.

Pages

Saturday, December 13, 2014

கானல் நீராகும் செடியன் குளம் !? தேவை போர்க்கால நடவடிக்கை!

கானல் நீர் என்ற சொல்லுக்கு விளக்கம் பெற வேண்டிய நிலையில் அதிரையர்கள் இல்லை என்றாலும் அது நமது அஜாக்கிரதையால் செயல்முறை விளக்கமாகிவிடுமோ என அஞ்சத் தோன்றுகிறது இன்றைய செடியன்குளத்தின் நிலை.

செடியன் குளத்தின் அருமை பெருமைகளையும், அதன் இன்றியமையா தேவையையும் ஒவ்வொருவரும் அறிந்துள்ளோம். சுமார் 3 ஆண்டுகளாக தண்ணிரின்றி வறண்டு காணப்பட்ட செடியன்குளம் இன்று அல்லாஹ்வின் அருளால் மனித முயற்சி இல்லாமலேயே மழை நீரால் நிரம்ப இருந்த நிலையில் ஆற்று நீரும் திருப்பி விடப்பட்டு அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழியத் தொடங்கியது, இன்னும் மழை நீர் வந்து கொண்டுதான் இருக்கிறது, அல்லாஹ்விற்கே புகழனைத்தும்.

ஒரு சில மாதங்கள் முன்புவரை செடியன்குளம் பாலைவனமாக காட்சியளித்த காலத்தில் அது ஆழப்படுத்தப்பட்டு தற்போது முழுமையாக நீர் நிரம்பியுள்ள நிலையில், டிஎம்சி கணக்கில் நமக்கு அளவிட முடியாவிட்டாலும் நீரின் அழுத்தம் ( Pressure ) எவ்வாறு இருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள். இந்த அழுத்தத்தை தாங்கும் நிலையில் அதன் வடிகால் பாதை இல்லை என்பதே நமது கவலை தோய்ந்த இந்த கட்டுரையின் நோக்கம்.

வலுவற்ற வடிகால் பாதையால் ஏற்கனவே கசியத் தொடங்கிவிட்ட செடியன்குளம் எந்த நேரத்திலும் உடைத்துக் கொண்டு பிலால் நகரை சேதப்படுத்தும் வாய்ப்புள்ளது மேலும் தொடர் கசிவின் காரணமாகவும் செடியனின் தண்ணீர் கோடைக்கு முன்பே வற்றிவிடக்கூடிய ஆபத்து உள்ளது.

பேரூராட்சியின் சார்பில் மணல் மற்றும் மூடைகளை கொண்டு செப்பனிட முயன்றாலும் அவை பயன்தராத நிலையிலேயே உள்ளன. நாள் ஒன்றுக்கு சராசரியாக 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. மழை காலங்களில் சற்று கூடுதலாக வெளியேறும். இவ்வாறு வெளியேறும் நீர் பிலால் நகர் பகுதியின் பிரதான சாலை வழியே செல்வதால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள், பள்ளிகளுக்கு தொழுகைக்கு செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரிலிருந்து வெளியேறும் பாம்புகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுவதால் இப்பகுதியினர் பெரும் அச்சத்ததில் உள்ளனர். தண்ணீர் ஆங்காங்கே தேங்கி காணப்படுவதால் கொசு தொல்லை பெருகவும், சுகாதார சீர்கேடும் ஏற்பட வாய்ப்புள்ளது.

சம்பந்தபட்டவர்கள், தன்னார்வலர்கள், சங்க பொறுப்பாளர்கள் என அனைவரும் போர்க்கால அடிப்படையில் செடியனின் நீரை காப்பாற்ற தேவையான முன்னேற்பாடுகளை செய்ய உடன் முன்வர வேண்டும் என கோருகிறோம்.

வடிகால் கிணற்றை தோண்டி சிமெண்ட் கலவைகளை கொண்டு பலப்படுத்த வேண்டும் மேலும் வழியும் தண்ணீர் எத்தகைய தடங்கலுமின்றி செய்னாங்குளத்திற்கு சென்றடையும் வகையில் வாய்க்கால் சரிப்படுத்தப்பட வேண்டும் மேலும் ஊதாங்குழல் சைஸூக்கு பதிக்கப்பட்டுள்ள குழாய்களின் உடைப்புக்கள் மற்றும் ஒழுகும் இணைப்புக்கள் சரிபடுத்தப்பட வேண்டும். மேலும் பிலால் நகர் பாதிக்காத வகையில் தேவையான அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இல்லையெனில், கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத அவல நிலைக்கு நாமே உதாரணமாகி விடுவோம் என எச்சரிக்கிறோம். இதுதொடர்பாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள மேலத்தெரு, கீழத்தெரு பொறுப்பாளர்களை அழைக்கிறோம். செய்வீர்களா ? அல்லது செடியன்குளம் என்பது கானல் நீராகுமா ?

அதிரை நியூஸ் குழு
குளத்திலிருந்து கசிந்து வீணாக வெளியேறும் தண்ணீர்

பிலால்நகர் குடியிருப்பின் வழியாக வழிந்தோடும் காட்சி...

6 comments:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    இது கவலைக்குரியது, மேலும் கண்டனத்திற்கு உரியது, எத்தனையோ ‎தடவைகள் சொல்லியாச்சு, ஒரு சதவிகிதம் கூட சரியானதாக ‎தெரியவில்லை.‎

    பேசாமல் ஜின்களை பழக்கப்படுத்தி விட்டால் எல்லாம் வேலையையும் ‎ஒரு நிமிடத்தில் முடிந்து விடும்.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. இந்த குளத்திற்கு உரிமை கொண்டாடும் மேலத்தெரு, கீழத்தெரு சங்க நிர்வாகிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் இல்லாமல் கடந்த 3 ஆண்டுகளாக அவதிப்பட்டதே ஒரு சோதனை தான் அதிலிருந்து நாம் பாடம் படிக்காவிட்டால் நல்லதல்ல. கசிவை நிறுத்த தேவையான முயற்சிகளை செய்யுங்கள்.

    ReplyDelete
  3. நிர்வாகத் திறமையைக் காட்ட இதைவிடத் தக்கத் தருணம் கிடையாது. நேரமும் காலமும் பொன்போன்றது. எங்கே பார்க்கலாம் !

    ReplyDelete
  4. செடியங்குளத்தில் தண்ணீர் இல்லையே என்று ஏங்கியது போய் இப்போது விரயமாகிக் கொண்டிருக்கும் தண்ணீருக்காக கவலைப்படும் படியாக உள்ளது. இந்தக் கசிவை உடனே கவனித்தால் இன்னும் கொஞ்சநாளைக்காவது செடியங்குளத்தை தண்ணீருடன் பார்க்கலாம்.

    ReplyDelete
  5. நிர்வாகிகளுக்கு தண்ணீரின் தேவையைவிட அதன் வருவாய்தான் நோக்கம் போல் தெரிகின்றது பாவம் செடியன்குளம்!

    பிலால் நகரில் வடிகால் வாய்காலை சிலர் தெரிந்துக் கொண்டே ஆக்கிரமிப்பு செய்ததுதான் அந்த நகரின் பிரதான சாலையில் தண்ணீர் தேக்கம் ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டும்மே நிரந்தர தீர்வாகும்.

    ReplyDelete
  6. தண்ணீரால் பெரிதும் பாதித்திருந்த நமதூருக்கு தேவையான வாழ்வாதாரத்தில் மிக முக்கியமான தண்ணீரை வான்வழியாக ரப்பு அளித்தான், அல்ஹம்துலில்லாஹ்

    அதை சேமித்து இன்னும் கொஞ்சகாலம் அதை பாதுகாப்பது சிறந்தது மேலும் தொடர்ந்து மழை பொழியச்செய்து நமதூருக்கு தண்ணீர் பற்றாக்குறையை போக்கிட தூஆ செய்வோமாக...

    தண்ணீரை வீண்விரயம் செய்யாதீரென்று நமது மார்க்கம் சொல்லித்தரும் பொருட்டு இதை விரைவில் சரிசெய்ய அப்பகுதி மக்களையும், பேரூரையும் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.