.

Pages

Wednesday, February 11, 2015

தூத்துக்குடியில் இருந்து துபாய்க்கு நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்து துவக்கம் !

தூத்துக்குடியில் இருந்து துபாய்க்கு நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்து நேற்று தொடங்கியது. தூத்துக்குடி துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ஆனந்தசந்திரபோஸ் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் 8-வது கப்பல் தளம் சரக்கு பெட்டக முனையமாக மாற்றப்பட்டது. இந்த சரக்கு பெட்டக முனையத்தை தக்சீன் பாரத் கேட்வே டெர்மினல் என்ற நிறுவனம் கையாண்டு வருகிறது. 12.8 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட இந்த கப்பல் தளத்தில் ஆண்டுக்கு சுமார் 7½ லட்சம் சரக்கு பெட்டகங்களை கையாளும் வகையில் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் சரக்கு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு செல்கின்றன. அங்கு சரக்கு பெட்டகங்கள் இறக்கப்பட்டு, வேறு கப்பல்கள் மூலம் மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில் இருந்து துபாய் ஜெபர்அலி துறைமுகத்துக்கு நேரடியாக சரக்கு கப்பல் போக்குவரத்து நேற்று தொடங்கப்பட்டது. இதன் மூலம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து சரக்கு பெட்டகத்துடன் புறப்படும் கப்பல், இலங்கை கொழும்பு துறைமுகத்துக்கு செல்லாமல் நேரடியாக கொச்சி துறைமுகத்துக்கு செல்கிறது. அங்கு இருந்து சரக்கு பெட்டகங்களை ஏற்றிக் கொண்டு துபாய் புறப்பட்டு செல்கிறது. இதனால் காலதாமதம் மற்றும் பண விரயம் தவிர்க்கப்படுகிறது.

இந்த போக்குவரத்து சேவை தொடக்க விழா நேற்று காலையில் வ.உ.சி.துறைமுகம் 8-வது கப்பல் தளத்தில் நடந்தது. விழாவுக்கு வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ஆனந்தசந்திரபோஸ் தலைமை தாங்கி, சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ‘எஸ்.எஸ்.எல்.குஜராத்’ என்ற சரக்கு கப்பலில், முதலாவது சரக்கு பெட்டகம் நவீன பழுதூக்கி மூலம் பெட்டகங்கள் ஏற்றப்பட்டன. இந்த கப்பல் 1,600 சரக்கு பெட்டகங்களை கையாளும் திறன் கொண்டது. இந்த கப்பலில் 487 சரக்கு பெட்டகங்கள் ஏற்றப்படுகிறது.

இந்த கப்பல் இன்று தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு கொச்சி செல்கிறது. அங்கு இருந்து புறப்பட்டு 16-ந் தேதி துபாய் ஜெபல்அலி துறைமுகத்தை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சரக்கு பெட்டக கப்பல் சேவை மூலம் தென்னிந்திய ஏற்றுமதியாளர்கள் தங்கள் பொருட்களை குறைந்த கால அவகாசத்திலும், குறைந்த செலவிலும் மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமின்றி, மேலை நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடியும். எனவே இந்த நேரடி சரக்கு கப்பல் சேவை ஏற்றுமதியாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.