.

Pages

Sunday, August 27, 2017

அதிரையில் திருட்டு ~ சிசிடிவி கேமரா உதவியால் திருடன் பிடிபட்டான் ~ பொருட்கள் மீட்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக.27
அதிராம்பட்டினம், கீழத்தெருவில் உள்ள மளிகை கடையினுள் புகுந்து பணம், பொருட்கள் திருட்டு. சிசிடிவி கேமரா உதவியால் திருட்டு பொருட்கள் உடனடி மீட்பு. தொடர் திருட்டால்  வர்த்தகர்கள் கவலை - அதிர்ச்சி.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் கே.கே ஹாஜா நஜ்முதீன். கீழத்தெரு பிரதான சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று சனிக்கிழமை இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கடையை திறந்து பார்த்த போது, கடையினுள் உள்ள கல்லா உடைக்கப்பட்டு, பொருட்கள் திருட்டு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கடையினுள் பொருத்தி இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சியைப் பார்த்த போது, அதில் நள்ளிரவில் திருடன் ஒருவன் பெண்கள் கவுண்டர் வழியே கடையினுள் புகுந்து, கல்லாவை உடைத்து பணம், சிகரெட் பண்டல்கள், அமுல் ஸ்ப்ரே, சாக்லேட் உள்ளிட்ட பொருட்கள் திருடுவது தெளிவாகப் பதிவாகி இருந்தது. இதையடுத்து திருடன் வசிக்கும் வீட்டின் முகவரியை தெரிந்துகொண்ட கடை உரிமையாளர் கே.கே ஹாஜா நஜ்முதீன், நேரில் சென்று திருட்டுப் பொருட்களை திருடனிடமிருந்து மீட்டு வந்தார். இதன் மதிப்பு ரூ. 25 ஆயிரம் என கூறப்படுகிறது. இது குறித்து கடை உரிமையாளர் அதிராம்பட்டினம் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

போலீசார் உதவி இல்லாமல் திருட்டு பொருட்கள் மீட்பு - வர்த்தகர்கள் பாராட்டு:
போலீசார் உதவி இல்லாமல், சிசிடிவி கேமரா உதவியுடன் திருட்டு பொருட்களை உடனடியாக மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட கடை உரிமையாளர் கே.கே. ஹாஜா நஜ்முதீன் துணிச்சலை வர்த்தகர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள்.

அதிராம்பட்டினத்தில் தொடர் திருட்டால் வர்த்தகர்கள் கவலை - அதிர்ச்சி:
அதிராம்பட்டினத்தில் கடந்த ஆக.10 ந் தேதி நள்ளிரவில் கடைத்தெரு பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் அபூபக்கர் கடையின், பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூ. 90 ஆயிரம் பணம் திருட்டு போனது.
அதே போல், கடந்த ஆக.19 ந் தேதி நள்ளிரவில், நடுத்தெரு பகுதியில் கடை நடத்தி வரும் நூருல் அமீன் கடையினுள் ரீ சார்ஜ் செய்வதற்காக வைத்து இருந்த ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான 8 செல்போன்கள், ரொக்கம் ரூ. 20 ஆயிரம் ஆகியன திருட்டு போனது. அண்மைகாலமாக, அதிராம்பட்டினம் வர்த்தக மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நள்ளிரவில் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையும், அதிர்ச்சியும் அளிப்பதாக உள்ளது.

தொடர் திருட்டுகளை தடுக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் துரிதமாக செயல்பட வேண்டும். இரவில் வாகன ரோந்தில் ஈடுபட வேண்டும். அதிராம்பட்டினம் பிரதானப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என வர்த்தகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

1 comment:

  1. கடை உரிமையாளர், திருடன் யார் என்று கண்டுபிடித்து, அவன் வீட்டுக்குச் சென்று, தன் பொருள்களை மீட்டுக்கொண்டு வந்தார் என்கிறீர்கள். ஆனால், அந்தத் திருடன் யார் என்பதை வெளிப்படுத்தவில்லையே? இது சரியில்லை. வெளிப்படுத்தினால்தானே மற்றவர்கள் விழிப்படைவார்கள். என்ன ஊடக நிலைபாடப்பா இது?!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.