.

Pages

Thursday, August 31, 2017

இரவில் குறைந்த மின் அழுத்தத்தால் பிலால் நகர் மக்கள் அவதி !

அதிராம்பட்டினம், ஆக. 31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் துணை மின்நிலையத்தில் இருந்து, ஏரிப்புறக்கரை கிராம ஊராட்சி, பிலால் நகர் பகுதிக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இந்தப் பகுதியில் இரவு நேரங்களில் குறைந்த மின் அழுத்தப் பிரச்னை இருப்பதால் பொதுமக்கள் அவதி. 250 கே.வி திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைத்து தரக் கோரிக்கை.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறியது;
அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச்சாலை பிலால் நகர் பகுதியில் அமைந்துள்ள மின்மாற்றி 100 கே.வி திறன் கொண்டது. இம்மின்மாற்றியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புதாரர்கள், பெட்ரோல் நிலையம், வெல்டிங் பட்டறைகள் உள்ளிட்ட சில தொழிற்கூடங்கள் மின் இணைப்புகளை பெற்றுள்ளன. இதனால் அதிக மின் அழுத்தம் ஏற்பட்டு அடிக்கடி மின்மாற்றியில் பழுது ஏற்படுகிறது. இரவு நேரங்களில் குறைந்தழுத்த மின்சாரம் வருவதால், டியூப் லைட் சரியாக எரிவது இல்லை. மின்விசிறிகள், ஏசி, ஃபிரிஜ் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள் சரிவர இயங்கவில்லை. இதனால் வீடுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவு நேரங்களில் தூக்கம் இல்லாமல் அவதிக்குள்ளாகின்றனர்.

இந்த குறைபாட்டை போக்க, 250 கே.வி திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைத்து, அதில் தொழிற்கூடங்களுக்கும், குடியிருப்புகளுக்கும் தனித்தனியாக பீடர் லைன் அமைத்து தர உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

குர்பானிக்காக, அதிராம்பட்டினத்தில் களைகட்டிய செம்மறி ஆடுகள் விற்பனை!

அதிராம்பட்டினம், ஆக. 31
ஹஜ் பெருநாள் பண்டிகையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் செம்மறி ஆடுகள் விற்பனை களைகட்டத் தொடங்கி உள்ளது.

இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான ஹஜ் பெருநாள் பண்டிகை செப்டம்பர் 2-ம் தேதி தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இஸ்லாமியர்கள் ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் குர்பானி இறைச்சியை தானமாக வழங்கி மகிழ்வது இப்பண்டிகையின் சிறப்பாகும்.

ஹஜ் பெருநாள் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் செம்மறி ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது.
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதி விவசாயிகளிடமிருந்து ஏராளமான செம்மறி ஆடுகளை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி வந்து அதிரை நகரிலுள்ள வர்த்தகப் பகுதிகளில் விற்பனைக்காக நிறுத்தி வைத்துள்ளனர்.

இவற்றை இஸ்லாமியர்கள் பார்வையிட்டு ஆரோக்கியமான ஆடுகளைத் தேர்வு செய்து விலைக்கு வாங்கி, அவற்றின் மீது முகவரியை அடையாளமிட்டு, வாங்கிய இடத்திலேயே விட்டுச் செல்கின்றனர்.
பிறகு, இந்த ஆட்டை ஹஜ் பெருநாள் பண்டிகையின் முந்தைய நாளில் (செப். 1) மந்தையிலிருந்து வீட்டுக்கு ஓட்டிச் செல்கின்றனர். மறுநாள் (செப். 2) ஹஜ் பெருநாள் பண்டிகை தினத்தன்று காலை சிறப்புத் தொழுகைக்குப் பிறகு வியாபாரியிடமிருந்து வாங்கி வந்த ஆடு அறுக்கப்படுகிறது. இவ்வாறு அறுத்து எடுக்கப்படும் ஆட்டிறைச்சியை குர்பானி இறைச்சி என்று அழைக்கின்றனர். இந்த குர்பானி இறைச்சியை 3 பங்காக சமமாகப் பிரித்து ஒரு பங்கை தனது குடும்பத்துக்கும், 2-வது பங்கை உறவினர்களுக்கும், 3-வது பங்கை வறியவர்களுக்கும் இஸ்லாமியர்கள் தானமாக வழங்கி ஹஜ் பெருநாள் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.

ஆடு விற்பனை குறித்து அதிராம்பட்டினம் நிஜாம் மட்டன் ஸ்டால் உரிமையாளர் கே. ராஜிக் முகமது கூறியது; 
தியாகத் திருநாள் ஹஜ் பெருநாள் பண்டிகைக்கு 1 வாரத்துக்கு முன்னதாகவே அதிராம்பட்டினத்தில் செம்மறி ஆடுகள் விற்பனை தொடங்கிவிடும். தினமும் வாடிக்கையாளர்கள் பார்ப்பதற்காக ஆடுகளை திடலில் மேயவிடுவோம். இவற்றைப் பார்வையிடும் வாடிக்கையாளர்கள் ஆரோக்கியமான ஆடுகளைத் தேர்வு செய்து விலைக்கு வாங்கிச் செல்வர். சராசரியாக 16 முதல் 30 கிலோ வரை எடையுள்ள ஒரு ஆடு ரூ. 6 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை விலை போகிறது. இந்த விற்பனை ஹஜ் பெருநாள் பண்டிகை நாளான செப். 2-ம் தேதி வரை தொடரும் என்றார்.
 
 

Wednesday, August 30, 2017

மல்லிபட்டினத்தில் புதிய மருத்துவமனை திறப்பு ( படங்கள் )

மல்லிபட்டினம், ஆக.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள மல்லிபட்டினம் ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள மரியம் வணிக கட்டிடத்தில் புதிதாக ராஜவா விஸ்வா மருத்துவமனை மற்றும் பூர்ணி விஜயம் மருந்தகம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில், சிறப்பு விருந்தினராக மிராசுதார் சு. ராஜாதம்பி கலந்துகொண்டு மருத்துவமனையை திறந்து வைத்து வாழ்த்திப் பேசினார். திறப்பு விழாவையொட்டி இலவச பொதுநல மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில்
மருத்துவமனை தலைமை மருத்துவர் எஸ்.ஆர் சந்திரசேகர் தலைமையில், ராஜவா விஸ்வா மருத்துவமனை மருத்துவக் குழுவினர் இரத்தப் பரிசோதனை, சர்க்கரை அளவு கண்டறிதல், இரத்தக்கொதிப்பு, உடல் எடை பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டனர். முகாமில் மருத்துவ ஆலோசனை மற்றும் இலவச மருந்துகள் வழங்கப்பட்டன. இம்முகாமில் மல்லிபட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

விழாவில், சிறப்பு அழைப்பின் பேரில் பட்டுக்கோட்டை நகராட்சி முன்னாள் சேர்மன் எஸ்.ஆர் ஜவஹர் பாபு, தமிழ்நாடு விசைப்படகு மீனவர் சங்க மாநிலச் செயலாளர் தாஜுதீன், மருத்துவர்கள் பன்னீர் செல்வம், ஷக்கில் அகமது, மரியம் காம்ப்ளக்ஸ் உரிமையாளர் ஏ.சரபுதீன் உட்பட ஏராளமான மருத்துவர்கள் மற்றும் மல்லிபட்டினம் பிரமுகர்கள், கிராம பஞ்சாயத்தார்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 

புனிதமிகு மக்காவில் குழுமி இருக்கும் ஹஜ் யாத்ரீகர்கள் (படங்கள்)

அதிரை நியூஸ்: ஆக. 30
திரும்பும் திசை எங்கும் ஹாஜிகளால் நிறைந்து காணப்படும் புனித மக்கமாநகரம். ஹாஜிகளுக்காக செய்யப்பட்டுள்ள மருத்துவ முன்னேற்பாடுகளும்..
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நம்ம ஊரான்

Tuesday, August 29, 2017

அதிராம்பட்டினத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 29
அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 சார்பில் அதிராம்பட்டினம் பேருராட்சி முழுதும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

அதிராம்பட்டினம் பேருராட்சி பகுதி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் அதிராம்பட்டிணம் பேருந்து நிலையத்தில் துவங்கி, இப்பகுதியில் உள்ள கல்வி நிலையங்கள, மருத்துவமனைகள் மற்றும் அனைத்து தெருக்களிலும் நடைபெற்றது. 10,000 துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

பிரச்சாரத்திற்கு  சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் தலைவர் வ.விவேகானந்தம் தலைமை வகித்தார். துணை செயலாளர் கே. இத்ரீஸ்அஹமது. முன்னிலை வகித்தார். மன்ற செயலாளர் எம்.எப்.முஹம்மதுசலீம் அனைவரையும் வரவேற்றார். ஓருங்கிணைப்பாளர் பேராசிரியர் கா. செய்யது அஹமதுகபீர் கொடியசைத்து பிரச்சாரத்தை துவங்கி வைத்தார்.

பிரச்சாரத்தில் சுற்றுச்சூழல் மன்ற உறுப்பினர்கள் எஸ. அகமது அனஸ் என் ஷேக்தம்பி ஏ.இம்ரான், தூய்மைத்தூதுவர்கள் எஸ். கமருல் எஸ். ஜகபர்சாதிக் சம்சுல்ஹக் காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் எஸ் நாகராசன் தலைமையில் 10 தேசிய பசுமைப்படை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இரா.அண்ணாதுரை சுகாதார ஆய்வாளர் வி.ரவிச்சந்திரன், ரோட்டரி சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜே.ஹாஜா பகுருதீன்,  அதிரை ரோட்டரி சங்க தலைவர் ஆர் ஆறுமுகம் செயலாளர் டி.நவாஸ்கான் ஆகியோர் பிராச்சாரத்தை வரவேற்று பேசினார்கள்.

பிரச்சாரத்தின் போது பேருராட்சி பகுதியில் சேர்ந்துள்ள குப்பைகள், குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்புகள் பற்றி பொது சுகாதாரத்துறை மற்றும் பேருராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பேரணி முடிவில் செயற்குழு உறுப்பினர் எம்.பி. அப்துல் ஹலிம் நன்றி கூறினார்.
 
 

காவல்துறையின் முக்கிய அறிவிப்பு !

எதிர்வரும் செப்டம்பர் 1 ந் தேதி முதல், தஞ்சை மாவட்டத்தில் இயக்கப்படும் லாரிகள், பஸ்கள், டாக்சி, ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் இதர வகை வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்கள் கண்டிப்பாக அசல் ஓட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும். காவல்துறையினரின் வாகனச் சோதனையின் போது, அசல் வாகன ஓட்டுனர் உரிமத்தை காட்ட வேண்டும். தவறும் பட்சத்தில் அவ்வாகன ஓட்டுனர்கள் மீது பிரிவு 130 & 181 மோட்டார் வாகன சட்டம் 1988-ன் படி, நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஸ்பெஷல் பிரான்ச், காவல் ஆய்வாளர் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரையில் தீயணைப்பு ஒத்திகை செயல்விளக்க நிகழ்ச்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 29
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீத்தடுப்பு மற்றும் உயிர் மீட்பு செயல்முறை விளக்கம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் திங்கட்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் வருவாய் ஆய்வாளர் உமர்சா தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர்கள் ஆனந்த ஜோதி, மகர ஜோதி முன்னிலை வகித்தனர்.

இதில், பேரிடர் விபத்து மீட்பு பணி செயல்முறை விளக்கத்தில் வெடி விபத்துக்கள் ஏற்படும் பொழுது செய்யப்பட வேண்டிய முதலுதவி, மனித உயிர்களை பாதுகாக்கும் முறைகளும் விளக்கப்பட்டது. குடிசை பகுதிகளில் ஏற்படுகின்ற தீ விபத்துகள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களில் ஏற்படுகின்ற தீ விபத்துகளின் போதும் தீயணைக்கும் முறையினை பற்றி செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில், பேராவூரணி தீயனைப்பு நிலைய அலுவலர் தியாகராஜன் தலைமையில், பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய குழுவினர்கள் கலந்து கொண்டு பயிற்சிகளை அளித்தனர். இந்நிகழ்ச்சியில், பொதுமக்கள், அரசு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.  
 
 
 
 

Monday, August 28, 2017

துபையில் ஹஜ்ஜூப் பெருநாள் விடுமுறை இலவச பார்க்கிங் அறிவிப்பு !

அதிரை நியூஸ்: ஆக. 28
பொதுவிடுமுறையை முன்னிட்டு துபைக்கு நாளொன்றுக்கு சுமார் 350,000 பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு துபையில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 3 வரையிலான 4 நாட்களுக்கு இலவச பார்க்கிங் அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் அடுக்குமாடி பார்க்கிங்குகளில் மட்டும் வழமைபோல் கட்டணம் வசூலிக்கப்படும்.

துபை போக்குவரத்துத் துறையின் வாடிக்கையாளர் 'ஹேப்பினஸ்' மையங்களும் மேற்காணும் தேதியில் மூடப்பட்டிருக்கும்.

மெட்ரோ ரயில் நேரங்கள்:
ரெட் லைன்: 
ஆகஸ்ட் 31 : காலை 5.30 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை.
செப்டம்பர் 1 : காலை 10 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை.
செப்டம்பர் 2 : காலை 5.50 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை.
செப்டம்பர் 3 : காலை 5.30 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை.

குறிப்பு: நள்ளிரவு 2 மணி என்பது அடுத்த நாள் அதிகாலை நேரத்தை குறிக்கும். செப். 2 அன்று மெட்ரோ எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டும் இயங்காது.

கிரீன்; லைன்: 
ஆகஸ்ட் 31 : காலை 5.50 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை.
செப்டம்பர் 1 : காலை 10 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை.
செப்டம்பர் 2 : காலை 5.50 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை.
செப்டம்பர் 3 : காலை 5.50 மணிமுதல் நள்ளிரவு 2 மணிவரை.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு 803 கைதிகள் விடுதலை ~ அமீரக ஜனாதிபதி உத்தரவு

அதிரை நியூஸ்: ஆக. 28
இன்னும் சில தியாகத் திருநாள் கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு பல்வேறு குற்றங்களுக்காக சிறைவாசம் கொண்டிருக்கும் சுமார் 803 கைதிகளை மன்னித்து விடுதலை செய்ய உத்தரவிட்டார் அமீரக ஜனாதிபதியும் அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் ஜாயித் அல் நஹ்யான் அவர்கள்.

விடுதலையாகும் கைதிகள் புதிய வாழ்வை துவங்கும் வகையில் அவர்களது பொருளாதார பிரச்சனைகளையும் சரிசெய்யுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

SOURCE: GULF NEWS
தமிழில்: நம்ம ஊரான்

தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டி.செந்தில் குமார் பொறுப்பேற்பு !

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த ஜெ. மகேஷ் அவர்கள் பணியிட மாறுதலில் சென்னை சென்றதையடுத்து, திருச்சி மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையராக பணிபுரிந்து வந்த டி. செந்தில்குமார், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக 27-8-2017 ந் தேதி மாலை பதவியேற்றுக்கொண்டார்.

மேலும் அவர் கூறுகையில்;
தஞ்சை மாவட்டத்தில்  தொடர்ந்து அமைதியான முறையில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும், குற்ற செயல்களை தடுத்திடவும், போக்கிரிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து உடனுக்குடன் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும், விபத்தை தடுக்கவும், பொது மக்கள் காவல் நிலையங்களில் கொடுக்கும் புகார்களுக்கு உடன் நடவடிக்கை எடுக்கவும் தஞ்சை மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

ஹஜ் செய்திகள்: 104 வயதான இந்தோனேஷிய ஹஜ் பயணிக்கு சிறப்பான வரவேற்பு (படங்கள்)

அதிரை நியூஸ்: ஆக. 28
இந்த வருடம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களிலேயே மிகவும் வயதானவர் இந்தோனேஷியாவை சேர்ந்த மரியாஹ் மர்கானி முஹமது என்ற பெண்மணியாவார், இவரது வயது 104. கடந்த சனிக்கிழமையன்று இரவு ஜித்தா கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கியதை தொடர்ந்து அவருக்கு சிறப்பான வரவேற்பு நல்கப்பட்டது.

நூறாண்டு கண்ட இந்த ஹஜ் யாத்ரீகரை சவுதி கலாச்சாரம் மற்றும் தகவல் துறை அமைச்சின் செயல்இயக்குனர் அப்துல் ஹாலிக், இந்தோனேஷிய கவுன்சுலர் ஜெனரல் சரீபுதீன், இந்தோனேஷிய யாத்ரீகர்களின் பொறுப்பாளர் அர்ஷத் ஹதியா, பல்துறை சவுதி அதிகாரிகள், டிவி மற்றும் பத்திரிக்கையாளர்கள் மனமுவந்து வரவேற்று வாழ்த்தி மகிழ்ந்தனர். விமான பயண வருகையை தொடர்ந்து மரியாஹ் அவர்களின் உடல்நலம் பரிசோதிக்கப்பட்டது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்