்போர்டில் விசா ஸ்டாம்ப் அடித்துக் கொண்டு தான் அபுதாபி தீவினுள் நுழைய முடியும். (அல் குவைபத் (Al Ghuwaifat) (சிலா - Sila) பார்டர் எனப்படும் அமீரக - சவுதி எல்லையில் (பத்ஹா) இன்றும் நமது பொருட்களை எல்லாம் வாகனத்திலிருந்து சோதனைக்காக இறக்கி வைத்துவிட்டு விசா அடித்துக் கொண்டு செல்வதை உம்ரா சென்றவர்கள் அறிந்திருப்பீர்கள்)
அன்றைய துபை அபுதாபி மணற்சாலையின் இடையில் வழி தவறினால் மேலும் பல மணிநேரங்கள் சுற்ற நேரிடும் என்பதும், மாலை மயங்கிவிட்டால் அடுத்த நாள் காலையில் மக்தா (பிரிட்ஜ்) நுழைவாயில் சோதனைச்சாவடி பாதுகாப்புப் படை ஊழியர்கள் மீண்டும் பணிக்கு வரும்வரை அங்கிருக்கும் டென்டில் தங்கி பேரீத்தம் பழங்களையும் தண்ணீரையும் குடித்துத் தான் இரவை கழிக்க வேண்டும் என்பதும் நேற்றைய வரலாறு. இன்றும் அந்த சோதனைச்சாவடியின் கண்காணிப்பு கோபுரம் சாட்சியாய் காட்சியளித்துக் கொண்டுள்ளது.
கிழக்கில் ஓமன் நாட்டின் எல்லையான அல் ஜீர் - (அமீரகத்தின்) ராஸ் அல் கைமாவில் துவங்கும் இந்த சாலை மேற்கில் சவுதி எல்லையில் முடிவடையும். இந்த சாலையின் துபை பகுதியான ஷேக் ஜாயித் சாலை பல்வேறு பரிணாம வளர்ச்சிக்குப் பின் 1996 ஆம் ஆண்டு தான் இன்றைய நவீன நிலையை அடைந்ததும், அதனை தொடர்ந்து இருபுறமும் வான்முட்டும் கோபுரங்களுடன் உலக வர்த்தக தொட்டிலில் ஒன்றாய் விஸ்வரூபம் பெற்றுள்ளதையும் நிதர்சனமாய் கண்டுவருகிறோம்.
1960 ஆம் ஆண்டு இந்த சாலை அமைப்பதற்கான திட்டங்கள் அன்றைக்கு 'டுரூசியல் ஸ்டேட்ஸ்' (Trucial States) என்ற பெயரில் தனித்தனி நாடுகளாக இருந்த அமீரக ஆட்சியாளர்கள் மத்தியில் துளிர்விடத் துவங்கியது. 1968 ஆம் ஆண்டு ஒரே நாடாக செயல்படுவது என்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் அபுதாபி ஆட்சியாளர் ஷேக் ஜாயித் அவர்களுக்கும் துபை ஆட்சியாளர் ஷேக் ராஷித் அல் மக்தூம் அவர்களுக்கும் இடையில் துபை அபுதாபி எமிரேட்டுகளின் எல்லையில் இந்த சாலையில் அமைந்துள்ள அல் சம்ஹாவில் தான் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது. (இரு எமிரேட்டுகளின் எல்லைகளை பிரித்தறிவிக்கும் வகையில் துபையின் சாலைப்பகுதி கருமையாகவும், அபுதாபியின் சாலை பகுதி சற்று பழுப்பு நிறத்திலும் ஷைஹ் சுவைப் (Saih Shuaib) பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம்)
இந்த சாலை அமைக்கப்படுவதற்கு முன் அமீரகத்தின் பழமையான வங்கியான பேங்க் ஆப் ஓமன் என்ற பெயரில் இயங்கிய இன்றைய மஷ்ரெக் பேங்க் துபையில் 2 கிளைகளுடனும் அபுதாபியில் 2 கிளைகளுடன் மட்டுமே இயங்கியது. ஐக்கிய அரபி அமீரகம் 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் நாள் முறைப்படி அமைக்கப்பட்டபின் நாடு முழுவதும் கிளை பரப்ப ஏதுவாய் அமைந்தது இந்த சாலையே.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் லேண்ட் ரோவர் (land Rover) எனப்படும் கார்கள் மட்டுமே இந்த புழுதி மிகுந்த மண்சாலையில் டேக்ஸிக்களாக துபை அபுதாபி இடையே சேவையாற்றியுள்ளது. இதற்கான கட்டணமாக ஒருவருக்கு 3 அல்லது 4 செந்நிற இந்திய ரூபாய்கள் (Red Indian Rupees) வசூலிக்கப்பட்டுள்ளன. (அப்போது திர்ஹம் எல்லாம் கிடையாது)
போக்குவரத்திற்கு பெரும் இடைஞ்சலாக ஒட்டகங்ககள், ரிப்பேராகி நிற்கும் வாகனங்ககள், வழியில் குடிக்க தண்ணீரோ அல்லது சாப்பாடோ இல்லாதது மட்டுமல்ல பல வேளைகள் இந்த டேக்ஸிக்களில் கால்நடைகளுடன் தண்ணீர் கேன்களும் ஏற்றப்பட்டு வருமாம், இதில் தான் அட்ஜஸ்ட் செய்து கொண்டு மனிதர்களும் பயணிக்க வேண்டும். இடையில் மண்ணில் சிக்கிக் கொண்டால் உதவிக்கு யாரும் எளிதில் கிடைக்க மாட்டார்களாம், இதற்கிடையில் பாலைவன மணற்புயல் மற்றும் கண்ணை மறைக்கும் பனிப்படலங்களும் பயணத்தை தீர்மானிக்கும் இயற்கை சக்திகளாக திகழ்ந்துள்ளன.
1972 ஆம் ஆண்டு தான் முதன்முதலாக இருபுறமும் தலா ஒருவழிப்பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்து ஓரளவு மூச்சுவிடத் துவங்கியுள்ளது. இந்த சாலை அபுதாபியின் மப்ரக்கில் (Mafraq) இருந்து துவங்கி (மப்ரக் என்ற அரபி பதத்திற்கு ஜங்ஷன் (சந்திப்பு) என்று பொருள் மேலும் இன்று வரை அந்தப் பகுதி மப்ரக் என்றே அழைக்கப்படுகிறது) துபையின் முதலாவது இன்டர்சேஞ்ச் (First Inter-change) என அழைக்கப்படும் டிபன்ஸ் ரவுண்டபவுட்டில் (Defense Roundabout) நிறைவடைந்துள்ளது. 70 ஆம் ஆண்டுகளின் கடைசியில் தான் இருபுறமும் தலா இருவழிப் பாதையாக மாற்றப்பட்டது. 1990 ஆம் ஆண்டு தான் இந்த சாலைக்கு ஷேக் ஜாயித் சாலை என பெயரிடப்பட்டது. இன்று பல்வேறு வளர்ச்சி நிலைகளுக்குப் பின் எட்டு வழிச்சாலையாக வாகன வெள்ளத்தால் நிரம்பி வழிகின்றது.
சாலை ஒன்று, பெயர்கள் பல என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் E-11 எனும் நெடுஞ்சாலை:
1. அபுதாபி – குவைபத் இன்டர்நேஷனல் ஹைவே.
2. ஷேக் மக்தூம் பின் ராஷித் ரோடு (அபுதாபி பகுதி)
3. ஷேக் ஜாயித் ரோடு (துபை பகுதி)
4. துபை ஷார்ஜா ரோடு
5. அல் வஹ்தா ஸ்ட்ரீட் (சாலை)
6. அல் இத்திஹாத் ஸ்ட்ரீட் (சாலை)
7. ஷேக் முஹமது பின் சாலம் ரோடு
8. அல் மனாமா – ராஸ் அல் கைமா ரோடு
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.