இதுதொடர்பாக இன்று(வெள்ளிக்கிழமை) தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு, பத்திரப் பதிவில் தளர்த்தப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. அத்துடன் விசாரணையை மே 4-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். வழக்கால் பாதிக்கப்பட்டவர்கள், வழக்கு தொடுத்தவர்கள் மற்றும் அரசு தரப்பின் வாதங்களை கோடை விடுமுறையில் கேட்க உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
தமிழகம் முழுவதும் விவசாய நிலங்களை அங்கீகாரமற்ற வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு தடை கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு, அங்கீகாரமற்ற மனைகளை பத்திரப்பதிவு செய்ய தடை விதித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி உத்தரவிட்டது.
கடந்த மார்ச்சில் பொறுப்பு தலைமை நீதிபதியான ஹூலுவாடி ஜி.ரமேஷ் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக அரசு பிறப்பித்த அரசாணைப்படி கடந்த ஆண்டு அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பாகப் பதியப்பட்ட அங்கீகாரமற்ற மனைகளை மறு பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்ட தடையைத் தளர்த்தி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசாமி ஆஜராகி, ‘‘அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரையறை செய்வது தொடர்பாக அரசின் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, புதிய வரைவு விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விதிகள், அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஒப்புதல் கிடைத்ததும் முறைப்படி அறிவிப்பாணையாக வெளியிடப்படும்’’ எனக்கூறி அந்த விதிகளை நீதிபதிகளின் பார்வைக்கு சமர்ப்பித்தார். அதையடுத்து விசாரணையை நீதிபதிகள் இன்றைக்கு தள்ளி வைத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் வரையில், அங்கீகாரமற்ற வீட்டு மனைகளைப் பதிவு செய்ய மீண்டும் இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கில் பத்திர பதிவு செய்வதற்கு இடைக்காலமாக வழங்கப்பட்டிருந்த தளர்வும் ரத்து செய்யப்படுகிறது.
நன்றி: தி இந்து தமிழ்
இது நீதிபதிகளின் சர்வாதிகார போக்கு. தடி எடுத்தவன் தண்டல்காரனா ? இடைக்கால தளர்வை ரத்து செய்தது முழுக்க தவறான பொறுப்பற்ற தீர்ப்பு. தேவையற்றது. புதிய மனைகளுக்கான தடை நியாயமானது. அரசு வரையறுக்கும் வரை தொடரலாம். ஆனால் பழைய மனைகளுக்கு தடை செய்தது பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுப்போல் உள்ளது. நடுத்தர மக்கள் தங்கள் தேவையான திருமண .. படிப்புக்கு விற்கமுடியாது., தமிழகத்தில் தினமும் அனுபவித்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு தவறான தீர்ப்பு.
ReplyDelete