அதிரை நியூஸ்: ஏப்.28
கரோனா தொற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒன்பது நபர்கள் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.
அதிராம்பட்டினம், கும்பகோணம், அம்மாபேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த 24 நபர்கள் ஏற்கனவே சிகிச்சை முடித்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இன்று மேலும் 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்தது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ஒன்பது நபர்கள், திருவையாறு பகுதியைச் சேர்ந்த மூன்று நபர்கள், திருவோணம் பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த ஐந்து நபர்கள், அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பதினொரு நபர்கள், அம்மாபேட்டையைச் சேர்ந்த நான்கு நபர்கள், தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த மூன்று நபர்கள் உட்பட 55 நபர்களுக்கு இதுவரை கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுவரை உறுதி செய்யப்பட்ட 55 நபர்களில் 24 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 4 நபர்கள், வல்லம் பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்கள், அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த 7 மாத பெண் குழந்தை உட்பட 4 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் என இன்று ஒரே நாளில் சிகிச்சை பெற்று வந்த 9 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 55 நபர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் 24 நபர்கள் ஏற்கனவே சிகிச்சை முடித்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இன்று மேலும் 9 நபர்கள் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த 33 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 22 நபர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று குணமடைந்து வீடு திரும்பிய 9 நபர்களை தஞ்சாவூர் மண்டல கொரோனா தடுப்புக்குழு அலுவலர் எம்.எஸ்.சண்முகம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்த ராவ், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் திருமதி.குமுதா லிங்கராஜ், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் மற்றும் மருத்துவக்கல்லூரி மருத்துவர்களும் குணம் அடைந்தவர்களுக்கு பழங்கள் மற்றும் குணமடைந்ததற்கான சான்றிதழினையும் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.
மேலும், குணமடைந்து வீடு செல்லும் 9 நபர்களும் தொடர்ந்து 14 நாட்கள் அவரவர் இல்லத்தில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
காய்ச்சல், சளி, இருமல் ஆகிய அறிகுறிகளுடன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ராஜா மிராசுதார் மருத்துவமனையிலும்ää செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியிலும் தனிமைப்படுத்தப்பட்டு மற்றும் சிகிச்சை பெற்ற 3315 நபர்களுக்கு ஸ்வாப் டெஸ்ட் எடுக்கப்பட்டது. 2932 நபர்களுக்கு அறிகுறி இல்லை என தெரிய வந்துள்ளது. 328 நபர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தஞ்சாவூர் மாவட்ட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், கொரோனா நோய் முன்னெச்சரிக்கை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு 9345336838 (வாட்ஸ்அப்), 04362-271695, 1077 (கட்டுப்பாட்டு அறை) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.