.

Pages

Sunday, February 15, 2015

போதை ஏறினால்... பாதை மாறுமா !? ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் !

30,000... இந்தியாவில் கடந்த ஆண்டு விபத்துகளில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை இது. ஒரு பெரும் பூகம்பம், சுனாமி பேரிழப்புகளுக்கு இணையானது. உலகிலேயே விபத்துகளில் முதலிடம். இந்த மரணங்களில் பெரும்பாலானவற்றுக்கான காரணம்... மதுப்பழக்கம்! (அதீத வேகத்தால் நேரும் விபத்துகள் 24 சதவிகிதம் என்றால் மதுவால் நேரும் விபத்துகள் 40 சதவிகிதத்துக்கும் அதிகமாம்).

மது 'உள்ளே’ சென்றவுடன் உடலில் அப்படி என்னதான் செய்கிறது ?
அப்போலோ மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவு மருத்துவர் டாக்டர். பி. பொன்முருகன் விளக்குகிறார்.

''நாம் உண்ணும் உணவு சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டு, அதன் பிறகு கல்லீரலில் போய் பல்வேறு பொருட்களாகப் பிரிந்து ரத்தத்தில் கலக்கும். இதேபோலதான் மதுவும் கல்லீரலுக்குச் சென்று அசிட்டால்டிஹைடு, அசிட்டிக் ஆசிட், கார்பாக்ஸிலிக் ஆசிட் எனும் மூன்று பொருட்களாக உடைந்து ரத்தத்தில் கலக்கிறது. இவை மூன்றும் மூளையின் முக்கியப் பகுதிகளைப் பாதிக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக கிளர்ச்சியான மனநிலை, அதிக சந்தோஷம், குழப்பம், சுயநினைவிழப்பு என்று பல்வேறு கட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கும். இப்படிக் குழப்பச் சூழல் ஏற்படும்போதோ, சுயநினைவை இழக்கும் தருணத்திலோதான் வண்டி ஓட்டுகையில் விபத்து நேரிடுகிறது.
குறிப்பாக, நம்முடைய மூளையில் கட்டுப்பாடு மற்றும் உணரும் திறன் இருக்கிற கார்டெக்ஸ் பகுதி பாதிக்கப்படுவது முக்கியக் காரணம். எந்த வேகத்தில் ஓட்ட வேண்டும் என்பது ஸ்பீடா மீட்டர் பார்க்காமலேயே நமக்குத் தெரிந்திருக்கும். அதற்குக் காரணம், கார்டெக்ஸுக்குள் இருக்கும் ஓர் ஒழுங்குமுறையானது நம்மை வழிநடத்திக்கொண்டே இருப்பதுதான். ஆனால், மது அருந்திய பிறகு இந்தக் கட்டுப்பாடு போய்விடும். எல்லோரும் ஓர் ஒழுங்கில் வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கும்போது, மது அருந்தியவர் மட்டும் தாறுமாறாக ஓட்டுவதால், விபத்து நடந்துவிடுகிறது. மூளைக்குள் ஒரு செல் இன்னொரு செல்லுக்குத் தகவல்களை அனுப்பும் நியூரோ ட்ரான்ஸ்மீட்டர்கள்பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த நியூரோ டிரான்ஸ்மீட்டரில் குளுட்டோமைன், காபா என்று இரண்டு நல்ல, கெட்ட தூதுவர்கள் இருக்கின்றனர். ஆல்கஹால் அருந்தாதவர்களுக்கு குளுட்டோமைன் என்ற நல்ல நியூரோ தூதுவர்கள் அதிகமாகச் செயல்படும்; காபா தூதுவர்களின் செயல்கள் குறைவாக இருக்கும். ஆல்கஹால் அருந்தியவர்களுக்கு இது தலைகீழாக மாறிவிடும். குழப்பங்களும், விபத்துகளும் நடக்க இந்தக் காபா முக்கியக் காரணம்.

மது அருந்திவிட்டு விபத்துக்குள்ளாவதோடு, விபத்துக்குப் பிறகு மருத்துவமனையில் அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதிலும் நிறைய சிரமங்கள் இருக்கின்றன. எந்தத் தகவலையுமே பெற முடியாமல் சுய நினைவற்ற ஒருவருக்கு மருத்துவர் சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கும். அதனால், முதலில் அவருக்கு என்ன பாதிப்பு, வேறு ஏதேனும் குறைபாடுகள் இருக்கின்றனவா, எப்படி விபத்துக்குள்ளானார்... போன்ற விபரங்களைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கத் தாமதமாகும்.

அதேபோல், மது அருந்திவிட்டு அடிபட்டவருக்குப் பக்க விளைவாக வலிப்பு போன்ற வேறு பாதிப்புகளும் வரலாம். இதோடு, அவர் குணமாவதும் பாதிக்கப்படும்!'

நன்றி:விகடன்

1 comment:

  1. சமீபத்தில் வெளியிடப்பட்ட தமிழக வாக்காளர் பட்டியல், இரு திராவிட கட்சிகளின் தேர்தல் அணுகுமுறை, வரும் காலங்களில் செல்லுபடி ஆகாது என்பதை உணர்த்துகிறது.இந்தியாவில், பெண் வாக்காளர்களை விட, ஆண் வாக்காளர்கள் அதிகம்; ஆனால், தமிழக வாக்காளர் பட்டியலில், ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்களே அதிகம். இதை, சற்றே உற்று நோக்கினால், ஒரு உண்மை புலப்படும்; அது தான், 'டாஸ்மாக்' மாயாஜாலம்! தமிழக ஆண்கள், 'டாஸ்மாக்'கின் தரம் குறைந்த மதுபானங்களை அருந்துவதால், ஆரோக்கிய குறைபாட்டுடன் அற்ப ஆயுளில், இறந்து விடுகின்றனர். இப்படியே சென்றால், வரும் தேர்தல்களில், குவாட்டர், பிரியாணி, 200 ரூபாய்க்கு ஓட்டு போடும் ஆண் வர்க்கம் குறைந்து விடும்.இனி, கொள்கையை பேசியும், பிரசாரம் செய்ய முடியாது; ஏனென்றால், கட்சிகளே, தங்கள் கொள்கையை மறந்து, பல காலம் ஆகிறது. பிறகெப்படி தேர்தலை எதிர் கொள்வது?

    திராவிட கட்சித் தலைவர்களே! நீங்கள், தேர்தலை எதிர்கொள்ள, தரமான, 'சரக்கு'களையே, 'டாஸ்மாக்'கில் விற்பனை செய்யுங்கள். இதனால், பொன் முட்டையிடும் ஆண் வாக்காளர்களை காப்பாற்றலாம். 'சரக்கின்' விலையை உயர்த்துவதால், தேர்தல் காலங்களில், உங்கள் செலவு அதிகமாகும்.எனவே, உங்கள் நலன் கருதியாவது, நல்ல, 'சரக்கு'களை, குறைந்த விலையில் தாருங்கள்!

    குடிமகன்களை நல்லா கவனித்ததால் நாளை ஒட்டு எண்ணிக்கையில் (ஸ்ரீரங்கம்) மக்கள் முதல்வர் தான் வெற்றி பெறுவார்; பாருங்களேன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.