பள்ளிக் கூடத்தில் படிக்கும்போது படித்த பஞ்ச தந்திரக் கதைகளின் காலத்திலிருந்து ஒற்றுமையின் சிறப்பைப் பற்றி படித்து வருகிறோம்.
துணையின்றி வெண்புறா தனியாக வந்ததே!
வனவேடன் வீசிய வலை தன்னில் வீழ்ந்ததே!
இனம் யாவும் சேர்ந்துதான் அதை மீட்டுச் சென்றதே!
கதையான போதிலும் கருத்துள்ள பாடமே!
என்று ஒற்றுமையின் வலிமையைச் சொல்லும் பாடல்களையும் நிறையவே கேட்டு இருக்கிறோம்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வே – நம்மில்
ஒற்றுமை நீங்கிடின் அனைவர்க்கும் தாழ்வே - என்று பாடினார் பாரதியார்.
விலங்குகளும் பறவைகளும் ஒற்றுமையின் தத்துவத்தை நமக்குக் கண்முன் காட்டிக் கொண்டு இருக்கின்றன. காக்கா கூட்டத்தைப் பாருங்க! அதுக்கு கத்துக் கொடுத்தது யாருங்க! என்றும் பாடல் உண்டு.
ஒற்றுமைக்கு காகத்தையும் ஒத்துழைப்புக்கு எறும்புகளையும் உதாரணமாகக் காட்டுவார்கள். தனி ஒரு எறும்பால் இழுக்க முடியாத ஒரு உணவுப் பொருளை பல எறும்புகள் ஒன்று கூடி இழுத்து தங்களின் புற்றுகளுக்கு எடுத்துச் செல்கின்றன.
தேனீக்கள் கூட ஒரு சிறந்த உதாரணம்தான். எங்கெங்கிருந்தோ பூக்களில் சுரக்கும் தேன்துளிகளை தனது குழலால் உறிஞ்சி அவைகளை ஒரு தேன்கூடாக்க பல தேனீக்கள் ஒன்று கூடி உழைத்து உருவாக்குகின்றன.
கடற்கரை ஓரங்களில் பறக்கும் பறவைக் கூட்டங்கள் வானில் வரிசையாக அணி அணியாகப் பறந்து செல்லும் அழகே அழகு. ஆகவே ஒற்றுமை என்பது ஒரு அழகான –ஆக்கபூர்வமான - சிறப்பான குணம். ஆனால் இந்த உயர்ந்த குணம் மிருகங்களிடம் இருக்கும் அளவுக்குக் கூட மனித இனத்தில் இல்லையே என்பதே நமது குறைபாடு.
சகோதரர்கள் ஒன்றுபட்டு உழைத்தால் மலையைத் தங்கமாக மாற்றலாம் என்பது சீன தேசத்துப் பழமொழி. இருவருக்கு இடையில் சமாதானம் செய்துவைத்து ஒற்றுமைப்படுத்துவது அறுபது ஆண்டுகள் நின்று இறைவனை வணங்கிய நன்மையைத் தருமென்று இஸ்லாம் கூறுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்த நாடு உலகத்துக்கே உதாரணமாக வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்று கூறுகிறோம். சில நேரங்களில் சில இடையூறுகள் இந்தக் கருத்தில் ஏற்பட்டாலும் அடிப்படையில் இந்தியா ஒரு வேற்றுமைகள் நிறைந்திருந்தாலும் ஒற்றுமையை ஆணிவேராகக் கொண்ட நாடு என்பதை மறுக்க இயலாது.
இந்தியாவின் இதிகாசங்கள் என்று கூறப்படும் இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய கதைகளில் கூட அண்ணன் தம்பிகளின் ஒற்றுமை மிகவும் வலியுறுத்தப் படுகிறது. சகோதரர்களே! ஒற்றுமையாக வாழ்வது எவ்வளவு மகிமையானது என்றும் நன்மையானது என்றும் வாழ்ந்து பாருங்கள் என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது. “ கரும்பு கட்டுடன் கிடந்தால் எறும்பு தானாக வரும் “ என்ற பழமொழியும் ஒற்றுமையாக இருந்தால்தான் உயர்வு என்பதற்காகவே வழங்கப் படுகிறது. “ தம்பி உடையான் படைக்கஞ்சான் “ என்பதும் அந்த வகையைச் சேர்ந்ததுதான்.
இந்த நவீன காலத்தில் கூட ஒற்றுமையாக ஒரே வீட்டில் வாழும் சில கூட்டுக் குடும்பங்கள் இருக்கவே செய்கின்றன. அவர்களை எல்லாம் யாரும் எந்த வகையிலும் எதிலும் வெற்றி கொள்ள இயலாது. ஒருவருக்கொருவர் கலந்து பேசி விட்டுக் கொடுத்து ஒன்றுபட்ட மனதோடு முடிவுகளை மேற்கொண்டு நடத்தப்படும் குடும்பங்களானாலும் சரி வணிக நிறுவனங்களானாலும் சரி வெற்றிகளைத்தான் தங்களின் பாதையில் ஈர்த்து வைத்து இருக்கின்றன.
ஒரு பெரிய பணக்காரர் இருந்தார். அவருக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தார்கள். ஆனால் ஐந்து பெரும் மிகவும் கருத்து மாற்பட்டு அடிக்கடி தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டார்கள். பெரியவருக்கு வயதாகிவிட்டது. தனது பிள்ளைகளின் ஒற்றுமைக் குறைவைப் பற்றி மிகவும் கவலைப் பட்டார். தனக்குப் பிறகு தனது பிள்ளைகளின் ஒற்றுமைக் குறைவால், தான் தேடிவைத்துள்ள செல்வம் எல்லாம் அழிந்துவிடுமோ என்று அச்சப்பட்டார். ஆகவே தனது பிள்ளைகளுக்கு ஒற்றுமையின் மகத்துவத்தை உணர்த்த ஒரு முறையைக் கையாண்டார். அவர் கையாண்ட முறை இன்று உலகில் கிட்டத்தட்ட எல்லா மொழிகளிலும் இனங்களிலும் ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டான கதையாக சொல்லப்பட்டு வருகிறது.
அப்படி அப்பெரியவர் என்ன செய்தார் ?
மரணபடுக்கையிலிருந்த பெரியவருக்குப் பக்கத்தில் சில விறகுச் சுள்ளிகள் வைக்கபட்டிருந்தன. தனது மகன்களை ஒவ்வொருவராக அழைத்தார். ஒவ்வொருவர் கையிலும் ஒரு சுள்ளியை எடுத்துக் கொடுத்து அதை உடைக்கச் சொன்னார். அவரது எல்லா மகன்களும் அந்தச் சுள்ளிகளை சுலபமாக உடைத்து தூக்கி வீசிவிட்டார்கள். பிறகு ஒரு பெரிய சுள்ளிக் கட்டிக் கொண்டுவரச்சொல்லி தனது பணியாட்களை ஏவினார். அவ்விதம் கொண்டுவரப்பட்ட சுள்ளிக் கட்டை ஒவ்வொரு மகனாகக் கூப்பிட்டு உடைக்கச் சொன்னார். எவ்வளவுதான் முயன்றும் அந்த சுள்ளிக் கட்டை அவர்களால் ஒரு அங்குலம் கூட உடைக்க முடியவில்லை. பிறகு ஐந்து மகன்களையும் ஒன்றாக அழைத்து அந்த சுள்ளிக் கட்டை ஆளுக்கொரு பக்கமாக பிடித்து உடைக்கச் சொன்னார். ஒரே முயற்சியில் சுள்ளிக்கட்டு தூள் தூளாக உடைந்து நொறுங்கியது. இதையே தனது பிள்ளைகளுக்கு உதாரணமாகச் சொன்னார். தனியாக இருந்தால் எவரும் உங்களை பிரித்து உடைத்துவிடுவார்கள் . கூட்டாக இருந்தால் உங்களை எவரும் உடைக்க முடியாது. அதே போல் நீங்கள் அனைவரும் கூட்டாக ஒற்றுமையாக இருந்தால் வலிமையான எவரையும் கூட வீழ்த்திவிடலாம் எனவே ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்து ஒற்றுமையாக இருங்கள் என்று தனது பிள்ளைகளுக்கு ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்தி வாழ்க்கைப் பாடத்தைப் படித்துக் கொடுத்துவிட்டு கண்மூடினார் என்று கேட்டு இருக்கிறோம். இதுவும் கதைமட்டுமல்ல ; கருத்துள்ள பாடம்.
இந்தப் பாடம் இன்றைக்கு இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் குறிப்பாக இஸ்லாமிய சமூகத்துக்குத் தேவைப்படும் பாடமாக இருக்கிறது.
“ நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள்; பிரிந்து விடாதீர்கள். மேலும் அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாக இருந்த நேரத்தில் அவன் உங்களுக்கிடையே உளப்பூர்வமான இணக்கத்தை ஏற்படுத்தினான். எனவே, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாகிவிட்டீர்கள். மேலும், நெருப்புப் படுகுழியின் விளிம்பில் நீங்கள் நின்று கொண்டிருந்தீர்கள். அல்லாஹ் உங்களை அதிலிருந்து காப்பாற்றிவிட்டான். இவ்விதம் அல்லாஹ் தன் சான்றுகளை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான் . இதன்மூலம் நீங்கள் வெற்றிக்கான பாதையை அடைந்துகொள்ளக் கூடும் என்பதற்காக” ( அத்தியாயம் : ஆலு இம்ரான் 102- 103. IFT page 170 )
தனியாக இருக்கும்போது , ஊதினால் பரந்துவிடக் கூடிய பஞ்சினால்தான் நூல்கள் உற்பத்திசெய்யப்படுகின்றன. பல நூல்கள் இணைந்துதான் ஒரு வலுவான கயிறு தயாரிக்கப்படுகிறது. இத்தகைய வலிமை மிகுந்த கயிறுகள்தான் கப்பலைக் கூட கரை கொண்டு வந்து சேர்க்கும் வலிமை பெற்றவைகளாகின்றன. வலிமையற்ற பஞ்சு கயிறாவதுபோல் சிறுபான்மை என்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்றும் முத்திரை குத்தப்பட்ட சமுதாயம் – அது எந்த சமுதாயமானாலும் – ஒதுக்கித்தள்ள முடியாத சக்தியாக உருவெடுப்பது ஒற்றுமையால் மட்டுமே சாத்தியப்படும்.
கடந்த வாரம் ஒரு தொலை தூர இரயில் பயணத்தில் ஒரு உயர் காவல் துறை அதிகாரியுடன் ஒன்றாக பயணிக்கும் நிலைமை ஏற்பட்டது. அவர் கேட்ட கேள்வி , “ஏன் பாய்! இப்படி ஐந்து நேரம் தொழுகிறீர்கள்; நோன்பு பிடிக்கிறீர்கள்; தர்மம் செய்கிறீர்கள். ஆனால் உங்களுக்குள் அடித்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறீர்களே! உங்கள் மதத்தில் உங்களுக்குள் ஒற்றுமை மற்றும் சமாதானமாக வாழ்வதற்கு என்று போதனைகள் கிடையாதா? “ என்று கேட்டார். அப்படியே நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகலாம் போல இருந்தது. போதனைகள் இருக்கின்றன ஆனால் அவற்றை நாங்கள் கடைப்பிடிப்பதில்லை. அப்படிக் கடைப் பிடிக்க முடியாமல் சில சுயநல சக்திகள் சமுதாய ஒற்றுமையை சீர்குலைப்பதை எவ்வாறு அவரிடம் நாம் சொல்ல முடியும். மல்லாக்கபடுத்துக் கொண்டு எச்சில் துப்புவது போல் ஆகாதா?
குலங்களாகவும் கோத்திரங்களாகவும் பிரிந்து கிடந்த அராபிய சமூகத்தை இஸ்லாம் என்ற ஒரே கயிறால் இணைத்த பெருமைக்குரியதுதான் பெருமானார் ( ஸல் ) அவர்களின் வரலாறு. உயர்வு தாழ்வு இல்லாமல் அனைவரும் தோளோடு தோள் நின்று இணைந்து ஜமாஅத் ஆகத் தொழுவதுதான் இஸ்லாத்தின் வழிபாட்டுமுறை. இந்த தொழுகை முறைக்குத்தான் இறைவனிடம் மதிப்பெண் அதிகம் என்று ஒற்றுமையை வற்புறுத்துவதும் இஸ்லாம்தான். உள்ளூர் மக்கள் மட்டுமல்ல உலகம் எங்கும் பரவிக் கிடக்கும் கருப்பரும் வெள்ளையரும் பல மொழிகள் பேசுபவரும் பல நாட்டினரும் ஒரே இறைவனின் முதல் ஆலயத்தில் ஒன்று கூடி ஒரே முழக்கமாக “லெப்பைக்” என்று கூற வைத்து ஒற்றுமையின் அம்சத்தை உலகுக்கு உணர்த்துவதும் இஸ்லாம்.
இந்த அடிப்படையிலேயே திருமறை “ இறை நம்பிக்கையாளர்கள் , ஒருவர் மற்றவருக்கு சகோதரர்கள் ஆவார்கள் . எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே தொடர்புகளை சீர்படுத்துங்கள் . “ ( அத்தியாயம் அல்- ஹுஜுராத் 49 : 9-10 IFT page 874) என்று கூறுகிறது.
பெருமானார் ( ஸல் ) அவர்கள் கூறியதாக புகாரியில், “ இறை நம்பிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் பல பொருட்களால் உருவாக்கப்பட்ட கட்டிடத்தின் அமைப்பைப் போன்று இருக்கிறார்கள் “ என்ற நபி மொழி காணப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் “ நிச்சயமாக அல்லாஹ் எனது சமூகத்தை வழிகேட்டில் ஒன்றிணைக்க மாட்டான். அல்லாஹ்வின் உதவிக்கரம் ஒன்றுபட்ட சமூகத்துக்கே உண்டு. எனவே சமூகத்திலிருந்து பிரிந்து சென்றவன் நரகத்துக்கும் பிரிந்து சென்றுவிடுவான் “ என்றும் திர்மிதி தொகுப்பில் பெருமானார் ( ஸல் ) அவர்கள் கூறுவதாக வருகிறது.
இன்னும் இஸ்லாமிய வரலாற்றில் , “தாதுஸ்ஸலாஸில்” என்ற போரில் படைக்குதலைமை தாங்குவது யார் என்ற கேள்வியில் இரு தளபதிகளுக்கிடையில் போட்டி நிலவியது. இறுதியில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ஒருவர் தலைமையை மற்றவர் ஏற்றார் என்று காண்கிறோம். இப்படியெல்லாம் இஸ்லாம் வலியுறுத்திய ஒற்றுமையை பல சம்பவங்களை உதாரணங்களாகக் காட்டி நாம் அனைவருக்கும் எடுத்துச் சொல்ல முடியும்.
ஆனால் ஒரே இறைவனை வணங்குகிறோம் என்று சொல்லிக் கொள்ளும் நம்மிடையே இன்று பல்வேறு இயக்கங்கள் தோன்றி நமது ஒற்றுமைக்கும் நமது மார்க்கத்தின் கொள்கைகளுக்கும் வேட்டு வைத்துக் கொண்டு இருக்கின்றன. குருடர்கள் யானையைப் பார்த்த கதையாக அவரவர் அவரவர் மேற்கொண்டுள்ள நிலைக்குக் காரணங்களை சொன்னாலும் முடிவில் இந்தப் பிளவுகளால் பலியாவதும் கேலிக்கு ஆளாக்கப்படுவதும் மொத்தத்தில் இஸ்லாமிய சமுதாயமே என்பதை இவர்கள் உணர வேண்டும்.
ஒரு சமுதாயத்தின் முதுகெலும்பாக இருப்பவர்கள் இளைஞர்கள்தான். இந்த இளைஞர்களின் எண்ணங்கள் பல்வேறு இயக்கங்களால் திசை திருப்பப்படுகின்றன. இப்படி திசை திருப்பப்படும் இளைஞர்களின் சக்திகள் வீண் விரயமாகின்றன. இந்த சக்தி ஒற்றுமையாக ஒருங்கிணைக்கபட்டால் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்ட இவர்களால் இயலும்.
மிகக் குறைவான எண்ணிக்கையில் முஸ்லிம்கள் பாரம்பரியமாக வசித்து வரும் சிறு கிராமங்களில் கூட எல்லா இயக்கங்களின் கிளைகளும் இருந்து ஒற்றுமையைக் குலைப்பதற்கு தங்களால் இயன்றதைச் செய்து வருகிறார்கள். ஒருவரை ஒருவர் மனம் புண்பட பேசுவதும் இணைய தளங்களில் எழுதுவதும் வாடிக்கையாகிவிட்ட பரிதாபமான நிலைக்கு சமுதாயம் தள்ளப்பட்டுவிட்டது. இதில் பரிதாபம் என்னவென்றால் பலருக்கும் அறிவுரை சொல்லும் நிலைமையில் இருக்க வேண்டிய அறிஞர்களே இப்படிப்பட்ட ஒற்றுமைக் கேட்டுக்கு காரணமாக இருப்பதுதான் . ஒரு திரைப்படத்தை எதிர்ப்பதற்குக் கூட 24 தலைமையிலான இயக்கங்கள் நமக்குத் தேவைபடுகிறது என்பது நம்மிடையே நிலவும் கேலிசெய்யத்தக்க ஒற்றுமையை உலகுக்கு சொல்லும் நிலைதானே!
நம்மை ஒன்றாக இணைத்த இஸ்லாத்தின் பெயராலேயே இத்தனை பிளவுகள் பிரிவுகள் என்றால் அது நாம் நம்மைபடைத்த இறைவனுக்கும் அவனது அருட் தூதருக்கும் செய்யும் துரோகம்.
ஆகவே சிந்திப்போம் ! ஒற்றுமை வலிமையானது அதை சின்ன சின்ன தனிநபர்களின் சொந்த வருத்தங்களுக்காக சிதறாமல் காப்போம் ! தனிநபர்களின் அகந்தை, ஆணவம் ஆகியவற்றை விட சமுதாய ஒற்றுமை இன்றியமையாதது என்பதை அனைவரும் உணர்வோம்.!
ஒன்றுபடுவோம் ! வென்றுவிடலாம் !!
ஒற்றுமை ஓங்குக
ReplyDeleteமோடிக்கு, அமெரிக்க நீதிமன்றம் சம்மன்
ReplyDeletehttp://peacetrain1.blogspot.com/2014/09/blog-post_25.html?m=1
ஒற்றுமையை வலியுறுத்தி மனதில் பதியும்படியான நல்ல உதாரணங்களுடன் சிறப்பான தலையங்கம்.
ReplyDeleteஉட்பிரிவினைகளை களைந்து அனைவரும் சகோதரத்துவம் பேணி ஒன்றுபடுவோம்.மகிழ்ந்து வாழ்வோம்.
உலக முஸ்லிம்கள் சகோதரர்களாக ஒன்றாக இணைந்து நின்று ஒரே இறைவனை வணங்கும் புனித ஹஜ் மாதத்தின் முதல் நாள் நல்ல அறிவுரைகள் சொல்லும் கட்டுரை.
ReplyDeleteஇஸ்லாமிய வரலாற்றில் ஹஜரத் அலி ( ரலி) அவர்கள் கலிபாவாக ஆனது உமய்யா ( ரலி ) அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் பைய்யத் கொடுக்கவில்லை. இதை அறிந்த ரோமானிய சக்கரவர்த்தி உமய்யா அவர்களுக்கு கடிதம் எழுதுகிறான். நீங்கள் அலி ( ரலி) யை எதிர்ப்பதாக இருந்தால் படைபலங்களை ரோமானிய அரசு தரத்தயார் என்பதே கடிதத்தின் சாராம்சம்.
அதற்கு உமய்யா ( ரலி ) அவைகள் பதில் எழுதினார்கள். எங்களுக்குள் நீ வராதே! ஒருவேளை உன்னை எதிர்த்து அலி (ரலி) அவர்கள் ஒரு படையெடுப்பை நிகழ்த்தினால் அந்தப் படைக்கு நானே தலைமை தாங்குவேன் என்பதே பதில் .
ஆனால் இன்றோ நம்மமுடைய இயக்கங்களுக்குள் பிளவு ஏற்படுத்த யாராவது ஆதரவு தெரிவித்தால் உடனே அவர்களுடன் சேர்ந்து கொண்டு சொந்த சமுதாயத்தினரை எதிர்க்கத் துணிகிறோம். அல்லாஹ் காப்பானாக!
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஒரே குரலில் ஓங்கி ஒலிக்குமா ஒற்றுமை!?
அருமையான தலைப்பில் அழகான ஆக்கம்.
நம் இணையதளங்களில் மரண அறிவிப்பு பதியப்பட்டு உலகமெங்கும் தெரியும்படி செய்யப்படுகிறது.
அதற்கு மறுமொழியாக நாம் “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” என்று பின்னூட்டம் இடுகின்றோம். இது நடைமுறையில் இருந்து வருகின்றது.
இப்படி பின்னூட்டம் இடுவதற்கு பாகுபாடு பார்கின்றனர், அதாவது, எந்த தெரு ஜனாஸா என்று பார்கின்றனர் நம் மக்கள்.
அப்படியானால் எப்படிங்க ஒரே குரலில் ஒற்றுமை ஓங்கி ஒலிக்கும்?
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
பெரிய இடத்து ஜனாஸா, வசதி படைத்த ஜனாஸா, ஏழை ஜனாஸா, அநாதை ஜனாஸா. இப்படியெல்லாம் பாகு பாடுகள்
Deleteகாலத்தின் கட்டாயம் மனதில் பாரமாகி, விடைகளைத்தேடி, பதிலாக வாக்கியங்களாகி, ஒற்றுமையை வழியுறுத்தி வரையப்பட்ட, உயர்ந்த உள்ளத்தின் உன்னதமான உண்மைகள்.
ReplyDeleteபடிப்பவர்கள் தன் சொந்த விருப்பு வெறுப்புகளை அழித்துவிட்டுப் படித்தால் புண்ணியம் உண்டாகும். ஒற்றுமை தழைக்கும். மழை காலத்தே பெய்யும்.
//ஆனால் ஒரே இறைவனை வணங்குகிறோம் என்று சொல்லிக் கொள்ளும் நம்மிடையே இன்று பல்வேறு இயக்கங்கள் தோன்றி நமது ஒற்றுமைக்கும் நமது மார்க்கத்தின் கொள்கைகளுக்கும் வேட்டு வைத்துக் கொண்டு இருக்கின்றன. குருடர்கள் யானையைப் பார்த்த கதையாக அவரவர் அவரவர் மேற்கொண்டுள்ள நிலைக்குக் காரணங்களை சொன்னாலும் முடிவில் இந்தப் பிளவுகளால் பலியாவதும் கேலிக்கு ஆளாக்கப்படுவதும் மொத்தத்தில் இஸ்லாமிய சமுதாயமே என்பதை இவர்கள் உணர வேண்டும்.//
ReplyDeleteஉண்மையே ! ஆனால் உணரும் தன்மையை இழந்து பிரிந்து செல்லும் உணர்வுகள் வலிமையாக வேரூன்றிவிட்டதே ?
தனி மனிதன் பலரும் தலமைக்கு ஆசை. பெரும் பொருள் உடனடி ஈட்ட ஆசை. எதை உடைத்தால் இலகுவாக இதனை அடையமுடியும் என்று சிந்தித்து, திட்டம் தீட்டி, நுண்ணறிவில் திசைகள் தனக்கு வசதியாகப் போட்டு, வளரும் இளைஞனை; மதி வலுவிழந்த மக்களை இவர்களின் சிந்தனை ஓட்டத்திற்கு இலகுவாக பகுத்தறிவு மயக்கத்தில் மாற்றிவிட்டு, அவர்கள் மேல் இவர்கள் குதிரை ஓட்டுகிறார்கள். அறிவாளி என்ற இந்த அறிவு போதை மயக்கத்தில் இவர்கள் இருக்கும் வரை இங்கு பிரிவினைதான் இன்னும் ஏற்படும். இருபது வருடத்திற்கு முன்பு இருந்த இஸ்லாமிய சமுதாயம் பொற்காலம் என்றால் உணர்ந்தவர்கள் மறுப்புக் கூறமாட்டார்கள்.
//ஒரு சமுதாயத்தின் முதுகெலும்பாக இருப்பவர்கள் இளைஞர்கள்தான். இந்த இளைஞர்களின் எண்ணங்கள் பல்வேறு இயக்கங்களால் திசை திருப்பப்படுகின்றன. இப்படி திசை திருப்பப்படும் இளைஞர்களின் சக்திகள் வீண் விரயமாகின்றன. இந்த சக்தி ஒற்றுமையாக ஒருங்கிணைக்கபட்டால் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்ட இவர்களால் இயலும்.//
ReplyDeleteஇதுவும் உண்மையே ! வயதானவர் அவ்வளவு சீக்கிரத்தில் இஸ்லாமிய அடையாளம் தொப்பியை விடமாட்டார். மார்க்கத்தின் பெரியவர்களை எதிர்த்து பேசமாட்டார். காரணம் அறிவு விசாலத்திர்க்கு தகுந்தார்ப்போல் உண்மைகள் இருக்கும் என்ற நம்பிக்கை. அனுபவத்திலும் அதனை உணர்ந்த நிலைகள். வணக்கத்திலே அமைதியை மையமாகக் கொண்ட வழியில் விரல் ஆட்டி அமைதி; அடுத்தவர் கவனம் சிதறும் இம்மாகா கொடுஞ் செயலை அறவே செய்யமாட்டார். எங்கும் நிறைத்த இறைவனின் தூதரை தன் அறிவு தராசில் நிறுத்தி எடைபோடமாட்டார். வணக்கம்; வாழ்த்துக்கள் இதனில் இணை என்ற மிளகாய் தூவும் செய்திகளை காதில் வாங்கமாட்டார். இறைவனை வணங்குவார். இறைதூதரை வழிப்படுவார். வழிப்படுதலையும் வணக்கத்தையும் ஒன்று எனக் குழப்பும் நச்சுக்களை காதில் வாங்கமாட்டார்.
இதற்கு மறுத்து மாற்றமாக இலகுவாக இளைஞனை மாற்றமுடியும். இளரத்தம் துடிப்பில் சாதனை செய்கிறோம் என்றும், பகுத்தறிவு என்றும் நம்பி; பிசகி தொகுத்தறிவின் திறனில் இந்த உருவத்திலும்; அறிவிலும் வளரும் இளமை உடன் வீழ்ந்துவிடும். இதுவே சாம்பத்தியம் செய்கிறதென்றால் தன் அறிவே சரி ! அதன்படியே இவர் குடும்பத்தரை ஆட்டிப்படைக்கும். வேறு வழியின்றி இவரின் குடும்பத்தாரும் தலையை ஆட்டியே தீரவேண்டும். இப்படி சென்றால் பலப் பிரிவுகள் கிளை வெடித்துத் தனித்தனியாகி ஒன்றை ஒன்று எதிற்கும் இன்றைய நிலையே ஏற்படும் என்ற இதனில் மாற்றுக்கருத்தும் உண்டா ?.
எனவே ஒற்றுமையை குலைக்கும் சக்திகள் எதுவென்பதை முதலில் இனம்கண்டே அக்குணங்களை நீக்கவேண்டும்.
ஒற்றுமையை எது எது குலைக்கிறதோ அதுவே இஸ்லாத்திற்கு எதிரானது. காரணம் இஸ்லாம் அன்றால் அமைதி. அமைதி என்றால் ஒற்றுமை.
இருபது வருடத்திற்கு முந்தின ஒன்றுபட்ட இஸ்லாமிய உலகு சொர்க்கமே.
//ஒருவரை ஒருவர் மனம் புண்பட பேசுவதும் இணைய தளங்களில் எழுதுவதும் வாடிக்கையாகிவிட்ட பரிதாபமான நிலைக்கு சமுதாயம் தள்ளப்பட்டுவிட்டது.//
ReplyDeleteஆமாம் ! அப்படி எழுதினால் தான் வீரன் என்றும். அதிகம் தெரிந்தவன் என்றும், அதுதான் திறமையான இலக்கனம் என்றும் இன்றைய இளைஞன் மனதில் பதிந்துவிட்டது. பரிதாபம் !
இருபது வருடத்திற்கு முந்தின ஒற்றுமையான இஸ்லாம் சொர்க்கமே !
குலங்களாகவும் கோத்திரங்களாகவும் பிரிந்து கிடந்த அராபிய சமூகத்தை இஸ்லாம் என்ற ஒரே கயிறால் இணைத்த பெருமைக்குரியதுதான் பெருமானார் ( ஸல் ) அவர்களின் வரலாறு. உயர்வு தாழ்வு இல்லாமல் அனைவரும் தோளோடு தோள் நின்று இணைந்து ஜமாஅத் ஆகத் தொழுவதுதான் இஸ்லாத்தின் வழிபாட்டுமுறை. இந்த தொழுகை முறைக்குத்தான் இறைவனிடம் மதிப்பெண் அதிகம் என்று ஒற்றுமையை வற்புறுத்துவதும் இஸ்லாம்தான் ஆனால் இன்றோ நம் இளைய தலைமுறைகளிடம் ஒற்றுமை என்றால் என்ன அது என்ன மாதரி இயக்கம் என்கிற கேலியும் கிண்டலுமாக தான் இருக்கிறது நமது ஒற்றுமை. மாஷா அல்லாஹ் அருமையான பதிவு பெருமைக்குரிய இந்த மாதத்தில் (துல்ஹஜ்) நம் சமுதாய மக்களிடம் ஒற்றுமை எனும் உணர்வை வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் தருவானாஹ ஆமின்.
ReplyDeleteஅன்புடன்
மான் ஷேக்
Human Rights
Adirampattinam-614701