.

Pages

Tuesday, July 31, 2018

அதிராம்பட்டினத்தில் துப்புரவு மற்றும் கழிவுநீர் வடிகால் சீரமைக்கும் பணிகள் தீவிரம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 31
அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்  துப்புரவு மற்றும் கழிவுநீர் வடிகால் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி 21 வார்டுகளிலும் தூய்மைப் பணிகளில் துப்பரவுப் பணியாளர்கள் கடந்த சில நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சாலையோரம் தேங்கிக் காணப்படும் குப்பை கூளங்கள் அகற்றுவது, கழிவு நீர் வடிகாலில் பிளாஸ்டிக் அடைப்புகளை சீர்செய்வது, திறந்த நிலையில் காணப்பட்ட வடிகாலின் மேல்பகுதியில் மூடி அமைத்து சீரமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெறுகிறது. இப்பணியில் அதிரை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழு பணியாளர்கள் என மொத்தம் 30 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமும் காலை 6 மணி முதல், பகல் 11 மணி வரையிலும், மீண்டும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பணிகள் நடைபெறுகிறது. குப்பைகளை அள்ளிச்செல்ல டிராக்டர், மினி டிப்பர் லாரி வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஜே.சி.பி இயந்திரம் உதவியோடு, வடிகால் தூர் வாரி சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், அதிரை பேரூந்து நிலையத்தின் அருகே திறந்த நிலையில் காணப்பட்ட கழிவு நீர் வடிகாலை சீரமைத்து, அதன் மேல்பகுதி மீது மூடி அமைப்பதற்கான கட்டுமானப் பணி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், அதிராம்பட்டினம் பேரூர் செயல் அலுவலர் எல். ரமேஷ் மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர் அன்பரசன், துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் முத்துக்குமார் ஆகியோர் பணிகளை கவனித்து வருகின்றனர்.

இதுகுறித்து அதிராம்பட்டினம் பேரூராட்சி அலுவலக வட்டாரத்தில் கூறியது;
'அதிராம்பட்டினம் பகுதியில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் கழிவு நீர் சீராக வெளியேறுவதில் தடை ஏற்படுகிறது. கடந்த சில நாட்களாக வடிகாலை தூய்மைப் படுத்தும் பணிகளில் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டையும், வடிகாலில் கழிவுகளை கொட்டுவதையும் தவிர்க்க வேண்டும். அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணிகள், வடிகால் சுத்தம் செய்யும் பணிகள், பிறப்பு~இறப்பு சான்றிதழ் வழங்கும் பணிகள் ஆகியவை துரிதமாக நடைபெற்று வருகிறது' என்றனர்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிராம்பட்டினத்தில் குளிர்ந்த காற்றுடன் மழை !

அதிராம்பட்டினம், ஜூலை 31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில்
கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணி முதல் திடீரென குளிர்ந்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால், இப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. அவ்வப்போது மின்னலுடன் இடி இடித்து வருகின்றன. மழை தொடர்ந்து நீடித்து பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பலமான இடி இடித்ததில் அதிராம்பட்டினம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் வர்த்தக நிறுவனங்களில் துணிப்பைகளை பயன்படுத்த ஆட்சியர் அறிவுறுத்தல்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் முதல் காலாண்டிற்கான உணவு பாதுகாப்புத்துறையின் செயல் அறிக்கை குறித்த குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (31.07.2018) நடைபெற்றது

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ. அண்ணாதுரை தெரிவித்ததாவது:
உணவு பாதுகாப்பு செயல் அறிக்கை கூட்டத்திற்கு வந்திருக்கும் அலுவலர்கள் மற்றும் வணிகர் சங்கங்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்ப்பதை ஒரு கொள்கையாக எடுத்துக்கொண்டு செய்து காட்ட வேண்டும்.  வணிக நிறுவனங்கள் பிளாஸ்டிக் தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு வாசகங்களை தங்கள் நிறுவனங்களில் வைப்பதுடன் வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் பை வழங்காமல் துணிப்பைகளை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். அதை போல் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். தேநீர் கடைகளில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள குப்பை தொட்டிகள் பயன்படுத்த வேண்டும். நுகர்வோரின் பாதுகாப்பு மிக முக்கியமானதாகும். குறிப்பாக மருந்து கடைகள், பெரிய துணிக் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் உரிமையாளர்கள், சங்க உறுப்பினர்கள் ஆகியோர்களை அழைத்து பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை துணிப்பை பயன்படுத்துவதற்கு அறிவுறுத்த வேண்டும்.  வணிகர்கள் மட்டும் இதனை நடைமுறைப்படுத்துவது சாத்தியமாற்று, பொது மக்களும் தாங்கள் கடைக்கு செல்லும் பொழுது பொருட்களை எடுத்துவருவதற்கு ஏதுவாக துணிப்பைகளை அல்லது பாத்திரங்களையோ எடுத்துச்செல்ல வேண்டும்.

உணவு  கூடங்கள், தேநீர் கடைகள் மற்றும் இதர உணவு வணிகர்கள், அம்மா உணவகம், சத்துணவு கூடங்கள், அரசு பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள், ஆடு வதை கூடங்கள், நியாய விலை கடைகள் மற்றும் கிடங்கு, அரசு மதுபான கடைகள், கோவில்களில் நடைபெறும் அன்னதானங்கள் ஆகியற்றிற்கு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையில் வழங்கப்படும் உரிமை சான்றிதழ்கள் பெற்று உரிய காலத்தில்  அதனை புதுப்பித்தும் நடத்திட வேண்டும். உரிமம் இல்லாமல் நடத்துபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கே.சி.அருண், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், ஹோட்டல் சங்க உறுப்பினர்கள், வணிக சங்கங்களின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமீரகத்தில் நாளை (ஆக.1) முதல் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா (முழு விவரம்)

அதிரை நியூஸ்: ஜூலை 31
அமீரகத்தில் நாளை (ஆக.1) முதல் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் வேலை தேடிக்கொள்ள 6 மாத தற்காலிக விசா மற்றும் பொதுமன்னிப்பு அறிவிப்பையொட்டி 9 இடங்களில் உதவி மையங்கள் அமைப்பு.

அமீரகத்தில் சட்ட விரோதமாக தங்கியிருப்போர், விசா காலம் முடிந்தும் புதுப்பிக்காமல் தங்கியிருப்போர், வீடு மற்றும் பணியிடங்களில் இருந்து ஓடிப்போனாவர்கள், நாட்டிற்குள் சட்ட விரோதமான முறையில் நுழைந்தவர்கள் என அனைவரும் தங்களுடைய நிலையை அமீரகத்திற்குள் இருந்தவாறே சட்டப்பூர்வமாக மாற்றிக்கொள்ளலாம் அல்லது அபராதங்கள், தண்டனைகள் ஏதுமின்றி நாட்டை விட்டு முறையாக வெளியேறலாம், மீண்டும் அமீரகத்திற்குள் சட்டப்பூர்வமாக வர எந்தத் தடையும் விதிக்கப்படவும் மாட்டாது போன்ற சலுகைகளுடன் 90 நாட்கள் அவகாசம் வழங்கி அமீரக அரசு பொதுமன்னிப்பை அறிவித்துள்ளது. இந்த பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் ஆகஸ்ட் 1 முதல் ஆரம்பமாகிறது.

“Protect yourself by modifying your status” என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த 90 நாட்கள் பொதுமன்னிப்பு அவகாசம் முடிந்த பிறகு நாடு முழுவதும் அதிரடி தொடர் சோதனைகள் நடத்தப்படும். பிடிபடும் சட்டவிரோதிகள் மீது அபராதம் மற்றும் சிறைத்தண்டனைகள் விதிக்கப்படுவதுடன் நாட்டிற்குள் மீண்டும் நுழைய நிரந்தர தடை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்திற்குள் எத்தகைய ஆவணங்களும் இன்றி கள்ளத்தனமாக நுழைந்தவர்களும் முறைப்படி உதவி மையங்கள் வழியாக வெளியேறலாம் என்றாலும் இவர்களுக்கு மட்டும் 2 வருட தடை விதிக்கப்படும், தடைக்குப் பின் மீண்டும் முறைப்படி அமீரகத்திற்குள் வரலாம் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும், சட்டவிரோதமாக தங்கியிருப்போர் விரும்பினால் தங்களுடைய சொந்த (சுய) ஸ்பான்சரின் கீழ் அல்லது வேலைவாய்ப்பளிக்கும் ஒரு ஸ்பான்சரின் கீழ் 6 மாத விசாவில் இருந்து கொண்டு அமீரகத்தில் வேலை தேடிக் கொள்ளலாம் எனவும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், போரால் பாதிக்கப்பட்ட சிரியா, ஏமன் போன்ற நாடுகளைச் சேர்ந்த குடும்பத்தினர்களுக்கு ஒரு வருட ரெஸிடென்ஸ் விசாவும் வழங்கப்படும், இக்காலகட்டத்தில் அவர்களும் தங்களுடைய நிலையை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி மையங்கள்:

கீழ்க்காணும் அமீரக இமிக்கிரேசன் அலுவலகங்களே சிறப்பு உதவி மையங்களாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைநாட்களில் தினமும் காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை செயல்படும். முறையான ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பித்தால் 2 வேலைநாட்களுக்குள் உங்களுடைய விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி (Abu Dhabi) : ஷஹாமா (Shahama) இமிக்கிரேசன் அலுவலகம்
அல் அய்ன் (Al Ain)  இமிக்கிரேசன் அலுவலகம்
கர்பியா (Garbia) இமிக்கிரேசன் அலுவலகம் (அபுதாபியின் மேற்குப்புற பிரதேசத்தினருக்காக - Abu Dhabi's western region)
துபை (Dubai) : அல் அவீர் (Al Aweer) இமிக்கிரேசன் அலுவலகம்
ஷார்ஜா (Sharjah), அஜ்மான் (Ajman), உம்மல் குவைன் (Umm Al Quwain), ராஸ் அல் கைமா (Ras Al Khaimah) மற்றும் புஜைரா (Fujairah): அதனதன் மெயின் இமிக்கிரேசன் அலுவலகங்கள் (Main Immigration Offices)
.
24 மணிநேரமும் இது சம்பந்தமான விபரங்களை தெரிந்து கொள்ள 80080 என்ற எண்ணில் அழைக்கவும்.

தேவையான ஆவணங்கள்:
பாஸ்போர்ட், ஒருங்கிணைந்த அடையாள எண் (Unified Identification No.) (ரெஸிடென்ஸி ஸ்டாம்ப் அல்லது விசாவில் காணப்படும் -  if resident obtained entry or residency visa), நாட்டை - விட்டு வெளியேற விரும்புபவர்கள் மட்டும் விமான டிக்கெட் கொண்டு வர வேண்டும். பாஸ்போர்ட் இல்லாதவர்கள் தங்கள் நாடுகளின் தூதரகங்களிலிருந்து பெறும் ஆவணங்களுடன் வர வேண்டும்.

அமீரகத்திலேயே தொடர்ந்து சட்டப்பூர்வமாக தங்க விரும்புபவர்கள், டிரான்ஸ்பர் செய்து கொள்ள விரும்புபவர்கள் ஆகியோர் உங்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் அல்லது ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்களிடமிருந்து அதற்கான செல்லுபடியாகும் ஆவணங்களை பெற்று வர வேண்டும்.

இந்தியர்களுக்கு உதவ இந்திய தூதரகம் மற்றும் பொதுநல அமைப்புகள்:
இந்தியர்களுக்கு உதவ இந்திய தூதரகமும் இந்தியர் சார்ந்த பல்வேறு சமூக நல நிறுவனங்களும் தங்களுடைய தொடர்பு எண்களை அறிவித்து உதவ முன்வந்துள்ளன.

அபுதாபி இந்திய தூதரகம்: 050-8995583
இந்திய தூதரகத்தின் தொழிலாளர் நல  மைய இலவச எண் : 80046342 (24 மணிநேரமும்)

இந்திய தூதரகத்தின் பொதுமன்னிப்பு விவகாரங்களுக்கான சிறப்பு மின்னஞ்சல் முகவரி: indemb.uaeamnesty18@gmail.com

துபை இந்திய துணை தூதரகத்தின் 24 மணிநேர தொலைபேசி எண் : 056-5463903

துபை துணை இந்திய தூதரகத்தின் பொதுமன்னிப்பு விவகாரங்களுக்கான சிறப்பு மின்னஞ்சல் முகவரி: indiaindubai.amnesty@gmail.com

அமீரகத்தில் செயல்படும் இந்திய சமூக நல நிறுவனங்களின் விபரம் வருமாறு:
1.  The Indian Social and Cultural Centre (ISC) reception: 02-6730066
2.  The Kerala Social Centre help desk:  02-6314455
3.  The Abu Dhabi Malayalee Samajam’s welfare wing will take care of all amnesty-related enquiries made to 050-7035538 and 02-5537600
4.  The Indian Islamic Centre in Abu Dhabi (IIC): 02-6424488

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Monday, July 30, 2018

காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் புதிய பேருந்து சேவை தொடக்கம்!

அதிராம்பட்டினம், ஜூலை 30
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதி மாணவர்களின் வசதிக்காக, அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக சிற்றுந்து சேவை இன்று (30-07-2018) திங்கட்கிழமை காலை தொடங்கப்பட்டது.

பேருந்துச் சேவையை காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் செயலர் ஹாஜி ஏ.ஜெ அபுல் ஹசன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.எல் அஸ்ரப் அலி, உதவித் தலைமை ஆசிரியர் நாகராஜன், ஆசிரியர்கள் வேணுகோபால், உமர் பாருக், நீலகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இச்சேவை, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிக்கு உட்பட்ட சுமார் 8 கிலோ மீட்டர் தொலை தூரத்தில் வசிக்கும் பள்ளி மாணவர்களின் வசதிக்காகவும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, குறைந்த கட்டணத்தில், விடுமுறை நாட்களை தவிர்த்து, தினமும் காலை 8 மணிக்கும், மாலை 4.30 மணிக்கும் பேருந்து சேவை இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)

காட்டுப்பள்ளிதெரு பிரதான சாலையில் தற்காலிக பாலம் அமைப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட காட்டுப்பள்ளித்தெரு அருகே நீண்டகாலமாக பழுதடைந்து காணப்படும் சிறு பாலத்தின் அருகே தற்காலிக பாலத்தை அப்பகுதியினர் இன்று திங்கட்கிழமை அமைத்தனர். மேலும், இதன் வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் தூர் வாரப்பட்டது.

இதுகுறித்து பணிகளை எடுத்துச்செய்யும் அப்பகுதியின் முன்னாள் கவுன்சிலர் அப்துல் லத்திப் கூறியது:
தினந்தோறும் இந்த பாலம் வழியே இப்பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் பயன்படுத்தி வந்தநிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு இந்த பாலத்தின் நடுவில் ஏற்பட்டுள்ள ஆபத்தான பள்ளங்களால் கார்கள், பள்ளி வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, இப்பகுதியின் இறந்தவர்கள் (ஜனாஸா) உடல் இந்த வழியே கொண்டு செல்ல முடியாமல், தொலை தூர மாற்று வழியில் எடுத்து செல்கின்றனர்.

இதுகுறித்து, அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, இப்பகுதியினரின் தீவிர முயற்சியில் பொதுமக்கள் கடந்து செல்வதற்காக தற்காலிகமாக பாலம் அமைக்கப்பட்டது. அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகம், ஆபத்தான பாலத்தை இடித்துவிட்டு, புதிதாக பாலம் அமைப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
 

ஆற்று நீர் வரும் பாதைகள் ~ ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு (படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம், கல்லணைக் கால்வாயிலிருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட காவிரி நீர் கடைமடை சென்றடைவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (30.07.2018) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

தஞ்சாவூர் காசவளநாடு புதூர் கல்லணை கால்வாய் கரையில் பொதுப் பணித்துறையினரால் கால்வாய் மண் அரிப்பு ஏற்படாமல் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் கல்லணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட காவிரி நீர் கல்லணைக கால்வாயில் வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (30.07.2018) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் காசவளநாடு புதூர் கல்லணை கால்வாய் கரையில் பொதுப் பணித்துறையினரால் கால்வாய்  மண் அரிப்பு ஏற்படாமல் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், ஒரத்தநாடு வட்டம் ஆதனக்கோட்டை கல்லணை கால்வாயில் கல்லணையிலிருந்து திறந்து விடப்பட்ட காவிரி தண்ணீர் வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து திருவோணம் வட்டம் மகாராஜ சமுத்திரம் நீர் பரிகை கல்லணை கால்வாயினை பார்வையிட்டு ஆய்வு செய்து கால்வாயில் கொள்ளளவு மற்றும் நீர் போகும் அளவு ஆகியவற்றையும், கல்லணை கால்வாயிலிருந்து ராஜாமடம் கால்வாய் தலைப்பு பகுதியில் பார்வையிட்டு ராஜாமடம் கால்வாயில் அதிகபட்சமாக திறந்துவிடப்பட்ட நீரின் அளவு அதன் மூலம் மேற்கொள்ளப்படும் பாசனப் பகுதிகளை ஆகியவற்றை பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இ.ஆ.ப அவர்கள் கேட்டறிந்தார்.

ஆய்வின் போது பொதுப்பணித்துறை கல்லணைக்கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் உதவி செயற்பொறியாளர் சண்முகம், அன்பரசன், உதவி பொறியாளர்கள் சேந்தன், செல்வி.சுகன்யா, மதியழகன் உடன் உள்ளனர்.
 

பட்டுக்கோட்டை ~ திருவாரூர் ரயில் பாதை பணிகள் மார்ச் 2019 ல் நிறைவு ~ ரயில்வே உயர் அதிகாரி தகவல்!

பட்டுக்கோட்டை, ஜூலை 30
பட்டுக்கோட்டை~ திருவாரூர் அகல ரயில் பாதை பணிகள் 2019 மார்ச் மாதம் நிறைவு பெறும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் என்.ஜெயராமன் சென்னையிலுள்ள தெற்கு ரயில்வே மக்கள் குறைத் தீர்க்கும் தனிப்பிரிவு பொதுமேலாளர் அலுவலகத்தில், துணை இயக்குநர் வி. சிவசாமியை ஜூலை 18 ஆம் தேதி நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

அதில், காரைக்குடி ~ திருவாரூர் இடையிலான 147 கி.மீ. தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணியில், தற்போது காரைக்குடி-பட்டுக்கோட்டை வரையிலான 73 கி.மீ. தொலைவுக்கு அகலப் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய, பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, இவ்வழித்தடத்தில் முத்துப்பேட்டை, தம்பிக்கோட்டை, தில்லைவிளாகம், பாண்டி, திருத்துறைப்பூண்டி, திருநெல்லிக்காவல் உள்பட மேலும் சில ஊர்களில் ஆமை வேகத்தில் நடக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அப்போதுதான் காரைக்குடி~ சென்னைக்கு நேரடி ரயில் சேவை தொடங்க முடியும் என கூறியிருந்தார்.

இந்த மனுவுக்கு சென்னை தெற்கு ரயில்வே துறையின் துணை முதன்மைப் பொறியாளர் வி.சீனிவாசன் அளித்துள்ள பதில்:
பட்டுக்கோட்டை ~ திருத்துறைப்பூண்டி ~ திருவாரூர் வழித்தடத்தில் நடைபெற்று வரும் அகல ரயில் பாதைப் பணிகள் அனைத்தும் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடைய வாய்ப்புள்ளது.

மன்னார்குடி ~ பட்டுக்கோட்டை புதிய வழித்தடத்தில் அமைக்கப்படவுள்ள அகல ரயில் பாதை பணியில், குறிப்பிட்ட சில பணிகளுக்கான திட்ட மதிப்பீட்டுக்கு மட்டும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

முழுமையான பணிகளுக்கான திட்ட மதிப்பீடு ஒப்புதல் பெறும் நிலையில் உள்ளது. இதேபோல, தஞ்சாவூர்~ பட்டுக்கோட்டை புதிய வழித்தடத்தில் அமைக்கப்படவுள்ள அகல ரயில் பாதை பணிக்கு முழுமையான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Sunday, July 29, 2018

மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் அதிரை வீரர் வஜீர் அலி 314 புள்ளிகள் பெற்று சாதனை!

துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்ற வஜீர் அலி
அதிராம்பட்டினம், ஜூலை 29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சேக் முகமது. இவரது மகன் வஜீர் அலி (வயது 44). ரைபிள் கிளப் உறுப்பினரான இவர், மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் ஆர்வமாகக் கலந்துகொண்டு வருகிறார்.

தமிழ்நாடு துப்பாக்கிச்சூடு கழகத்தின் சார்பில் 44-வது மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் மதுரை ரைபிள் கிளப்பில் கடந்த (ஜூலை 24) செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

மதுரை துப்பாக்கி சுடும் கிளப் தலைவரும், மாநகர காவல் ஆணையருமான டேவிட்சன் தேவாசீர்வாதம் பங்கேற்று போட்டிகளைத் தொடக்கிவைத்தார். இதில் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வந்திருந்த 800 க்கும் மேற்பட்ட துப்பாக்கி சுடும் வீரர்கள் வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில் ரைபிள், பிஸ்டல் வகைகளில் 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் பிரிவுகள் என தனிதனியே நடைபெற்றது.

இதில், அதிரை வீரர் வஜீர் அலி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் சுடும் போட்டியில் கலந்துகொண்டு 314 புள்ளிகள் ( 314 / 400, 79.8% ) பெற்று முதன் முறையாக சாதனை நிகழ்த்தி உள்ளார். டெல்டா மாவட்டத்தின் கடலோரப் பகுதியான அதிராம்பட்டினத்திலிருந்து துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வரும் முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து அதிரை வீரர் வஜீர் அலி கூறியது;
சிறு வயது முதல் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் விளையாடுவது எனக்கு அதிக ஆர்வம். பல்வேறு பகுதிகளில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வருகிறேன். போட்டிகளில் கலந்துகொள்ளும் அதிரையின் முதல் வீரர் என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் சாதனை நிகழ்த்தும் வீரர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள், பரிசுகள் பெரும் வாய்ப்பு உள்ளது. இப்போட்டிகளில் விளையாட அதிக ஆர்வம் கொண்ட அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தயாராக உள்ளேன். இதற்கான பயிற்சி மையத்தை, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளேன். இம்மையத்தில், துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெரும் பல்வேறு நுணுக்கங்களை வீரர்களுக்கு கற்றுக்கொடுப்பேன். துப்பாக்கி சுடுவதில் சிறந்த வீரர்களை உருவாக்குவதே எனது லட்சியம். அதுவும் டெல்டா மாவட்டத்தின் கடலோரப்பகுதியான நமது பகுதியிலிருந்து அதிக சாதனையாளர்கள் உருவாக வேண்டும். இவர்கள் நிகழ்த்தும் சாதனைகள் நமது பகுதிக்கும், நமது நாட்டிற்கும் பெருமையைத் தேடித் தர வேண்டுமென்பதே என நோக்கம்' என்றார்.
 

அதிரையில் இலவச பல் சிகிச்சை முகாம் ~ 255 பேர் பங்கேற்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனை 3
ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, மகிழங்கோட்டை அ.ராஜரெத்தின தேவர் நினைவாக, இலவச பல் சிகிச்சை முகாம் அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமை, குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் எஸ். ஹாஜா முகைதீன் தொடங்கி வைத்தார். குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் எம்.எம் சேக் அலி,  மகிழங்கோட்டை ஆர். அண்ணாமலை, ஜி. பாலசுப்பிரமணியன், பட்டுக்கோட்டை ஆதி.ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனை பல் பொதுநல மருத்துவர் மற்றும் பல் வேர் சிகிச்சை நிபுணர் டாக்டர் பா.பாரதி தலைமையிலான மருத்துவக் குழுவினர், 255 பேருக்கு பல், தாடை மற்றும் வாய் சம்மந்தமான பிரச்னைகளுக்கு மருத்துவ பரிசோதனையும், ஆலோசனைகளும், சிகிச்சையும் அளித்தனர். இதில், 100 பேருக்கு அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனையில் மேற்கோள் சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்யப்பட்டது.

இம்முகாமில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். முகாம் காலை 10 மணிக்கு தொடங்கி, மதியம் 1 மணி வரை நடைபெற்றன. இம்முகாமில், சிறப்பு அழைப்பின் பேரில் பிசியோதெரபிஸ்ட் டி. செல்வசிதம்பரம், வி. சுப்ரமணியன், அண்ணாமலை, தெய்வநாதன் உட்பட ஊர் முகர்கர்கள் பலர் கலந்துகொண்டனர்.