.

Pages

Saturday, February 28, 2015

துபாயில் TNTJ அதிரை கிளை நடத்திய ஆலோசனைக் கூட்டம் !

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

அல்ஹம்துலில்லாஹ் கடந்த 27/02/2015 வெள்ளிக்கிழமை மாலை 4:45 மணி அளவில் அதிரை TNTJ கிளையின் ஆலோசனைக் கூட்டம் துபை JT மர்க்கஸில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 1, நமதூரில் தொடங்கப்படவுள்ள  பெண்கள் அல் ஹிக்மா அரபிக்கல்லுரியின் ஆயூட்கால புரவலர் மற்றும் சந்தாதாரர்கள் சேர்ப்பது என ஆலோசிக்கப்பட்டது.

2,  நமது தவ்ஹீத் பள்ளியில் உள்ள நுலகத்திற்கு நூல்கள் மற்றும் குர்ஆன் வாங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

இப்படிக்கு,
அதிரை டிஎன்டிஜே - துபாய் கிளை


தகவல்: ஜஹபர் சாதிக்
 

மேலத்தெருவின் பிரதான பகுதியில் புதிதாக மணிக்கூண்டு திறப்பு !

அதிரை தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கத்தின் சார்பில் மேலத்தெரு பகுதியில் மகிழங்கோட்டை செல்லும் பிரதான சாலையின் முக்கத்தில் புதிதாக மணிக்கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் இப்பகுதி தன்னார்வ இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 

செக்கடி மேட்டில் வாத்து விற்பனை அமோகம் !

விழுப்புரத்தில் இருந்து ஏராளமான வாத்து வியாபாரிகள் அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வாத்துக்களை விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக செக்கடி மேடு, தக்வா பள்ளி, மேலத்தெரு உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு குழுக்களாக பிரிந்து சென்று வாத்துக்களை விற்பனை செய்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் பார்வையில் படும்படி வாத்துகளை மேய விட்டுள்ளனர். இப்பகுதியினர் ஆர்வத்துடன் வாத்துகளை வாங்கிச்செல்கின்றனர். சிலர் தமது தோட்டங்களில் வளர்ப்பதற்காகவும் வாங்குகின்றனர்.

இதுகுறித்து விழுப்புரத்தை சேர்ந்த வாத்து வியாபாரி கண்ணன் கூறியதாவது...
'கோடை காலம் துவங்கியதை அடுத்து வாத்து விற்பனையை துவங்கியுள்ளோம். இந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வாத்துக்களை வளர்ப்பதற்காகவும், இறைச்சிக்காவும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். ஒரு ஜோடி வாத்து ₹ 200 க்கு விற்பனை செய்கிறோம்' என்றார்.
 
 
 
 
 
 

காணாமல் போன வாலிபர் ஊர் திரும்பாததால் பெற்றோர்கள் மிகுந்த கவலை !

அதிரை காலியார் தெருவை சேர்ந்தவர் முஹம்மது இஸ்மாயில். இவரது மகன் ஜமால் முஹம்மது [ வயது 38 ] நமதூர் ரஹ்மானியா மதராஸாவில் ஆலிம் பட்டம் பெற்றவர். காலியார் தெருவில் உள்ள தமது இல்லத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். சற்று உடல் நிலை பாதிப்படைந்து காணப்பட்டார்.

மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 26-02-2015 அன்று மதியம் பட்டுக்கோட்டை சென்றவர் இன்று காலை வரை ஊர் திரும்பவில்லை. இவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடி வருகின்றனர். ஊர் திரும்பாததால் இவரது குடும்பத்தினர் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

மகன் காணாமல் போனது குறித்து ஜமால் முஹம்மது தகப்பனார் முஹம்மது இஸ்மாயில் நம்மிடம் கவலையுடன் கூறுகையில்...
'நான் கடைதெருவில் பெட்டிக்கடை நடத்தி வருகிறேன். கடந்த இரண்டு நாட்களாக எனது மகனை காணவில்லை. பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடி வருகிறோம். இதுவரையில் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. எனது மகன் ஆலிம் பட்டம் பெற்றவன். எனது மகன் விரைவில் வீடு திரும்ப இறைவனிடம் துஆ செய்யுங்கள்' என்றார்.

இவரை பற்றிய தகவல் கிடைத்தால் கீழ்கண்ட அலைப்பேசி எண்ணில் உடனடியாக தொடர்புகொண்டு தெரிவிக்க அன்புடன் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
தொடர்புக்கு 7418596423

மரண அறிவிப்பு !

M.S.M நகரை சேர்ந்த வைத்தியர் முஹம்மது அலியார் அவர்களின் மனைவியும், வழக்கறிஞர் முஹம்மது அமீன் அவர்களின் தாயாரும், முஹம்மது காசிம் ஆலிம், அபுல் ஹசன் ஆகியோரின் மாமியாருமாகிய ஹதிஜா அம்மாள் அவர்கள் இன்று காலை 6 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று பகல் 12 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Friday, February 27, 2015

வீடு கட்டியாச்சா !? குடி போயாச்சா !? இந்த அதிர்ச்சி ரிப்போர்ட்டை கவனியுங்க.

வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டால், அதற்காக என்னென்ன வேண்டும் எப்படி ஆயத்தப்படுத்தனும் என்று நம்மவர்களுக்கு சொல்லவே தேவை இல்லை.

எல்.கே.ஜி. படிக்கின்ற பிள்ளைகிட்டே போய் எப்படி வீடு கட்டனும் என்று கேட்டால் நாம் எதிர்பார்த்ததைவிட மிகச் சரியான விளக்கத்தோடு சொல்லும். அந்த அளவுக்கு அறிவு தேர்ந்த கட்டிட நிபுணர்கள் நமதூரில் உண்டு.

வீடு கட்டுவதற்கு மிகவும் முக்கியமான பொருள்களில் மணலும் ஒன்று. இந்த மணல் சுத்தமானதாக இல்லையென்றால் கட்டிடம் உறுதியாக இருக்க முடியாது.  மேலும் மழைக் காலங்களிலும், கச்சாங் காற்று வீசும் நேரங்களிலும் ஒரு மாதிரியான கசிவுகல் ஏற்படுவதை பார்க்கலாம். இந்த மாதிரியான கசிவுகல் தரை, சுவரு, மட்டப்பா, இன்னும் பல இடங்களில் காணலாம், இது உப்புக் கசிவு எனப்படும். மணலில் உப்புத்தன்மை இருந்தால் தான் இப்படி கசிவுகள் உண்டாகும். இது கட்டிடத்திற்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

அதிரைக்கு மேற்கு, வடமேற்கு திசைகளில் இருந்து வரும் மணல்கள் எல்லாம் உப்புத்தன்மை கொண்டவை, இந்த மணல்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டிடங்களில் உப்புக் கசிவு உண்டாவதை ஆதாரத்துடன் காட்டமுடியும்.

பல வருடங்களுக்கு முன்பு அதிரைக்கு வடக்கு, வடகிழக்கு பகுதியில் இருந்து வரும் மணல்களில் உப்புத் தன்மை கிடையாது, இவ்வகை மணல்களை கொண்டு கட்டப்பட்ட கட்டிடம் இன்னும் உறுதியாகவே இருக்கின்றது. இதையும் ஆதாரத்துடன் காட்டமுடியும்.

கட்டுமானத்திற்காக வாங்கும் பொருள்களின் தரத்தையும் தன்மையையும் யாரும் கவனிபப்து கிடையாது. ஏதோ வேலை முடிஞ்சா சரி, பட்டிப்பார்த்து அப்படியே அழகாக மொழுகி, பல வண்ணங்களில் வர்ணம் தீட்டி, பார்பதற்கு அழகாக இருந்தால் போதும், தரை ஜில்லென்று இருக்குதா அப்பாடா, இதுவள்ளவோ வீடு என்று பெருமூச்சு விடுவோரும் உண்டு.

மக்களுக்கு என்ன, வீடு நல்ல பெருசா இருக்கணும், கீழும் மேலும் இரண்டு கட்டிடங்களாக இருக்கணும், திரீபேஸ் மின் இணைப்பு இருக்கணும், வண்ண வண்ண கலரில் மை அடித்து இருக்கணும், வீடு முழுக்க மார்பில் போட்டு இருக்கணும், ஆயில் பெயிண்ட் அடித்து இருக்கணும், இப்படி பல விதங்களில் விரும்புகின்றார்கள்.

விரும்புவதில் தப்பு இல்லை, அவர்களின் சக்திக்கு எவ்வளவு உயரம் விரும்ப முடியுமோ, அவ்வளவு உயரத்துக்கு விரும்புவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. விரும்ப உரிமை இருக்கும் அவர்களுக்கு விழிப்புணர்வு பெற உரிமை இல்லையே!?

கட்டிடம் கட்டுபவர்கள் எந்த தகுதி வரையில் உறுதி பெற்றவர்கள்?

கட்டிடங்கள் கட்டுவதற்கு வாங்கப்படும் பொருள்களின் தரம் எந்த வகையில் உறுதியானது?

மின் ஒயரிங் எவ்வாறு பிணைத்து இணைக்கப்பட்டுள்ளது?

எர்த், (Ground) எந்த தன்மையில் பொருத்தப்பட்டுள்ளது?

நல்ல நீர், கழிவு நீர் செல்லும் பாதைகள் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது?

நமதூரில் கட்டும் கட்டிடங்களுக்கு தரச் சான்றுகளின் நிலை என்ன?

இழக்கும் பணத்திற்கு சமமாக கட்டிடத்தின் தன்மைகள் என்ன?

இப்படி யாராவது கட்டிடம் கட்டும் இஞ்சிநீயர்களிடம் கேள்விகளை கேட்டதுண்டா?

இன்னும் இப்படியே கேள்விகளை கேட்டுக்கொண்டே போனால்! நமதூரில் கட்டிடத்தொழில்கள் நடந்துகொண்டேதான் இருக்கும். அதே சமயம், இந்த மக்களின் நிலை!! பாதியிலேயே கஞ்சியை வடித்துவிட்டு சாப்பிடும் அரை வேக்காட்டு சோற்றுக்கு சமமானதாக இருக்கின்றது.

அதிரையில் புதியதாக கட்டப்பட்ட பல வீடுகளில் பலதரப்பட்ட குறைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றது. வெடிப்பு, தரை இறக்கம், கரையான் தொல்லை, தண்ணீர் கசிவு, மின் கசிவு போன்ற இன்னும் பல குளறுபடிகளில் குடித்தனக் காரர்கள் அவதிக்கு உள்ளாகுகின்றனர்.

வீட்டுக்கு உரிமையாளர்களே, நீங்கள் தகுந்த முறையில் விழிப்புணர்வோடு வீடுகளை கவனித்து கட்டாமல் போவீர்களேயானால், அதில் எவ்வளவு பாடுகள் இருந்தாலும் ஒரு பயனும் இல்லை.

வீடுகள் வெளிப்பார்வைக்கு அழகாக காட்சி அளிக்கலாம், ஆனால் சில கேன்சர்களால் உள்ளுக்குள் அரித்துக்கொண்டு இருக்கும்.

இனியாவது விழிப்புணர்வோடு இருங்கள்.

இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
Human Rights and Consumer Rights Included.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
kmajamalmohamed@gmail.com

பெரும் வரவேற்பை பெற்ற காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர்களுக்கான போட்டிகள் !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் 60 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் நேற்று [ 26-02-2015 ] காலை கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் துவங்கியது. இதில் கல்லூரி மாணவ மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலக ஆய்வக உதவியாளர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோருக்கான போட்டிகள் நடைபெற்றது. இதில் பேராசிரியர்களுக்கான 4 x 100 மீட்டர் தொடர் அஞ்சல் ஓட்டப்போட்டியில் பேராசிரியர் செய்யது அஹ்மது கபீர் சார்ந்திருந்த அணி முதலிடத்தை பிடித்தது. இரண்டாம் இடத்தை பேராசிரியர் அப்பாஸ் அணியும், மூன்றாம் இடத்தை பேராசிரியர் அபூதாகிர் அணியும் பெற்றன.

இதையடுத்து நடைபெற்ற பேராசிரியர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் பேராசிரியர் டி.லெனின் தலைமையிலான அணி முதலிடத்தையும், இரண்டாம் இடத்தை பேராசிரியர் செய்யது அஹ்மது கபீர் தலைமையிலான அணியும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்  உடையார்பாளையம் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயக்குனர் முனைவர் ஆர். ராஜமாணிக்கம் முன்னிலையில் சுழற்கோப்பையும், பதக்கங்கள் பரிசாக வழங்கப்பட்டது. வெற்றிபெற்ற அணிகளை கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால், துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன், சக பேராசிரியர்கள், அலுவலக ஆய்வக உதவியாளர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் பாராட்டினர்.
 
 
 
  

அதிரை அருகே வாகனம் சாலையோர மரத்தில் மோதி ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் !

அதிரை அருகே உள்ள பரக்கலகோட்டையிலிருந்து நேற்று முன்தினம் அதிகாலையில் முத்துப்பேட்டையை நோக்கி வாகனம் சென்றது. வாகனத்தை மாரி மகன் லெட்சுமணன் ( வயது 21 ) ஓட்டி சென்றார். இதில் இருளாண்ட கோனார் மகன் கிருஷ்ணன் ( வயது 50 ), பரமசிவன் மகன் வேல்முருகன், கருப்பையன் மகன் பஞ்சமணி ஆகியோர் பயணமானார்கள். வாகனம் பொது ஆவுடைநாதன் தோப்பின் அருகே வேகமாக சென்ற போது சாலையோரத்தில் காணப்படும் புங்கை மரத்தின் மீது பலமாக மோதியது. இதில் பயணமான கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மூவரும் பலத்த காயங்களுடன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

தகவலறிந்த அதிரை காவல்துறை துணை ஆய்வாளர் பசுபதி. ஜீவானந்தம் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏக்கம்: அயலக வாழ் அன்பர்களுக்கு சமர்ப்பணம் !

என் வாழ் நாளில் முதன் முதலாய் அன்றுதான் உங்களை பார்த்தேன். நீங்களோ மிகவும் பரிச்சயம் ஆனவர் போல் என் அருகில் வந்து என்னை இருக அனைத்துக்கொண்டீர்கள் நான் திமிறினேன், தினறினேன் என்னை நீங்கள் விடுவதாய் இல்லை உங்கள் மீது சிகரட்டும், சென்டும் கலந்த வாடை எனக்கு பிடிக்கவே இல்லை. அன்னியமாய் பட்டது அடக்க முடியாமல் அழுது விட்டேன்.
     
சில நாட்களே நகர்ந்தது நீங்கள் காட்டும் அன்பில் நான் உருகினேன் உங்கள் ஸ்பரிசத்தில் மயங்கினேன். உங்களோடே என் பொழுதை முழுமையாய் கழித்தேன் நீங்கள் வெளியே செல்லும்போதல்லாம் நானும் வர அடம் பிடித்தேன் நீங்களும் எந்த மறுப்பும் சொல்லாது வெளியில் அழைத்து செல்வதை வழக்கமாக்கி கொண்டதில் மிகவும் பூரிப்படைந்தேன்.
 
நீங்கள் இல்லாமல் நானும் இல்லை என்றெண்ணிய பொழுது! அந்த நாள்?!!!இன்றும் என் மனதில் நீங்காமல் இருக்கிறது. உங்கள் கண்களில் நீர் கோர்க்க என் அருகில் வந்தமர்ந்தீர்கள் என்னை மலங்க மலங்க பார்த்தீர்கள் நானும் ஒன்றும் புரியாமல் பார்த்தேன் அப்படியே இருக அனைத்துக்கொண்டீர்கள் முதல் முதலாய் அனைத்த அதே இறுகிய அனைப்பு நான் திமிறவில்லை தினறவில்லை அனுபவித்தேன் உங்களது சிகரட், சென்ட் கலந்த வாடை இப்பொழுது எனக்கு பிடித்திருந்தது. உங்கள் கண்ணீர் என் முதுகை நனைக்க உணர்ந்தேன்.
     
அதுதான் உங்களுக்கும் எனக்கும் நடந்த கடைசி ஸ்பரிசம் உங்களை கொஞ்ச நாளா காணவில்லை எங்கு சென்றீர்கள் ? என்ன ஆனீர்கள் ? யாரிடம் கேட்டாலும் இப்ப வந்திடுவாங்கன்னு சொல்றாங்க ஆனா நீங்க வந்த பாடில்லை உங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும், அரவணைப்பிற்கும் ஏங்கி கிடக்கும்...
                   
உங்கள் அன்பு மகள்,
செல்லக்குட்டி ( L.K.G 'B' Sec -  ABC Metric School ) 

( குறிப்பு  இந்தியாவில் ஊழியம் செய்யும் என் இனிய நண்பன் என் மகளுக்காக எனக்கு எழுதிய மடல் கண் கலங்கிவிட்டேன் அயலக வாழ் அன்பர்களுக்கு சமர்ப்பணம் )

அதிரையில் TNTJ நடத்திய ஆலோசனைக் கூட்டம் !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிரைக்கிளையின் ஆலோசனைக்கூட்டம் 27-2-2015 வெள்ளிக்கிழமை சுபுஹு தொழுகைக்கு பிறகு தவ்ஹீத் பள்ளியில் கிளைத்தலைவர் பீர் முகம்மது தலைமையில் நடைபெற்று இதில் விரைவில் துவங்கவுள்ள அல்-ஹிக்மா இஸ்லாமிய பெண்கள் கல்லூரி பற்றிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1) கல்லூரி நடைபெற இருக்கும் கட்டிடத்தில் மின்சாரம் வேலைகள்  தண்ணீர்  வசதிகளை உடனடியாக ஏற்பாடு செய்வது

2) கல்லூரி பற்றி இரண்டு இடங்களில் பேனர் வைப்பது

3) உணர்வில் விளம்பரம் செய்வது

4)  கல்லூரியின் சேர்க்கை விண்ணப்பத்தை  உடனடியாக பொதுமக்களிடம் வினியோகம் செய்வது

5) கல்லூரிக்கு கூடுதலாக ஆசிரியர்களை நியமிப்பது

6) அல்-ஹிக்மா பெண்கள் கல்லூரிக்கு மௌலவி அஸ்ரப்தீன் பிர்தவ்ஸியை முதல்வராக நியமிப்பது

7) கல்லூரிக்கு வெளியே கல்லூரி நிர்வாக பொறுப்புகளை கவனிப்பதற்கு சகோதரர் கிளை செயலாளர் பக்கீர் முகைதீனை நியமிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தகவல்: எஸ்.பி பக்கீர் முகைதீன் - 
டிஎன்டிஜே கிளை செயலாளர்
நன்றி: அதிரை டிஎன்டிஜே 
 
 


பட்டுக்கோட்டையில் புதிதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை திறப்பு !

பட்டுக்கோட்டையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறையை டி.ஐ.ஜி.சஞ்சய்குமார் திறந்து வைத்தார்

பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் புதிய கட்டுப்பாட்டு அறை (கண்ட்ரோல் ரூம்) அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சுப்பையன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன்

ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி.சஞ்சய்குமார் தலைமை தாங்கி கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசும் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் ஒன்றான பட்டுக்கோட்டையில் காவல்துறை கட்டுப்பாட்டு அறை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு எண் 256100. இந்த எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால், உதவி செய்ய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. நகரில் 34 இடங்களில், காண்காணிப்பு கேமரா அமைக்க திட்டமிடப்பட்டு, தற்போது அறந்தாங்கி முக்கம், மணிக்கூண்டு முக்கம், தலைமை தபால் நிலையம், கைகாட்டி, மைனர் பில்டிங் பகுதி, அதிரை சாலை, பேருந்து நிலையம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் 18 கேமராக்கள் பொருத்தப்பட்டு நகரின் முழு செயல்பாடும், கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்படுகிறது.

மேலும் 16 இடங்களில் கேமரா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட கலெக்டர் சுப்பையன் பேசியதாவது:- 
பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் அரசு நிர்வாகம் சிறப்பான முறையில் செயல்பட முடியும். இப்போது வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்ப காலத்தில் நடைபெறும் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. அதை தடுக்க இந்த கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை நகரம் மேலும் வளர்ந்த பகுதியாக மாறவும். அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கு சீராக அமையவும். இந்த கட்டுப்பாட்டு அறை பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் என்.ஆர்.ரெங்கராஜன் எம்.எல்.ஏ., பட்டுக்கோட்டை கோட்ட போலீஸ் உதவி சூப்பிரண்டு தீபாகானேகர், நகரசபைத்தலைவர் எஸ்.ஆர்.ஜவகர்பாபு ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளம்பரிதி, மாநில தென்னை வாரிய உறுப்பினர் மலைஅய்யன், வியாபாரிகள், தொழில் அதிபர்கள், வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மதுக்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியசாமி வரவேற்றார். முடிவில் பட்டுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் நன்றி கூறினார்.

நன்றி:தினத்தந்தி

துபாயில்TNTJ அதிரை கிளையின் ஒருங்கிணைப்பு கூட்டம் !

அதிரை TNTJ கிளையின் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை நடைபெறும் ஆலோசணை  கூட்டம் வருகின்ற 27/02/2015 வெள்ளிகிழமை  அஸர் தொழுகைக்கு  பிறகு மாலை 4:45 மணி அளவில் தேரா போரி மஸ்ஜித் பின்புறம்உள்ள துபை JT மர்க்கசில் நடைபெற உள்ளது. நமது ஊரில் வருகின்ற கல்வி ஆண்டில் துவங்க உள்ள அல் ஹிக்கமா மகளிர் இஸ்லாமிய கல்லூரி துவங்குவதை பற்றியும் மற்றும் புதிய செயல்பாடுகளை பற்றியும் ஆலோசணை செய்ய இருப்பதால் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு
அப்துல் ரஹ்மான் 0527788264
சலீம் 0551878637
ஜஹபர் சாதிக் 0557428381
தகவல்:ஜஹபர் சாதிக்
*File Photo

Thursday, February 26, 2015

அதிரை வாலிபரை காணவில்லை !

அதிரை காலியார் தெருவை சேர்ந்தவர் முஹம்மது இஸ்மாயில். இவரது மகன் ஜமால் முஹம்மது [ வயது 38 ] நமதூர் ரஹ்மானியா மதராஸாவில் ஆலிம் பட்டம் பெற்றவர். காலியார் தெருவில் உள்ள தமது இல்லத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். சற்று உடல் நிலை பாதிப்படைந்து காணப்பட்டார்.

மருத்துவ சிகிச்சைக்காக இன்று மதியம் பட்டுக்கோட்டை சென்றவர் இதுவரையில் ஊர் திரும்பவில்லை. இவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடி வருகின்றனர். ஊர் திரும்பாததால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக அதிரை காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருக்கின்றனர். இவரை பற்றிய தகவல் கிடைத்தால் கீழ்கண்ட அலைப்பேசி எண்ணில் உடனடியாக தொடர்புகொண்டு தெரிவிக்க அன்புடன் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
தொடர்புக்கு 7418596423

திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டத்தின் தற்போதைய நிலை என்ன ? பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அப்துல் ரஹ்மான் அவர்களுடன் சந்திப்பு ! [ காணொளி ]

முத்துப்பேட்டை - அதிரை - பட்டுக்கோட்டை - பேராவூரணி உள்ளிட்ட பகுதியை இணைக்கும் திருவாரூர் - காரைக்குடி ரயில் சேவை நிறுத்தப்பட்டு 9 வருடமாகிறது. இதற்கு பிறகு தமிழகத்தில் புதிய திட்டங்கள் போடப்பட்டு ரயில் தொடர்பு நடந்து வருகிறது.

நூறு ஆண்டுகளுக்கு பழமையான நமதூர் ரயில் சேவையை 9 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டதால் நமது பகுதி மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி தந்துள்ளது.

இந்நிலையில் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு புதிய ரயில்கள் விடப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

பாஜ அரசு 2014ம் ஆண்டு மத்தியில் பதவியேற்றுதும் முதல் ரயில்வே பட்ஜெட்டை சதானந்த கவுடா தாக்கல் செய்தார். அப்போது தமிழகத்துக்கு 2 ரயில்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டன.

ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து ரயில்களும் புதிய பட்ஜெட் தாக்கல் செய்வதற்குள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அறிவித்திருந்தார்.

அதன்படி குறுகிய நாட்களில் பல ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனால் சென்னை - பெங்களூர் ரயில் இன்னும் இயக்கப்படவில்லை. இதுவரை ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்தபடி கூட புதிய ரயில்கள் விடப்படுவதில்லை.

அமைச்சர் சுரேஷ் பிரபு, தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அதில், தமிழகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்று தமிழக மக்கள் ஆவலுடன் உள்ளனர்.

ரயில் போக்குவரத்தையே பெரிதும் நம்பியுள்ள தமிழக மக்கள் பல்வேறு புதிய திட்டங்களையும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு உரிய நிதியும் ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
முத்துப்பேட்டைக்கு வருகை வந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் அவர்களை, சமூக ஆர்வலர் 'சுனா இனா' என்கிற சுல்தான் இப்ராஹீம் அவர்கள் சந்தித்து நமதூரை இணைக்கும் திருவாரூர்- காரைக்குடி அகல ரயில் பாதை திட்டம் குறித்த விபரங்களை கேட்டார்.


நன்றி : முத்துப்பேட்டை நியூஸ்

அமெரிக்காவில் பெண்களுக்காக பிரத்தியோகமாக கட்டப்பட்ட பிரம்மாண்ட மசூதி !

உலகில் முதன்முறையாக பெண்களுக்கான மசூதி ஒன்று அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளில் இஸ்லாத்தின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இங்குள்ள 1200 மசூதிகளில் பெரும்பாலானவை கடந்த 12 ஆண்டுகளில் கட்டப்பட்டதாகும்.

இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angels) மாகாணத்தில் பெண்களுக்கான பிரத்யேக மசூதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த மசூதியை நிறுவிய பெண் உரிமையாளர் கூறுகையில்... மற்ற மசூதிகளை போட்டிப்போட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மசூதியை கட்டவில்லை என்றும் பெண்களுக்கென ஒரு மசூதி அமைக்க வேண்டும், என்ற எண்ணத்தில் தான் கட்டப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இங்கு வரும் பெண்கள் தாங்கள் அதிகளவில் அமைதியை பெறுவதாக மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளனர்.