தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சேக் முகமது. இவரது மகன் வஜீர் அலி (வயது 44). இவர், பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் ஆர்வமாக கலந்துகொண்டு வருகிறார்.
இந்நிலையில், திருச்சி மாவட்ட ரைபிள் கிளப் சார்பில், மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி, திருச்சி ஆச்சார்யா ஷூட்டிங் அகதெமியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போட்டியை திருச்சி மாநகர் துணை ஆணையர் மயில்வாகனன் தொடங்கி வைத்தார். இதில், சென்னை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 45 வீரர்கள் கலந்துகொண்டனர். 10 மீட்டர் தூரம் குறிபார்த்து சுடும் ஏர்பிஸ்டல், ஏர் ரைபிள் போட்டிகள் நடைபெற்றது. இதில், அதிரை வீரர் வஜீர் அலி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் சுடும் போட்டியில் கலந்துகொண்டார்.
2018 ஆண்டிற்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி, எதிர்வரும் ஜூலை 25 முதல் 29 வரை மதுரை ரைபிள் கிளப்பில் நடைபெற உள்ளது. இதில், அதிரை வீரர் வஜீர் அலி விளையாட தகுதி பெற்றுள்ளார். இதில் 10 மீட்டர் மற்றும் 50 மீட்டர் தூரம் குறிபார்த்து சுடுவது உள்ளிட்ட போட்டிகளில் ஏர்பிஸ்டல், ரைபிள், பிஸ்டல் ஆகியவை பயன்படுத்தப்படும். முன்னதாக, இதற்கான தேர்வு கடந்த ஜூலை 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017 ஆண்டு சென்னையில் நடந்த மாநில அளவிலான போட்டி மற்றும் கடந்த ஆண்டிற்கு முந்தைய ஆண்டில் கோவையில் நடந்த போட்டி ஆகியவற்றில் வஜீர் அலி கலந்துகொண்டு விளையாடியது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அதிரை வீரர் வஜீர் அலி கூறியது;
சிறு வயது முதல் துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் விளையாடுவது எனக்கு அதிக ஆர்வம். பல்வேறு பகுதிகளில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வருகிறேன். இப்போட்டிகளில் கலந்துகொள்ளும் அதிரையின் முதல் வீரர் என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் சாதனை நிகழ்த்தும் வீரர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள், பரிசுகள் பெரும் வாய்ப்பு உள்ளது. இப்போட்டிகளில் விளையாட அதிக ஆர்வம் கொண்ட அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தயாராக உள்ளேன். இதற்கான பயிற்சி மையத்தை அதிராம்பட்டினத்தில் விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளேன். இம்மையத்தில், வெற்றியைப் பெரும் நுணுக்கங்களை வீரர்களுக்கு கற்றுக்கொடுப்பேன். துப்பாக்கி சுடுவதில் சிறந்த வீரர்களை உருவாக்குவதே எனது லட்சியம். அதுவும் நமது பகுதியிலிருந்து அதிக சாதனையாளர்கள் உருவாக வேண்டும். இவர்கள் நிகழ்த்தும் சாதனைகள் நமது பகுதிக்கும், நமது நாட்டிற்கும் பெருமையைத் தேடித் தர வேண்டும்' என்றார்.
CONGRATULATION VAZIR ALI
ReplyDelete