தவறு செய்வது மனித இயல்பு. அதே போல் தான் செய்த தவறை, தவறுதான் என்று உணர்ந்து ஒப்புக் கொள்வதும் மனித இயல்பில் இருக்க வேண்டிய சிறந்த குணம். தவறுகளை ஒப்புக் கொள்ள தைரியம் வேண்டும். தவறுகளை ஒப்புக் கொள்ள தைரியம் இல்லாதவர்கள் தாங்கள் செய்தது தவறாகவே இருந்தாலும் அதுதான் சரி என்று பிடிவாதம் பிடிக்காமல் தனது தவறுக்கு ஒற்றை வரி வருத்தம் சொல்லிவிட்டால் எந்தப் பிரச்னையும் நொடியில் தீர்ந்துவிடும்.
சமூக வாழ்வில் மன்னிப்பு என்பது ஒரு இருவழிப் பாதைகளை கொண்ட வார்த்தையாகும். நாம் செய்த தவறுகளுக்காக பிறரிடம் மன்னிப்புக் கோருவது ஒரு வழி. பிறர் செய்த தவறுகளை நாமே பெருந்தன்மையாக மன்னிப்பது இரண்டாம் வழி. இரண்டுமே அமைதியை விரும்பும் ஆன்றோர்கள் கையாளும் அன்புவழிகள்தான்.
ஒன்று நமக்குப் பிறரிடமிருந்து கிடைப்பது. மற்றது நாம் பிறருக்குக் கொடுப்பது.
தவறு என்பது தவறிச் செய்வது ; தப்பு என்பது தெரிந்து செய்வது . இவை இரண்டுக்குமே ஒரே மருந்து மன்னிப்புதான். நாம் ஏதோ ஒரு உணர்வின் கொந்தளிப்பில் அல்லது அறியாமையில் தவறாக நடந்த பின்னர், அதை உணரும்போது அல்லது பிறரால் சுட்டிக் காட்டப்படும்போது மனதில் உடனே உண்டாக வேண்டிய வார்த்தை மன்னிப்புதான். அதையும் தாமதிக்காமல் கேட்பது அல்லது வழங்குவது சமூக வாழ்வில் சாந்தத்தை ஏற்படுத்தும் பண்பாகும்.
பலருடைய வாழ்வை உயரத்துக்கு எடுத்துச் செல்ல மன்னிக்கும் தன்மை அல்லது மன்னிப்புக் கேட்கும் தன்மை பெரிதும் உதவி இருக்கிறது. கொதிக்கிற பாலில் தெளிக்கப்படும் ஒரு சொட்டு குளிர்ந்த தண்ணீர்தான் மன்னிப்பு. மனிதனை அழிக்கின்ற அகந்தையையும் கோபத்தையும் குரோதத்தையும் அடக்கி வைக்கும் ஆயுதம்தான் மன்னிப்பு.
நான் பெரிய ஆள்; இந்த ஊரிலேயே பெரிய சொத்துக்காரன்; எனது பதவி பெரும்பதவி; நான் போய் இவனிடம் மன்னிப்புக் கேட்பதா என்று எண்ணுபவர்கள் தங்களுடைய அகம்பாவத்தை வளர்த்துக் கொள்வார்கள். இதனால் அவர்களுக்கு நிறைவாக எவ்விதப் பயனும் விளையாது. மாறாக, பகமைதான் வளரும்.
அவன் பெரிய ஆளாக இருந்தால் அது அவனோடு நான் ஏன் அவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று நினைப்பவர்கள் நிலையும் இதேதான். நம்முடைய மேலதிகாரியிடம் நாம் மன்னிப்புக் கேட்பதும் நமது மேலதிகாரி நமக்குத் தவறிழைத்தபோது நம்மிடம் மன்னிப்புக் கேட்பதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய அலுவலக நடைமுறை என்று எடுத்துக் கொள்ளப்பட்டாலே எல்லாம் சரியாகிவிடும்.
“ எல்லோர்க்கும் நன்றாம் பணிதல் ; அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து “
என்றார் திருவள்ளுவர். பணம் படைத்தவர்களிடம் பணிவும் இருந்தால் அவர்களுடைய செல்வத்துக்கு அது மேலும் சிறப்பையே தரும் என்பது இதன் கருத்து. ஆகவே மன்னிக்கும் மனப்பான்மை மனித உள்ளத்தை அலங்கரிக்கும் ஒரு அணிகலன்.
இஸ்லாமியக் கோட்பாடுகளின்படி, இறைவனை அருளாளன் அன்புடையோன் என்று வழிபடுகிறோம். அதனால்தான் இறைவழிபாட்டின் துவக்கத்திலேயே “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் “ என்று ஆரம்பம் செய்கிறோம். செய்கின்ற அல்லது செய்ய நேர்ந்து விட்ட பாவங்களுக்கு மனம் உருகி இறைவனிடம் தவ்பாச் செய்தாலோ அல்லது இறைவன் தவறுக்காக பரிகாரமாக வைத்திருக்கும் ஏழைகளுக்கு பசிநீக்கும் உணவளித்தல் , நோன்பு பிடித்தல், தர்மங்கள் செய்தல் போன்ற பரிகாரங்களை செய்துவிட்டு துஆச் செய்தாலே இறைவன் பெருந்தன்மையுடன் மன்னிப்பான் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.
இஸ்லாமிய ஷரியத் சட்டப்படி கொலைக் குற்றத்துக்கு ஆளான ஒருவனைக் கூட, கொலை செய்யப்பட்டவனின் குடும்பத்தார் மன்னித்துவிட்டாலே அவனது தவறுக்கு தண்டனை இல்லை என்று இருக்கிறது.
அதே போல் கிருத்துவ மதத்தில் பாவ மன்னிப்புக் கேட்பது என்பது ஒரு மதச் சடங்காகவே நடைபெற்று வருகிறது. இதற்காக தனது பாவச் செயல்களை ஒப்புக் கொள்ளும் “ Confession Box “ என்ற இடங்கள் திருச்சபைக் கட்டிடங்களில் இருக்கின்றன.
இந்து மதத்திலும் பாவமன்னிப்புத் தேடி பாத யாத்திரை போகும் பழக்கமும் நதிகளில் மூழ்கி அவரவர்களின் வழக்கப்படி பரிகார பூஜைகளை செய்யும் பழக்கமும் இருக்கிறது. இவைகளின் அடிப்படை இறைவனே மன்னிக்கும் மாண்பு உள்ளவன் என்பதை உணர்த்தத்தான்.
ஆகவே இறைவனே தன்னிடம் மன்னிப்பு வழங்குவது என்கிற மாண்பை வைத்திருக்கும் போது அவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் தங்களில் ஒருவரை ஒருவர் மன்னித்து ஏற்றுக் கொள்வதில் தவறு என்ன காண முடியும்?
கூட்ட நெரிசலில் செல்லும்போது முன் பின் தெரியாதவர்களை நமக்கு வழிவிட்டு சற்று ஒதுங்கிக் கொள்ளச்சொன்னாலே , “ Excuse Me “ என்று சொல்கிறோம். கடைவீதிகளில் நடக்கும்போது யார் மீதாவது நமது கால் பட்டுவிட்டாலோ அல்லது ஒரு சபையில் இயற்கையாகத் தும்மல் வந்துவிட்டாலே கூட “Sorry” என்று சொல்வதில்லையா?
மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாமல் குடும்ப உறவுகள் பாதிக்கப்படுவதை நாம் அறிந்து இருக்கிறோம். பிடிவாதங்கள் காரணமாக அகம்பாவம் வளர்ந்து சமுதாய உறவுகள் சீர்கெட்டுப் போய்விடுகின்றன.
அண்மையில் ஒரு பெரிய குடும்பத்தில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. ஆனாலும் அந்தத் திருமணத்தில் மணமகனின் தந்தையுடன் பிறந்த சகோதரியும் அவரது குடும்பமும் கலந்து கொள்ளவில்லை. ஊரார் காரணம் கேட்டதில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சகோதரியின் மகளுக்கு ஒரு குழந்தை பிறந்ததாகவும் அந்தக் குழந்தையை ஏதோ சூழ்நிலையில் மணமகனின் தந்தை போய்ப் பார்க்க இயலவில்லை என்றும் அதனால் அன்று முதல் இரு குடும்பங்களும் எவ்வித நல்லது கெட்டதுகளிலும் கலந்து கொள்வதில்லை என்றும் விபரம் அறிய வந்தது. ஒரு சிறிய பிரச்னை , ஒரு நிமிடத்தில் யார் தவறாக நடந்து இருந்தாலும் அதை மன்னித்து மறந்து இருந்திருந்தால் இப்படி ஒரு பெரிய குடும்பம் பிரிந்திருக்க வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும். இவ்வாறு பல உதாரணங்கள் நமது கண்முன்னால் இருப்பதை நாம் காணலாம்.
இன்று பரவலாக ஊரில் பார்க்கிறோம் காவல் நிலையங்களிலும் வழக்கு மன்றங்களிலும் எதிரெதிர் அணியில் வாதி பிரதிவாதியாக நின்று கொண்டிருப்பவர்கள் ஒரே தாயின் வயிற்றில் பிறந்த உடன் பிறப்புகளே. இதற்காக ஒரு பழமொழியையும் சொல்லிவைத்திருக்கிறார்கள். “ பங்காளிகள் – பகையாளிகள் “ என்பதே அந்தப் பழ மொழி. ஒரு வயல்வரப்புப் பிரச்னைக்காக சகித்துப் போகாமல் சண்டை போட்டுக் கொண்டு அரிவாளை எடுத்து வெட்டிக் கொள்ளும் அண்ணன் தம்பிகளைக் கண்டு வருகிறோமே!. இவர்களின் மனதில் மன்னிக்கும் பக்குவம் இருந்திருந்தால் இப்படிப்பட்ட வன்முறைகள் நடக்குமா?
ஈசா நபி ( ஸல்) அவர்களை கொடியவர்கள் கல்லால் அடித்த போது “ இறைவா ! இவர்களை மன்னித்துவிடு! இவர்கள் செய்வது தவறு என்று தெரியாமலேயே இப்படிச் செய்கிறார்கள் “ என்று பகைவர்களுக்கும் பாவமன்னிப்பு வேண்டினார்கள்.
தாயிப் நகரத்திலே மக்களை இஸ்லாத்தை நோக்கி அழைக்கச் சென்ற பெருமானார் ( ஸல் ) அவர்களை சிறுவர்களை விட்டு அங்குள்ளோர் கல்லால் அடித்த போது இரத்தம் சொட்டச் சொட்ட நின்ற பெருமானார் ( ஸல்) அவர்களிடம் இறைவன் தனது வான் தூதரான ஜிப்ரீல் ( அலை) அவர்களை அனுப்பி அந்த தாயிப் நகரையே இரு மலைகளுக்கிடையே வைத்து நசுக்கிவிடவா என்று கேட்டபோது , “ இவர்கள் இஸ்லாத்தின் பக்கம் வராவிட்டாலும் இவர்களின் சந்ததிகள் வருவார்கள். அவர்கள் செய்த பாவத்தை மன்னித்துவிடு இறைவா! “ என்று கையேந்தினார்கள் என்று சரித்திரத்தில் படிக்கிறோம்.
அதே போல் தினமும் தன் வீட்டுக் குப்பையை தனது மேல் கொட்டிய ஒரு மூதாட்டி, ஒருநாள் குப்பை கொட்டாத காரணம் அவள் உடல் நலமில்லாமல் இருக்கிறாள் என்று தெரிந்துகொண்டு அவளை நலம் விசாரிக்கச் சென்றதும் பெருமானார் ( ஸல்) அவர்களின் வாழ்க்கை சம்பவம்தான்.
நமக்குத் துன்பம் தந்தவர்களைக் கூட மன்னிப்பது அவர்களை வெட்கப்படச் செய்துவிடும் . ஒருவரிடம் மன்னிப்புக் கேட்பதன் மூலம் நமது தவறுக்கு நாமே தீர்ப்பு வழங்கிக் கொள்கிறோம். இதனால் நமது அந்தரங்க மனசாட்சியின் முன் குற்றமற்றவர்களாக நிற்கிறோம். சமூக உறவில் ஒருவரிடம் ஒருவர் தவறுகளுக்கு மன்னிப்புக் கோருவது சாலச் சிறந்தது. ஆகவே மனித உறவுகளில் மன்னிப்பு என்கிற வார்த்தை பலம் மிக்கது; பயன் தருவது.
விட்டுக் கொடுப்போர் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போவோர்தான் என்றுமே விட்டுக் கொடுத்ததே இல்லை.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅருமையான ஆக்கம், எல்லா வயதினருக்கும் பயன்பெறும் வகையில் அமைந்துருக்கின்றது.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Consumer & Human Rights, Thanjavur District Organizer
Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
அனைவரும் உணரும்படியும் உணர்த்தும்படியும் நல்லதொரு விழிப்புணர்வு ஆக்கம்.
ReplyDeleteஇன்றைய சூழ்நிலையில் வறட்டு கௌரவம் பார்ப்பவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். குடும்ப ஒற்றுமைக்காக கொஞ்சம் இறங்கிப் பேசினாலே அதை பெரிய கௌரவமாக என்னிடம் வந்து மன்னிப்புக் கேட்டான் என்று பெருமையாகச் சொல்லுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படி எல்லாவற்றிற்கும் கௌரவம் பார்ப்பதை பெருந்தன்மையுடன் உணர்ந்தாலே மன்னிப்பு என்கிற மனித நேயத்துடன் கலந்த தயாள குணம் எல்லோர்க்கும் வந்து விடும்.
ReplyDelete2:37 فَتَلَقَّىٰ آدَمُ مِن رَّبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ ۚ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ
2:37. பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்;) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான்.
2:54 وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُم بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَىٰ بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ عِندَ بَارِئِكُمْ فَتَابَ عَلَيْكُمْ ۚ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ
2:54. மூஸா தம் சமூகத்தாரை நோக்கி; “என் சமூகத்தாரே! நீங்கள் காளைக் கன்றை(வணக்கத்திற்காக) எடுத்துக் கொண்டதன் மூலம் உங்களுக்கு நீங்களே அக்கிரமம் செய்து கொண்டீர்கள்; ஆகவே, உங்களைப் படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளுங்கள்; அதுவே உங்களைப் படைத்தவனிடம், உங்களுக்கு நற்பலன் அளிப்பதாகும்” எனக் கூறினார். (அவ்வாறே நீங்கள் செய்ததனால்) அவன் உங்களை மன்னித்தான் (என்பதையும் நினைவு கூறுங்கள்.) நிச்சயமாக, அவன் தவ்பாவை ஏற்(று மன்னிப்)பவனாகவும், பெருங் கருணையுடையோனாகவும் இருக்கிறான்.
2:160 إِلَّا الَّذِينَ تَابُوا وَأَصْلَحُوا وَبَيَّنُوا فَأُولَٰئِكَ أَتُوبُ عَلَيْهِمْ ۚ وَأَنَا التَّوَّابُ الرَّحِيمُ
2:160. எவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன்.
2:162 خَالِدِينَ فِيهَا ۖ لَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنظَرُونَ
2:162. அவர்கள் அ(ச் சாபத்)திலேயே என்றென்றும் இருப்பார்கள்; அவர்களுடைய வேதனை இலேசாக்கப்படமாட்டாது; மேலும், (மன்னிப்புக் கோர) அவர்களுக்கு அவகாசமும் கொடுக்கப்படமாட்டாது.
2:199 ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ وَاسْتَغْفِرُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
2:199. பிறகு, நீங்கள் மற்ற மனிதர்கள் திரும்புகின்ற (முஸ்தலிஃபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள்; (அங்கு அதாவது மினாவில்) அல்லாஹ்விடம் மன்னிப்புப் கேளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
2:268 الشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ وَيَأْمُرُكُم بِالْفَحْشَاءِ ۖ وَاللَّهُ يَعِدُكُم مَّغْفِرَةً مِّنْهُ وَفَضْلًا ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
2:268. (தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்; ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்; நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.
2:285 آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ ۚ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ ۚ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
2:285. (இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள்.
3:17 الصَّابِرِينَ وَالصَّادِقِينَ وَالْقَانِتِينَ وَالْمُنفِقِينَ وَالْمُسْتَغْفِرِينَ بِالْأَسْحَارِ
3:17. (இன்னும் அவர்கள்) பொறுமையுடையோராகவும், உண்மையாளராகவும், அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்படுவோராகவும், (இறைவன் பாதையில்) தான தர்மங்கள் செய்வோராகவும், (இரவின் கடைசி) ஸஹர் நேரத்தில் (வணங்கி, நாயனிடம்) மன்னிப்புக் கோருவோராகவும் இருப்பர்.
3:89 إِلَّا الَّذِينَ تَابُوا مِن بَعْدِ ذَٰلِكَ وَأَصْلَحُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
3:89. எனினும், இதன்பிறகு (இவர்களில்) எவரேனும் (தம் பாவங்களை உணர்ந்து) மன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொள்வார்களானால், (மன்னிப்புக் கிடைக்கக் கூடும்;) நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், அளப்பெருங் கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான்.
//அதே போல் தினமும் தன் வீட்டுக் குப்பையை தனது மேல் கொட்டிய ஒரு மூதாட்டி, ஒருநாள் குப்பை கொட்டாத காரணம் அவள் உடல் நலமில்லாமல் இருக்கிறாள் என்று தெரிந்துகொண்டு அவளை நலம் விசாரிக்கச் சென்றதும் பெருமானார் ( ஸல்) அவர்களின் வாழ்க்கை சம்பவம்தான்.//
ReplyDeleteஇந்த சம்பவம் ஆதாரம் இல்லாத ஒன்று என கேள்விப் பட்டுள்ளேன்.எனவே,இதை எழுதிய சகோதரர் அவர்கள் இது சம்பந்தமாக மார்க்க அறிங்கர்களிடம் கேட்டு,ஹதீஸ் எண்னை வெளியிட்டால் நல்லது.இல்லையெனில் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மேல் இட்டுக் கட்டிய பெருங் குற்றம் வந்து சேர்ந்து விடும்.
//அதே போல் கிருத்துவ மதத்தில் பாவ மன்னிப்புக் கேட்பது என்பது ஒரு மதச் சடங்காகவே நடைபெற்று வருகிறது. இதற்காக தனது பாவச் செயல்களை ஒப்புக் கொள்ளும் “ கந்ஃபெஶந் பாக்ஸ் “ என்ற இடங்கள் திருச்சபைக் கட்டிடங்களில் இருக்கின்றன.//
ReplyDelete//இந்து மதத்திலும் பாவமன்னிப்புத் தேடி பாத யாத்திரை போகும் பழக்கமும் நதிகளில் மூழ்கி அவரவர்களின் வழக்கப்படி பரிகார பூஜைகளை செய்யும் பழக்கமும் இருக்கிறது. இவைகளின் அடிப்படை இறைவனே மன்னிக்கும் மாண்பு உள்ளவன் என்பதை உணர்த்தத்தான். //
இறைவன் மன்னிக்க கூடியவன்,மிக மிக இறக்கமுள்ளவன்.ஆனால் பாவம் கிறிஸ்தவர்கள் செய்கிற பாவத்தை எல்லாம் செய்துவிட்டு,பாதிரியார்களிடம் சென்று - பாவ மன்னிப்பு வேண்டுகிறார்கள்.
யாருக்கு துன்பம் இழைத்தோமோ அவன்தான் மன்னிக்க வேண்டும்,பிறகு இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.இதே நிலைதான் இந்து சகோதர,சகோதரிகளிடம் இருக்கிறது,தவறுகள் செய்துவிட்டு,சாமியார்களின் கால்களில் விழுகிறார்கள்.
அதை விடுத்து,யாருக்கு நாம் அநீதி இழைத்தோமோ அவர்களிடம் மன்னிப்பும்,இறைவனிடம் மன்னிப்பும் பெற்று - இஸ்லாமிய வாழ்வில் வாழ,இணைய அந்த சகோதர,சகோதரிகளும் முன் வர வேண்டும்.வெற்றி பெற வேண்டும்.
அதிரை நியூஸ் எடிட்டர் காக்காவுக்கு வேண்டுகோள் ஒன்று.
நீங்கள் கடினமாக உழைத்து,செய்தி - தகவல்- கட்டுரை தருகிறீர்கள்.இதற்கு நிரப்பமான ஒரு கூலியை அல்லாஹ் தருவானாக.மேலும் அந்த செய்தி - தகவல்- கட்டுரையில் குர்ஆன் மற்றும் ஹதீஸ் மட்டும் வெளியிட்டால் உங்களுக்கு - அதை எத்தி வைத்த கூலியும்,மாற்று மத சகோதர சகோதரிகள் அதன் மூலம் ஹிதாயத் பெறவும் வாய்ப்புண்டு.
செய்வீர்கள் என நம்புகிறேன்.
//ஒருவரிடம் மன்னிப்புக் கேட்பதன் மூலம் நமது தவறுக்கு நாமே தீர்ப்பு வழங்கிக் கொள்கிறோம். இதனால் நமது அந்தரங்க மனசாட்சியின் முன் குற்றமற்றவர்களாக நிற்கிறோம்.//
ReplyDeleteஇவ்வாறெல்லாம் எழுதுவது என்பது சாதாரண அறிவினால் முடியாதது. பண்பட்ட உள்ளமே இவ்வாறு எழுதும். அவ்வாறு எழுதியதில் தவறு காண்பது தாம் அதிகம் தெரிந்தவன் என்ற மமதை ததும்பும் உணர்வென்றால் மிகையாகாது.
//ஒருநாள் குப்பை கொட்டாத காரணம் அவள் உடல் நலமில்லாமல் இருக்கிறாள் என்று தெரிந்துகொண்டு அவளை நலம் விசாரிக்கச் சென்றதும் பெருமானார் ( ஸல்) அவர்களின் வாழ்க்கை சம்பவம்தான்.//
இந்தச் சம்பவம் இஸ்லாமியர் அல்லாத மற்ற சகோதரர்களும் தாம் பெருமானாரின்(ஸல்) வாழ்வைப்பற்றி அறிந்த அனைவரும் பல மேடைகளிலும், பட்டி தொட்டியெல்லாம் நாகூர் ஹனிபா அவர்களின் பாடல் மூலம் பலரும் அறிந்ததே. எழுதியவர்களும் விபரமல்லாதவர்கள் அல்லவே. இதுகால் வரை எந்த ஆலிம்களும் தவறு ஆதாரம் இல்லை என்று சொல்லாத ஒன்றல்லவா !
டீ குடிக்க, நேரம் பொழுதெல்லாம் குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் வைத்துத்தான் சிலர் சாப்பிடிகிரார்கள் போலும். எம்பெருமானாரை புகழ்வது ஏனோ இவர்களுக்கு கசப்பு. வல்ல அல்லாஹ்வோ, நான் அனுதினமும் புகழ்கின்றேன், எனவே ஈமான் கொண்டவர்களை புகழும்படி கட்டளை இடுகிறான்.
கணக்கு வாய்பாடு, சிப்பாய்கள் செய்யும் தின எக்சசைஸ் போன்ற இவைகளெல்லாம் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் நிகழ்வுகளுக்கு உதவுபவைகள். மாறாக அவைகளை வாழ் நாள் முழுவதும் இடைவிடாமல் செய்வதல்ல. தொழுகை அது அந்த வக்தில் நிறைவேற்றிவிட்டு அத்தொழுகை நிலையில் வாழ்வில் செயல்பாடுகள் இருக்கவேண்டும் என்பது அறிவுடைமை. அதைவிடுத்து நிறைவேற்றிவிட்டோம் தொழுகை என்று வாழ்வில் மனித தன்மை விட்டு வாழ்வதை என்ன வென்று சொல்வது. ஆதார எண்கள் மட்டும் தந்தால்ஏற்பேன் என்றால், அதனையும் தவறு, அப்படியல்ல இப்படி என்று குறை கூறுபவர்கள் வாதங்களைக் கவனத்தில் கொள்ளாமல் செல்வதே சிறப்பு. வாதங்கள் வெல்வதில்லை. சரித்திரமும் இல்லை. தெளிவை நாடுவோரே வெல்வார்கள். வாதம் செய்த சைத்தான் நிலை என்ன ? கடைசி வரை படைத்தவனிடமே வாதம். இந்நிலை பரிதாபத்திற்குரிய நிலையே.
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்!
ReplyDeleteகுர்ஆன் அதனையும் ஹதீஸ் அதனையும் பின்பற்றுதல் என்றால், அதன் உண்மைகளை உள்வாங்கி அதற்கேற்ப வாழ்க்கையை நடத்துதலே. இந்த விபரங்களுக்கு மாற்றமாகாமல் குர்ஆன், ஹதீஸ் இவைகளுக்கு உட்பட்டே மிகச் சிறப்பாக கட்டுரை வடித்த அறிஞர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இது போன்ற கட்டுரைகள் என்றும் வரவேற்கத் தக்கதே.
ReplyDeleteவந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க என்று சொல்லும்படி குழப்பவாதிகளை விட குதர்ப்பவாதிகள் குற்றம் கண்டுபிடிக்க வந்துவிட்டார்கள். இந்தக் கட்டுரை சிறப்பாக எழுதப்பட்டு இருக்கிறது. பல நல்ல கருத்துக்களை கட்டுரை ஆசிரியர் மனம் கோணாதபடி பதிவு செய்து இருக்கிறார். அவரைப் பாராட்டுகிறேன்.பலர் பாராட்டி கருத்துப் போட்டு இருக்கிறார்கள்.
ReplyDeleteஆனாலும் பெருமானார் ( ஸல்) அவர்களுடைய வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் என்று பல காலமாக நாம் கேள்விப்பட்ட கிழவி குப்பையைக் கொட்டிய சம்பவத்துக்கு ஹதீஸ் எண் கேட்பது பத்தாம்பசளித்தனமாகத் தோன்றுகிறது. காரணம், இது ஒரு வாழ்க்கை சம்பவம். நபி ( ஸல்) அவர்களின் பொன் மொழிக்குத்தான் தொகுப்பு எண் இருக்கும். சம்பவங்களுக்கு இருக்காது என்பதுதான் நம்மில் பலரும் புரிந்து கொண்டது.
இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் பாட்டெழுதிப் பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்; குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்க முயற்சிக்கும் புலவர்களும் இருக்கிறார்கள் என்பதுதான். இந்த சம்பவம் பற்றி சமீபத்தில் செய்தித்தாளில் படித்த செய்தி ஒரு ஆட்டோ ஓட்டுனர் ஆறுமுகநேரி என்ற ஊரில் இஸ்லாமைத் தழுவினார். உங்களை இஸ்லாத்தைத் தழுவத் தூண்டிய காரணம் என்ன என்று நிருபர்கள் கேட்டபோது பெருமானார் ( ஸல்) அவர்களின் வாழ்வின் இந்த சம்பவம் அவர் மனத்தைக் கவர்ந்து அதாவது இ எம் ஹனிபா உடைய பாடல் மூலம் மனத்தைக் கவர்ந்து இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ள முயன்றார். அதனால் சண்முகம் என்ற பெயர் கொண்டவருக்கு ஹிதாயத் கிடைத்தது அவர் ஹிதாயத்துல்லாவாக மாறினார்.