.

Pages

Monday, December 22, 2014

காவிரி டெல்டாவை சுடுகாடாக மாற்றும் மீத்தேன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும்: பட்டுக்கோட்டை பொதுக்கூட்டத்தில் பேச்சு !

காவிரி டெல்டாவை சுடுகாடாக மாற்றும் மீத்தேன் திட்டத்தை ரத்து
செய்யவேண்டும் . தவறும்பட்சத்தில் டிசம்பர்-31 அன்று தஞ்சை மாவட்டத்தில் மூன்று இடங்களில் மறியல் செய்ய இருப்பதாக பட்டுக்கோட்டை பொதுக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட மாநாடு கடந்த டிசம்பர்-19 தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. நிறைவு நாளான டிச-22 ஞாயிறன்று புதிய மாவட்ட செயலாளராக ஆர்.மனோகரன் தேர்வு செய்யப்பட்டார். 41 பேர் கொண்ட மாவட்ட குழுவும் தேர்வு செய்யப்பட்டது. மேலும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக கோ.நீலமேகம், ஆர்.சி.பழனிவேலு, வெ.ஜீவகுமார், பி.எஸ். பாலசுப்பிரமணியன், கே. பக்கிரிசாமி, சின்னை.பாண்டியன், சாமி.நடராஜன், சி.ஜெயபால், எம்.மாலதி, பி.செந்தில்குமார், என்.வி.கண்ணன், கே.ரமேஷ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
           
பின்னர் பேரணியும் அதனை தொடர்ந்து  மாலை தலைமை தபால் நிலையம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்திற்கு பட்டுக்கோட்டை ஒன்றியச்செயலாளர் எம்.செல்வம் தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் ஆர்.மனோகரன் ஏற்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், ஆர்.சி.பழனிவேலு ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
         
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினரும் மாநில செயற்குழு  உறுப்பினருமான ஏ.லாசர் உரையாற்றினார். அவர் தமது உரையில், " இன்றைக்கு இங்கே பட்டுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்றுநாள்
மாவட்ட மாநாடு நிறைவடைந்து, புதிய மாவட்ட செயலாளரை தேர்வு செய்த கையோடு, நமது மாவட்ட மாநாட்டு தீர்மானம், அரசியல் நிலைமை பற்றி எடுத்து கூறி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாற்றத்தை உருவாக்க கூடியுள்ளோம். மற்ற கட்சியிலும் மாவட்ட செயலாளர்கள் தேர்வு நடைபெறுகிறது. எப்படி என்றால் வெட்டுக்குத்து, ஆள் கடத்தல். பணத்தை கொடுத்து சொந்த கட்சியினரையே விலைக்கு வாங்குதல்... லட்சக்கணக்கில் அல்ல கோடிக்கணக்கில் செலவு செய்து மற்ற கட்சிகளில் மாவட்ட செயலாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. செங்கொடி இயக்கத்தில் அப்படி அல்ல. தகுதி படைத்த, அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட, இயக்கத்திற்காக பாடுபடக்கூடிய யார் வேண்டுமானாலும் ஜனநாயக முறைப்படி பொறுப்புக்கு வரலாம். இன்றைக்கு மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்ட தோழர் ஆர்.மனோகரன் டீ செலவு கூட செய்யாமல் இன்றைக்கு மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அது இந்த செங்கொடி இயக்கத்தில் மட்டுமே சாத்தியம்.
       
புதியவர்களை, இளைஞர்களை தேர்வு செய்து கட்சிக்காக பயன்படுத்துகிறோம். தகுதி, திறமை உள்ளவர் எவராக இருந்தாலும் கட்சி அங்கீகாரம் அளிக்கும். இங்கே எவரும் நிரந்தர மாவட்ட செயலாளரும் இல்லை. எம்.எல்.ஏவும் கிடையாது. நிரந்தர பொதுச்செயலாளரும் கிடையாது. நிரந்தர முதல்வரும் கிடையாது. கட்சி தரும் பதவிகளை நாம் பதவியாக நினைப்பதில்லை. நமக்கு தரப்பட்ட பொறுப்பாக கருதி செயல்படுவோம். தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்தும், காவிரியின் குறுக்கே புதிதாக இரண்டு அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களமிறங்கி போராடும்" இவ்வாறு உரையாற்றினார்.
       
மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் நிறைவுரையாற்றினார். அவர் தமது உரையில், " நடுவர் மன்ற தீர்ப்பை மதிக்காமல், காவிரியின் குறுக்கே மேகதாது, ராசி மணல் ஆகிய இடங்களில் அணை கட்ட கர்நாடக அரசு முயன்று வருகிறது.  நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது. அதற்காகத்தான் தஞ்சை காவிரி டெல்டா விவசாயிகளுக்காக கடந்த மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பத்து இடங்களில் ரயில் மறியல், நூறு இடங்களில் சாலை மறியல் என ஒத்த கருத்துள்ளவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தியது. மாநில அரசு கர்நாடக அரசின் இந்த அத்துமீறலை எதிர்த்து, மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறது. அணை கட்டுவதற்கு, நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு பகிரங்கமாக இன்றைக்கு சர்வதேச அளவிற்கான டென்டரை அறிவித்துள்ளது. இதை எதிர்த்து வழக்கு தொடர தமிழக அரசிற்கு என்ன தயக்கம் உள்ளது. மீத்தேன் திட்டத்திற்கான மத்திய, மாநில அரசுகள் குஜராத் கம்பெனியோடு செய்து கொண்ட ஒப்பந்தம் வரும் டிசம்பர்-31 ந்தேதியுடன் காலாவதி ஆகிறது. அந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்துகிறது. இதனை மத்திய, மாநில அரசுகள் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக வரும் டிசம்பர்-31 ந்தேதிக்கு முன்னர் அறிவிக்க வேண்டும். இல்லையெனில் டிசம்பர்-31 அன்று மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பாக முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.  அனைத்து தரப்பு மக்களும் அந்த போராட்டத்திற்கு பேராதரவு தரவேண்டும்.
       
மீத்தேன் திட்டம் சம்பந்தமாக ஆய்வு செய்ய மாநில அரசு ஒரு நிபுணர் குழுவை நியமித்தது. அந்த நிபுணர் குழுவின் அறிக்கை என்ன ஆனது என தெரியவில்லை. மாநில அரசின் மவுனம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த திட்டத்தை அமல்படுத்த நினைக்கும் மத்திய, மாநில அரசுகளின் வஞ்சக திட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனுமதிக்காது.
         
நெல்லுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. உற்பத்தி செலவுகள் இன்றைக்கு பல மடங்கு அதிகரித்து விட்டது. உற்பத்தி செலவை விட 50 சதவீதம் விவசாயிகளுக்கு லாபம் தரவேண்டும் என வேளாண்மை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அரசுக்கு அறிக்கை அளித்தார். ஆனால் அப்படி ஏதும் கிடைக்கிறதா. கரும்புக்கான விலை தெரியாமலேயே மூன்று மாதமாக விவசாயிகள் ஆலைகளுக்கு கரும்பை அனுப்பி வைக்கின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 11 கரும்பு ஆலை முதலாளிகள் ஏற்கனவே கரும்பு விவசாயிகளுக்கு பாக்கி வைத்துள்ளனர். பாக்கியை தராமல் தமிழக அரசுக்கே சவால் விடும் வகையில் நடந்து கொள்கின்றனர். அரசு என்ன செய்கிறது. இது போன்ற அவலம் எந்த தொழிலிலும் இருக்குமா ? ரேசன் கடை இல்லாத ஊர் இருக்கிறது. மின்சாரம் இல்லாத ஊர் இருக்கிறது. மருத்துவமனை இல்லாத ஊர் இருக்கிறது. ஆனால் டாஸ்மாக் கடை இல்லாத ஊர் இருக்கிறதா ? இது தான் இன்றைய தமிழகத்தின் அவல நிலை.
             
மதவாதத்தை வலியுறுத்தும், மோதலை உருவாக்கும், மக்களை கூறுபோடும் நூலை, வர்ணாசிரமத்தை வலியுறுத்தும் பகவத் கீதையை தேசிய நூலாக ஏற்கமுடியாது. பாஜக வும், மதவாத இந்து அமைப்புகளும் தேசத்தை கூறுபோட நினைக்கிறது. அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனுமதிக்காது. இன்றைக்கு வீரமணிக்கு எதிராக இந்து அமைப்புகள் கொக்கரிக்கின்றன. ஏற்கனவே எச்.ராஜா வைகோவை பகிரங்கமாக மிரட்டினார். இதை பாஜக அனுமதிக்கிறது. குஜராத், உ.பி போல மதமோதலை உருவாக்கி தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற பிஜேபி திட்டமிடுகிறதோ என சந்தேகம் உருவாகிறது. அதனை மார்க்சிஸ்ட் கட்சி அனுமதிக்காது.
     
எனவே மாற்றத்தை நோக்கி மக்களையும், தேசத்தையும் கொண்டு செல்ல தகுதி படைத்த செங்கொடி இயக்கத்திற்கு பொதுமக்கள் தங்கள் பேராதரவை தரவேண்டும் " இவ்வாறு பேசினார்.

பட்டுக்கோட்டை நகரச்செயலாளர் கந்தசாமி நன்றி கூறினார். கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
எஸ். ஜகுபர்அலி, பேராவூரணி.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.