.

Pages

Sunday, March 8, 2015

அதிரையில் முதியோர் அரவணைப்பு அவசியமா !?

அதிரை நகரில் சுற்றித்திரியும் மனநிலை பாதித்தோர் ஸாரி வயதுவந்த குழந்தைகள் என்றே இவர்களை அழைக்கவேண்டும். இவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களில் அதிகமானோர் தெருக்களின் முக்கிய வீதிகளில் உலா வருவதை கண்கூடாக்காணலாம்.

குடும்பச்சூழல், மன அழுத்தம், உடல்நலகோளாறு உள்ளிட்ட பலவித காரணங்களால் இவர்களுக்கு மனநிலை பாதிப்பு உண்டாகிறது என்றாலும் இவர்களை அரவணைத்து பணிவிடை செய்ய யாரும் முன்வருவதில்லை.

இவர்களில் சிலர் தங்களின் அன்றாட உணவுக்காக பலரிடம் கையேந்துவதையும் நிறுத்துவதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓரிருவர் மாத்திரமே இருந்த நமதூரில் இன்று அதன் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதுபோன்ற மனநிலை பாதித்தோரை [ மீண்டும் ஸாரி வயதுவந்த குழந்தைகளாகிய இவர்களை ] பராமரிக்க மனநலக் காப்பகம் நமதூரில் அமைக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான  மனிதநேய ஆர்வலர்களின் எண்ணமாக இருக்கின்றது.

அதே போல் முதியோர் அரவணைப்பு என்பதும் சமூகத்தில் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

1. பேரக்குழந்தைகளுடன் கொஞ்சி விளையாட வாய்ப்புகளற்று, பலவகை வேதனைகளைச் சுமந்து வாழ்வோரும்....

2. தான் தூக்கி வளர்த்த பிள்ளைகளின் அன்பைப்பெறாமல் தவிக்கக் கூடியோரும்...

3. ‘பெரும் பாரமாக’ இருக்கிறார்களே என நினைத்து வீட்டை விட்டு அடித்து விரட்டப்பட்டோரும்...

4. பெற்ற பிள்ளைகள் செய்த கொடுமைகளை கண்டு பொறுக்காமல் வீட்டிலிருந்து வேதனையுடன் வெளியேறியோரும்...

5. தேவையான மருத்துவ உதவி இல்லாமல் வீட்டின்/தெருவின் மூளை முடுக்குகளில் படுத்துறங்குபவர்களும்...

6. தேவையான நேரத்தில் உன்ன உணவு  கொடுக்காமல் பசிக் கொடுமையால்  அவதிப்படுபவர்களும்...

7. ஓய்வில்லாமல் வீட்டு வேலைகளைச் செய்ய சொல்லி தரும் நெருக்கடியால் மன வேதனைப்படுவோரும்...

8. சொத்துகளை அபகரித்துக்கொண்டு வீட்டை விட்டு துரத்தப்பட்டோரும்...

9. வீட்டைப் பாதுகாத்துக்கொள்ள காவலாளி என்ற உரிமையுடன் தங்க வைக்கப்பட்டுள்ளதை நினைத்து வேதனைப்படுவோரும்...

10. தனிமைபடுத்தப்பட்டு அருகில் உற்றார் - உறவினர் இல்லாமால் இறந்தோரும்...

சமூகத்தில் உண்டு !

வளர்ந்து வரும் நாகரீக உலகில் மனிதர்கள் பணம், பொருள் ஈட்ட புலம் பெயர்ந்து சென்றுவிடுகின்றனர். செல்லுமிடத்தில் சிலரது சூழ்நிலை மாறும் பட்சத்தில் அங்கேயே தங்கிவிடும சூழல் அமைந்து விடுகிறது. அப்படி அங்கேயே நீண்ட நாட்கள் தங்கிவிடும் சூழ்நிலையில் அவர்களின் பெற்றோறோர்களில் சிலர் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். குடும்ப உறவுகளும் கைவிட்ட நிலையில் இத்தகைய பெற்றோர்கள் நம் சமுதாயத்தில் கூடிக்கொண்டே போகிறார்கள். இது யாரும் அறிந்திராத ஆச்சரியமான கசப்பானதொரு உண்மை ! வசதி வாய்ப்புக்கள் இருந்தும் தள்ளாத வயதினில் கவனிக்க ஆளில்லாமல் கஷ்டப்படும் நிலையில் அவர்கள் அவதியுறும் நிலை உருவாகிறது. அப்பெற்றோர்கள் அரவணைப்புக்கு ஆளில்லாமல் மனதளவிலும் உடலளவிலும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

புலம்பெயர்வோர்களால் மட்டுமல்லாது பல்வேறு காரணங்களால் குடும்ப உறவுகளால் கைவிடப்பட்டவர்களில் சில முதியோர்களும் உண்டு. இப்படி ஆதரவற்ற முதியோர்களை ஆதரிக்க இல்லம் ஒன்று அவசியம் ஏற்படுத்த வேண்டும்.

ஆகவே வயோதியர்களை அரவணைக்க மருத்துவ வசதியோடு சகல வசதியும் அமையப்பெற்ற முதியோர் இல்லம் ஒன்று நமதூருக்கும் அவசியமானதாய் தோன்றுகிறது. நல்லெண்ணம் படைத்த சமுதாய மக்கள் இவற்றை உருவாக்க முன்வரவேண்டும்.

அதிரை நியூஸ் குழு

குறிப்பு : இது ஒரு மீள்பதிவு. கடந்த 2013 ஆம் ஆண்டு 'அதிரை நியூஸ்' மற்றும் 'சமூக விழிப்புணர்வு பக்கங்களில்' தலையங்கமாக வெளிவந்தது.

4 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    முதியோர்களை அரவணைக்க அதிரையில் மட்டும் இல்லை, அகில உலகமுழுக்க ஆட்கள் தேவை. மேலும் மற்றவர்கள் அரவணைப்பதைக் காட்டிலும் பெற்றெடுத்த பிள்ளளகள், பேரக்குழந்தைகள், சொந்தங்கள், குடும்பங்கள் அரவணைப்பதையே எல்லா முதியவர்களும் விரும்புவார்கள்.

    முதியர்வர்களை ஒருங்கிணைத்து கவுன்சிலிங் கொடுப்பதை விட, அந்த முதியவர்கள் எந்தெந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் என்பதை தீர கண்டறிந்து, குடும்பத்தார்களுக்கு இஸ்லாம் சொன்ன வழிகளை கூறி கவுன்சிலிங் கொடுத்தால்தான் சாலச் சிறந்ததுவாக இருக்கமுடியும்.

    முதியவர்கள் என்ன புதியதாக வானத்திலிருந்து குதித்து வந்தவர்களா? இன்றைய குழந்தைகள் நாளை முதியர்வர்கள் இதுதானே விதி, இந்த விதி வாழையடி வாழையாக வந்து கொண்டு இருக்கின்றது. அப்படி வளர்ந்த வாழை தன்வயதை அடைந்ததும் விதிப்படி இறந்து விடுகிறது. இறக்கும்வரை அந்த வாழைக் குடும்பத்தார்கள் முதிர்ந்த வாழையை வெறுப்பதில்லை.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.[காசு கடை கோஸு முஹம்மது பேரன்]
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- kmajamalmohamed@gmail.com

    ReplyDelete
  2. ஜமால் காக்கா கூறியுள்ளது போல் முதலில் இதை செய்ய வேண்டும்,

    முதியர்வர்களை ஒருங்கிணைத்து கவுன்சிலிங் கொடுப்பதை விட, அந்த முதியவர்கள் எந்தெந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் என்பதை தீர கண்டறிந்து, குடும்பத்தார்களுக்கு இஸ்லாம் சொன்ன வழிகளை கூறி கவுன்சிலிங் கொடுத்தால்தான் சாலச் சிறந்ததுவாக இருக்கமுடியும்.

    எஞ்சும் நிராதரவானவர்களுக்கு மட்டும் காப்பகம் அமைக்கலாம்.

    ReplyDelete
  3. மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா கொடிக்கு காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா” மண்ணுக்கு மரமும், மரத்துக்கு இலையும், கொடிக்கு காயும், குழந்தை தாய்க்கும் பாரமில்லை. ஆனால் இன்று பெற்ற பிள்ளைகளுக்கு பெற்றோரே பாரமாகி விட்டார்கள் என்று எண்ணுகிறார்கள்.

    இதற்க்கு முதியோர் இல்லம் தீர்வு என்று சொல்ல இயலாது, வயதானவர்களை பார்த்துக்கொள்வார்கள் என்று அங்கே சென்றால் அங்குள்ளவர்களை பார்த்து இவர்களுக்கு மேலும் மனக் கஷ்டம் தான் வரும், நோய்கள் தொற்றக்கூடும்,எதிர்பார்த்த வசதிகள் இருக்காது, நாம் என்னும்போல் அவர்கள் கவனிக்க மாட்டார்கள்,

    அந்த காலம் முதலே முதியோர் ஒரு சுமையாகவே இருந்துள்ளனர்.ஆனால் அதை சுமக்கும் வலுவும்,பொறுமையும் ,மனசும்,அன்றைய இளைய தலைமுறைக்கு இருந்தது. இன்றைய இளைய தலைமுறை அனைத்தையும் இழந்து விட்டு நடுத்தெருவில் நிற்கிறதோ என்கிற ஐயமே ஏற்படுகிறது. உறவுகள் மேம்படுத்தல் மட்டுமே தீர்வு காணமுடியும்.

    ReplyDelete
  4. கரு, குழந்தை, வயது வந்தவர்கள், பெரியார்கள், முதியர்வர்கள், இதுதான் மனிதனின் வாழ்க்கையின் பாதை.

    முதியவர்களை கவனிக்க இந்த இளைஞர் படை உருவாகி உள்ளது.
    இந்த இளைஞர் படை நாளை முதியவர்காக உருமாறும்போது எந்த இளைஞர்படை கவனிக்கும்?

    உலகம் போற போக்கை பாரு டிங்கிரி டிங்காலோ, அதிரையரே டிங்கிரி டிங்காலோ.

    ஜமால் காக்கா கருத்தை சற்று கவனித்தால், அதில் தான் முழு பாதிகாப்பு இருப்பதுபோல் தெரியுது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.