 |
அதிரை பாருக் |
அதிரை நியூஸ்: செப். 30
சமீப காலமாக அரசை மட்டுமன்றி மக்களையும் வெகுவாக மிரட்டிக் கொண்டிருக்கும் நோய்களில் டெங்கு காய்ச்சல் (Dengue fever) தமிழகத்தின் பெரும்பான்மையான ஊர்களில் முதலிடத்திற்கு வந்துள்ளது.இந்த நிலையில் சில நாட்களாக எனக்கு உதித்த சில கருத்துக்களை அரசுக்கும் மக்களுக்கும் உடனடியாக தெரிவிக்கவேண்டி இந்த தகவல்களை வெளியிடுகின்றேன்.
இதை ஏற்றுக்கொள்வதும் சரிப்பட்டு வராது என விட்டுவிடுவதும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. நான் யாரையும் இந்த விஷயத்தில் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. எந்த ஒரு விஷயத்தையும் ஆராய்ச்சி மனப்பான்மையுடன், ஆன்மீக சிந்தனையுடன் கூர்ந்து கவனிக்கும் போது மட்டும் தான் முடிவு காண முடியும்.
தமிழகத்தில் 7000 பேர்களுக்கு டெங்கு பாதிப்பு எனவும் 8000 பேர்களுக்கு பாதிப்பு எனவும் நிலைமை விரைவில் சீரடையும் எனவும் பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அரசு மருத்துவமனைகளில் இதற்கான சரியான சிகிச்சை முறைகள் சிறப்பாக உள்ளதாக அரசு தரப்பில் பரிந்துரைக்கப்படுகின்றது. ஆனால் அரசு மருத்துவமனைகளில் இது போன்ற நோய்களுக்கு சிகிச்சை பெற்றும் பலன் இல்லாமல் மரணம் நிகழ்ந்ததாக தகவல்கள் வருகின்றன. இதே போல் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை செய்து கொண்ட பலர் இறந்துவிட்டதாகவும் அவ்வப்போது தொடர் செய்திகளாக வந்துகொண்டிருப்பது. அரசையும் மக்களையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
மர்ம காய்ச்சல்:
கொசுவால் பரவுகிறது, எலியால் பரவுகிறது,பன்றிகளால் பரவுகிறது என பல்வேறு பொதுவான,புரியாத காரணங்கள் கூறப்பட்டாலும் மர்ம காய்ச்சல் என்பதன் பொருள் என்ன? என்ன காரணம் என்பது தெரியாத காரணத்தால் இதுபோன்ற சில காய்ச்சலுக்கு மர்ம காய்ச்சல் என்று விளக்கம் கூறப்படுகின்றது.
சூரத்தில் (Surat- Gujarat) 1994 ல் பிளேக் (plague) எனும் கொடிய கொள்ளை நோய் பரவி மக்களை அச்சுறுத்தியதை யாராலும் மறக்க முடியாது.அந்த நேரத்தில் பம்பாயில் செயல்பட்ட பல்வேறு வெளிநாட்டு தூதரகங்களும், கான்சுலேட்களும் (Consulates) உடனடியாக மூடப்பட்டதும் யாவரும் அறிந்த ஒன்று. இதனால் பலரது விசாக்கள் காலாவதியானது.இந்த நோய்க்கு எலியே காரணம் எனக்கூறி நாட்டில் பல பகுதிகளிலும் எலிகள் கொல்லப்பட்டன. அப்போது இந்த பிளேக் நோய்க்கும் எலிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நான் பலரிடமும் கூறியது எனக்கு ஞாபகம் உள்ளது.அந்த நோய் கிருமி தனியாக அடைக்கப்பட்டு பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது அப்போது நான் சொன்னது இந்த நோய்க்கும் எலிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்ற செய்தி அங்கிருந்து ரிசல்ட்டாக வரும் என்பதுதான். சில வாரங்கள் கழித்து இந்த செய்திதான் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு பதிலாக தெரிவிக்கப்பட்டது. அதாவது சூரத்தில் பரவிய பிளேக் நோய்க்கும் எலிகளுக்கும் தொடர்பில்லை என்றும் என்ன காரணம் என்று தெரியவில்லை என்பதுதான் அந்த பதிலாக இருந்தது.அந்த நோய் இறைவனின் கோபப்பார்வையால் மனிதர்கள் மீது ஏவப்பட்ட ஒன்று.அது போல் தற்போது தமிழகத்தை மிரட்டிக்கொண்டிருக்கும் பல்வேறு காய்ச்சலுக்கும் அதுபோன்ற கோபப்பார்வையே பிரதான காரணம் என்பதை அரசும் மக்களும் விளங்கிக்கொள்ள வேண்டும். என்னென்ன காரணங்கள் என்பதெல்லாம் மக்களுக்கும் அரசுக்கும் தெரியத்தான் செய்யும்.
சவூதி அரேபியா (Saudi Arabia) போன்ற நாடுகளின் இது போன்ற நோய்களை நாம் கேள்விப்பட்டதே கிடையாது. அங்கேயும் குப்பை கூளங்கள் இல்லாமல் இல்லை ஆனால் அங்கே சட்டம் சட்டமாக உள்ளது.எந்த ஒரு குற்றவாளியும் எந்த காரணத்திற்காகவும் எந்த காலத்திலும் தப்பிக்க முடியாது. மன்னர் குடும்பத்தவர்கள் குற்றம் புரிந்தாலும் அவர்களுக்கும் மற்றவர்களுக்கு உண்டான அதே தண்டனைகளே வழங்கப்படுகின்றது.
1980 முதல் 1986 வரை சவூதி அரேபியாவில் பணியிலிருந்த நான் அங்கே குற்றவாளிகளுக்கு நிறைவேற்றப்படும் சில தண்டனைகளை நேரில் பார்த்திருக்கின்றேன்.
சில சிறு குற்றங்களுக்கு கசையடி (Caning எனும் பிரம்படி) கொடுப்பதையும் கொடூர குற்றங்களுக்கு தலை வெட்டும் (Beheading) மரண தண்டனையும் நேரில் கண்டதை இங்கே சுருக்கமாக கூற விரும்புகின்றேன்.
ஒரு குற்றவாளிக்கு 100 கசையடி என்ற தண்டனையை ஒரே நேரத்தில் நிறைவேற்றுவதில்லை அதை பிரித்து சில தவணைகளாக (2 அல்லது 4 முறை) தண்டனையை நிறைவேற்றுவார்கள். வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு பிறகு அந்த பள்ளியின் வெளியே நீளமான ஒரு மரத்தின் அருகே காவல்துறை வேன் (கருப்பு நிறம்) வந்து நிற்கும் இமாம் வெளியே வந்த பிறகு செய்த குற்றத்திற்கான தண்டனை விவரத்தை அவர் ஒரு சில நிமிடங்கள் வாசிப்பார்.அதன் பின் அந்த மரத்தோடு குற்றவாளியை நிற்க வைத்து ஒரு காவலர் அவரது இருகைகளையும் இறுக பற்றிக்கொள்வார். இன்னொரு காவலாளி அறிவிக்கப்பட்ட தண்டனையில் ஒரு பகுதியை இடைவெளி விடாமல் பிடரிக்கு கீழ் இருந்து குதிகால் வரை அடிப்பதை பார்த்திருக்கிறேன். குற்றவாளி வழக்கமான உடை அணிய தடையில்லை. சிலர் அந்த தண்டனையின் போது சப்தமிடாமல் இருப்பதையும் சிலர் வலியால் அலறுவதையும் காணலாம். மீதியுள்ள பிரம்படியை இன்னொரு வெள்ளிக்கிழமையை கூறி வேறு இடத்தில் அந்த தண்டனையை நிறைவேற்றுவார்கள். இந்த இடைவெளியில் தண்டனை பெற்ற குற்றவாளிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.
கொலை போன்ற கொடுங்குற்றங்களுக்கு தலை வெட்டும் தண்டனையை பல்வேறு நாடுகளும் நிறுத்தக்கோரியும் முடியாது என சவூதி அரசு திட்டவட்டமாக ஏற்கனவே கூறிவிட்டது. அதில் அவர்கள் எந்த காலத்திலும் எந்த மாறுதலையும் செய்யப்போவதில்லை. காரணம் கடுமையான தண்டனைகளால் தான் சர்வதேச அளவில் குற்றங்கள் குறைந்த நாடுகளின் சவூதி அரேபியா முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. தமாமில் (Dammam) உள்ள தனியார் வங்கி ஒன்றில் (Al-Rajhi Bank) பணத்தை கொள்ளையடித்துவிட்டு அங்கு பணியிலிருந்த ஊழியர் இருவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்ப முயன்ற பிலிப்பைன்ஸ் (Philippines) நாட்டுக்காரர் ஒருவரை ( 30 வயதுக்குகீழ் ) சவூதி போலிஸ் துரிதமாக செயல்பட்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. அதன் பிறகு காவல் அதிகாரிகள் முன்னிலையில் அந்த குற்றவாளியின் பேட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அவரது மரண தண்டனை தமாம் பெரிய ஜூம்மா பள்ளியில் ஒரு வெள்ளிக்கிழமையன்று நிறைவேற்றப்பட்டது.
வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு முன் குற்றவாளியுடன் காவல்துறை வேன் (கருப்பு நிறம்) வந்து நின்றது. தவிர சுற்றுவட்டாரத்தில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகளின் வாகனங்களும் நாலாபுறமும் வந்து நின்றன.தீயணைப்பு வாகனம் மற்றும் தண்ணீர் வாகனமும் வந்து நின்றன. அன்று பகல் தொழுகை முடிந்ததும் இமாம் வெளியே வந்து நின்று சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கான மரண தண்டனை பற்றி ஒரு சில நிமிடங்கள் வாசித்தார்.அதன் பிறகு கருப்பு உடை அணிந்த குற்றவாளியை வேனிலிருந்து இறக்கி சாலையில் நடுவில் மண்டியிட்டு அமரவைத்தனர் உடன் தயாராக இருந்த ஒருவர் தன்னுடைய வாளால் குற்றவாளியின் தலையை வெட்ட அது தனியாக கிழே விழுந்தது. அவரது உடலையும் தலையையும் எடுத்து தயாராக இருந்த மருத்துவ வாகனத்தில் எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரியை நோக்கி சென்றுவிட்டனர். நான்கு வழிகளிலும் உள்ள ரோட்டிலும், மாடிகளிலும் கூடியிருந்த மக்கள் அதை பார்த்ததுடன் வழக்கம் போல் தண்டனை நிறைவேற்றியதும் அல்லாஹ் அக்பர் (இறைவன் பெரியவன்) என்று உரக்க முழக்கமிட்டனர். ரோட்டில் சிந்தியிருந்த இரத்தத்தை தண்ணீரை பீச்சியடித்து சுத்தம் செய்துவிட்டு அதன் பிறகு அந்த இடத்தில் மணலை கொட்டுவதை காண முடிந்தது. அவரது உடல் அவரது சொந்த நாட்டிற்கே அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை நான் நேரில் கண்டதால் அதை இங்கே கூறியுள்ளேன்.அதன் பிறகு இது போன்ற தண்டனைகளை நேரில் காண்பதற்கு நான் சென்றது கிடையாது.
நாள்தோறும் பெருகிவரும் கொலை, கொள்ளைமற்றும் பெண்களுக்கு எதிரான வரம்புமீறிய பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த அரபு நாடுகளில் உள்ள கடும் சட்டங்களை இந்தியாவில் அமல் படுத்த வேண்டும் என்பதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மக்களும் கூறுவதைக் காண முடிகிறது. ஆனால் ஏதோ சில காரணங்களுக்காக அந்த தண்டனைகளை நம்முடைய நிர்வாக தலைவர்கள் அமல்படுத்த தடையாக உள்ளனர்.
டெங்கு போன்ற சில வகை காய்ச்சலால் தமிழகத்தில் 80 பேர் இறந்துவிட்டதாக ஒரு செய்தி வருகிறது. இல்லை 400 பேர் இறத்துவிட்டதாக இன்னொரு செய்தி வருகிறது. அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற சிலரும் சிகிச்சை பலனின்றி மரணித்துவிட்டதாகவும் தினசரி செய்திகள் வருகின்றன. இதை கட்டுப்படுத்த தடுப்பூசி எதுவும் இல்லை என்பதாகவும் அரசு சுகாதாரத்துறை சார்பாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் காய்ச்சலுக்கு சரியாக சிகிச்சையளிக்கவில்லை அதனால் இறந்துவிட்டார்கள் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. திடீரென பல ஊர்களிலும் பரவிக் கொண்டிரும்க்கும் இந்த காய்ச்சலில் இருந்து குணம் பெற,பாதுகாப்பு பெற மருந்து மாத்திரை இல்லாத ஒன்றை அரசும் மக்களும் வேண்டுதலுடன் இறைநம்பிக்கையுடன் செயல்படுத்த விரும்பினால் அதை உடனடியாக தமிழகம்முழுவதிலோ அல்லது முதலில் சில ஊர்களிலோ செய்யலாம் அதில் நிச்சயம் பலன் இருக்கும் என்று கருதியே இதை சொல்கின்றேன். இதை கட்டாயப்படுத்த நான் விரும்பவில்லை.
காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்ட தெருக்களில் ஆடு அல்லது மாடு ஒன்றை பலியிட வேண்டும் (உடல் ஊனம் இல்லாத). 50 வீடுகள் உள்ள ஒரு பகுதியில் ஆளுக்கு 50 ரூபாய் கொடுத்தாலே ஒரு ஆடு வாங்கி பலியிட முடியும். மிகக் கூடுதலான விலையில் ஆடு அல்லது மாடுகளை (காளை) வாங்க வேண்டிய அவசியம் இல்லை. சில நேரம் வசதியுள்ள ஒரு தனி நபரே அவர் வசிக்கக்கூடிய தெருவில் இதற்கான செலவை அவரே ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை கூட உருவாகும். எனவே மற்றவர்கள் இந்த செலவைப்பற்றி கவலைப்பட வேண்டியத்தில்லை. ஒரு தனி நபரோ அல்லது பலரும் கூட்டாகவோ இந்த செலவை ஏற்றுக்கொண்டாலும் பலன் எல்லோருக்குமானதுதான். ஆடு மாடுகள் பலியிடுவதற்கான செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என நான் வற்புறுத்த முடியாது. பொதுவாக இது போன்ற சோதனையான காலக்கட்டங்களில் ஆடு மாடுகளை பலியிடுதல் என்பது நாட்டில் ஏராளமான கிராமங்களில் இன்னமும் நடைமுறையில் உள்ளது. இது தவறு என்று அரசோ, அரசியல் கட்சிகளோ அல்லது நீதிமன்றங்களோ கூற முடியாது. காரணம் இது மக்களின் நம்பிக்கை அடிப்படையிலானது. ஏதோ ஒரு சோதனை ஏதோ சில காரணங்களுக்காக மக்கள் மீது இறங்கியுள்ளது. அதிலிருந்து மீளவும் பாதுகாப்பு பெறவும் இப்போதைக்கு இதுதான் சரியான தீர்வாக இருக்கும். எனக்கருதியே இதை நான் எல்லோருக்கும் தெரிவிக்கின்றேன்.
அதிகாலை 5 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாக பலிகொடுக்க வேண்டும். சரியான மருந்து மாத்திரைகளும் இல்லை, தடுப்பூசிகளும் இல்லை.இந்த காய்ச்சலால் பல ஊர்களிலும் சிறுவர் முதல் பெரியவர் வரை பலியாகும் செய்தி தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. மரணம் என்பதை விட பலி என்ற வார்த்தையே ஊடகங்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. அந்த பலிகளை தடுக்க வேண்டியே இந்த பலிகொடுக்கும் முறையை நான் தெரிவிக்கின்றேன். இதனுடைய சூட்சுமங்கள் எல்லாம் ஆன்மீக சிந்தனை மற்றும் ஆராய்ச்சி எண்ணம் கொண்டவர்களுக்குத்தான் புரிய வரும். தமிழகத்தில் இதுவரை எவருமே சொல்லாத ஒரு புதிய செய்தியாக இது உள்ளதே என்று விவாதம் செய்வதை விட இதையும் நாம் செய்தால் என்ன என்ற முடிவுக்கு வர வேண்டும்.
மக்கள் எல்லாவிதமான நோய்களை விட்டும் குணமடைய பாதுகாப்பு பெற மதங்களை கடந்து ஒட்டு மொத்தமாக நாம் இறைவனை பிரார்த்திப்போம். பலி கொடுத்த பின்பு அதன் மாமிசத்தை கொஞ்சம் கொஞ்சமாக பலருக்கும் பங்கிட்டு கொடுத்துவிடலாம். நாமும் அதை சாப்பிடலாம் அதில் எந்த தவறும் இல்லை.
நன்றி !
ஏ. பாருக்,
'அரசியல் விமர்சகர்'
68 காலியார் தெரு,
அதிராம்பட்டினம் - 614 701.
பட்டுக்கோட்டை தாலுகா,
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு.