சீனா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மீன் நெட்டிகள். உயர் ரக சூப் தயாரிக்க, திருமண விருந்துகளில் மீன் நெட்டி முக்கிய பங்கு வகிக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்களை பிடித்துக்கொண்டு விற்பனைக்காக அதிராம்பட்டினம் கடைத்தெரு மீன் விற்பனை கூடத்திற்கு கொண்டு வரப்படும். அதேபோல் அதிராம்பட்டினம் அடுத்து காணப்படும் கடலோரப் பகுதிகளாகிய மல்லிபட்டினம், சேதுபாவசத்திரம், கட்டுமாவாடி உள்ளிட்ட துறைமுகங்களில் பிடிக்கப்படும் மீன்களும் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்குள்ள மீன் வியாபாரிகள் மீன் கிடைக்காத காலகட்டங்களில் தொலைதூரப் பகுதிகளுக்கு சென்று குறிப்பாக தூத்துக்குடி, நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய பகுதிகளில் மீன்களை மொத்தமாக வாங்கி வந்து இங்கு விற்பதும் உண்டு.
ஒவ்வொரு காலக்கட்டங்களில் பல்வேறு வகையான மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக தேசப்பொடி, காரைப்பொடி, நெத்திலிப்பொடி, சூரைப்பொடி, அஞ்சலா மீன், வாவல் மீன், வாளைமீன், கொடுவா மீன், பண்ணா மீன், கிழக்கன் மீன், கத்தாளை மீன், பூவாளி மீன், முரல் மீன், திருக்கை மீன், தாளன் சுறா, மத்தி மீன், இறால், சிங்கி இறால், நண்டு, விலாங்கு மீன், விரால் மீன் போன்றவற்றை மொத்தமாகவும், சில்லறையாகவும் வியாபாரிகள் வாங்குகின்றனர்.
விற்பனைக்கு கொண்டு வரும் கூரல் கத்தாளை, கொடுவா, கெளுத்தி, குழுவி ஆகிய மீன்களை சில்லறை வியாபாரிகள் கூறு கட்டி விற்பது உண்டு. இந்த மீன்களின் வயிற்றுப் பகுதியில் வெண்மை நிறத்தில் 'காற்றுப்பை' போன்று காணப்படும் 'நெட்டி' பகுதியை வெட்டி எடுத்து வியாபாரிகளிடம் தனியாக விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 15 செ.மீ முதல் 30 செ.மீ வரை நீளமுள்ள ஒரு நெட்டி, 100 முதல் 250 கிராம் வரை எடை கொண்டது. ஒரு நெட்டி ரூ.50 முதல் ரூ.100 வரை விலை போகிறது. நெட்டியை வாங்கும் வியாபாரிகள் பதப்படுத்தி சென்னைக்கு அனுப்பி வைக்கின்றனர். அங்கிருந்து கிழக்கு ஆசிய நாடுகளுக்கு குறிப்பாக சீனா, ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவை உயர்வகை சூப் தயார் செய்ய வெளிநாட்டில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு அனுப்பப்படுகிறது. இவற்றை வாங்கிச் செல்ல மீன் வியாபாரிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து மீன் வியாபாரி மு. அபூபக்கர் கூறுகையில்;
கூரல் கத்தாளை, கொடுவா, கெளுத்தி, குழுவி ஆகிய மீன்களில் நெட்டி காணப்படும். ஆண் மீன்களின் நெட்டி கனமானதாக இருக்கும். பெண் மீன்களின் நெட்டி லேசாகக் காணப்படும்.
ஒரு நெட்டி ரூ.50 முதல் ரூ.100 வரை விலை போகும். மாதத்தில் 100 முதல் 200 வரை நெட்டிகள் கிடைக்கிறது. இவற்றை வாங்கி சுத்தப்படுத்தி, உப்பு போடாமல் காயவைத்து சென்னையில் உள்ள வியாபாரிகளுக்கு அனுப்பி வைக்கிறோம். இவை உணவிற்காகவும், மருத்துவத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை வறுத்து சாப்பிடலாம் மிகவும் ருசியாக இருக்கும்' என்றார்.
இது குறித்து மீன் வியாபாரி முகைதீன் கூறுகையில்;
'மீன் நெட்டி சாப்பிட்டால் ஆண்மை குறைப்பாட்டை நீக்கும் என வெளிநாடுகளில் நம்பப்படுகிறது. குறிப்பாக சீனா, ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வசிக்கும் சீனர்கள் மத்தியில் இந்த நம்பிக்கை அதிகமாக உள்ளது. அங்கு மீன் நெட்டிக்கு கடும் கிராக்கி உள்ளதால் அங்குள்ள நட்சத்திர ஓட்டல்களில் சூப் தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்நாடுகளில் நடைபெறும் திருமண விருந்துகளில் மீன் நெட்டி உணவு முக்கிய பங்கு வகிக்கிறது' என்றார்.
எங்கு கிடைக்கும்?
ReplyDeleteஎங்கு கிடைக்கும்??
ReplyDelete