.

Pages

Sunday, December 31, 2017

பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் கின்னஸ் சாதனை போட்டி ~ 300 பேர் பங்கேற்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், டிச. 31
கின்னஸ் சாதனை முயற்சியாக இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கேலக்ஸி இன்டர்நேஷனல் மற்றும் அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளுர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளி இணைந்து விவசாயத்தை போற்றும் வகையில், பரத நாட்டிய கின்னஸ் சாதனை நிகழ்ச்சி பள்ளி மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.எம் முகமது முகைதீன் தலைமை வகித்தார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பி. சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் மலை அய்யன் தொடங்கி வைத்தார்.

உலகம் முழுவதும் 5 கண்டங்கள் 29 நாடுகளில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இப்போட்டியில், பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் உட்பட 300 பேர் கின்னஸ் போட்டியில் கலந்துகொண்டு, பரத நாட்டியம் ஆடினர். முடிவில் போட்டியில் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளுக்கு பள்ளித்தாளாளர் வீ.சுப்பிரமணியன் கேடயப்பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவித்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பள்ளி நடன ஆசிரியர் ஏ.ரமேஷ் கண்ணன் செய்தார். பள்ளி தமிழ் ஆசிரியர் எம்.வீரமணி வரவேற்றுப்பேசினார். நிகழ்ச்சி முடிவில் பள்ளி முதல்வர் ஆர்.ஈஸ்வரன் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், கே.வி.எம் கணேஷத் தேவர், எம்.எம்.எஸ் அப்துல் கரீம், இராம. குணசேகரன், ஆர்.எஸ் வெங்கடாசலம், அக்ரீ எம்.எம் கணேஷன், ஆர்.அண்ணாமலை, ஆர். ஆத்மநாபன், எம்.மனியரசர், எல்.சிவா, எஸ். செல்வகுமார், எம்.நிஜாமுதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாழ்வின் வெற்றி !

வ்வையகத்தார் வாழும் வாழ்வினை இரு வகையாகப் பகுக்கலாம். 'எப்படியும் வாழலாம்', என்பது ஒரு வகை; 'இப்படித்தான் வாழவேண்டும்' என்பது மற்றொரு வகை. இவ்விரண்டில் எவ்வகை வாழ்வில் வெற்றி உள்ளது என்பதை ஆராய வேண்டுவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

'வெளுத்ததெல்லாம் பாலல்ல; மின்னுவதெல்லாம் பொன்னல்ல; என்றவாறு வெற்றிபோல் தோன்றுவதெல்லாம் வெற்றியாகாது. வாழ்வின் உண்மையான வெற்றி என்பது என்ன? புவியோர் புகழ்ந்தேத்தப் பொருளீட்டி வாழ்தல்தான் வாழ்வின் வெற்றி என்று சொன்னால், 'எப்படியும் வாழலாம்' என்று வகையினர் வாழ்வுதான் வெற்றிக்குரிய வாழ்வு என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும். ஆனால் பொருள் மட்டும் சேர்த்துப் புகழ்பட வாழ்வதை வாழ்வின் வெற்றியாக எந்த உலக அறிஞரும் என்றுமே ஒத்துக்கொண்டது இல்லை. அதனால் பொருளீட்டி வாழ்வதை வாழ்வின் வெற்றியாகக் கொள்ள இடமில்லை என்று பொருளல்ல. பொருளைக் கள்ள வழியில் பெறாது, நல்ல வழியில் பெற்றிருந்தால் அதனை வெற்றியாக எடுத்துக்கொள்வதில் தவறில்லை. புகழினை வன்முறையில் பெறாது, மென்முறையில் பெற்றிருந்தால் அதையும் வெற்றியாக ஏற்றுக்கொள்வதில் தவறில்லை.

கல்வி கற்றல், தொழில் புரிதல், வர்த்தகம் செய்தல், சமூகத்தோடு ஒழுகல் போன்ற வாழ்வின் எந்தப்பகுதியாக இருந்தாலும் சரிதான், அவை குறுக்கு வழியில்லாது, நேரான வழியில் நிகழ வேண்டும். அதுதான் வாழ்வின் உண்மையான வெற்றியாகும். சில நேரங்களில் குறுக்கு வழியில் வெற்றி கிட்டினாலும், அவ்வெற்றிக் கானல் நீர்போல் காட்சி தந்து விரைவில் மறைந்துவிடும். நேரான வழியில் கிட்டும் வெற்றியே மலைபோல் நிலைபெற்று நிற்கும் நிரந்தர வெற்றியாகும்.

சவுக்குத் தோப்பொன்றில் குறுக்கும் நெடுக்குமாக வளைந்து வளரும் மரங்கள் அடுப்பு எரிக்கும் விறகுகளாகத்தான் பயன்படும். அவை நெருப்புக் கொழுந்தில் அகப்பட்டு இறுதியில் சாம்பலாகி விடுவதைக் காணுகிறோம். ஆனால் அதே தோப்பில் நேராக நிமிர்ந்து வளரும் மரங்கள் பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக்கொடியினைத் தாங்கி நிற்கப் பயன்படுகின்றன. அவற்றில் கொடியேற்றி மரியாதை செலுத்தும் போது, அதில் அந்தக் கொடிக் கம்பத்திற்கும் பங்குண்டுதானே! அதுதான் நேர்மைக்குக் கிடைக்கும் சீர்மை.

வன்முறை வாழ்வில் தோற்றமளிக்கும் வெற்றியும் வாழ்த்துக்குரியதாகாது. மென்முறை வாழ்வின் வரும் வெற்றியே மேன்மையக்குரியது. 'இப்படித்தான் வாழ வேண்டும்' என்ற நெறியில் நூறாண்டுகளுக்கு மேலான வாழ்ந்து வாழ்வின் வெற்றியை பெற்றிருந்தார் பெரியார் ஒருவர். அவர் தம்வாழ்வின் இறுதிக்கட்டத்தில் கிடந்தபோது, அவரது நீண்ட வாழ்வின் வெற்றிக்குரிய காரணத்தைக் கேட்டபோது, பேசச் சக்தியற்றிருந்த அப்பெரியார் பற்கள் அனைத்தையும் இழந்திருந்த தன பல் ஈறுகளைத் தொட்டுக்காட்டினார். பின்னர் தனது நாவை நீட்டித் தட்டிக் காட்டினார். பற்கள் வலிமையானது; வன்மையானது; ஆனால் இடையிலேயே தோன்றி, இடையிலேயே மறைந்து விட்டன. நாவைப்போல் மென்முறையில் வாழ்ந்ததுதான் தன் வாழ்வின் வெற்றிக்குக் காரணமாகும் என்பதைத்தான் அப்பெரியார் தன் செயல்கள் மூலம் தெளிவுபடுத்தினார்.

நேரான மென்மையான வாழ்வினை மேற்கொண்ட புத்தர் பிரான், ஏசுநாதர், நபிகள் நாயகம் போன்ற அருள் நெறித்தலைவர்கள் கன்பூஷியஸ், விவேகானந்தர், முகைதீன் அப்துல் காதர் ஜெய்லானி போன்ற மெய்ஞான மேதைகள், சாக்ரடீஸ், ரூசோ, இமாம் கஸ்ஸாலி போன்ற சித்தனைச் சிற்பிகள், ஆப்ரஹாம் லிங்கன், காந்தியடிகள், அபுல்கலாம் ஆஸாத் போன்ற  அரசியல் அறிஞர்கள், நியூட்டன், சர்.சி.வி ராமன், டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் போன்ற விஞ்ஞான வித்தகர்கள் நேர்மை நெறி நின்று வாழ்ந்த காரணத்தால்தான் அழியா புகழோடு இன்றும் நம்மிடையே வாழுகின்றார்கள் என்பதை நாம் நினைவில் கொள்வோமாக.

எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் எம்.ஏ., பி.எஸ்சி., பி.டி
தலைமை ஆசிரியர் (பணி நிறைவு)
அதிராம்பட்டினம்
தஞ்சாவூர் மாவட்டம்.

அரசியலுக்கு வரும் ரஜினிக்கு அதிரை பாருக் வழங்கும் ஆலோசனை !

அதிரை பாருக்
அவன் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது. அவன் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது

என்ன சொன்னார்? என்ன சொல்கிறார்? நாளை என்ன சொல்வார்?
1996 முதல் தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்படும் திரு. ரஜினிகாந்த் அவர்களைப் பற்றித்தான் என்னுடைய கருத்துக்களை பதிவிட விரும்புகின்றேன். இதன் மூலம் ஒட்டுமொத்த கட்சிகளுக்கும், ஊடகங்களுக்கும் அவரது படை வீரர்களான ரசிகர்களுக்கும் நுணுக்கமான பல தகவல்கள் உள்ளன.

அரசியலுக்கு நான் புதிதல்ல என்பதும், அரசியலின் ஆழம் (Political Depth) தெரிந்ததால் தயங்குகிறேன் என்பதும், ஜெயிக்க வீரம் மட்டும் போதாது; வியூகமும் தேவை (மூளை வேலை செய்ய வேண்டுமென தலையில் கையை வைத்து பேசினார்) என அவர் பேட்டி கொடுத்ததையும் பார்த்தோம்; படித்தோம். ஆழம் தெரிந்ததால்.... எவ்வளவு பேசினாலும் என்ன அறிவுரை மக்களுக்கு சொன்னாலும் வழக்கம் போல் மற்ற கட்சிகள் கொடுக்கின்ற பணத்திற்கு அடிமையாகி நம்மை புறக்கணித்து விடுவார்களோ/ முழுமையான வெற்றியை தர மாட்டார்களோ என ஆழ்ந்து சிந்திப்பதைத்தான் ஆழம் என்று அவர் கூறுவதாக, கருதுவதாக நான் கருதுகின்றேன். அந்த  ஆழத்தைப் பற்றி அவர் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை என்பதே என்னுடைய கருத்து.

அரசியலில் SYSTEM கெட்டு விட்டது என்று அவர் ஏற்கனவே ஆதங்கப்பட்டு சொன்னது மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்குவதைப் பற்றித் தான்  என்பதை நான் ஏற்கனவே என்னுடைய  செய்திகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.  1967  முதலே ஓட்டுக்கு பணம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் (அப்போது ருபாய் 10, 20 அல்லது 50 என கொடுத்திருக்கலாம்) அது இன்னமும் தொடருகிறது என பல்வேறு அரசியல் கட்சிகளும் பேசுவதை காண முடிகிறது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதை எங்களால் தடுக்க முடியவில்லை என தமிழ்நாட்டில் இருந்த ஒரு தேர்தல் அதிகாரி (திரு. நரேஷ் குப்தா என்பதாக எனக்கு ஞாபகம் இருக்கிறது) டெல்லியில் இருந்து பேட்டி கொடுத்ததாக. பத்திரிக்கைகளில் நான் படித்த ஞாபகம் இருக்கிறது. தேர்தல் காலங்களில் அரங்கேறும் விதி மீறல்களை சட்ட விரோதமான செயல்களை தேர்தல் அதிகாரிகளால் தடுக்க
முடியவில்லை என்றால், அவர்கள் அந்த பொறுப்புகளிலிலிருந்து விலகி விட வேண்டும்.

அதே போல் கடவுள் மீது சத்தியம் செய்து பதவிப் பிரமாணம் எடுப்பவர்கள் அதைத் தங்களால் அரசியலில் காப்பாற்ற முடியாது என்று எண்ணினால் அவர்களுக்காகவும், அவர்களது குடும்பத்தாரின் நோயற்ற நிம்மதியான வாழ்கைக்காகவும், சுருக்கமாக சொன்னால், கடவுளின் கோபத்திற்கு மக்கள் பலியாகி விடக் கூடாது என்ற தூய எண்ணங்களுடன் தங்களது பதவிகளை (அது எதுவாக இருப்பினும் சரி) விட்டு விலகி நல்லவர்களுக்கு வழி விட வேண்டும். இல்லையென்றால் கடவுள் மீது சத்தியப் பிரமாணம் எடுக்கும் வழிமுறையை அரசியல் சாசனத்தில் இருந்தே நீக்கி விட வேண்டும். இல்லையென்றால் இந்த நாடு தெய்வக் குற்றத்துக்கு ஆளாகி பல்வேறு
இயற்கை பேரழிவுகளால், திடீர் நோய்களால் மக்கள் கூட்டம் கூட்டமாக அழிய வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதை (அது நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு காரனங்களுக்காக ஏற்படுவதை கண்கூடாக காண்கின்றோம்) எச்சரிக்க விரும்புகின்றேன்.

அரசியலில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் ஆட்சி பொற்காலம் என பல்வேறு கட்சித் தலைவர்களும் இன்னமும் புகழ்வதைக் காண முடிகிறது. இந்த நாட்டின் பல முக்கிய தலைவர்களால் அவர் போற்றப்பட்டவர். காமராஜர் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமானவர் என்பது ஊரறிந்த விஷயம். எனவே, காமராஜர் ஆட்சி அமைப்போம் என கூறுபவர்கள் காங்கிரஸ் கட்சியை எப்படி ஒதுக்க முடியும். ஒதுக்கினால், அதற்குப் பெயர் காமராஜர் ஆட்சியே அல்ல. இப்போதுள்ள சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியை ஒதுக்கி விட்டு எந்த கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது.

தமிழ்நாட்டில் அடுத்தது கூட்டணி ஆட்சி தான் (Coalition Govt) என்பதும் மத்தியில் 2019 ல் காங்கிரஸ்ஆட்சி தான் என்பதும் பல மாதங்களுக்கு முன்பே என்னால் மாண்புமிகு காங்கிரஸ் தலைவர் ராகுல் அவர்களுக்கு (Hon’ble Congress President Shri Rahul Gandhi) எழுதப்பட்டு விட்டது. அதற்குத் தோதாக அனுசரித்து வியூகத்துடன் அரசியல் கட்சிகள் செயல்பட்டால் அவர்களுக்கு பலன் உண்டு. போர் வரும் போது பார்க்கலாம் என்று திரு. ரஜினி அவர்கள் சொன்ன கொஞ்ச நாளில் ஒரு சிறிய போர் வந்தது. அந்தப் போர் முடிந்து விட்டது (21.12.2017). அவரது போருக்கான ஒத்திகையாக அவரும் மற்ற கட்சிகளும் இதை பார்கின்றனவா?. 1996 முதல் அவரது ரசிகர்கள் போருக்கு தயாராகவே இருகின்றனர் அப்போது அவர்கள் தூக்கிய துப்பாகிகள் துருப்பிடித்து விட்டதால்  அதை தூக்கி எறிந்து விட்டு புதிய துப்பாகிகளுடன்

2015 முதல் போருக்கு தயாராகிவிட்டனர். இந்த முறை அவர்கள் தூக்கிய துப்பாக்கிகளை கீழே போட தயாராக இல்லை என்பதை அவர்களது உணர்ச்சிபூர்வமான செய்திகள் நமக்கும் அவர்களது படை தளபதிக்கும் உணத்துகின்றன. போர்  தமிழ்நாட்டைக் கடந்து டெல்லி வரை செல்ல வேண்டும் என்பதே அவர்களது தளபதியின் இலக்கு என்பதையே நான் கருதுகின்றேன். போருக்கான தேதியை விரைவில் சொல்கின்றேன். 3  மாதத்தில் சொல்கின்றேன் 2019 ல் சொல்கின்றேன் என்பதையெல்லாம் அவரது சிப்பாய்கள் ஏற்றுகொள்ள தயாராக இல்லை என்பதே என் கணிப்பு.
3  மாதத்தில் போர் வரும் என்று ஒரு தளபதி அறைகூவல் விடுகிறார். எந்தப் போரையும் சந்திக்க எங்கள் சிப்பாய்கள் தயார்  எனவும் 2021  வரை போரே வராது எனவும் அப்போது போர் வந்தாலும் எங்கள் படைதான் வெல்லும் எனவும் இன்னொரு தளபதி ஆக்ரோஷமாக கூறுவதை காண முடிகிறது.போர் வந்தால் யாருக்கு பின்னால் அணிவகுத்து செல்வதென எதிரணி தளபதிகளும் அவர்களது சிப்பாய்களும் யோசிக்க ஆரம்பித்து விட்டனர். கூடிய விரைவில் அதற்கெல்லாம் முடிவு தெரிந்து விடும். பாவங்கள் அவனால் மன்னிக்க கூடியவை (அவன் நாடியவர்களுக்கு) ஆனால் மன்னித்து விடுவான் என்ற நோக்கில் அடுத்தடுத்து பாவங்களை செய்பவர்களுக்கு மன்னிப்பே கிடைக்காது. பாவச் செயல்களில் இருந்து மீண்டு திருந்தி வாழ்பவர்களை நாம் கேலி கிண்டலாக பேசக் கூடாது. காரணம் ஒரு நாள் நாமும் அந்த நிலைக்கே தள்ளப்பட்டு விடுவோம் (நம்மையும் அறியாமல்). உலகில் உண்மையான் ஆன்மீகவாதிகள்  10% பேர் இருப்பார்களா என்பது கேள்விக்குறியான விஷயம். ஆன்மீக சிந்தனை உள்ளவர்கள் அரசியலுக்கு வரலாமா? . அரசியல்வாதிகளிடம் ஆன்மீகம் இல்லாத போது மத சார்பற்ற ஆன்மீகவாதிகள் அரசியலில் நுழைவதை எப்படி தவறு எனக் கூற முடியும். மத சார்பற்ற  நிலையில் மனிதனை மனிதனாக என்னும் போது மட்டும் தான் உண்மையான் ஆன்மீகம் நமக்கு பலன் தரும். திரு ரஜினி அவர்களது அரசியல் பிரவேசம் தொடர்பாக ஏகப்பட்ட செய்திகள், விவாதங்கள் நாள் கணக்கில் ஓடிக்கொண்டிருகின்றன,

திராவிட கட்சிகளுக்கு எதிராக அரசியல் செய்வீர்களா? – கேள்வி
இதற்கு அவரது பதில் “ No Comments” காரணம் தான்  சேரவுள்ள அல்லது தன்னிடம் சேரவுள்ள கட்சிகளை குழப்பக்கூடாது என்பதற்காகவே இந்த பதிலை அவர் சட்டென்று கூறியிருக்கலாம். அப்படித்தான் நான் கருதுகின்றேன். அவரது அரசியலுக்கு அவருடைய வயதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. இளைஞர்களையும், திறமையானவர்களையும் ஒதுக்கிவிட்டு 70 முதல் 80  வயதுள்ள அல்லது இதையும் தாண்டியவர்களை எல்லாம் பல்வேறு கட்சிகளும் வேட்பாளர்களாக நிறுத்துவதை கண்கூடாக காண முடிகிறது. ஒருவரால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற விதி இருந்தால். அதை எவராலும்  மாற்ற முடியாது அனால் அந்த மாற்றத்திற்கான காரணிகள் எவை என்பததைத் தான் அரசியல் கட்சிகள் சிந்திக்க வேண்டும். திரு. ரஜினி அவர்களும் அவரது ரசிகர்களும் கூட காமராஜர் ஆட்சி அமைப்போம் என்பதை காண முடிகிறது.

தமிழகத்தில் 1967 முதல் அரசியலும் திரைத்துறையும் சேர்ந்தே உள்ளன. மேலும் பல மாநிலங்களிலும் திரைத்துறையினரை  அரசியலுக்கு பயன்படுத்தும் நடைமுறை இன்னமும் தொடர்கிறது . 1967 ல் காங்கிரஸ் தோற்று தி.மு.க வென்றது. அப்போது எனக்கு வயது 12  அப்போது நிகழ்ந்த அரசியல்  சம்பவங்கள் பல எனக்கு இன்னமும் நினைவில்  உள்ளது.  விருதுநகர் தொகுதியில் கல்லூரி மாணவர் பெ.சீனிவாசன் என்பவர் காமராஜரை தோற்கடித்தார், அதைக் கேட்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் கவலைப் பட்டதும். திரு. M.G.R. அவர்கள் கண்ணீர் விட்டதும் பதிவு செய்யப்பட்ட செய்திகள். காமராஜர் அவர்கள் தோற்றதும் சீனிவாசன் என்பவர் ஜெயித்ததும் ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி ஆனால் அரசியல் வரலாற்றில் அது ஒரு கருப்பு தினம். அந்த மாணவர் இப்போது உயிருடன் இருந்தால்  (05.01.2009 ல் அவர் காலமாகிவிட்டார்) நான் ஜெயித்த போது சந்தோஷப்பட்டேன் ஆனால் நாட்கள் செல்லச் செல்ல ஒரு பெரும் தலைவர் தோற்க நாம் காரணமாகி விட்டோமே என அடிக்கடி எண்ணி வருத்தப் பட்டேன் என்பதாக கூறுவார். எந்த கட்சிகாரர்களிடம் கேட்டாலும் இதே பதில் தான் வரும் தன்னை தோற்கடித்தவரை காமராஜர் அவர்கள் அழைத்து இதுதான் உண்மையான ஜனநாயகம் என பாரட்டியதாக படித்திருக்கின்றேன்.

ஒருவரை கட்சி ஆரம்பிக்கக் கூடாது அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை. இனிமேலும் அவர் தாமதிப்பதை நிச்சயமாக அவரது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை என்பது தெளிவாக புரிகிறது. நான் ஏற்கனவே (2015) அவருக்கு சொன்ன முக்கிய ஆலோசனையின் படி அவர் துரிதமாக செயல்பட்டால் அரசியலில் அவர் பிரகாசிக்க முடியும். வேறு வழியை தேர்ந்தெடுத்தால் அது அவருக்கு எதிர்பார்த்த பலனை கொடுக்காது என்பதே என் கருத்து.
   
31.12.2017  அன்று அவர் என்ன சொல்வார் என்பதை இதிலிருந்தே நீங்கள் புரிந்துகொள்ளலாம். அவர் அரசியலுக்கு வருவதற்கு எனது வாழ்த்துக்கள்.
என்னால் பலன் அடைந்த கட்சிகள் பல உள்ளன. நன்றி!

ஏ. பாருக்,
'அரசியல் விமர்சகர்'
68 காலியார் தெரு,
அதிராம்பட்டினம் - 614 701.
பட்டுக்கோட்டை தாலுகா,
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு.
30-12-2017

சீனாவில் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு!

அதிரை நியூஸ்: டிச.31
சீனாவில் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு

சீனாவின் கிழக்கு ஜியாங்ஸி மாகாணத்தில் வளர்ந்து வரும் கன்சூ நகரின் டாயு கவுண்டியில் பள்ளிக்கூடம் கட்டுவதற்காக தொழிலாளர் நிலத்தை தோண்டிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சுமார் 20 முதல் 30 வரையிலான கருப்புநிற பொருட்களை கண்டனர்.

வேலையை இடைநிறுத்திய கட்டுமானத் தொழிலாளர்கள் அரசுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு வருகை தந்த விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் டைனோசர் முட்டைகள் என்றும் இவை Cretaceous காலத்தை சேர்ந்தவை என்றும் கூறினர்.

முன்பு இப்பிரதேசத்தில் பெரிய ஏரி ஒன்று இருந்திருக்கும், இவை டைனோசர்கள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்ய ஏற்ற இடமாக இருந்திருக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் அம்முட்டைகளை கைப்பற்றி மேற்கொண்டும் ஆராய்வதற்காக அங்குள்ள மியூசியத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

Source: The Independent / Msn
தமிழில்: நம்ம ஊரான்

60 ஆண்டுகள் உற்ற நண்பர்களாக இருந்தவர்கள் உடன் பிறந்த சகோதரர்கள் என கண்டுபிடிப்பு!

அதிரை நியூஸ்: டிச.31
60 ஆண்டுகள் உற்ற நண்பர்களாக இருந்தவர்கள் உடன் பிறந்த சகோதரர்கள் என கண்டுபிடிப்பு.

ஹவாய் தீவு, ஹோனோலூலு நகரில் சுமார் 15 மாத இடைவெளியில் பிறந்தவர்கள் இன்று 70 வயதுகளில் இருக்கும் வால்டர் மெக்பெர்லேன் மற்றும் ஆலன் ராபின்சன். இவர்கள் 6 ஆம் வகுப்பு முதல் ஹோனோலூலுவில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஒன்றாக படித்தவர்கள், ஒன்றாக கால்பந்து விளையாடியவர்கள். இங்கு துவங்கியது தான் இவர்களின் 60 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்திருக்கும் நெருங்கிய நட்பு.

70 ஆண்டுகளுக்கு முன் வால்டர் பிறந்தவுடன் அவரது தாய் குழந்தையை தத்துக் கொடுக்க விரும்பியதை அடுத்து அவரது உறவினர்களே தத்தெடுத்துக் கொண்டனர். அதற்கு 15 மாதங்களுக்குப் பின் பிறந்தவர் ராபின்சன், இவரையும் அவரது தாய் தத்துக் கொடுத்ததால் ஹோனொலூலுவில் வாழ்ந்த இன்னொரு குடும்பம் தத்தெடுத்துக் கொண்டது. பெற்ற தாயின் தத்துக் கொடுப்புகளால் பிரிந்து வளர்ந்தனர் 60 ஆண்டுகளுக்கு மேல் ஆனால் தாய்வழி சகோதரர்கள் என்று தெரியாமலேயே. இதில் வால்டரின் தந்தை யார் என்றே தெரியவில்லை.

தங்களுடைய பெற்றோர்கள் பற்றி அறிய வேண்டும் என தனித்தனியாக தேடி வந்த நிலையில் நண்பர்களின் மரபணு சோதனையே இருவரும் ஒரு தாய் மக்கள் நாங்கள் என கண்டறிய உதவியுள்ளது. இந்த உண்மையை உணர்ச்சிகரமிக்க குடும்ப ஒன்றுகூடலின் வழியாக அறிவித்துள்ளனர். இது தங்களுக்கு கிடைத்த கிருஸ்துமஸ் பரிசு என்றும் அகமகிழ்ந்துள்ளனர். இனி பணிஓய்வுக்குப் பின் சகோதரர்களின் குடும்பங்கள் இணைந்து ஒன்றாக வாழ்வதற்கு முடிவு செய்துள்ளனர்.

மேற்கத்திய கலாச்சார தாயால் வந்த வினை!

Source: Gulf News / CNN
தமிழில்: நம்ம ஊரான்
 
 
 

சவுதி ஜித்தாவாழ் அதிரை பிரமுகர்களின் ஒருநாள் குடும்ப சுற்றுலா (படங்கள்)

அதிரை நியூஸ்: டிச.31
சவுதி ஜித்தா பகுதியில் நூற்றுக்கணக்கான அதிரை பிரமுகர்கள் அங்குள்ள பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இதில், சிலர் குடும்பத்துடன் அங்கு வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜித்தாவில் பணியாற்றும் சமூக ஆர்வலர் அஜ்வா நெய்னா ஏற்பாட்டின் பேரில், விடுமுறை தினமான சனிக்கிழமை மெக்காவில் உள்ள புனிதமிகு வரலாற்று சிறப்பிடங்களை காண திட்டமிட்டனர். அதன்படி, சவுதி ஜித்தாவில் வசிக்கும் 10 குடும்பங்களை சேர்ந்த பெண்கள், சிறுவர்கள் உட்பட 50 பேர் நேற்று சனிக்கிழமை காலை பேருந்தில் பயணம் மேற்கொண்டனர். பயண குழுவில் அஜ்வா நெய்னா, அஸ்லம், சம்சுதீன், தாஜுதீன், ஆபிதீன், அஜீஸ், மன்சூர், மீராஷா, இப்ராஹீம், ரித்வான், அஹமது அலி, ஹபீப், இலியாஸ், ஜமால் ஆகியோர் குடும்பங்களை சேர்ந்த பிரமுகர்கள் இடம்பெற்றனர்.

பயணத்தை அப்துல் அஜீஸ் மகன் அப்துல் பாசித் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். இலங்கை பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர் மவ்லவி ஜியாத் மெக்காவில் உள்ள இடங்களின் வரலாற்று சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தார். இதில், ஹுதைபியா உடன்படிக்கை, அருங்காட்சியகம், அரஃபா, ஜபல் அல் நூர், முஜ்தலிஃபா, மினா, ஹிரா குகை அடிவாரம் உள்ளிட்ட மேலும் சில வரலாற்று சிறப்பிடங்களை கண்டு ரசித்தனர். பயண முடிவில் மீராஷா ராஃபியா மகள் ஷபீனா துஆ ஓதி நிறைவு செய்தார்.

சுற்றுலா பயணத்திற்கு தலைமை ஏற்று அழைத்து சென்ற அஜ்வா நெய்னா கூறியது;
'சவுதி ஜித்தாவில் பணியாற்றும் அதிரை குடும்பங்களில் சிலர் வாரந்தோறும், விடுமுறை தினங்களில் ஒன்று கூடி உணவருந்துவது, அருகில் உள்ள பார்க், மியுசியம் போன்ற இடங்களுக்கு சென்றுவருவது வழக்கம். இந்தமுறை, புனிதமிகு மெக்கா மாநகரின் வரலாற்று சிறப்பிடங்களை காண சுற்றுலா செல்ல திட்டமிட்டோம். அதன்படி, காலை 8.30 மணிக்கு புறப்பட்டு,  இரவு 8 மணிக்கு மீண்டும் ஜித்தா வந்தடைந்தோம். இதன்மூலம், மெக்காவில் உள்ள புனிதமிகு இடங்களில் சிலவற்றை முதன்முறையாக குடும்பத்துடன் காணநேரிட்டது. மேலும் குடும்பங்களுக்கிடையே பரஸ்பரம் நலம் விசாரிப்பு, நெருங்கிப் பழகும் வாய்ப்பு, ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறவும், புரிந்துணர்வு ஏற்படவும், கலாச்சாரத்தை கட்டிக்காக்கவும் இந்த சுற்றுலா பயணம் அமைந்தது. இந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம்' என்றார்.