பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் புதிய கட்டுப்பாட்டு அறை (கண்ட்ரோல் ரூம்) அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சுப்பையன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி.சஞ்சய்குமார் தலைமை தாங்கி கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசும் கூறியதாவது:-
தஞ்சை மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் ஒன்றான பட்டுக்கோட்டையில் காவல்துறை கட்டுப்பாட்டு அறை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு எண் 256100. இந்த எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால், உதவி செய்ய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. நகரில் 34 இடங்களில், காண்காணிப்பு கேமரா அமைக்க திட்டமிடப்பட்டு, தற்போது அறந்தாங்கி முக்கம், மணிக்கூண்டு முக்கம், தலைமை தபால் நிலையம், கைகாட்டி, மைனர் பில்டிங் பகுதி, அதிரை சாலை, பேருந்து நிலையம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் 18 கேமராக்கள் பொருத்தப்பட்டு நகரின் முழு செயல்பாடும், கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்படுகிறது.
மேலும் 16 இடங்களில் கேமரா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட கலெக்டர் சுப்பையன் பேசியதாவது:-
பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் அரசு நிர்வாகம் சிறப்பான முறையில் செயல்பட முடியும். இப்போது வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்ப காலத்தில் நடைபெறும் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. அதை தடுக்க இந்த கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை நகரம் மேலும் வளர்ந்த பகுதியாக மாறவும். அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கு சீராக அமையவும். இந்த கட்டுப்பாட்டு அறை பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் என்.ஆர்.ரெங்கராஜன் எம்.எல்.ஏ., பட்டுக்கோட்டை கோட்ட போலீஸ் உதவி சூப்பிரண்டு தீபாகானேகர், நகரசபைத்தலைவர் எஸ்.ஆர்.ஜவகர்பாபு ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளம்பரிதி, மாநில தென்னை வாரிய உறுப்பினர் மலைஅய்யன், வியாபாரிகள், தொழில் அதிபர்கள், வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மதுக்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியசாமி வரவேற்றார். முடிவில் பட்டுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் நன்றி கூறினார்.
நன்றி:தினத்தந்தி
இந்நிகழ்ச்சியில் காதிர் முகைதீன் பள்ளி அருகே வேகத்தடை அமைக்க மேற்ண்ட அனைவரிடமும் M L A சார்பாக மனு அளிக்கப் பட்டது
ReplyDelete