.

Pages

Thursday, October 31, 2019

இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறன் போட்டியில் இமாம் ஷாஃபி மெட்ரிக்.பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்!

அதிராம்பட்டினம், அக்.31
பள்ளி மாணவர்களுக்கு இடையேயான இஸ்லாமிய மார்க்க அறிவுத்திறன் போட்டி அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இப்ன் அல் ஹைதம் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளி துணைத் தாளாளர் எம்.எஸ் முகமது ஆஜம் தலைமை வகித்தார். போட்டி நடுவர்களாக, மவ்லவி கலீல், மவ்லவி ஹுசைன், மவ்லவி ஆஷிக், மவ்லவி பரக்கத்துல்லா, மவ்லவி அனஸ், ஹாபிஸ் அப்பாஸ், மவ்லவி நவாஸ், ஹாபில் நூர் முகமது ஆகியோர் இருந்தனர்.

பள்ளி மாணவர்களுக்கு இடையேயான பாங்கு சொல்தல், குர்ஆன் மனனம், கிராஅத் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, முத்துப்பேட்டை பிரிலியண்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, புதுப்பட்டினம் அபு மெட்ரிகுலேஷன் பள்ளி, கட்டுமாவாடி அல்-ஹுதா மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 38 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

பாங்கு சொல்தல் போட்டியில், இசட்.முஹம்மது (அல்-ஹுதா), எம். ஐய. அப்துர் ரஸ்ஸாக் (காதிர் முகைதீன்), எம்.முஹம்மது சலீம் (இமாம் ஷாஃபி) முதல் 3 இடங்களையும், குர்ஆன் மனனப் போட்டியில், எம்.ஐ. சஹ்ல் (இமாம் ஷாஃபி), எச்.முஹம்மத் இஸ்ஹாக் (இமாம் ஷாஃபி) ஆகியோர் முதல் 2 இடங்களையும் எம்.எஸ்.முஹம்மது சமீஹ் (இமாம் ஷாஃபி), ஏ.ஹாரூன் ரஷீத் (அல்-ஹுதா), ஆர்.ஷேக் ஹகீம் (அபு மெட்ரிக்) ஆகியோர் மூன்றாமிடத்தையும், கிராத் போட்டியில், எம்.ஷர்ஃபுத்தீன் (இமாம் ஷாஃபி), ஏ.முஹம்மது ஜெய்த் (இமாம் ஷாஃபி) ஆகியோர் முதல் இரண்டு இடங்களையும், எம்.அஹ்மத் ஃபாயிஸ் (பிரிலியண்ட்) ஜெ.முஹம்மத் ஷாஃபீக் (அல்-ஹுதா) ஆகியோர் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட மவ்லவி. இப்ராஹீம், மவ்லவி. அப்துல் ஹாதி முப்தி ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள், சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர். மேலும், போட்டிகளில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன.

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு!

தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (31.10.2019) நடைபெற்றது.

“இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமார உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள்பாதுகாப்பினை உறுதிசெய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன் " என தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாசிக்க, அனைவரும் பின்தொடர்ந்து உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) முத்து மீனாட்சி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதிரையில் அதிகரித்து வரும் நாய் தொல்லையை கட்டுப்படுத்தக்கோரி திமுகவினர் மனு!

அதிராம்பட்டினம், அக். 31
அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் அதிகரித்துவரும் நாய்களை கட்டுப்படுத்தக் கோரி திமுக சார்பில் இன்று காலை வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் அதிகரித்து வரும் நாய்களையும், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளையும் கட்டுப்படுத்தக்கோரி, திமுக, அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம. குணசேகரன் தலைமையில், அக்கட்சியினர் அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல்.ரமேசிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட பேரூராட்சி செயல் அலுவலர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

கோரிக்கை மனுவில் கூறியிருப்பது:

 

அதிரையில் அதிகரித்து வரும் நாய் தொல்லையை கட்டுப்படுத்தக்கோரி AMS மனு!

அதிராம்பட்டினம், அக்.31
அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் அதிகரித்துவரும் நாய்களை கட்டுப்படுத்தக் கோரி அதிரை மேம்பாடு சங்கமம் (AMS) சார்பில், இன்று காலை வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் அதிகரித்து வரும் நாய்களை கட்டுப்படுத்தக்கோரி, அதிரை மேம்பாடு சங்கமம் சார்பில், டி.அப்துல் ஜப்பார் அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசனிடம் கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

கோரிக்கை மனுவில் கூறியிருப்பது;

அதிராம்பட்டினத்தில் 2-வது நாளாக தொடர் மழை: அதிகபட்சமாக 56.80 மி.மீ பதிவு!

அதிராம்பட்டினம், அக்.31
தஞ்சாவூர் மாவட்டத்தில், அதிராம்பட்டினத்தில் 2-வது நாளாக தொடர் மழை பெய்தது. மாவட்டத்தில், அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 56.80 மி.மீ. மழை பதிவாகியது.

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று புதன்கிழமை காலை முதல் அவ்வப்போது தொடங்கிய மழை, இன்று (அக்.31) வியாழக்கிழமை வரை நீடித்தது. இதனால், அதிராம்பட்டினத்தின் தாழ்வானப் பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்படுகின்றன. வானம் மேகம் மூட்டத்துடன் காட்சி தருவதால், இப்பகுதியில், மீண்டும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):
அதிராம்பட்டினம் 56.80, பாபநாசம் 26.80 திருவையாறு 27, கும்பகோணம் 18, திருவிடைமருதூர் 13.40, மஞ்சளாறு 30, திருக்காட்டுப்பள்ளி 42, வல்லம் 44, கிராண்ட் அணைகட் 14.40, லோவர் அணைகட் 14.40, பூதலூர் 49.40, வெட்டிக்காடு 46.80, நெய்வாசல் தென்பாதி 22.4, தஞ்சாவூர் 14, குருங்குளம் 53, மஞ்சளாறு 25, பட்டுக்கோட்டை 38.60, ஒரத்தநாடு 10.24, மதுக்கூர் 55.4, அய்யம்பேட்டை 15,  ஈச்சன்விடுதி 40.20,  பேராவூரணி 43.60
 

தஞ்சையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 01-11-2019 மற்றும் 08-11-2019, 15-11-2019, 22-11-2019, 29-11-2019 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நாளை 01-11-2019 மற்றும் 08-11-2019, 15-11-2019, 22-11-2019, 29-11-2019 ஆகிய தேதியில் வெள்ளிக்கிழமைகளில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் மூலம் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வழங்கப்பட உள்ளன. இந்த முகாமில் 10, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிப்ளமோ இன் யோகா, மற்றும் இளநிலை பட்டம், ஓட்டுநர், தீ பாதுகாப்பு ஆகிய கல்வி தகுதிகளில் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். (வயது வரம்பு 18 முதல் 35-க்குள்)

இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் (டி.சி, மதிப்பெண் பட்டியல், குடும்ப அட்டை, ஆதார் கார்டு) மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொள்ள வேண்டும்.

இந்த தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் இதனை தவறவிடாமல் முகாம் நடைபெறும் அன்று காலை 10 மணிக்கு தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆஜராகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதற்கான பயணப்படி எதுவும் வழங்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

அதிரையில் இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி: பங்கேற்க அழைப்பு!

மவ்லவி ஹுசைன் மன்பஈ
அதிராம்பட்டினம், அக்.31
அதிரையில் ADT சார்பில், நாளை (நவ.01) வெள்ளிக்கிழமை நடைபெறும் மவ்லவி. ஹுசைன் மன்பஈ அவர்களின் இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.

அதிராம்பட்டினத்தில் நாளை 01.11.2019 - வெள்ளிக்கிழமை அன்று மவ்லவி. ஹுசைன் மன்பஈ அவர்கள் கீழ்க்காணும் மார்க்க விளக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

1. சி.எம்.பி லேன் ஏ.எல்.ஸ்கூல் பள்ளிவாசலில் (மஸ்ஜித் இஹ்சான்) ஜும்ஆ குத்பா உரை.

தலைப்பு: 
நாமும் சமூகக் கடமையும்

பள்ளியில் பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.

ஜும்ஆ பாங்கு மிகச்சரியாக 12.30 மணிக்கு எனவே அதானுக்கு முன்பே அனைவரும் மஸ்ஜிதிற்குள் வந்து அமரவும்.

2. ஜும்ஆ தொழுகைக்குப் பின் உடன் ஏ.எல். மஸ்ஜிதில் மவ்லவி. ஹுசைன் மன்பஈ அவர்களுடன் ஆண்களுக்கான சிறப்பு கலந்துரையாடல்

3. மாலை 6 மணியளவில் பிலால் நகர் மர்கஸில் ஆண்கள் மற்றும் பெண்களுக்குமான சிறப்பு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி.

தலைப்பு: 
இஸ்லாத்தின் பார்வையில் வெற்றியும் தோல்வியும்

கவனிக்கவும்...
பிலால் நகரில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி இருப்பதாலும் சாலைகள் சேதமடைந்திருப்பதாலும் ECR சாலை வழியாக வருகை தருவதே சிறந்தது.

அனைவரும் வருகை தாரீர் என அன்போடு அழைக்கிறது

அதிரை தாருத் தவ்ஹீத் - ADT
அதிராம்பட்டினம்

Wednesday, October 30, 2019

பட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் நாள் கூட்டம் (படங்கள்)

பட்டுக்கோட்டை, அக்.30
பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் நாள் கூட்டம் துணை ஆட்சியா் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் டி.ரவீந்திரன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், மாதந்தோறும் குறிப்பிட்ட நாளில் மாற்றுத் திறனாளிகள் குறைதீா் நாள் கூட்டம் நடத்த வேண்டும். அந்த கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை மற்றும் இதர சலுகைகளுக்காக மருத்துவச் சான்று வழங்கும் அரசு மருத்துவா்கள் உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் குறித்து முழுமையான கணக்கெடுப்பு நடத்தி, தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகள்

அனைவருக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், அரசு மற்றும் தனியாா் துறை அலுவலகங்களில் கைப்பிடியுடன் கூடிய சாய்வுத்தளம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்த கோரிக்கை மனுவை துணை ஆட்சியரிடம் அளித்தனா்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான நலச் சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவா் பஹாத் முகமது, பேராவூரணி ஒன்றியத் தலைவா் வின்சென்ட் ஜெயராஜ், சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளா் ஜலீல் மைதீன், பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளா் கே. கிருஷ்ணமூா்த்தி மற்றும் பலா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.
 
 
 
 

Tuesday, October 29, 2019

தஞ்சை மாவட்டத்தில் நவ.06-ந் தேதி உள்ளுர் விடுமுறை அறிவிப்பு!

இராசராச சோழனின் 1034-வது சதய விழாவினை முன்னிட்டு வருகின்ற 06.11.2019 அன்று உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், இராசராச சோழனின் 1034-வது சதய விழாவினை முன்னிட்டு வருகின்ற 06.11.2019 (புதன்கிழமை) அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் உள்ளுர் விடுமுறை அளித்து அறிவிக்கப்படுகிறது.

இதற்கு பதிலாக, 23.11.2019 அன்று சனிக்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அணைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம் 1881 ன் கீழ் வராது என்பதால், தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் 06-11-2019 அன்று குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. என இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

மரண அறிவிப்பு ~ ஷாஜஹான் (வயது 70)

அதிரை நியூஸ்: அக்.29
அதிராம்பட்டினம், புதுத்தெரு தென்புறம் மருங்கப்பா வீட்டைச் சேர்ந்த மர்ஹும் ஹாபிஸ் அப்துல் மஜித் அவர்களின் மகனும், மர்ஹும் ரஹ்மத்துல்லா, அப்துல் மாலிக் ஆகியோரின் சகோதரரும், மஜீத்கான்,  முகமது உசேன், நிஜாமுதீன் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஷாஜஹான் (வயது 70) அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (29-10-2019) பகல் லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Monday, October 28, 2019

சுகமாய் எழுந்து வா சுர்ஜித்!

அன்னையின் கருவறையில்
அனுபவித்த கதகதப்பை
அனுபவிக்கவே மீண்டும்
ஆழ்குழாய் வழியாக
பூமியன் கதகதப்பைக் காண
புதைந்தாயோ குழந்தையே சுர்ஜித்!

சட்டங்களும் விதிகளும்
சரியில்லை என்பதை
சரியாக உணரவேண்டும் மன்பதை
பட்டங்கள் பெற்றவர்ட்குப்
பாடங்களும் பயிற்சிகளும்
பள்ளத்திலிருந்துச் சொல்கின்றாயோ?
உள்ளங்கள் வேண்டுகின்றன
பள்ளங்கள் தோண்டுகின்றனர்
உறங்காமல் உண்ணாமல் இருக்கின்றனர்
இறங்கிய வேகத்தில்
எழுந்து வா எழுச்சித் தர வா வா

மதங்களால் பிரிந்தவர்களை
மனங்களால் கூட்டினாய்
நிதமுனக்காகப் பிரார்த்தனை
நிகழவே மாற்றினாய்

சிரியாவில் இதுபோல்
சிக்கியப் பாலகனும்
அரிதாய்க் கிடைத்தானாம்
அதுபோல் மீண்டு வா
அதுவரைத் தோணாடுவோம் பார்!

"பாதாளக் குழிகளை மூடுக"
பாடம் நடத்துகின்றாயோ
பாலகனே நீதான் எங்கள்
பாட வகுப்பாசிரியரானாயோ?

ஆசிரியரை விடவும்
ஆகச் சிறந்த
தியாகமடா நீ செய்தது!
தெளிவூட்டச் சென்றது!!

தோண்டுவோம் தோண்டுவோம்
தோளில் உன்னை வீரர்கள் சுமக்கும் வரை
வேண்டுவோம் வேண்டுவோம்
வேதனை தீர்க்க இறையருள் கிடைக்கும் வரை
வா வா குழந்தாய்
வாரியணைக்க
வாசலிலே உன் தாய்!

கவிதை ஆக்கம்: 
"கவியன்பன் கலாம்" 
அதிரை

துபையில் விருது பெற்ற தமிழக மாணவர்!

துபையில் வளர்ந்து வரும் நட்சத்திர விருதை தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த சிறப்பு மாணவர் பஹீம் பெற்றார். துபையில் நடந்த நிகழ்ச்சியில் 25.10.2019 வெள்ளிக்கிழமை இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

பஹீம் ஐயாயிரம் வருடங்கள் வரை எந்த தேதியை கூறினாலும் அதன் கிழமையை தெரிவிப்பார். மேலும் உலக நாடுகளின் தலைநகர், தற்போதைய நேரம், பணம் உள்ளிட்ட விபரங்களை தெரிவிப்பார்.

Sunday, October 27, 2019

தீபாவளி வாழ்த்து!

தீபாவளி வாழ்த்து!
(கட்டளைக் கலித்துறை)

பெருகி நிலைத்தாகப் பேரிண்பம் காணப் பிறவியிலே
இரவு பகலாக இனிப்பும் பலகாரம் இல்லமதி...
உறவு மகிழ்ந்தாட வுண்டாக்கித் தந்திட வுள்ளமோயா
திருகி துருவி திளைக்குந் தீபாத் திருவிழாவில்

தனித்து நரகத்தீ தன்னெண்ணம் நீங்கித் தனம்நிறைந்தே
இனிமை யிருப்பி லிதயந் திழைத்தே யியங்கிடத்தான்
மனித மனத்தில் மயக்கும் அறிவை யழித்தொழிக்கப்
புனிதச் செயலாய்ப் பொசுக்கி வெடிப்பார் புவியினிலே !

நிலத்து நிலைக்க நிறைந்த உறவுகள் நிம்மதியில்
வளத்து வனப்பு வடிவில் அகத்திலும் வல்லமையிற்
பலத்தொற்று மைக்கொண்டு பல்லாண்டு வாழப் பகிர்ந்திடுமென்
உளத்துத் திடத்தில் உவந்தெம்மின்  வாழ்த்துகள் உங்களுக்கே !

ஷேக் அப்துல்லாஹ்,
எவர்கிரீன் கஸ்டமர் கேர்,
பொது இ-சேவை மையம்,
சாரா கல்யாண மண்டப வனிக வளாகம்,
அதிராம்பட்டினம்.

Saturday, October 26, 2019

மரண அறிவிப்பு ~ ஹாஜிமா சபுரா அம்மாள் (வயது 70)

அதிரை நியூஸ்: அக்.26
அதிராம்பட்டினம், நடுத்தெரு ஆம்பள காக்கா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் மு.அ. முஹம்மது புஹாரி அவர்களின் மகளும் ஹாஜி. ம.வா.செ. சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், ஓ. செய்யது பகுருதீன் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா சபுரா அம்மாள் (வயது 70) அவர்கள் நேற்று இரவு 11 மணியளவில் சி.எம்.பி லேன் ஏ.எல் பள்ளி எதிர்புறம் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (26-10-2019) காலை 10 மணியளவில் மரைக்காயர் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Friday, October 25, 2019

ஆற்று நீர் அதிகளவில் திறப்பு: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!

மேட்டூர் அணையிலிருந்து அதிகளவில் தண்ணீர்; திறக்கப்படுவதால் தஞ்சாவூர் மாவட்டம் காவிரி, கொள்ளிடம் மற்றும் கிளை ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் பெய்து வரும் மழை காரணமாக, சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் மற்றும் அதன் கிளை ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி நீர் பாயும் ஆறுகள், குளங்கள் மற்றும் நீர்நிலை பகுதிகளிலும், தண்ணீர் வரத்து அதிகமாக உள்ள அபாயகரமான இடங்களிலும் பொது மக்கள்  குளித்தல், நீச்சல் அடித்தல், மீன் பிடித்தல், தன் புகைப்படம் (Selfie) எடுத்தல் மற்றும் இதர பொழுது போக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.  ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் மற்றும் நீர் நிலைகளில்  அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளதால், நீர்நிலை அருகாமையில் குழந்தைகள் விளையாட செல்லாமல் பெற்றோர்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களது கால்நடைகளை நீர்;நிலைகள் வழியாக அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். நீர்;நிலைகளில் உள்ள பள்ளங்களை முன்னதாகவே தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையோடு பயன்படுத்த வேண்டும்.  தண்ணீர் திறந்து விடப்படும் கன அடி அளவு குறித்த விவரங்களை அவ்வப்போது ஊடகங்கள் வாயிலாக தெரிந்து கொள்ள வேண்டும். கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு  தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை செய்ய வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார். 

விபத்தில்லா தீபாவளி கொண்டாட மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது;
தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும்.  இத்திருநாளில் விளக்குகளை வரிசையாக வைத்து  (தீபாவளி = தீபம் + ஆவளி, தீபம் - விளக்கு ஒளி, ஆவளி - வரிசை) இறைவனை வழிபடுவது மரபு.  இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகாலையில் எண்ணெய் வைத்து குளித்து விட்டு இறைவனை விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரித்து வணங்குவதுடன், பட்டாசுகளை வெடித்தும் மகிழ்வார்கள்.

அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பெருமளவில் மாசுபடுகின்றன.   பட்டாசு வெடிப்பதால்  எழும் அதிகப்படியான ஒலி மற்றும் மாசினால், மக்கள் குறிப்பாக சிறு குழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். 

பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டது. இருந்தபோதிலும் தமிழ்நாட்டில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களின் நலனையும், நமது கலாச்சாரத்தையும் பாதுகாப்பதற்காக, நமது தமிழ்நாடு அரசு இவ்வழக்கில் தன்னையும் ஒரு எதிர்வாதியாக இணைத்துக் கொண்டது.

இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 23.10.2018 ஆம் நாளிட்ட ஆணையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து, விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது.

மேலும், உச்ச நீதிமன்றம் தனது ஆணையில், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளிகளில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனால் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் போதிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமை படைகள்,       
பசுமை மன்றங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை செயலர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் துறை செயலர், காவல்துறை இயக்குநர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சுற்றுச்சூழல் துறை இயக்குநர், மாநகராட்சி ஆணையர்கள் ஆகிய துறைகளின் உயர் அதிகாரிகள் ஒத்துழைப்போடு அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அரசு அலுவலர்களைக் கொண்டு வெவ்வேறு குழுக்கள் அமைத்து உச்சநீதிமன்ற ஆணையின்படி நடவடிக்கை எடுக்கவும் அனைத்து  மாவட்ட ஆட்சியர்களையும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு, பொது மக்கள் கீழ்கண்டவற்றைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொது மக்கள் கடைபிடிக்க வேண்டியவை:
1. பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசு படுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

2. மாவட்ட நிர்வாகம் / உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு, அந்த அந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம்.

தவிர்க்க வேண்டியவை:
1. அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம்.

2. மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

3. குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

ஆகவே, பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அனைவருக்கும் இதயங்கனிந்த மாசற்ற தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணி!

அதிராம்பட்டினம் அக்.25
அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் அறிவுரையின் பேரில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் கார்த்திகேயன் மேற்பார்வையில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், மருத்துவமனை வளாகத்தை சுற்றிலும் வளர்ந்துள்ள முட்புதர், குப்பை, கழிவு பொருட்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.