.

Pages

Saturday, April 22, 2017

ஏரிகளை மீட்டு தூர்வாரிய இளைஞர்கள் பட்டாளம்! ( படங்கள் )

ஜல்லிகட்டு, நெடுவாசல் போராட்டங்களுக்கு பிறகு தமிழகத்தில் இளைஞர்களின் சக்தி அசைக்கமுடியாத சக்தியாக வலம் வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இப்போது, இளைஞர்கள் பல இடங்களில் சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் காணாமல் போன புதுகுறிச்சி ஏரியை கண்டுபிடித்து தூர்வாரி கடல்போல் மாற்றியுள்ளார்கள். இவர்களை பின்தொடர்ந்து பல இளைஞர்களும் ஏரியை தூர்வார முன்வந்து கொண்டிருக்கிறார்கள். இளைஞர்களின் இந்த செயலை மக்கள் வரவேற்று வருகிறார்கள்.

பெரம்பலூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது புதுகுறிச்சி கிராமம். 50 ஆண்டுகளாக ஏரியை தூர்வாராமல் விட்டதால் ஏரி தூர்ந்து போய் சமதளமாக மாறியிருந்தது. இதை நம்மாழ்வார் இளைஞர் நற்பணிமன்றத்தினர் கட்டாந்தரையாக கிடந்த ஏரியை கடல்போல் மாற்றி காட்டியிருக்கிறார்கள். மாற்றத்துக்கான விதை போட ஆரம்பித்துள்ளார்கள் இப்பெருமைக்குரிய நம்மாழ்வார் இளைஞர் நற்பணிமன்ற தலைவர் தனபாலிடம் பேசினோம். "புதுகுறிச்சி ஏரி 110 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியால் 700 ஏக்கருக்கும் மேல் விளைநிலங்கள் பாசன வசதி பெற்றது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்துக்கு இந்த ஏரியால் தண்ணீர் கிடைத்துக்கொண்டிருந்தது. ஆனால், இப்போது கடும் வறட்சி நிலவுகிறது. வற்றாமல் நீர் கொடுத்துக்கொண்டிருந்த ஏரியில் சீமைகருவேல மரங்கள்தான் மண்டிபோய் கிடக்கின்றன. ஏரி இருந்தற்கான தடமே தெரியாமல் அழிந்து போய்விட்டது. எங்கள் ஏரியை மீட்க போகிறோம் என்று கலெக்டர் நந்தகுமாரிடம் மனு கொடுத்தோம். அவரும் க்ரீன் சிக்னல் கொடுத்தார். முதலில் ஏரியில் வளர்ந்து கிடந்த சீமைகருவேல மரங்களை அகற்றுவதற்காக குறைந்த விலையில் ஜேசிபி வாகனத்தை வாடகைக்கு எடுத்துமகொண்டு எங்கள் வேலையை தொடங்கினோம். எங்களுடைய முயற்சியை பார்த்துவிட்டு கிராம மக்களே எங்களுக்கு கைகொடுக்க தொடங்கினார்கள். அந்த வகையில் சீமைகருவேல மரங்களை வெட்டி விறகுகளை கடைகளில் விற்றோம். அதிலிருந்து கொஞ்சம் பணம் கிடைத்தது. எங்களுடைய முயற்சியை பார்த்துவிட்டு கலெக்டரும் ஏரியை தூர்வாரும் திட்டத்துக்கு ஒரு லட்சம் கொடுத்தார்.

ஏரியில் உள்ள வண்டல் மண்களையும் விவசாயிகள் எங்களிடம் பணத்தை கொடுத்து வாங்கினார்கள். அந்த பணத்தை வைத்து கொண்டு ஏரிக்கு வரும் வரத்து வாய்க்கால்களை சரிசெய்தோம். பின்பு ஏரியின் மையப்பகுதியில் ஏழு ஏக்கர் அளவுக்கு ஐந்து அடி தூரத்துக்கு ஆழப்படுத்தியுள்ளோம். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பெய்த மழையால் இப்பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது. இப்போது எங்கள் கிராமத்தினர் அந்த குளத்தில் மீன்குஞ்சுகள் விட்டு வளர்க்க யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். தண்ணீர் இருந்தால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். விவசாயமும் விவசாயிகளும் வளம் பெறுவார்கள். எங்களை போல் இளைஞர்கள் முயற்சி செய்தால் முடியாதது எதுவும் மில்லை" என்றார்.

இவர்களை பின்பற்றி குளத்தூர் நண்பர்களும் ஏரியை தூர்வார களத்தில் இறங்கியிருக்கிறார்கள். இது குறித்து சுரேந்தர் என்பவரிடம் பேசினோம். "எனது பெயர் சொல்வதை விட குளத்தூர் நண்பர்கள் குழு என்று சொல்வதே சரியானதாக இருக்கும். எங்கள் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட குளங்கள் இருந்ததால் இந்த ஊரை குளத்தூர் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் முன்னோர்கள். ஆனால், இப்போது ஐந்து குளங்கள்தான் இருக்கிறது. அதுவும் தூர்ந்து போய் பயன்பாட்டுக்கு இல்லாமல் இருந்துவருகிறது. அதேபோல் குப்பன் ஏரி 90 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மூன்று கிராமத்து மக்களும் இதை நம்பிதான் விவசாயம் செய்திருக்கிறார்கள். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக உள்ளது.

சீமைகருவேல மரங்களை அகற்றிவிட்டு, ஏரியை தூர்வார போகிறோம் என்று கலெக்டர் நந்தகுமாரிடம் மனுக்கொடுத்தோம். அதற்கு அவர் ஏரியை தூர்வார கோட்டா முடிந்துவிட்டது; எங்களிடம் பணம் இல்லையென்று சொன்னார். நாங்களே செலவு செய்துகொள்கிறாேம், நீங்கள் அனுமதி மட்டும் கொடுத்தால் போதும் சார் என்று சொல்ல, அவர் ஆச்சர்யமாய் பார்த்து எங்களுக்கு அனுமதி வழங்கினார். வெளிநாடுகளிலிருந்த எங்களது நண்பர்களிடம் உதவிக்கோரினோம். அவர்களும் அவர்களது நண்பர்களிடம் உதவிக்கேட்டார்கள். வெளிநாட்டு நண்பர்கள் மூலமாக எங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் அனுப்பினார்கள். பின்பு குப்பன் ஏரியை மீட்க போகிறோம். இளைஞர்கள் உதவி தேவை என்று வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில்  செய்திகளை பதிவு செய்திருந்தோம்.

150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைகொடுத்தார்கள். முதலில் சீமைகருவேல மரங்களை அகற்றினோம். பின்பு ஏரிக்கு தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்கள் சரிசெய்தோம். இப்போது ஒன்பது ஏக்கருக்கும் மேல் ஏரியை தூர்வாரியுள்ளோம். இன்னும் எங்கள் வேலை முடியவில்லை. அதேபோல் ஏரியில் உள்ள வண்டல்மண் எடுக்க பல கலெக்டர்கள் அனுமதி கொடுப்பதில்லை. ஆனால், நம்ம  கலெக்டர் எந்ததடையும் இல்லாமல் அனுமதி வழங்கினார். அதுமட்டுமில்லாமல் நமது முன்னோர்கள் வண்டல்மண்ணை எடுத்து விவசாய நிலத்துக்கு பயன்படுத்தி அதிக மகசூல் அடைந்துள்ளார்கள். ஆனால், இப்போது இந்த சட்டத்தை மாற்றிவிட்டார்கள். இந்த சட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். அதேபோல் உள்ளூரில் உள்ள சில அதிகாரிகள் எங்கள் மீது இல்லாத பொல்லாத விஷயங்களை கலெக்டரிடம் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு அவர் இளைஞர்கள் எல்லா விஷயத்திலும் எப்போதும் சரியாக இருப்பார்கள் என்று பதிலத்துள்ளார். எங்கள் மீது நம்பிக்கை வைத்த கலெக்டருக்கு நன்றி தெரிவித்துகொள்கிறோம். இது எங்களுக்கு கிடைத்த முதல்வெற்றி" என்று முடித்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் புதுகுறிச்சி, குளத்தூர், வரகூர்,அனூக்கூர் போன்ற பகுதிகளில் இளைஞர்களே முன்னின்று ஏரியை தூர்வாரி கொண்டிருக்கிறார்கள். மாற்றத்துக்கான விதையை விதைக்க தொடங்கியுள்ளார்கள் இளைஞர்கள்.

-எம்.திலீபன்
நன்றி: விகடன்

பரிந்துரை: ஜமீல் எம். ஸாலிஹ் ( சமூக ஆர்வலர் )
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.