அதிராம்பட்டினம், பிப்.26
அரசு மருத்துவராக கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருபவர் டாக்டர். எஸ். ஹாஜா முகைதீன். இவர், வரும் பிப். 28ந் தேதி அரசு மருத்துவப் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், இவரது மருத்துவச் சேவையைப் பாராட்டி, பணி நிறைவு பாராட்டு விழா அதிராம்பட்டினம் லாவண்யா திருமண மஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் கே.செந்தில், சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஏ. குமார் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
மேலும், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர். டி. ராணி அசோகன், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் திருவாரூர் மாவட்டத் தலைவர் டாக்டர் வி.காரிமுத்து, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் தஞ்சை மாவட்டச் செயலர் டாக்டர் ஏ.ராஜேந்திரன், பொருளாளர் டாக்டர் ஏ.வினோத், திருப்பூர் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் வெங்கடேஷ், திருவாரூர் அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் லெனின், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் டாக்டர் டி. சுரேஷ் பாபு, மதுரை மாவட்டச் செயலாளர் டாக்டர் செய்யது, தஞ்சை அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் கார்த்திகேயன், ஐஎம்ஏ தஞ்சை மாவட்டச் செயலளார் டாக்டர் அமிர்தகனி, ஐஎம்ஏ பட்டுக்கோட்டை தலைவர் டாக்டர் பத்மநாபன், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஏ.அன்பழகன், டாக்டர். சீனிவாசன், டாக்டர் கெளசல்யா, டாக்டர் கார்த்திகேயன், டாக்டர் சுதாகர், டாக்டர் ஷெரீன், டாக்டர் ஹக்கீம், முன்னாள் தலைமை ஆசிரியர் ஏ. மகபூப் அலி, முன்னாள் துணைச் சேர்மன ஏ.பிச்சை, தொண்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் எஸ்.சேகு நெய்னா, பேரூராட்சி செயல் அலுவலர் எஸ்.செய்யது அலி உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர்.
விழா முடிவில் டாக்டர் எஸ். ஹாஜா முகைதீன் ஏற்புரை வழங்கினார். இதில், பணியின் போது, ஆதரவு, ஒத்துழைப்பும் வழங்கிய மருத்துவ அதிகாரிகளுக்கும், நண்பர்களுக்கும், பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். இவ்விழாவில், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை செவிலியர்கள், ஊழியர்கள், அரசியல் பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள் உட்பட 800 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
விழா துளிகள்:
1. டாக்டர். எஸ். ஹாஜா முகைதீன் மகள்கள் டாக்டர் எச்.இர்ஷத் நஸ்ரின், டாக்டர். எச்.ஹுமைரா சப்ரின் ஆகியோர் தனது தந்தையின் சிறந்த பண்புகள் பற்றி விழா மேடையில் நினைவு கூறியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
2. டாக்டர். எஸ். ஹாஜா முகைதீன் அவர்களின் மனைவி எச். ஜொஹ்ரா பேகம், தனது கணவரின் ஓய்வில்லா உழைப்பு பற்றி கூறியபோது அனைவரும் வியந்தனர்.
3. டாக்டர். எஸ். ஹாஜா முகைதீன் உறவினப் பெண்கள் கண்ணீருடன் வாழ்த்துப்பாடல் பாடினர்.
4. எம்.எல்.ஏ சி.வி சேகர் தனது வாழ்த்துரையில், அதிரை பேரூர் முன்னாள் துணைத் தலைவர் ஏ.பிச்சை அவர்களுக்கு ஏற்பட்ட மின்விபத்தின் போது துரிதமாக செயல்பட்டு, ஆபத்து கட்டத்திலிருந்து மீட்டதை நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
5. டாக்டர். எஸ். ஹாஜா முகைதீன் அவர்கள் சார்பில், வாழ்த்துரை வழங்கிய சிறப்பு விருந்தினர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு செய்யப்பட்டது.
டாக்டர். எஸ். ஹாஜா முகைதீன் பற்றிய சிறு குறிப்பு:
கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் எங்கள் ஊர் அதிராம்பட்டினத்தில் மருத்துவ சேவையை தொடங்கி இன்று வரை மருத்துவராக பணியாற்றி வருகிறார். கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் அரசு உதவி மருத்துவர் பணி. இக்காலக்கட்டத்தில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்களுக்கு அவசர சிகிச்சைகள் அளித்துள்ளார். இதனால், பல நோயாளிகள் தொலை தூரங்களுக்கு செல்லாமால் உள்ளூரிலேயே சிகிச்சை பெற்று குணமடைந்து இருக்கின்றனர். மாரடைப்பு மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்து அவர்களை அபாய கட்டத்திலிருந்து மீட்டெடுத்துள்ளார். அவசர சிகிச்சைகளுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கக்கூடியவர். குறிப்பாக இரவு நேரங்களில் பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். அதேபோல், தனது நோயாளிகளின் உயர் சிகிச்சைகளுக்கு சரியான மருத்துவரை பரிந்துரைப்பது இவரது சிறப்பு அம்சம்.
இதுபோன்ற பல்வேறு சேவைகளைப் பாராட்டி, அதிராம்பட்டினம் சமூக நல அறக்கட்டளை மற்றும் அதிரை நியூஸ் இணையதள ஊடகம், கடந்த 2016 ஆம் ஆண்டு, அதிராம்பட்டினத்தில் நடந்த கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழாவில், சிறந்த மருத்துவச் சேவைக்கான விருதினை, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக பதிவாளார் திரு. பாலசுப்பிரமணியன் வழங்கி பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.