மழையால் வெள்ளக்காடாக காட்சிதரும் பிலால் நகரில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ள ஜமாஅத் நிர்வாகம் சார்பில் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகர் பகுதியில், சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான மழைநீர்/கழிவு நீர் வடிகால் வசதி அறவே இல்லாததால், ஆண்டு தோறும் பெய்யும் மழையால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. பிரதான சாலைகள் முற்றிலும் சேதமடைந்து, சேரும் சகதியுமாகக் காட்சியளித்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மழைநீர் குடியிருப்புகளில் புகுந்து விடுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். இதனால், பிலால் நகரில் புதிதாக தார் சாலை, மழைநீர் / கழிவு நீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி இப்பகுதியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், இப்பகுதியில், இன்று (அக்.16) புதன்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையால், பிலால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழை காலங்களில் ஏற்படும் டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை சுகாதரப் பணிகள் மேற்கொள்ளவும், பிரதான சாலைகளில் ஆங்காங்கே தேங்கிக் காணப்படும் மழை நீர் மற்றும் குப்பைக் கழிவுகளை அகற்றவும், துர் நாற்றம் வீசும் பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் இடவும், கொசு மருந்து புகை அடிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிலால் நகர் ஜமாஅத் நிர்வாகம் சார்பில், முத்தவல்லி ஹாஜி எம்.எம்.ஏ அகமது கபீர், பிலால் நகர் ஜமாஅத் தலைவர் எஸ்.முகமது முகைதீன், பொருளாளர் எம்.நிஜாமுதீன், இணைச்செயலாளர் எம்.ஆர் கமாலுதீன், இஜாஸ் அகமது உள்ளிட்டோர் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்டு கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாகக் கூறினார்.
நல்லமுயற்சி இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் வெற்றி அடைய செய்வானகவும்
ReplyDelete