தஞ்சை மாவட்டம் பேராவூரணி தாலுகா கடைமடை விவசாய பகுதியாகும்.பேராவூரணி பகுதியானது தொழில் வளர்ச்சியிலும்,கல்வி வளர்ச்சியிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது .இப்பகுதிக்கு நீதிமன்றம் ,அரசுக்கல்லூரி ,தொழில்நுட்ப கல்லூரி (பாலிடெக்னிக் ),தென்னை வணிக வளாகம் ,மற்றும் இப்பகுதியில் கல்வியறிவிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கிய மக்களுக்கு பயன்தரும் வண்ணம் வேலை வாய்ப்புகளை உருவாக்க கூடிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து பல வருடங்களாக வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பேராவூரணியில் அரசுக்கல்லூரி அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தார் .அதனை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவரும் ,நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கம் ,பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் அருண்பாண்டியன், அப்போதைய மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பாஸ்கரன் மற்றும் கல்வி துறை அதிகாரிகள் பேராவூரணி பகுதியில் பல்வேறு இடங்களை பார்வையிட்டு அண்ணாநகர் பகுதியில் கல்லூரிக்கான இடத்தை தேர்வு செய்தனர்.உடனடியாக கட்டிடம் கட்டும் வாய்ப்பு இல்லாததாலும் ,சம்பந்தப்பட்ட இடம் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்பதாலும் ,இடத்தை கையகப்படுத்தி உயர்கல்வி துறையிடம் ஒப்படைக்க தாமதமாகும் என்பதாலும் பட்டுக்கோட்டை சாலையில் ஆண்டவன் கோவில் என்ற இடத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதியில் தற்காலிகமாக இயங்கும் என அறிவிக்கப்பட்டது .இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 13 வெள்ளிக்கிழமை அன்று சென்னையிலிருந்து தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.பேராவூரணியில் சட்டப்பேரவை உறுப்பினர் அருண்பாண்டியன் உள்ளிட்ட உள்ளூர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர் .
இரண்டு கட்ட கலந்தாய்வு மூலம் பி.ஏ தமிழ் ,பி.ஏ.ஆங்கிலம் ,பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் ,பி.எஸ்சி கணிதம் ,பி.காம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் 250 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் தேர்வு செய்யப்பட்டனர் .தற்காலிகமாக பொறுப்பு முதல்வர் ,கண்காணிப்பாளர்,தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியிலிருந்து மாற்றுப்பணியில் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர் .பேராவூரணி பகுதி மக்களின் ஏகோபித்த வரவேற்பிற்கிடையே கல்லூரி செயல்படத்தொடங்கியது .
இருந்த நான்கைந்து அறைகளில் கல்லூரி வகுப்புகளும் ,ஒரு அறையில் முதல்வர் மற்றும் கல்லூரி அலுவலக அறையாகவும் செயல்பட்டது .கடந்த ஆண்டே 600 க்கும் மேற்பட்ட சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்பட்டு ,இட நெருக்கடி ,போதிய பேராசிரியர்கள் இல்லாமை மற்றும் அரசு அனுமதித்த மாணவர் சேர்க்கை இடங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு 250 மாணவ,மாணவியர்கள் மட்டுமே கல்லூரியில் சேர்க்கப்பட்டனர் .விண்ணப்பித்த மற்ற மாணவர்களில் வசதி படைத்த சிலர் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து விட பலரும் கல்லூரி செல்லாமல் படிப்பினை கைவிட்ட நிகழ்வுகளும் ஏற்பட்டது .
இந்நிலையில் ஓராண்டு பூர்த்தியான இச்சூழலில் நிகழாண்டில் ,ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேர்க்கை விண்ணப்பங்கள் பேராவூரணி அரசு கல்லூரிக்கு வரப்பெற்றுள்ளதாக தெரிகிறது .பலத்த வரவேற்பை பெற்று ,மேல்நிலை பள்ளி படிப்புடன் கல்வியை தொடரமுடியாத பலரும் வரப்பிரசாதமாக நினைத்த இக்கல்லூரியில் இவ்வாண்டும் சுமார் 300 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவர் என தெரிகிறது.மீதமுள்ள 700 க்கும் மேற்பட்ட ஏழை மாணவரின் கதி என்னவாகும் என தெரியவில்லை .இதில் நூற்றுக்கும் குறைவான மாணவர்கள் தனியார் கல்லூரியிலோ அல்லது காரைக்குடி ,புதுக்கோட்டை ,தஞ்சாவூர் பகுதிகளில் உள்ள அரசுக்கல்லூரிகளிலோ சேரலாம் .மற்றவர்களின் நிலை குறிப்பாக மாணவியரின் நிலை கேள்விக்குறியாக உள்ளது.வாய்ப்பு கிடைக்காத மாணவ,மாணவியர் கல்லூரி படிப்பை கை கழுவ நேரிடும் அவலநிலை உள்ளது .
இடநெருக்கடி,சுகாதார கேடு
கடந்த ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர்கள் 250 பேர் இருக்கும் நிலையில்,அவர்களும் இடநெருக்கடியில் தவிக்கும் சூழலில் ,புதிதாக நிகழாண்டில் சேரும் மாணவர்களுக்கு வகுப்புகளுக்கான இடம் ஒதுக்குவதில் பெரும் சிரமம் ஏற்படும் என தெரிகிறது .அருகில் புதிய கட்டிடங்களுக்கான வாய்ப்புகள் இல்லாத சூழ்நிலையில் ,கட்டிட மாடியிலோ,அருகில் உள்ள காலி இடங்களிலோ தற்காலிக வசதி ஏற்படுத்தப்படலாம் என தெரிகிறது .கழிவறை வசதி,வாகனங்கள் நிறுத்துமிடம் போன்றவை போதுமானதாக இல்லாமல் மாணவ,மாணவியர்
அவதிக்குள்ளவதாக பெயர் குறிப்பிட விரும்பாத மாணவர்கள் கூறினர் .
மேலும் புதிய பாட பிரிவுகள் தொடங்கப்படவேண்டும் எனவும் மாணவர்கள் தெரிவித்தனர்.புதியதாக பி.பி.ஏ வகுப்புகளும் மற்றும் பி.காம் வகுப்பில் கூடுதலாக ஒரு வகுப்பும் தொடங்கப்பட வேண்டும் .அந்த அளவிற்கு தேவைகள் உள்ளன என்றும் தெரிகிறது.அதற்கான கருத்துருக்கள் நிர்வாகத்தின் மூலமாக கல்லூரி கல்வி இயக்ககத்தின் பார்வைக்கு சென்றுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேதுபாவாசத்திரம் ஒன்றியச்செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி கூறுகையில் ,
"தற்சமயம் கல்லூரி முதல்வர் பதவி தவிர நிரந்தர பேராசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன.ஐந்து கௌரவ பேராசிரியர்களும் ,சிறப்பு அனுமதியில் இரண்டு பேராசிரியர்களும் பணியில் உள்ளதாக தெரிகிறது.எனவே நிரந்தர பேராசிரியர்களும் போதிய அளவிலான காலி பணியிடங்களும் அலுவலர்கள் உள்ளிட்ட மற்ற பணியிடங்களும் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.காலத்திற்கேற்ற வகையில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட வேண்டும்.
போதுமான அளவில் கழிவறை ,வாகன நிறுத்த வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.எல்லாவற்றையும் விட அவசரமானதும் அவசியமானதும் கல்லூரி சொந்த கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க
வேண்டும்.அண்ணாநகரில் கல்லூரிக்காக தேர்வு
செய்யப்பட்ட இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தை வாங்கி,கல்லூரி கல்வி துறைக்கு மாற்றம் செய்து உடனடியாக கட்டிட பணிகளை துவக்க வேண்டும் .வரக்கூடிய கல்வி ஆண்டிலாவது புதிய கட்டிடத்தில் போதிய வசதிகளுடனும் ,தகுதியான பேராசிரியர்களுடன்
அரசு கல்லூரி இயங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . இல்லையென்றால் மக்களை திரட்டி போராட வேண்டி வரும் என்றார் .
இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜ்மோகனிடம்
பேசிய போது,
"கடந்த ஆண்டில் அதிமுக அரசு புதிதாக 12 அரசு கல்லூரிகள் துவங்குவதாக அறிவித்த போது இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் வரவேற்றோம்.ஆனால் அரசு கல்லூரி என்ற பெயரில் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியாக துவங்கினார்கள்.ஏறத்தாழ திமுக ஆட்சியில் 12 கல்லூரிகளும் ,அதிமுக ஆட்சியில் 22 கல்லூரிகளும் தொடங்கினர்.அனைத்திலும் மாணவர்களிடம் கட்டண வசூல் செய்தனர் .திமுக அரசுக்கும் ,அதிமுக அரசுக்கும் கல்வித்துறையை பொறுத்தவரை கொள்கை வேறுபாடு இருப்பதாக
தெரியவில்லை.அரசுக்கல்லூரியாக இருந்திருந்தால் கட்டண வசூல் இருக்காது .மாணவர்களுக்கும் பாதிப்பு வராது .
அவசர கோலத்தில் தொடங்கப்பட்ட கல்லூரிகளில் போதுமான வகுப்பறைகளோ ,காலத்திற்கேற்ற பாடப்பிரிவுகளோ இல்லாமலும் ,போதிய கட்டமைப்பு வசதிகளும் இல்லாமலும் தொடங்கப்பட்டது.கற்பிக்க தகுதியான பேராசிரியர்கள் இல்லாமல் ,அதிகாரிகள் ,நூலகர்கள் இல்லாமலும் செயல்பட தொடங்கியது.கேலிக்கூத்தாக வாடகை கட்டிடங்கள் ,திருமண மண்டபங்கள் ,குடோன்கள் என கிடைத்த இடத்தில் கல்லூரிகள் செயல்பட தொடங்கியது .
ஏற்கனவே உள்ள 62 க்கு மேற்பட்ட கல்லூரிகளிலும் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட கல்லூரிகளிலும் உள்ள பேராசிரியர் ,அலுவலர்கள் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை அரசு உடனடியாக நிரப்ப வேண்டும்.அந்தந்த பகுதியில் அமைந்துள்ள கல்லூரிகளுக்கு தேவையான புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட வேண்டும் .உடற்கல்வி இயக்குனர் பணியிடங்கள் இல்லாத 40 க்கும் அதிகமான கல்லூரிகளிலும் ,நூலகர் இல்லாத 60 க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.மாணவர்களுக்கு விளையாட்டு மைதான வசதி,நூலக வசதி ,ஆய்வக வசதி,ஓய்வறை வசதிகள் செய்யப்பட வேண்டும்.புதிய சொந்த கட்டிடத்தில் தகுந்த கட்டமைப்பு வசதிகளுடன் கல்லூரி செயல்பட தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இந்திய மாணவர் சங்கமும் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி உள்ளிட்டவர்களும் இதுபற்றி சட்டமன்றத்திலும் ,மக்கள் மன்றத்திலும் குரல் எழுப்பிய பின்னர் மாநில அரசு 100 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது .அந்த பணம் முறையாக செலவழிக்கப்பட்டதாக தெரியவில்லை.கல்லூரிகளுக்கு என்ன தேவை என கேட்கப்படாமலேயே ,தேவையற்ற பொருட்களுக்கு கல்லூரி கல்வி துறையால் செலவிடப்பட்டது .எனவே இந்த விஷயத்தில் ஒளிவுமறைவின்றி வெளிப்படை தன்மை கடைப்பிடிக்க படவேண்டும்.
மாணவர்கள் திறமையை வெளிக்கொணரும் வகையில் ஆண்டு விழாக்கள் ,இலக்கிய மன்ற விழாக்கள் ,விளையாட்டு விழாக்கள் நடத்தப்பட வேண்டும்.
அதே போல ஜனநாயகத்தை உரத்த குரலில் உலகிற்கு எடுத்து சொல்லும் நமது தேசத்தில் கல்லூரியில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் .உடனடியாக மாணவர் பேரவை தேர்தல் நடத்தப்பட வேண்டும் .மாணவர் ஆசிரியர் உறவு பேணப்பட வேண்டும் .ஏழை எளிய ,தாழ்த்தப்பட்ட ,பிற்படுத்தப்பட்ட ,தலித் ,
சிறுபான்மை இன மாணவர்கள் மட்டுமே அரசு கல்லூரியில் படிப்பதனால் தானோ என்னவோ தமிழக அரசு இப்படி பாராமுகத்துடன் செயல்படுகிறதோ என எண்ண தோன்றுகிறது.
எனவே கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பேராவூரணி,கறம்பக்குடி உள்ளிட்ட 12 அரசு கல்லூரிகளிலும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் .புதிய சொந்த கட்டிடத்தில் இயங்கவும் ,புதிய பாடப்பிரிவுகள் ,போதிய பேராசிரியர்களுடன் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .இல்லை எனில் இந்த கல்வி ஆண்டு துவக்கத்தில் மாநிலம் முழுவதும் மாணவர்கள் ,மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் "என்றார் .
அரசும் ,உயர்கல்வி துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதே மாநிலம் முழுவதும் மக்களின் ,கல்வி ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
எஸ்.ஜகுபர்அலி,
பேராவூரணி.
இதாவது பரவாஇல்லையே, இங்கு இடம் கிடைக்காவிட்டாலும் வேறு இடத்தில கிடைத்து விடும். ஆனால் மரணித்தபிறகு அடக்கம் செய்ய இடம் கிடைக்காமல் போகும் அபாயம் ஆரம்பித்து உள்ளது.
ReplyDelete