.

Pages

Wednesday, December 31, 2014

அதிரை பேரூராட்சி 'சிறப்பு நிலை' பேரூராட்சியாக தரம் உயர்கிறது !?

தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகள் நான்கு நிலைகளாக ( நிலை-2, நிலை-1 , தேர்வு நிலை, சிறப்பு நிலை ) பிரிக்கப்பட்டு இதில் நமதூர் தேர்வு நிலை பேருராட்சியாக தற்போது உள்ளது.

பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட போது இருந்ததை விட தற்போது பல மடங்கு மக்கள் தொகை பெருகி உள்ளது. நகர எல்லைகளும் விரிவடைந்து சுற்று வட்டாரப்பகுதிகளிலும் குடியிருப்புகள் பெருகி வருகிறது. குறிப்பாக பிலால் நகர், ஆதம் நகர், மேலத்தெரு சானாவயல், சவுக்கு கொள்ளை, நரசிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகள் அதிரையின் ஒரு பகுதியாக கருதும் அளவிற்கு நகரம் விரிவடைந்துள்ளது.

கூடுதல் மானியம், கூடுதல் பணியாளர்கள், துப்புரவு மற்றும் குடிநீர் விநியோகத்திற்கான வாகனங்கள், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தும் வாய்ப்பு, தீயணைப்பு நிலையம், தாலுகா, மகளிர் காவல் நிலையம், மருத்துவமனை தரம் உயர்தல், சிமென்ட் சாலைகள், வீதிகளின் முக்கிய பகுதிகளில் ஹைமாஸ் லைட்டுகள், புதிய பேரூந்து நிலையம், மத்திய, மாநில அரசுகள் நகராட்சிகளுக்கு என ஒதுக்கும் சிறப்பு திட்டங்களும், கூடுதல் மானியமும் பெறுவதற்கு அதிரையை நகராட்சியாக தரம் உயர்த்த அதிரை வாழ் ஆர்வலர்கள் பலர் பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகின்றனர். நகராட்சி அந்தஸ்து பெற தேவையான மக்கள் தொகை, ஆண்டு வருமானம் ஆகியவற்றை அதிரை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அதிரையை பேரூராட்சி தேர்வு நிலையிலிருந்து சிறப்பு நிலைக்கு தரம் உயர்த்த இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.

இதுகுறித்து 14 வது வார்டு உறுப்பினர் என்.கே.எஸ் முஹம்மது ஷெரிப் நம்மிடம் கூறுகையில்...
'அதிரை பேரூராட்சியை தேர்வு நிலையிலிருந்து தரம் உயர்த்தபட இருக்கிறது. அரசின் சார்பில் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும். இதற்கான முயற்சியில் நான் உட்பட பலரும் ஈடுபட்டோம். பேரூராட்சியின் தரம் உயர்வதால் ஊரின் அடிப்படை வசதிகள் பெருகும்' என்றார். 

அரைகுறையாக எரியும் அதிரை பேரூந்து நிலைய ஹைமாஸ் லைட்டை சரி செய்ய பயணிகள் கோரிக்கை !

அதிரை பேரூந்து நிலையம் ஈசிஆர் இணைப்பு சாலையை பெற்றிப்பதால் அதிகப்படியான பேருந்துகள் வந்துசெல்லும். இதனால் இந்த பகுதியில் எந்நேரமும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ஹைமாஸ் லைட் அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் சரியாக எரிந்து வந்த இந்த லைட் தற்போது பழுதாகி காணப்படுகிறது. இதில் ஒரு சில லைட் மாத்திரம் எரிந்து வருகிறது. இதனால் குறிப்பிட்ட பகுதி வெளிச்சமாகவும் மற்ற பகுதி இருட்டாகவும் காணப்படுகிறது. இதனால் பயணிகள் எரிச்சல் அடைந்துள்ளனர். அரைகுறையாக எரியும் ஹைமாஸ் லைட்டுகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏர் ஏசியா நிறுவனத்திற்கு அடுத்த அதிர்ச்சி: ரன்வேயை விட்டு தடம்புரண்டு புல்வெளியில் பாய்ந்த விமானம் !

ஏர் ஏசியா விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டுள்ளதாக வெளியான தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 28ம் திகதி இந்தோனேஷியாவிலிருந்து புறப்பட்ட QZ8501 ஏர் ஏசிய விமான விபத்தே உலகளவில் இன்னும் ஓயாத ஆலைகளாய் இருக்கும் நிலையில், மற்றொரு விபத்து நிகழ்ந்துள்ளது அந்நிறுவனத்திற்கு பேரதிர்ச்சியாய் உள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மனிலாவிலிருந்து(Manilla) 159 பயணிகளுடன் பானே(Banea) தீவில் உள்ள கலிபோவுக்கு(Kalibo) A320 என்ற விமானம் நேற்று புறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கலிபோ விமான நிலையத்தில் குறிப்பிட்ட ஓடுதளத்தில்(runway) விமானத்தை தரையிறக்கும்போது, திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக ஓடியுள்ளது.

இதனால் ஓடுதளத்தை தாண்டி புல்வெளியில் விமானம் பாய்ந்துள்ளது. அப்போது உள்ளே இருந்த பயணிகள் உயிர் பயத்தில் அலறி அழத் தொடங்கியுள்ளனர். ஆனால் விமானத்தின் முன்பகுதி மண்ணில் குத்தி நின்றுவிட்டதால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முத்துப்பேட்டையில் துப்புரவு பணியாளர்கள் போராட்டம் !

முத்துப்பேட்டை தேர்வு நிலை பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருபவர் முருகேஷ். இவரது மனைவியிடம் அங்கு டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்த அல்போன்ஸ். போனில் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த முருகேஷ் மற்றும் அவருடன் வேலை பார்க்கும் துப்புரவு பணியாளர்கள் அல்போன்சை தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த துப்புரவு பணியாளர்கள் அல்போன்சை தாக்கியுள்ளனர்.

ஒரு வாரத்திற்கு பிறகு மீண்டும் வேலைக்கு வந்த அல்போன்ஸ் மற்றும் அவரது நண்பர் தேவதாசையும் மற்ற தொழிலாளர்கள் மீண்டும் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அல்போன்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி துப்புரவு பணியாளர்கள் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த சூப்பர் வைசர் வீரமணி, கவுன்சிலர் அய்யப்பன் ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் திருப்தி அடையாத துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால் நிர்வாக அதிகாரி சித்திவிநாயக மூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அல்போன்சை பணியிடை நீக்கம் செய்வதாக அறிவித்தார். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. டிராக்டரை ஓட்ட ஆள் இல்லாததால் சூப்பர்வைசர் வீரமணி ஓட்டிச்சென்றார். இந்த போராட்டம் சுமார் 3 மணி நேரம் நடந்தது.

நன்றி: மாலைமலர்

உலகின் காஸ்ட்லி போலீஸ் கார்கள் ! [ படங்கள் இணைப்பு ]

கார் என்பது, அதன் உரிமையாளர்களின் கௌரவத்தைப் பறைசாற்றக்கூடிய அம்சம். இது தனிமனிதர்களுக்கு மட்டுமல்ல; ஒரு நாட்டுக்கும் பொருந்தும். எப்படி என்கிறீர்களா? காவல்துறையினர் பயன்படுத்தும் கார்களை வைத்தே, அந்தந்த நாடுகளின் ஸ்டேட்டஸைத் தெரிந்துகொள்ளலாம். உலகின் காஸ்ட்லி கார்கள் கொண்ட காவல்துறையின் லிஸ்ட் இது...
துபாய்:
சென்ற ஆண்டு வரை ஆஸ்டன் மார்ட்டின் கார்களை பயன்படுத்தி வந்த துபாய் காவல்துறை, 4 சீட்டர், அதிநவீன வசதிகள் கொண்ட ஃபெராரி FF மாடலை லேட்டஸ்ட்டாக வாங்கியிருப்பதை ஒப்புக்கொண்டிருக்கிறது. இதில், V12 சிலிண்டர் இன்ஜின் இருக்கிறது. இது ஆல் டைம் ஆல் வீல் டிரைவ் என்பதால், ஆன் ரோடு, ஆஃப் ரோடு, துபாயைச் சுற்றியுள்ள பாலைவன ஏரியா, அவ்வளவு ஏன் - பனிச் சறுக்குகளில்கூட மின்னல் வேகத்தில் குற்றவாளிகளை சேஸ் செய்ய உதவும். ஏற்கெனவே லம்போகினி அவென்டடார் கார்களும் இவர்களிடம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கார்களை வைத்து துபாய் தெருக்களில் பறப்பார்களோ!
இத்தாலி:
இத்தாலி போலீஸ்காரர்கள், எப்பொழுதுமே ரஃப் அண்டு டஃப்பாக இருக்கும் டெரர் குரூப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் குணத்துக்கு ஏற்றபடி வேகத்திலும், பெர்ஃபாமென்ஸிலும் ஈடு கொடுக்கக்கூடியது லோட்டஸ் இவோரா எஸ். இத்தாலியில், போலீஸ் ட்ரெயினிங்கின் குட் புக்கில் இருக்கும் ஜாம்பவான்கள்தான் ராணுவத்தில் ஜவான்களாக முடியும். பிரிட்டிஷ் நிறுவனத்தைச் சேர்ந்த கார் கம்பெனிதான் லோட்டஸ். இதுவும் 4 சீட்டர் கார்தான். ஆனால், ரியர் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. இதில் இருப்பது டொயோட்டாவின் இன்ஜின். சூப்பர் சார்ஜ்டு இன்ஜின் என்றால், 350bhp பவர். மணிக்கு 350 கி.மீ வேகம் வரை பறக்கும். மேலும், ஏற்கெனவே லம்போகினி கலார்டோ கார்களையும் பயன்படுத்தி வரும் இத்தாலி காவல்துறைக்கு, லேட்டஸ்ட்டாக அதே கலார்டோ கார்களில் ஹூராக்கன் எனும் மாடலை காவல்துறைக்கென மாடிஃபை செய்து பரிசளித்திருக்கிறது லம்போகினி நிறுவனம். இதுவும் மணிக்கு 350 கி.மீ வேகத்தில் பறக்கும்.
லண்டன்:
கிட்டத்தட்ட ஃபார்முலா ரேஸ் கார் டைப் மாடல்தான் ஏரியல் ஆட்டம். முழுக்க லேசான பாகங்களால் தயாரிக்கப்படும் இதன் மொத்த எடையே 550 கிலோதான். எனவே, இதில் பயணித்தால் காற்றில் மிதக்கும் அனுபவம் உணரலாம். 500bhp பவர்கொண்ட இந்த ஏரியல் ஆட்டம் V8, 0 - 60 கி.மீ  வேகத்தை வெறும் 2.3 விநாடிகளில் கடக்கும்.

இது தவிர, ஜாகுவார் XF காரும் சைரன் ஒலியுடன் லண்டனில் அடிக்கடி பறந்து கொண்டிருக்கிறது. 271bhp பவர் கொண்ட இது, 0-60 கி.மீ வேகத்தை 6.4 விநாடிகளில் கடக்கும். லண்டனில்  வேலைக்குச் சேரும் போலீஸ்காரர்களுக்கு முதன்முதலில இந்த ஜாகுவாரில்தான் ட்ரெயினிங் நடக்குமாம். இது போக, மாநாடு, ஊர்வலம் போன்ற அமைதியான விஷயங்களுக்கு, மென்மையாக ஃபெராரியிலும் பறக்கிறார்கள் லண்டன் காவல்துறையினர்.
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் அழகான சின்ன நாடு. உலகில் அதிகமாக விற்பனையாகும் டொயோட்டா கரோலா ஆல்டிஸ் கார்களை, சிங்கப்பூரில் அதிகம் பார்க்கலாம். மேலும் சுபாரு, பென்ஸ், மஸ்தா போன்ற கார்களும் சிங்கப்பூர் காவல்துறையின் ஃபேவரைட் வாகனங்கள். லேட்டஸ்ட்டாக லம்போகினி கார்கள், சைரனுடன் சிங்கப்பூர் வீதிகளில் ட்ரையல் அடித்துக் கொண்டிருக்கின்றன.
அமெரிக்கா:
ஃப்ளோரிடா மாகாணத்தில் டாட்ஜ், டெக்ஸாஸில் செர்வலே கேமரோ, மிச்சிகனில் கெடில்லாக் CTS-V, நியூயார்க்கில் செவர்லே இம்பாலா, கேப்ரைஸ், ஃபோர்டு மஸ்டாங், எஸ்கேப், லெக்ஸஸ் என்று வெரைட்டியாக போலீஸ் கார்களை அமெரிக்காவில் பார்க்கலாம். ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற கார் தயாரிப்பு நிறுவனங்களின் தாயகம் என்பதால், இங்கு பெரும்பான்மையாக ஃபோர்டு மற்றும் செவர்லே கார்களுக்குத்தான் முன்னுரிமைபோல!
ஜெர்மனி:
நம் ஊரில் திரியும் ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ், ஃபோக்ஸ்வாகன், ஸ்கோடா போன்ற பாதி பிராண்டுகள் ஜெர்மன் நாட்டுத் தயாரிப்புதான். ஜெர்மனியில் சொல்லவா வேண்டும்? சாதாரண சிட்டி பேட்ரோலுக்கு ப்ராபஸ் சி.எல்.எஸ். ராக்கெட் என்னும் ஜெர்மன் தயாரிப்பு காரைத்தான் பெரும்பான்மையாகப் பயன்படுத்துகின்றனர். இது பென்ஸ் இன்ஜினை மாடிஃபை செய்து உருவாக்கப்பட்ட கார். இதுபோக, போர்ஷே 911 கார்களும் அடிக்கடி ரவுண்டு அடித்துக் கொண்டிருக்கின்றன. விஐபிக்கள் பங்குபெறும் ஊர்வலங்கள், மாநாடுகள் போன்றவற்றிற்குக் கலந்துகொள்ளும் ஆடி R8 GTR கார்கள், பார்ப்பதற்கே அம்சமாக இருக்கும். R8தான் கிரிமினல்களைப் பிடிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. V10 சிலிண்டர் கொண்ட 5.2 லிட்டர் இன்ஜின் கொண்ட இது, 0-100 கி.மீ-யை வெறும் 3.2 விநாடிகளில் கடக்கும்.

- தமிழ்
நன்றி: விகடன்

துபாயில் ஜனவரி 1 ல் கின்னஸ் சாதனை நிகழ்த்த இருக்கும் புர்ஜ் கலீஃபா கட்டிடம் !

2015 புத்தாண்டை வரவேற்க உலகமே கோலாகலமாக தாயாராகிக் கொண்டு இருக்கும் நிலையில், புதுமைக்கும் பிரம்மாண்டத்திற்கும் பெயர் போன துபாய் புதிய உலக சாதனை முயற்சியை மேற்கொண்டது. இந்நிகழ்வு பல்வேறு உலக சாதனைகளை தாங்கி நிற்கும் உலகில் உயரமான துபாய் புர்ஜ் கலீபா கட்டிடத்தில் நடைபெற உள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புர்ஜ் கலிபா கட்டிடம் அமைந்துள்ள‌ டவுன் டவுனின் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகள் ஏற்கனவே களை கட்டதொடங்கி இருக்கும் நிலையில் உலகத்தின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவை வெளிப்புற‌மாக முழுவதும் அலங்கரிக்கப்பட்டு சுமார் 32,467 சதுரமீட்டர்கள் பரப்பளவில்
எல்.இ.டி விளக்குகளின் மூலமாக திரை போன்று உருவாக்கப்பட்டு இந்த சாதனை முயற்சி மேற்கொள்ளபட்டுள்ளது.

இதற்கு முன்னதாக இந்தோனேசியாவின் தாமான் அங்கேரேக்மாலில் நடந்த இது போன்றமுயற்சியே கின்னஸ் சாதனையாக இருந்தது தற்போதைய இந்த முயற்சி முந்தைய கின்னஸ் சாதனையைவிட 3.75 மடங்கு பரப்பள‌வில் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரம்மாண்டமான இந்த எல்.இ.டி பல்புகளின்அனிவகுப்பு சுமார் 1,00,000 பிராக்கட்டுகளைக் கொண்ட70,000 எல்.இ.டி பல்புகளைக்கொண்டது, இவை அனைத்தும் 55,000 மீட்டர் வயர்களைகொண்டு இணைக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு இரவில் எல்.இ.டி பல்புகளால் முழுவதும் அலங்கரிக்க‌பட்ட புர்ஜ்கலீஃபா ட‌வரில் துபாயின் பாரம்பரியம், வளர்ச்சி, சாதனை என அனைத்தும் மிகப்பெரிய மல்டி மீடியா திரை மூலம் பிரம்மாண்டமாக ஜொலிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் புர்ஜ் கலீஃபா டவர் வாணவேடிக்கைகள், பிரபலமான துபாய் நீரூற்றின் உலக இசைகேற்ற நடன என பல்வேறு நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறவுள்ளன.

குவைத்தில் பணிபுரிய வாய்ப்பு !

குவைத் நாட்டில் உள்ள இந்திய தொலைத் தொடர்புத் துறையில் பணபுரிய டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம் பெற்ற சிவில் இன்ஜினியர்கள், 8ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் உள்ள கொத்தனார்கள் மற்றும் சமையலர்கள், 5 வருட அனுபவத்துடன் துவக்கப்பள்ளி தேர்ச்சி பெற்ற லேபர்கள், 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்ற ரிக்கர்கள் மற்றும் லேபர்கள், 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 வருட பணி அனுபத்துடன் 50 வயதிற்குட்பட்ட குவைத் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள இலகு ரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டிப்ளமோ தேர்ச்சியுடன் சிவில் பிரிவில் 5 வருட அனுபவம் பெற்ற ஆட்டோ காட் இயக்குபவர்கள் தேவைப்படுகிறார்கள்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், இருப்பிடம் மற்றும் குவைத் நாட்டின் சட்டதிட்டத்திற்குட்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும்.

மேற்கூறிய காலியிடங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் தங்கள் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட், புகைப்படம் ஆகியவற்றுடன் எண் : 42, ஆலந்தூர் சாலை, கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை32 என்ற முகவரியிலுள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு நேரிலே அல்லது omcresum@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களை  04422502267, 22505886 என்ற தொலை பேசி எண்கள் மூலமாகவும் அல்லது www.omcmanpower.com என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம் .

Tuesday, December 30, 2014

அதிரையில் குடிநீரில் கழிவு நீர்: புகாரின் பேரில் சுகாதார துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 8 வது வார்டு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து நிறம் மாறி வருகிறது என்றும், மாசு கலந்த குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்துவதால் நோய் பரவ வாய்ப்புள்ளது என கூறி, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியின் வார்டு உறுப்பினர் சேனா மூனா ஹாஜா முகைதீன் அளித்த புகாரின் அடிப்படையில் இன்று வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வ. விவேகானந்தன், சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷன் ஆகியோர் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

இதில் தண்ணீர் தேங்கி நின்ற பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்தனர். நீர்தேக்க தொட்டிகள் முறையாக பராமறிக்கப்படுகிறதா ? குடிநீரில் தினமும் குளோரின் கலக்கப்படுகிறதா ? என ஆய்வு செய்தனர்.

மேலும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறதா ? என கண்டறிய குடிநீரின் மாதிரியை பாட்டலில் எடுத்து தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவனையில் செயல்படும் நுண்ணியல் துறைக்கு ஆய்வுக்கு அனுப்ப இருப்பதாக கூறப்படுகிறது. நுண்ணியல் துறை வழங்கும் அறிக்கையை பொறுத்து இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. மழை காலங்களில் குடிநீரை நன்கு காய்ச்சி பருக வேண்டும் என்றும், பள்ளம் தோண்டி தண்ணீர் பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

இஸ்லாம் மதத்திற்கு மாற விரும்பிய பிரித்தானிய பிரதமர் !

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் இஸ்லாம் மதத்துக்கு மாற விரும்பியதாகவும், அதை அவரது உறவினர்கள் தடுத்ததாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரித்தானியாவில் கடந்த 1940ம் ஆண்டு முதல் 1945 வரையும், 1951 முதல் 1955 வரையும் பிரதமராக இருந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில்.

இவர் குறித்து ஆய்வு செய்ய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் (Cambridge University) உள்ள பழமையான ஏடுகளை வாரன் டோக்டெர் (Warron Dockter)என்ற வரலாற்று ஆய்வாளர் ஆராய்ச்சி செய்துள்ளார். அப்போது சர்ச்சிலுக்கு, அவரது சகோதரரின் மனைவியான லேடி குவன்டோலின் பெர்ட்டி (Lady Gwendoline Bertie)  என்பவர் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

அந்த கடிதத்தில், இஸ்லாமுக்கு மாறும் உங்கள் எண்ணத்தை நான் தெரிந்துகொண்டேன். அவ்வாறு செய்தால் பெரிய பாதிப்புகள் ஏற்படும். எனவே தயவு செய்து மதம் மாறாதீர்கள் என கூறப்பட்டுள்ளதாக பிரபல நாளிதழ் ஒன்று தெரிவிக்கின்றது.
Source:http://www.telegraph.co.uk/news/religion/11314580/Sir-Winston-Churchill-s-family-feared-he-might-convert-to-Islam.html

செக்கடி குளத்தை சுத்தி சுத்தி வரும் மணி தாரா ! [ படங்கள் இணைப்பு ]

அதிரையின் சிஎம்பி வாய்கால் இணைப்பில் உள்ள குளங்களுக்கு மீண்டும் ஆற்று நீர் வந்ததை அடுத்து செக்கடி குளம் தண்ணீரால் முழுவதும் நிரம்பி கடல் போல் காட்சி அளித்து வருகிறது.

இக்குளத்தில் இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் நேரம் போவது தெரியாமல் நீண்ட நேரம் குளித்து மகிழ்கின்றனர். அருகில் உள்ள 15 அடி உயரத்திற்கும் மேலான கட்டிடத்தின் மேலிருந்து குளத்தில் டைவ் அடித்தும், நீந்தியும் செல்கின்றனர். இவற்றை இப்பகுதியினர் வியப்புடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த ஆர்வலர்கள் சிலர் பசுமையை வலியுறுத்தி  மணித்தாராக்கள், வங்குசங்களை குளத்தில் நீந்த விட்டுள்ளனர். இவற்றை மக்தப் பள்ளிக்கு சென்று வரும் இளம் சிறுவர்கள் ஆர்வத்துடன் பார்வையிடுகின்றனர். அருகே சென்று ரசித்து வருகின்றனர். இந்த பறவைகள் குளத்தில் நீந்தி செல்லும் காட்சி பொதுமக்களின் பார்வையை வெகுவாக ஈர்த்துள்ளது.

மரண அறிவிப்பு !

தட்டாரத் தெருவை சேர்ந்த மர்ஹூம் ஹாஜி அ.மு.க முஹம்மது ஹனீபா அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மருமகனும், அன்சாரி, அஸ்ரப் ஆகியோரின் சகோதரரும், அப்துல் ஹாக், இஸ்மாயில், முஹம்மத் ஹசன் ஆகியோரின் மச்சானும், உஸ்வதூற்றசூல் மதரசதுன் நிஸ்வான் பெண்கள் அரபிக் கல்லூரியில் கணக்காளராக பணிபுரிந்து வந்த அப்துஸ் சலாம் அவர்கள் இன்று காலை 11 மணியளவில் புதுமனை தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

துபாயில் நடைபெறும் TIYA வின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க மஹல்லாவாசிகளுக்கு அழைப்பு !

துபாயில் எதிர்வரும் [ 01-01-2015 ] அன்று நடைபெறும் TIYA வின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க மஹல்லாவாசிகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து TIYA சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது...

அதிரையில் 16.8 மி.மீ. மழை !

அதிரையில் ஞாயிற்றுக்கிழமை அன்று பெய்த மழையளவு 16.8 மி.மீ. என கணக்கீடப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்): 
அய்யம்பேட்டை 30, மதுக்கூர் 23.6, கும்பகோணம் 23.2, அணைக்கரை, மஞ்சலாறு தலா 21.6, திருவிடைமருதூர் 20.5, அதிரை 16.8, வெட்டிக்காடு 16.2, பாபநாசம் 15, பட்டுக்கோட்டை 14, வல்லம் 11, தஞ்சாவூர், திருவையாறு தலா 10, கல்லணை 9.4, பேராவூரணி 9, ஒரத்தநாடு 8.6, ஈச்சன்விடுதி 8.4, குருங்குளம் 7, பூதலூர் 5.8, திருக்காட்டுப்பள்ளி 3.8, நெய்வாசல் தென்பாதி 2.2.

கல்லூரிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்துவது அவசியம்: மாவட்ட ஆட்சியர் அறிவுரை !

கல்லூரிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் அவசியம் பொருத்த வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகளில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடையே ஒற்றுமை வளர்க்கவும், மோதல்களை தவிர்க்கவும், ஒவ்வொரு கல்லூரியிலும் மாதம் ஒரு முறை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். கல்லூரி முதல்வர்கள், காவல் துறை அலுவலர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஆகியோர் கொண்ட குழு அமைத்து இது போன்ற சிரமங்களை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதை ஆலோசிக்க வேண்டும்.

வருகைப் பதிவேட்டை நாள்தோறும் சரிபார்த்து தொடர்ந்து பராமரிக்க வேண்டும். பேருந்துகளில் படிக்கட்டில் பயணம் செய்தல், ராக்கிங் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்லூரி வளாகங்கள் பெரிய அளவில் உள்ளதால் முழுவதும் கண்காணிப்பது சிரமம். எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து தனியார் அரசுக் கல்லூரிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும். அதேபோல ஒவ்வொரு கல்லூரியிலும் கல்லூரி முதல்வர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் உள்ள விடுதிகளில் வெளியாட்கள் தங்குகிறார்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இதற்கென விடுதி கண்காணிப்புக் குழுவையும் அமைக்க வேண்டும். மாணவர்களுடன் கல்லூரி ஆசிரியர்கள் அடிக்கடி கலந்துரையாடி அவர்களுடைய குறைகளைப் போக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ. சந்திரசேகரன், மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் கே. கலா, முதன்மைக் கல்வி அலுவலர் வே. தமிழரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Monday, December 29, 2014

2014 ல் வெளிநாட்டினருக்கு அதிக குடியுரிமை வழங்கிய கனடா !

கனடாவில் இந்த வருடம் 2,60,000ற்கும் அதிகமான மக்கள், கனேடிய குடியுரிமையைப் பெற்றுள்ளதாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மத்திய குடிவரவு மற்றும் குடியுரிமை துறை அமைச்சர் கிறிஸ் அலெக்ஸ்சான்டர் கூறுகையில், 
2014ம் ஆண்டில் இரண்டு லட்சத்து அறுபது ஆயிரத்திற்கும் அதிகமானோர் புதிதாக கனேடிய குடியுரிமையை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த எண்ணிக்கை கடந்த வருடம் கனேடிய குடியுரிமையை பெற்றவர்களை விட இரண்டு மடங்கு விட அதிகம் என்றும், கனேடிய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு இவ்வளவு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குடியுரிமைக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடைமுறைகளில் அண்மையில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. இந்த புதிய நடைமுறையில், குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலித்து முடிவு செய்யும் மூன்று படிமுறைகள் ஒரு படிமுறையாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும் இந்த நடைமுறையால் இதுவரை 115,000ற்கும் அதிகமானோர் கனேடிய குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும், கடந்த வருடத்தின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 90 சதவீதம் அதிகம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிரையில் புதியதோர் உதயம் 'பிளாட்டினம் டிரேடர்ஸ்' !

அதிரையை சேர்ந்தவர் N.M. சேக்தாவூத். இவர் பழைய போஸ்ட் ஆபீஸ் செல்லும் சாலையில் ( முட்டை கபீர் காக்கா கடை அருகில் ) அமைந்துள்ள இடத்தில் புதிதாக  'பிளாட்டினம் டிரேடர்ஸ்' என்ற பெயரில் தொழில் நிறுவனத்தை தொடங்கியுள்ளார். திறப்பு நாளன்று ஏராளமானோர் நிறுவனத்திற்கு வருகை தந்தனர். வந்திருந்த அனைவரையும் நிறுவன உரிமையாளர் N. M சேக்தாவூத் அன்புடன் வரவேற்று மகிழ்ந்தார்.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் 'N.M. சேக்தாவூத்' நம்மிடம் கூறுகையில்...
'புதிதாக துவங்கியுள்ள எங்கள் நிறுவனத்தில் புதிதாக வீடு கட்ட தேவைப்படும் ஹார்டு வேர்ஸ், எலெக்ட்ரிக்கல்ஸ், பிளம்பிங் சாமான்கள், மர சாமான்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்கிறோம். தரமான நிறுவனங்களின் நேரடி கொள்முதல் செய்து குறைந்த கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாகவும் சில்லரையாகவும் வழங்க இருக்கிறோம். மேலும் செங்கலுக்கு மாற்றாக உலகத்தரத்தில் உறுதியான ரினாகான் சிமென்ட் கல்களை மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்கிறோம்.
அதிரை வாழ் பொதுமக்கள் எங்களின் புதிய நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.

தொடர்புக்கு : 9952628482

குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

அதிரையில் ADT நடத்தும் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நிகழ்ச்சி !

அதிரையில் தக்வா பள்ளி அருகே எதிர்வரும் 04-01-2015 ஞாயிறு அன்று மஃரிப் தொழுகையை தொடர்ந்து இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்ற இருக்கிறது.

இதில் மவ்லவி அப்பாஸ் அலி அவர்கள், 'மூஃமின்களின் பார்வையில் சூனியம்' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்ற உள்ளார். மேலும் சூனியம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க இருக்கிறார்.

இதில் அனைவரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க ADT சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது...



மரண அறிவிப்பு !

மேலத்தெரு அண்ணாவியார் குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் க.செ. நூர் முஹம்மது அண்ணாவியார் அவர்களின் மருமகளும், மர்ஹூம் S.M. அபூபைதா அவர்களின் மகளும், N. முஹம்மது நூகு அவர்களின் மனைவியும், M. இர்பான் அவர்களின் தாயாரும், A. அஜ்மல்கான், A. ரபி அஹமது, A. தாஜுதீன் ஆகியோரின் சகோதரியும், A. கலீலூர் ரஹ்மான், T. பிலால் அஹமது ஆகியோரின் மாமியாவுமாகிய 'பாகிஸ்தான்' என்கிற ஷம்சூன் நகார் அவர்கள் இன்று மதியம் 12 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்வது குறித்த தகவல் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

முத்துப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்திய பொம்மை விமானம் !

முத்துப்பேட்டை கடற்கரை பகுதியாகும். இங்குள்ள அலையாத்தி காடுகள் ஆசிய கண்டத்திலே மிகப்பெரிய காடுகள் ஆகும்.இப்பகுதியில் கடலோர பாதுகாப்பு படை மற்றும் விமானப்படையினர் எப்போதும் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள்.

இந்நிலையில் முத்துப்பேட்டை அருகே உள்ள செம்படவன்காடு அங்காளம்மன் கோவில் அருகே முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான தென்னை மரத்தில் மோதி ரிமோட் விமானம் கீழே விழுந்தது. அதில் சிறிய ரக கேமிரா, கம்ப்யூட்டர்கள் பொருத்தப்பட்டு இருந்தது. கேமிராவில் சிங்கப்பூரில் உள்ள பல இடங்களின் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு உருவானது.

இதுகுறித்து முருகானந்தம் முத்துப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். டி.எஸ்.பி. கணபதி மற்றும் திருவாரூர் புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விமானத்தை கைப்பற்றினார்கள்.

பின்னர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அந்த விமானம் ஒரு விளையாட்டு பொருள் என்பது தெரியவந்தது. இந்த விமானம் முத்துப்பேட்டை–பட்டுக்கோட்டை சாலையில் வசிக்கும் தமீம் என்பவருக்கு சொந்தமானது ஆகும்.

அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் சிங்கப்பூரில் தொழில் செய்து வருவதும் அங்கிருந்து தனது குழந்தைகளுக்கு ரிமோட் விமானத்தை வாங்கி வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. தமீம் தனது வீட்டு மாடியில் இருந்து விமானத்தை பறக்க விட்ட போது அது ரிமோட்டின் கட்டுப்பாட்டை இழந்து செம்படவன் காட்டில் தென்னை மரத்தில் விழுந்துள்ளது.

இந்த ரிமோட் விமானத்தை வாங்கியதற்கான ரசீதை தமீம் போலீசாரிடம் காண்பித்தார். இதைதொடர்ந்து அவரிடம் விமானம் ஒப்படைக்கப்பட்டது.

அவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால் ரிமோட் விமானத்தில் வைக்கப்பட்டிருந்த கேமிராவில் அங்குள்ள காட்சிகளை பதிவு செய்து வைத்திருந்ததாக தெரிகிறது.

நன்றி: மாலை மலர்

கார் டயர் வெடித்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் 3 பேர் காயம் !

அதிரையை சேர்ந்தவர் பைசல், இவரது நண்பர்கள் ஹசன், அபூதாகிர், நேற்று இரவு பைசலுக்கு சொந்தமான அம்பாஸடர் காரில் தனது நண்பர்கள் மற்றும் தனது இரு குழந்தைகளுடன் ஈசிஆர் சாலையில் சென்னையை நோக்கி பயணமானார்.  நள்ளிரவு சுமார் 4.30 மணியளவில் வாகனம் கேளம்பாக்கம் அருகே வந்தபோது திடீரென வாகனத்தின் டயர் வெடித்து சாலையின் நடுவே இருந்த கட்டாயத்தில் மோதி விபத்துக்குள்ளானது. உடனே காயமடைந்த 3 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பைசலுக்கு காலிலும், ஹசனுக்கு தலையிலும், அபூதாகிர் ஆகியோருக்கு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாகனமும் சேதமடைந்துள்ளது.
*File Photo

அதிரையில் நாளை மின்தடை !

மின்சாரத் தொடர்பான பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், அதிரையில் நாளை [ 30-12-2014 ] செவ்வாய்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மின்சார வாரிய தகவல் தெரிவிக்கின்றன.