.

Pages

Tuesday, April 14, 2020

தஞ்சை மாவட்டத்தில் மூன்று வண்ணத்தில் அடையாள அட்டைகள்: வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பொருள்கள் வாங்க அனுமதி: ஆட்சியர் தகவல்!

அதிரை நியூஸ்: ஏப்.14
பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே வருவதற்கு மூன்று வண்ணத்தில் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளது என
மாவட்ட ஆட்சிதலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (ஏப்.14) வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது;
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றுநோய் உறுதி செய்யப்பட்ட 12 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போதைய கொரோனா தொற்றினை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவுகளை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. நமது மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக கடைப்பிடிக்க வேண்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது .

இந்த அடையாள அட்டை மூன்று வண்ணங்களில் இருக்கும். பச்சை வண்ணத்தில் இருக்கும் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் திங்கள் மற்றும் வியாழன் கிழமைகளிலும், நீல வண்ணத்தில் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளிலும், ரோஸ் வண்ணத்தில் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் புதன் மற்றும் சனி கிழமைகளிலும் தங்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ள குறிப்பிட்ட நாட்களில் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அடையாள அட்டை வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலர்கள் மூலமாக இன்று மற்றும் நாளை அனைத்து வீடுகளிலும் வழங்கப்படும்.

அடையாள அட்டையில் குடும்ப அட்டையில் குறிப்பிட்டுள்ள எண்களையும் அதேபோல் தங்கள் குடும்பத்தின் சார்பில் பொருட்கள் வாங்க வெளியே வரும் நபரின் ஆதார் அடையாள அட்டையின் எண்ணையும் குறிப்பிட வேண்டும் மேலும் ஆதார் எண் குறிப்பிட்டுள்ள அந்த அடையாள அட்டையின் நகல் எடுத்து வர வேண்டும். வெளியிடங்களில் வரும் நபர்களின் அடையாள அட்டைகளை  அரசு அலுவலர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்கள் பரிசோதித்துப் பார்ப்பார்கள்.

தவறாக இருக்கும்பட்சத்தில் அந்த அட்டை பறிமுதல் செய்து குடும்ப உறுப்பினர்கள் யாரும் பொருட்கள் வாங்க வெளியே வருவது முற்றிலுமாக தடை செய்ய நேரிடும். இதை தவிர்க்கும் பொருட்டு அட்டை வைத்துள்ளவர்கள் மட்டும் குடும்பத்திற்கு ஒருவர் வெளியே வந்து தங்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி சென்று மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். தற்போது உள்ள நடைமுறையை போலவே காலை முதல் மதியம் ஒரு மணிவரை தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையைப் பயன்படுத்தி கொண்டு பொருட்களை வாங்கலாம்.

தேவையற்ற நபர்கள் வெளியே வருவதை தவிர்ப்பதற்காக அவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக இந்த நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் தற்போது  நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முழு ஒத்துழைப்பு தருவது போல் தொடர்ந்து தங்கள் ஆதரவை மாவட்ட நிர்வாகத்திற்கு தர வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை எந்த அடையாள அட்டைக்கும் அனுமதி கிடையாது, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆக தஞ்சாவூர் மாவட்டத்தில் கடைபிடிக்கப்படும். மருத்துவத் தேவைக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்த நடைமுறை தடை காலம் முடியும் வரை நடைமுறையில் இருக்கும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு கொரோனா தொற்று சமூக பரவலாக ஆவதை தடுத்திட இந்த நடைமுறையை பின்பற்றி ஒரு சில அசௌகரியங்கள் இருக்கும்பட்சத்திலும் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தஞ்சாவூர் மாவட்ட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், கொரோனா நோய் முன்னெச்சரிக்கை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு 9345336838 (வாட்ஸ்அப்), 04362 - 271695, 1077 (கட்டுப்பாட்டு அறை) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். என இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.