.

Pages

Wednesday, March 4, 2015

அதிரை ரயில் நிலையம்: ஒரு சிறப்பு பார்வை !

ரயில் பயணம் என்பது சுகமானது மட்டுமல்ல, மனதுக்கு மகிழ்ச்சியையும் உடலுக்கு புத்துணர்ச்சியையும் தரக்கூடியது. பயணக்கட்டணம் குறைவாக இருப்பதற்கு மாத்திரமல்லாமல் பாதுகாப்பான பயணமாக இருப்பதால் குழந்தைகள் முதல் முதியோர் வரை விரும்பி பயணிக்கின்றனர்.

அதிரை ரயில் நிலையத்திலிருந்து கடந்த 30-12-2006 முதல் காரைக்குடி - திருவாரூர் வழியாக சென்னை வரை சென்று கொண்டிருந்த 'கம்பன் எக்ஸ்பிரஸ்' ரயில் போக்குவரத்தால் அதிரை மற்றும் சுற்று வட்டார கிராம பகுதி மக்கள் மிகவும் மகிச்சியுடன் பயணித்து வந்தனர்.

அதிரை வரலாற்றை தற்போது எழுதி வரும் ஆர்வலர்கள் பெருமையுடன் கூறும்போது, '1927 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலத்தில் மாயவரம் முதல் காரைக்குடி வரை ஏற்படுத்தப்பட்ட வழி தடத்தை கொண்டு ஆரம்பிக்கப்பட்டதாகவும், இதன் பின்னர் பல்வேறு தொலை தூர ஊர்களுக்கு ரயில் போக்குவரத்து இருந்து வந்ததாகவும், இங்கிருந்து சென்னை மாநகருக்கு பயணம் செல்ல வர்த்தகர்களும், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வோரும் ( சபூராளிகள் )  இந்த ரயில் நிலையத்தை அதிகளவில் பயன்படுத்தி வந்துள்ளனர் என்றும், இந்த பகுதியில் உற்பத்தியாகும் மீன், இறால், நண்டு, கருவாடு, உப்பு போன்ற கடல் சார்ந்த பொருட்களும், தேங்காய், அரிசி போன்ற விவசாயப் பொருட்களும் அதிகளவில் வெளிமாநிலத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக குறிப்பிடுகின்றனர்.

பயணிகள் அமரும் வகையில் காலபோக்கில் ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டு, எந்நேரமும் பரபரப்பாக காணப்பட்ட நிலையத்தில் காலஞ்சென்ற ஐத்துரூஸ், அரக்கிடா போன்ற தாத்தாக்களின் குதிரைவண்டிகள் முதல், சோட்டா, பக்கடா போன்ற பேராண்டிகளின் ஆட்டோக்கள் வரை புழங்கிய இடமாகவும் இருந்து வந்தது.

கடந்த 18-10-2012 அன்று முதல் இந்த மீட்டர் கேஜ் பாதையில் சென்று வந்த ரயில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. தெற்கு ரயில்வேயின் மலைப்பாதையை தவிர அகலப்பாதையாக மாற்றப்படாமல் உள்ள கடைசி மீட்டர்கேஜ் பாதையில் செல்லும் கடைசி ரயில் என்ற பெருமையை  வண்டி எண் 56893 தட்டிச்சென்றது. அப்போது ஏற்பாடு செய்யப்பட்ட வழியனுப்பு விழாவில் அதிரை வாழ் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் என கலந்துகொண்டு பயணிகளுக்கு இனிப்பு வழங்கி இறுதி ரயிலை கனத்த இதயத்துடன் வழியனுப்பிவைத்தனர்.

இதையடுத்து அகல பாதை அமைப்பதற்காக மீட்டர் கேஜ் ரயில் பாதையில் உள்ள தண்டவாளங்கள் முழுவதும் பெயர்த்து எடுக்கப்பட்டன. இதன் பின்னர் அகல ரயில் பாதைக்கான எந்தவொரு பணிகளும் இதுநாள்வரையில் துவங்கவில்லை என்பது பொதுமக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒப்புதல் அளித்த திருவாரூர் - காரைக்குடி வரையிலான அகல ரயில் பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டு விடுமோ என்ற ஐயமும் தற்போது பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு பின்பு அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்கள் பல விரைவாக செயல்படுத்தி இருப்பதையும் குறிப்பிட்டு கூறுகின்றனர்.

ரயில் நிறுத்தப்பட்டதிலிருந்து ரயில் நிலையம் பராமரிப்பின்றி பாழடைந்தும், ஆள் நடமாட்டம் குறைந்தும் காணப்படுவதால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் புகலிடமாக இருந்து வருவதாக கூறுகின்றனர். குறிப்பாக இரயில்வே நிலைய வளாகப்பகுதியில் மது பாட்டில்கள், ஆணுறைகள், சீட்டுகட்டுகள் ஆங்காங்கே காணப்படுவதால் இந்த வழியே செல்லும் பொதுமக்கள் சிலர் சங்கடத்துகுள்ளாகி வருவதாகவும், இரவு நேரங்களில் ரயில் நிலையத்தை காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

அதிரை ரயில் நிலையம் கடற்கரையோர பகுதியாக இருப்பதால் இயற்கை சீற்றத்திலிருந்து பாதுகாக்கும் பொருட்டு புதிய ரயில் நிலையத்தை அமைக்க வேண்டும் என்பதும், தொலை தூரத்திற்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு தேவைப்படும் அனைத்து வசதிகளும் அமையபெற்றுள்ள ரயில் நிலையமாக உருவாக்க வேண்டும் என்பதும் அதிரையில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் தேவை:
அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான பயணிகள் பட்டுக்கோட்டை, தஞ்சை, மன்னார்குடி உள்ளிட்ட தொலைதூர பகுதிகளுக்கு சென்று டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டியுள்ளதால், தேவையற்ற அலைச்சலை சந்தித்து வருகின்றனர். எனவே அதிரையில் தலைமை தபால் நிலையம் அல்லது அதிரையின் பிரதான மத்திய பகுதியில் முன்பதிவு மையம் அமைக்க வேண்டும் என அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேபோல் அரசியல் சூழலால் கிடப்பில் போடப்பட்ட அகல ரயில் பாதைக்கான பணிகள் எவ்வித குறிக்கீடுகள் இன்றி குறிப்பிட்ட காலத்திற்குள் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்பது இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இந்த பணிகள் விரைந்து முடித்திட அரசியல் பிரமுகர்கள் - வர்த்தகர்கள் - சமூக ஆர்வலர்கள் ஒற்றுமையுடன் கைகோர்த்து ஒன்றாக செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.