அமீரகத்தில் சுட்டெரித்த வெயில் ஓய்துள்ள நிலையில் ஹஜ்ஜூப் பெருநாள் விடுமுறை தினங்கள் வருகின்றன. ஒரு பக்கம் 'கடும் உடலுழைப்பு', இன்னொரு புறம் 'You Are Terminated' எனும் கத்தி தலைக்கு மேல் தொங்கும் 'ஒயிட் காலர் ஜாப்' எனும் தினந்தின ஆபீஸ் மண்டை குத்துக்கு ஆளாகியுள்ள அனைவருக்கும் சற்று ஒய்வும் தேவைதானே!
ஊர் சென்று குடும்பத்துடனும், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் குறிப்பாக மழலைகளுடனும் சேர்ந்து ஹஜ்ஜூப் பெருநாளை கொண்டாடும் ஆசையை ரமலானுக்குப் பின் மள மளவென விற்றுத் தீர்ந்த விமான டிக்கெட்டுகளும், கம்பெனிகள் லீவு தர மறுத்ததாலும் வெறுத்துப் போயுள்ள உள்ளங்களுக்கு ஒத்தடமே இந்த மாற்று வழி அமீரக உலா.
துபை மற்றும் அபுதாபி மாநகரங்களுக்குள் சுற்றிப் பார்க்க ஏராளமான மால்கள், மியூசியங்கள், பூங்காக்கள், புரதான இடங்கள் என இருந்தாலும் நாம் அன்றாடம் சந்தித்து வந்த அத்தகைய பரபரப்பிலிருந்து ஒதுங்கி அமைதியாக ரசிக்க மிக ஏற்ற இடம் ஃபுஜைரா அருகிலிலுள்ள கொர்பக்கான் கடற்கரை பிரதேசம்.
அமீரகத்தில் குடும்பத்துடன் இருப்பவர்களும், நண்பர்கள் குழுவாக செல்ல விரும்புபவர்களும், சுற்றிப் பார்ப்பதற்காகவே சுற்றுலா விசாவில் வந்துள்ளவர்களும், ஏற்கனவே கொர்பக்கான் வந்துள்ளவர்களும் சடைவின்றி நேரில் பார்த்து மனநிறைவடைய ஏராளமான இடங்கள் உள்ளன, அவற்றை நேரில் சென்று பார்க்க விரும்புவோருக்கும், நேரில் செல்ல வாய்பில்லாதோருக்கும் இப்புகைப்படங்கள் சமர்ப்பணம்.
ஒரு மாநகராக தரம் உயர்ந்து வரும் ஃபுஜைராவின் புதிய அடையாளம் - அழகிய, பிரமாண்ட மஸ்ஜித்
ஃபுஜைரா நகருக்குள் உள்ள அழகிய ரவுண்டபோட்
(FOUNTAIN ROUND ABOUT)
தைது (DHAID) வழியாக செல்லும் போது எதிர்ப்படும் அழகிய நெடுஞ்சாலைகள்
கல்பாவில் (KALBA) மலையை குடைந்து போடப்பட்டுள்ள TUNNEL சாலையின் பல்வேறு கோணங்கள்
ஃபுஜைராவில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெற்று வரும் பாரம்பரிய எருது சண்டை - அஸர் முதல் மஃரிப் வரை நடைபெறும் போட்டியில் மாடுகளுடன் மனிதர்கள் யாரும் மோதுவதில்லை
இனி ஷார்ஜா அரசின் எல்லைக்குட்பட்ட கொர்பக்கான் (KHOR FAKKAN) நகருக்குள் நுழைவோம் வாருங்கள்
கடலோர பூங்கா (BEACH PARK)
கடலோர மஸ்ஜித் (BEACH MASJID) 
கொர்பக்கான் கடற்கரையில் இளைப்பாருவதற்கு நீண்டதொரு கடலோர பூங்காவும், எதிரே தொழுவதற்கு அழகிய பள்ளியும் உள்ளது மேலும் குளிப்பதற்கான உடைகள் தேவைப்பட்டால் அருகிலுள்ள கடைகளில் கிடைக்கும்.
குளத்தில் குளித்த அனுபவமுள்ளவர்கள் கட்டாயம் கடலுக்குள் இறங்கி குளியுங்கள் தண்ணீர் குளு குளுவென இருக்கும் மேலும் குளித்த பின் உடம்பை கழுவிக் கொள்ள நல்ல தண்ணீர் குளியலறைகளும் உள்ளன.
மீசை வச்ச குழந்தைங்க..
நீங்க இப்படி வெளையாடி இருக்கியலா?
இப்படி ஒரு முறை பறந்தால் 100 திர்ஹம் காலி ஆனாலும் ஜாலி
விளையாட்டு பொருலெல்லாம் சின்ன புள்ளைங்களுக்கு தான் ஆனா அங்கே போறவங்க மனசும் அப்படி ஆயிடுதே என்ன செய்யலாம்!
கடலோரம் இப்படி பல அடுப்புக்கள் உள்ளன, மசாலா போட்டு கறியை கொண்டு வந்தால் கரி அடுப்பில் சுட்டு திண்ணலாம்.
இன்னும் பயன்பாட்டில் உள்ள அமீரகத்தின் பழமையான அல் பதியா மஸ்ஜித் - கிபி 1446 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது.
கொர்பக்கானிலிருந்து திப்பா (DIBBA) செல்லும் வழியில் சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் இந்த பழமையான பள்ளிவாசல் அமைந்துள்ளது. அல் பதியா கிராமத்தில் அமைந்துள்ளதால் இது 'அல் பதியா மஸ்ஜித்' என்றே அழைக்கப்படுகிறது. இப்பள்ளியின் உள்ளும் புறமும் சுமார் 50 முதல் 70 நபர்கள் வரை தொழ முடியும். ஈச்ச மரம் மற்றும் ஈச்ச மர ஓலைகளால் கூரை கட்டப்பட்டுள்ளன என்றாலும் ஃபுஜைரா அகழ்வாய்வுதுறை தேவையான மராமத்து பணிகளை செய்து வருவதுடன் மின் வசதிகள் மற்றும் குளிர்ச்சாதன வசதிகளையும் செய்துள்ளது. இப்பள்ளியை சுற்றி உள்ள குன்றுகளில் புரதான பாங்கு மேடைகளும் காவல் கோபுரங்களும் அமைந்துள்ளன. பெருநாள் போன்ற முக்கிய விடுமுறை தினங்களில் செல்வோர் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து தான் இதன் உள்ளே செல்ல முடியும்.
வாதி அல் உரைய்யா அருவி (பலைவன குற்றாலம்?!)
கொர்பக்கானுக்கு அருகில், அல் பதியா மஸ்ஜிதை பார்வையிட்டு திரும்பும் வழியில் வலது புறம் செல்லும் சாலையில் இந்த பள்ளத்தாக்கு பகுதி அமைந்துள்ளது. வருடம் முழுவதும்
'ஓழுகும்' தண்ணீரால் (இலுப்பைப்பூ சக்கரை மாதிரி) இதையும் அருவி என்றே ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது ஆனாலும் அருவி நீர் விழும் அந்த ஆழமான கிணறு போன்ற பள்ளத்தில், ஜில்லென்ற நீரில் நீந்திக் குளிப்பது ஆனந்தமே.
அருவி பகுதியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதால் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக யாரும் அருவிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அனுமதி இருந்த காலத்தில் கரடுமுரடான பள்ளத்தாக்கின் வழியாக செல்ல விரும்புவோர்
'4 வீல் டிரைவ்' வாகனங்களில் சென்று வந்தனர். 4 வீல் டிரைவ் வாகனமில்லாதோர் அருகிலிருக்கும் குன்றின் மீது வாகனங்களை நிறுத்தி விட்டு உயிரை பணயம் வைத்து மலையேறி இறங்கி வந்தனர், கடைசியாக எந்த புண்ணியவானோ பிடித்துக் கொண்டு மலையிறங்க வசதியாக கயிற்றை கட்டி வைத்திருந்தார்கள். கொழுத்த உடம்புகாரர்கள் ரிஸ்க் எடுக்க முடியாது அதனாலே போயிட்டு வந்தவங்க சொல்றத கேட்டு சந்தோஷபட்டுக்க வேண்டியது தான்.
அருவியிருந்து திரும்பும் வழியில் ஓர் அணைக்கட்டை கட்டி வைத்துள்ளனர் அந்த அணை வருட முழுவதுமே மேட்டுர் அணை மாதிரி தான் வறண்டு போய் இருக்கும் ஆனா ஒரு காலத்துல இந்தப்பள்ளத்தாக்கில் மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வந்துள்ளதை நம்பி இப்போ தண்ணிக்காக தவமிருக்கு இந்த அணை. நடந்து ஏறிப்பார்க்க தெம்பிருக்கிறவங்க அணை மேலே போய் பாருங்க, பேசாம திரும்பிட்டீங்கன்னா அது உங்க நேர மிச்சம்.
இயன்றவர்கள் அருவிக்குச் செல்ல ஏறி, இறங்கும் மலை பாதை (படிகள் கிடையாது)
கூடுதல் டிப்ஸ்:
குழுவாக வருகின்ற நண்பர்கள் உங்கள் வாகனத்தில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து வந்தால் கொர்பக்கானுக்குள்
நுழையுமுன் ஃபுஜைரா நகரில் ஏகப்பட்ட Traditional Kitchens எனும் உணவுகூடங்கள் பல்வேறு பெயர்களில், குடியிருப்பு பகுதிகளில் தென்படும், விலையும் கம்மி. அவற்றில் உங்க தேவைக்கேற்ப சுடச்சுட உணவை வாங்கி வந்தால் வயிறார உண்ணலாம். காலை 11 மணிக்கு முன் உணவு தயாராகிவிடும். கூடுதலாக தண்ணீர், யூஸ் அண்ட் த்ரோ பிளேட், கப்பு, விரிப்பு எடுத்து வருதல் நலம்.
உதாரணத்திற்கு 3 சிக்கன் ரைஸ் வாங்கினால் 5 பேர் தாராளமாக ஒரு கட்டுகட்டலாம் இல்லை என்றால் உணவிற்கென கொர்பக்கானில் ஒரு தொகை செலவாகும், உங்கள் வசதி எப்படி?
இது சென்ற வருட அனுபவத்தை வைத்து எழுதியது இன்னும் பல்வேறு வசதிகள் இந்த வருடம் வந்திருக்கலாம் போயிட்டு வந்து சொல்லுங்க. இவ்வளவு எடத்தையும் நீங்க ஒரு நாள்ள சுற்றிப் பார்க்க முடியுமங்க!
மேலும், இந்தியாவில் நாம் சந்திப்பது போல் சாலை வரி, நகராட்சி வரி, வாகன வரி, டூரிஸ்ட் வரி, ஊருக்குள் நுழைய அனுமதி வரி, செருப்பு வரி என வித விதமான எந்தக் பகல் கொள்ளையும் இல்லாமலும் டிராபிக் போலீஸ்காரர்களுக்கு தெண்டம் அழாமலும் சென்று வரலாம்.
அடுத்து
'அல் அய்ன்' நகர உலா பற்றி பார்க்கலாம் அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது...
அதிரை அமீன்
Good information with nice photos. ..
ReplyDeletearticle.photos.suggestions are fine
ReplyDeleteNice
ReplyDeleteஅமீரகத்தில் பொழுது போக்கிற்கு பல சுற்றுலா தளங்கள் இருந்தாலும் இந்த மாதிரி இயற்கைச் சூழலுடன் அமைதியான இடம் வேறு எங்கும் காண்பது அரிதாகத்தான் இருக்கும். அருமையான புகைப்படத்துடன் சுவராஸ்யமான அமீனின் வர்ணனை அருமை
ReplyDeleteஅருமையான இடங்கள் அழகான வர்ணனை . இவற்றுள் பல இடங்களுக்குப் போய் வந்த அனுபவம் இருந்தாலும் இவற்றைப் பார்க்கும் போது புதிய இடங்கள் போலத் தோன்றுகிறது.
ReplyDeleteஅருமையான பதிவு.
நிறைவாக அந்தப் பஞ்ச்
// மேலும், இந்தியாவில் நாம் சந்திப்பது போல் சாலை வரி, நகராட்சி வரி, வாகன வரி, டூரிஸ்ட் வரி, ஊருக்குள் நுழைய அனுமதி வரி, செருப்பு வரி என வித விதமான எந்தக் பகல் கொள்ளையும் இல்லாமலும் டிராபிக் போலீஸ்காரர்களுக்கு தெண்டம் அழாமலும் சென்று வரலாம்.//
பாராட்டப்பட வேண்டியது . அதனால்தான் அந்த நாடு பரக்கத்தாக இருக்கிறது.
இங்கு எத்தனை தண்டம் அழுதாலும் எங்கும் கேட்கும் குரல் பத்தல! பத்தல! பத்தல!