.

Pages

Sunday, September 30, 2018

அதிரையில் மமக அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்: நேரடி ரிப்போர்ட் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப். 30
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சியில் அக்டோபர் 7ஆம் தேதி அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு நடைபெறுவதையொட்டி, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்திற்கு, தமுமுக - மமக தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை எஸ்.அகமது ஹாஜா தலைமை வகித்தார். கூட்டத்தை, கே. ஜாகிர் உசேன் கிராத் ஓதி தொடங்கி வைத்தார்.

தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஓ செய்யது முகமது புஹாரி, மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் மதுக்கூர் எம். ஃபவாஸ், மமக மாவட்டச் செயலாளர் நூர் முகமது, தமுமுக மாவட்டச் செயலாளர் எஸ்.சேக் மைதீன், தமுமுக - மமக மாவட்ட பொருளாளர் இன்ஜினியர் இலியாஸ், மாநாடு குழு அதிரை பேரூர் தலைவர் ஜே. அப்துல் கபூர் (மரைக்கான்), தமுமுக/மமக அதிரை பேரூர் தலைவர் எம்.சாகுல் ஹமீது, தமுமுக - மமக அதிரை பேரூர் பொருளாளர் எஸ்.முகமது யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் கோவை செய்யது கலந்துகொண்டு அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு ஏன்? என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார். மேலும் கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை பேச்சாளர் திருச்சி ரபீக்  கலந்துகொண்டு பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. முத்தலாக் தடை சட்டதை ரத்து செய்ய வேண்டும்.

2. கடைமடைப் பகுதிக்கு தாமதமின்றி உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும்.

3. கஞ்சா, லாட்டரி, நம்பர் லாட்டரி ஆகியவற்றை ஒழிக்க வேண்டும்.

4. 24 மணி நேர டாஸ்மாக் மதுபான கடையை ஒழிக்க வேண்டும்.

5. ஓரினச்சேர்க்கை தீர்ப்பை மறுபரீசிலனை செய்யவேண்டும்.

6. ஏரிப்புறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பிலால் நகர், ஆதம் நகர் பகுதிகளில்  குடிநீர், சுகாதாரம் 20 ஆண்டுகளாக கேள்வி குறியாக உள்ளது. இவற்றை சீர் செய்ய வேண்டும்.

7. அதிரை ~ மதுக்கூர் வழித்தடத்தில் புதிதாக பஸ் சேவை தொடங்க வேண்டும்.

8. அதிராம்பட்டினம் பகுதி பொதுமக்களுக்கு தொடர்ந்து சிறுநீரகப் பிரச்சனையால் தொடர் மரணம் ஏற்படுகிறது. எனவே, அதிராம்பட்டினம் மட்டும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விநியோகிக்கும் குடிநீரை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்களை தமுமுக, மமக நிர்வாகிகள் ஜெ.ஹக்கீம், ஏ.சலீம், இம்ரான், அசார், எஸ்.முகமது யூசுப், நசுருதீன், ரியாஸ், சேக்தாவூது ஆகியோர் வாசித்தனர்.

தொடக்கத்தில், தமுமுக அதிரை பேரூர் செயலாளர் எம்.ஆர் கமாலுத்தீன் வரவேற்றுப் பேசினார். முடிவில், மமக அதிரை பேரூர் செயலர் எஸ்.ஏ இத்ரீஸ் அகமது நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில், தமுமுக, மமக கட்சியினர், தோழமை கட்சியினர், இளைஞர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
 
 
 

காதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை முன்னாள் மாணவர்கள் சங்கமம் நிகழ்ச்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.30
அதிராம்பட்டினம், காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை முன்னாள் மாணவ, மாணவிகளின் சங்கமம் நிகழ்ச்சி கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரிச் செயலர் எஸ்.ஜெ அபுல் ஹசன் தொடக்க உரை நிகழ்த்தினார். தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் அ.கலீல் ரஹ்மான் அறிமுக உரை நிகழ்த்தினார். கல்லூரி ஐ.க்யூ.ஏ.சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எம்.நாசர், கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமைப்பாளர் பேராசிரியர் என்.ஜெயவீரன், கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முன்னதாக, கல்லூரி தமிழ்த்துறைத் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் வரவேற்றுப் பேசினார். முடிவில், பேராசிரியை ஆ. யமூனாம்பாள் நன்றி கூறினார்.

விழாவில், முன்னாள் மாணவர்களின் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கல்லூரியில் தமிழ்த்துறை பிரிவில் கல்வி பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் 100 பேர் கலந்துகொண்டனர்.
 

அதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் மருத்துவ ஆலோசனை முகாம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.30
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனை இணைந்து குழந்தையில்லா தம்பதிகளுக்கு இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் நோய் கண்டறியும் முகாம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் சாரா திருமண மஹாலில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது

முகாமிற்கு, லயன்ஸ் சங்கத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் தலைமை வகித்தார். லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் பி. கணபதி, லயன்ஸ் சங்க உறுப்பினர் வளர்ச்சி தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமை லயன்ஸ் சங்க மண்டலத்தலைவர் பொறியாளர் கே. ஸ்ரீராம் தொடங்கி வைத்தார். முகாமில் திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், டாக்டர் கலைச்செல்வி ராஜரெத்தினம், டாக்டர் இராஜரெத்தினம் ஆகியோர் தலைமையிலான 15 பேர் அடங்கிய மருத்துவக்குழுவினர் பயனாளிகளை பரிசோதித்து ஆலோசனைகள் வழங்கினர். இதில், மேலதிக சிகிச்சை தேவைப்பட்டோருக்கு வழிக்காட்டுதலும் வழங்கப்பட்டது. இம்முகாமில், 100 க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

இதில், திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனை மேலாளர் சரவணகுமார், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கச் செயலாளர் எம். அப்துல் ரஹ்மான், பொருளாளர் எம்.ஏ அப்துல் ஜலீல், லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர், ஹாஜி எஸ்.ஏ அப்துல் ஹமீது, என்.ஆறுமுகசாமி, எம்.நிஜாமுதீன், ஓம் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

குவைத்தில் அனைத்து பட்டதாரிகளின் சான்றிதழ்கள் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்ய முடிவு!

அதிரை நியூஸ்: செப்.30
குவைத்தில் அனைத்து பட்டதாரிகளின் சான்றிதழ்கள் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

குவைத் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி குவைத்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் சமர்ப்பித்துள்ள பட்டப்படிப்பு சான்றிதழ்களின் நம்பகத்தன்மை குறித்து அந்தந்த நாட்டு கலாச்சார அலுவலகங்களின் உதவியுடன் சோதிக்கப்படும் என குவைத் உயர்கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேற்காணும் தீர்மானத்தினை தொடர்ந்து குவைத் சிவில் சர்வீஸ் கமிஷன் (CSC) கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் முதற்கட்டமாக சுமார் 460 ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்களை பரிசோதிக்க குவைத் கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நிறைவுற்ற பின்பே அவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 460 பேரும் வளைகுடா உள்ளிட்ட வெளிநாட்டினர் ஆவர்.

Source: The Times Kuwait
தமிழில்: நம்ம ஊரான்

துபையில் ஆண் ஒருவரை நடுரோட்டில் கன்னத்தில் அறைந்த பெண்ணிற்கு நேர்ந்த கதி!

அதிரை நியூஸ்: செப்.30
ஆண் ஒருவரை கழுத்து சட்டையை பிடித்துக் கொண்டே 6 மணிநேரம் நடக்கவிட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த பெண்.

துபையில் வீட்டு வாடகையை கொடுக்காமல் கடந்த ஜனவரி மாதம் கம்பி நீட்டிய ஆண் ஒருவரை எதேச்சையாக தெருவில் கண்ட பெண் ஒருவர் தன்னுடைய இன்னொரு ஆண் தோழரின் உதவியுடன் சட்டையின் கழுத்தை பிடித்தவாறே பர்துபையிலுள்ள ரிஃபா போலீஸ் ஸ்டேஷனுக்கு (Rifa'a Police Station) நடக்கவிட்டு இழுத்து வந்தார்.

மாலை 7 மணியளவில் மம்ஸர் பூங்கா அருகில் பிடித்த நபரை பர்துபையிலுள்ள ரிஃபா காவல் நிலையத்திற்கு நள்ளிரவு சுமார் 1 மணியளவில் நடக்கவிட்டே கொண்டு வந்து சேர்த்தனர். அந்த ஆணை இழுத்து வரும் வழியில் கன்னத்தில் அறைந்தும் ஆண் தோழரைவிட்டு ரோட்டில் அவ்வப்போது அடித்துக் கொண்டும், அவ்வாறு அடிப்பதை மகிழ்ச்சியாக செல்போனில் அந்த ஆண் தோழர் வீடியோ எடுத்துக் கொண்டும் வந்தனர்.

சுமார் 6 மணிநேரம் சட்டையின் கழுத்தை பிடித்தவாறே வாடகை ஏய்ப்பாளரை பிடித்து வந்த அந்தப் பெண்ணும் அவரது தோழரும் தற்போது கம்பி எண்ணுகிறார்கள். ஏன்? அமீரக சட்டப்படி எவரையும் கைநீட்டி அடிப்பதும், பொதுவெளியில் வைத்து அவமானப்படுத்துவதும், அதை வீடியோ எடுப்பதும், (6 மணிநேரம் நடக்க வைத்ததன் மூலம்) சித்திரவதை செய்ததும் குற்றமாக பதியப்பட்டது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் 8-வது இடத்தில் அமீரகம்!

அதிரை நியூஸ்: செப்.30
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் அமீரகம் 8வது இடத்திற்கு முன்னேறியது

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் உடைய நாடுகளின் பட்டியலில் அமீரக பாஸ்போர்ட் 8வது இடத்திற்கு முன்னேறியது. சுமீபத்தில் பரகுவே மற்றும் செர்பியா ஆகிய நாடுகளுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து இச்சிறப்பு கிடைத்தது. அமீரக பாஸ்போர்ட் உடையவர்கள் இனி 158 உலக நாடுகளுக்கு விசா இன்றி அல்லது ஆன் அரைவல் விசாவின் கீழ் செல்லலாம்.

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டிற்குள் உலகின் முதல் 5 சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலின் கீழ் வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் 26 செங்கன் நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம் என்ற ஒப்பந்தமே அமீரகத்தின் மிகப்பெரிய ராஜாங்க சாதனையாக பார்க்கப்படுகின்றது.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

லயன்ஸ் சங்கம் சார்பில் முத்தம்மாள்தெரு கிராம பஞ்சாயத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.30
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம், காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் எக்ஸ்னோரா அமைப்பு இணைந்து கூண்டுகளுடன் கூடிய மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் தலைமை வகித்தார். முத்தம்மாள்தெரு கிராம பஞ்சாயத் நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், தில்லைநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியை, லயன்ஸ் சங்கத் தலைவர் டி.பி.கே.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். முத்தம்மாள்தெரு கிராம சாலைகளின் 10 இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இவற்றை ஆடு, மாடு போன்ற கால்நடைகளிடமிருந்து பாதுகாக்க மரக்கன்றை சுற்றி இரும்பிலான வலைக் கூண்டுகள் அமைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், லயன்ஸ் சங்கச் செயலாளர் எம்.அப்துல் ரஹ்மான், பொருளாளர் எம்.ஏ அப்துல் ஜலீல், லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர், எம்.அகமது, என்.ஆறுமுகச்சாமி, மாணவர்கள் எக்ஸ்னோரா அமைப்பின் தலைவர் சமீர் அலி, ஜெயசூர்யா  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.