.

Pages

Sunday, December 14, 2014

2014 ல் அதிரையில் நடந்த பரபரப்பு - வரவேற்பு நிகழ்வுகள் - படங்களுடன் ஒரு பார்வை [ பகுதி 1 of 4 ]

கடந்த வருடத்தை போல் அதிரையில் நடப்பாண்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை நான்கு பகுதிகளாக தொகுத்து 'அதிரை நியூஸ்' வாசகர்களுக்கு வழங்க இருக்கிறோம்.

இந்த ஆண்டில் அதிரையில் நடந்த நிகழ்வுகள் ஏராளமாக இருந்தாலும், பதிவின் நீளம் கருதி குறிப்பிட்ட சில முக்கிய நிகழ்வுகளை மாத்திரம் பதிவதற்கு எடுத்துக் கொண்டுள்ளோம். இதில் ஜனவரி முதல் மார்ச் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பகுதி 1 எனவும், ஏப்ரல் முதல் ஜூன் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பகுதி 2 எனவும், ஜூலை முதல் செப்டம்பர் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பகுதி 3 எனவும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை பகுதி 4 என வகை படுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் மார்ச் வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:
January 1, 2014
அதிரை கடைத்தெரு மீன் மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக வந்த தாளன்சுறா மீனின் வயிற்றில் பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

January 6, 2014
அதிரையை சேர்ந்த அஷ்ரப் என்பவர் ஓட்டி வந்த இன்னோவா வாகனம் கூட்டுறவு வங்கி அருகே கடந்து செல்லும்போது எதிரே பேருந்து வருவதை அறிந்து திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் வாகனம் தனது கட்டுப்பாட்டை இழந்து சுமார் 50 அடி தூரத்தில் உள்ள [ மருத்துவர் ராஜு அவர்களின் கிளினிக் எதிரே ] மின்கம்பத்தில் மோதி விபத்தானது. இந்த சம்பவம் பரப்பரப்பாக பேசப்பட்டது.
January 7, 2014
கல்லணை கால்வாய் கோட்ட பொறுப்பில் இருக்கும் அலுவலர்களால் பட்டுக்கோட்டை வட்டார எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பாசனத்திற்காகவும், வறண்டு காணப்படும் ஏரி, குளங்களுக்கும் முறை வைத்து தண்ணீர் வழங்கப்பட்டது. மரைக்கா குளம், செக்கடி குளங்களுக்கு ஆற்று நீர் வந்தடைந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு குளங்களுக்கு தண்ணீர் வந்தடைந்ததால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
January 10, 2014
ஆலடிதெரு முகைதீன் ஜும்மா பள்ளி எதிரே அமைந்துள்ள செக்கடி குளக்கரை மேட்டில், அப்பகுதியில் வசிக்கும் இளம் சிறுவர்களின் தீவிர முயற்சியால் பசுமையை வலியுறுத்தி பூங்கா ஏற்படுத்தப்பட்டது. இந்த பூங்காவை நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலரால் தீயிட்டு கொளுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
January 28, 2014
அரசின் வேலை வாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற சிறை செல்லும் போராட்டத்தில் கலந்துகொள்ள அதிரையிலிருந்து 35 வேன்கள், 3 பஸ்கள் மற்றும் சொந்த வாகனங்களில் ஏராளமானோர் புறப்பட்டு சென்றனர்.
January 31, 2014
அதிரையிலிருந்து ஈசி ஆர் சாலை வழியாக 175 கிலோ மீட்டர் தொலைவில் இராமேஸ்வரம் செல்லும் பிராதன சாலையில் பாம்பனிலிருந்து 11 கிலோ மீட்டர் முன்பாக இடது பக்கமாக பிரியும் குறுக்கு சாலையை கடந்து சென்றால் அங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் அரியமான் கடற்கரை பகுதி அமைத்துள்ளது. பாக் நீரிணைப்பின் ஒரு பகுதியில் 150 மீட்டர் அகலமும், 2 கிலோ மீட்டர் நீளமும் உடைய இந்த கடற்கரைக்கு வார இறுதி நாட்களை கழித்திட பெருவாரியான மக்கள் செல்கின்றனர். அமைதியான சூழலில் மென்மையான குளிர்காற்று தவழ்ந்து வரும் இந்த கடற்கரையில் கண்ணாடி போன்று பளபளக்கும் கடல்நீரில் தினமும் குளித்து மகிழ்வோர் ஏராளம். குறிப்பாக இராமநாதபுரம், இராமேஸ்வரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வசிப்போர் அடிக்கடி வந்து செல்கின்றனர். இவர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதுபோல் அடிக்கடி அதிரையர்கள் இந்த கடற்கரைக்கு படையெடுத்து சென்றது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
February 1, 2014
அதிரை தாருத் தவ்ஹீத் [ ADT ] சார்பில் அதிரைக்கு மழை வேண்டி வறண்டு காணப்பட்ட நமதூர் செடியன் குளத்தில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. அடிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சிறுவர்கள், பெண்கள் உட்பட ஏராளமானோர் திரளாக வருகை தந்து கலந்துகொண்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
February 12, 2014
தமிழக அரசின் சார்பாக 2012-13 ஆம் ஆண்டு நிதியாண்டில் பதிவுத்துறை அலுவலகங்களில் இடைத்தரகர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், முறைகேடுகள் நிகழாமல் கண்காணிக்கவும் நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த புதிய பதிவுத்துறை அலுவலகங்கள் தமிழகத்தின் சில பகுதிகளில் தொடங்க கடந்த ஆண்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதில் நமதூர் அதிரையும் ஒன்று. இந்த கட்டிட பணிக்காக நமதூர் ஆலடித்தெரு பீனா மூனா குடும்பத்தைச் சேர்ந்த ஜஹபர் அலி தனக்கு சொந்தமான [ ஷிஃபா மருத்துவமனை, இண்டேன் கேஸ் அலுவலகம் அருகே உள்ள தென்றல் நகர் என்ற இடத்தில் ] 5568 சதுர அடி மனைக்கட்டு நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார். தற்போது கட்டுமான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
February 12, 2014
அரசியல் கட்சி தலைவர்களின் வருகை, பொதுக்கூட்டங்கள், புதிய நிர்வாகிகளின் புகைப்படங்கள், விளம்பரங்கள், வழிபாட்டுதல விழாக்கள் ஆகியவற்றை தொடர்ந்து திருமணம், காதுகுத்து, பிறந்தநாள், கண்ணீர் அஞ்சலி என்று கட்அவுட், பேனர்கள் கலாசாரம் அதிரையில் அசுர வளர்ச்சியைக் கண்டுள்ளது. ரயில் பெட்டிகளை போல் தொடர்ச்சியாக பேனர்களை வைத்து இருப்பது விண்ணுக்கும் மண்ணுக்கும் நின்று மக்களை மிரட்டுவது போல் இருப்பது பொதுமக்களை அதிருப்தியடைய செய்தது.
February 19, 2014
அதிரை ஆப்பக்காரத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி பத்தர் இவருடைய மகன்கள் ராதாகிருஷ்ணன் [ வயது 50 ], சேகர் [ வயது 45 ] அண்ணன் தம்பிகளான இவர்கள் இருவரும் ஆஸ்பத்திரி தெருவில் சில வருடங்களாக பேபி ஜுவல்லரி என்ற பெயரில் நகைகடை நடத்தி வருகின்றனர். பணி முடிந்ததும் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு எடுத்து சென்ற நகைகளை பறிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் தான் கொண்டு வந்திருந்த ஆயுதத்தால் இருவரையும் சரமாரியாக தாக்கியதில் ராதாகிருஷ்ணனுக்கு தலை, கைகள், முதுகு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டு காயங்களும், சேகருக்கு கையிலும், முதுகிலும் காயங்கள் ஏற்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
February 21, 2014
மத்திய அரசு கொண்டு வந்த UAPA சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி UAPA எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் அதிரை பேருந்து நிலையத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இவை பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
February 25, 2014
பொழுதுபோக்காக புகை பிடிக்கும் பழக்கத்தை ஆரம்பிப்பவர்கள் நாளடைவில் அதற்கு அடிமையாகி விடுவதுண்டு. இதனால் ஏற்படும் தீமையை அவ்வப்போது எடுத்துச்சொன்னாலும் காதில் வாங்கமாட்டார்கள்.

நாள் ஒன்றுக்கு பாக்கெட் கணக்கில் ஊதி தள்ளுவோரும் உண்டு. புகை பிடிப்பது தவறு என்று தெரிந்திருந்தாலும் இதனால் ஏற்படும் பயன் என்ன என்பதை அவர்களிடம் கேட்டால் சொல்லத்தெரியாது.

சரி விசயத்துக்கு வருவோம்...
அதிரை கடற்கரைத்தெருவை சேர்ந்தவர் தண்டையார் சிராஜுதீன் [ வயது 64 ] கடந்த 25 ஆண்டுகளாக கடற்கரைதெருவின் பிரதான பகுதியில் 'பிலால் ஸ்டோர்' என்ற பெயரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இங்கே பீடி, சிகரெட், பான்பராக், சுருட்டு, மூக்குப்பொடி உள்ளிட்ட உடல்நலனுக்கு கேடு விளைவிக்கக்கூடிய எந்தவொரு பொருளையும் விற்பனை செய்வதில்லை என்ற முடிவால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் இவருக்கு பெற்று தந்தது.
February 28, 2014
அதிரை பைத்துல்மால் சார்பில் ஜனாஸா குளிப்பாட்ட பயன்படுத்தும் மேஜைகளை நமதூர் பள்ளிகளுக்கு வழங்கியது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.
March 1, 2014
அதிரை பேருந்து நிலையத்திலிருந்து பழைய போஸ்ட் ஆபிஸ் சாலை, கடைத்தெரு, கீழத்தெரு, மேலத்தெரு வழியாக மகிழங்கோட்டை வரையிலான ஊராட்சி ஒன்றிய கிராம இணைப்பு சாலையை சீரமைத்து தர அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு, அதிரை வர்த்தக சங்கம், பல்வேறு சமுதாய அமைப்புகள், திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் அவ்வப்போது சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக வலியுறுத்தியும், அவ்வபோது ஆர்ப்பாட்டங்களும் செய்துவந்தது. இதையடுத்து பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் ரூபாய் 61 லட்சம் மதிப்பீட்டில் அதிரை பேருந்து நிலையத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்கான தார் சாலை போடும் பணி துவங்கியது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
March 3, 2014
அதிரையில் உள்ள 1 முதல் 21 வார்டுகளில் குமியும் குப்பை கூளங்களையும், கழிவுகளை அப்புறப்படுத்துவதிலும் மிகவும் உதவியாக திகழ்பவர்கள் துப்புரவு தொழிலாளர்களே. இவர்கள் அதிரையின் சுகாதார முன்னேற்றத்திற்கு ஆணிவேராக இருந்து வருகிறார்கள் என்றால் மிகையல்ல.

அதிரை பேரூராட்சியின் நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஊழியர்களாக மொத்தம் 34 பேர்கள் பணியாற்றி வருகின்றார்கள்.
வளர்ச்சிக்காக காத்திருக்கும் அதிரை பகுதிக்கு இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்றாலும், நகர் முழுவதும் குமியும் குப்பை கூளங்களை தினமும் அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இவர்கள் இருந்து வருகின்றனர் என்பதையும் மறுக்க இயலவில்லை. தினமும் அதிகாலையில் பணியை ஆரம்பிக்கும் இவர்கள் இரு குழுவினர்களாக பிரிந்து இரு வேறு பகுதிகளில் பம்பரமாக சுழன்று வருகின்றனர்.
March 4, 2014
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்றழைக்கப்படும் தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் பிராதன இரு மாநில கட்சிகள் நேரடியாக மோதிக்கொள்ள இருப்பதாக பரப்பரப்பாக பேசப்பட்ட நேரத்தில், இவர்களோடு நமதூர் நடுத்தெருவை சேர்ந்தவர் உமர் தம்பி மரைக்காயர் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிட இருப்பதாக பேசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
March 5, 2014
அதிரை சிஎம்பி லைன் பகுதியில் அமைந்துள்ள ஹனிப் பள்ளிக்கு சொந்தமான கட்டிடத்தில் கடைகள் இயங்கி வந்தன. இதில் அரசு ரேஷன் கடையும் இயங்கி வந்தது. 1200 குடும்ப அட்டைகளை கொண்டுள்ள இந்த கடையில் இப்பகுதி மற்றும் இப்பகுதியை சுற்றி வசிக்ககூடியவர்கள் ரேஷன் பொருட்களை வாங்கி செல்வார்கள். எந்நேரமும் கூட்டமாக காணப்படும் இந்த கடை போதிய இட வசதி இல்லை என்றாலும் கடையின் எதிரே உள்ள சிஎம்பி வாய்க்காலை ஒட்டிய சாலையோரத்தில் பொருட்களை வைத்து விநியோகம் செய்யப்படும். இதனால் இப்பகுதியில் வாகன நெருக்கடியும் அவ்வப்போது ஏற்படுவதுண்டு.

இதே கட்டிடத்தில் மளிகை கடையை ஜமால் முஹம்மது என்பவரும், உணவகத்தை தமீம் என்பவரும், டைலர் கடையை செல்வம் என்பவரும் நடத்தி வந்தனர். இந்த கடைகளில் நேற்று நள்ளிரவில் திடிரென தீ விபத்து ஏற்பட்டதில் அனைத்து கடைகளும் எரிந்து நாசமாகியது.
March 10, 2014
நாய்களை பிடித்து கொல்வது என்பது இப்போது தடை செய்து விட்டதால் யாருமே நாய்களைப் பிடித்துச் செல்வதில்லை. இதன் காரணமாக நாய்கள் பெருகி காணப்பட்டு வந்தது. தெருவுக்கு பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றிவந்தன. இதனால் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது.

இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நாய்களை பிடிக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அதிரையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கு சென்று நாய்களை பிடித்து கூண்டில் ஏற்றி வந்தனர். இவை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
March 18, 2014
அதிரை காதிர் முகைதீன் கல்லூரி கிரிக்கெட் அணி கடந்த [ 07-03-2014 ] மற்றும் [ 08-03-2014 ] ஆகிய தினங்களில் காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் முதல் இடத்தை பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர், துணை முதல்வர், உடற்கல்வி இயக்குனர், பேராசிரியர்கள், அலுவலக ஆய்வாக உதவியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பாராட்டினார்கள்.
March 22, 2014
முத்துப்பேட்டை பகுதியில் காணப்படும் பழக்கடை ஒன்றில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்த் போன்ற நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆப்பிள்கள் விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை கவர்ச்சிக்காக ஆப்பிள் மீது பாலிஸ் கொடுப்பது, தனித்தனியாக உறைகள் மாட்டுவது, ஸ்டிக்கர் ஒட்டி இருப்பது போன்ற செயல்களில் ஆப்பிள் மொத்த வியாபாரிகள் செய்து வருகிறார்கள். ஆப்பிள் மீது பாலிஸ் கொடுக்கும் மெழுகுகள் உடலுக்கு கெடுதல் என்று உணராமல் மக்கள் ஆப்பிள்களை ஆசையுடன் சென்று அப்படியே கடித்து சாப்பிடுவதும், சிலர் பெயரளவில் தண்ணீரில் நனைத்து விட்டு சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு பலவகை கெடுதல்கள் எற்படுவதை உணராமல் மக்கள் சாப்பிட்டு வருகிறார்கள். சமீபத்தில் நடந்த ஆய்வில் ஆப்பிள் மீது பூசப்பட்டிருக்கும் மெழுகால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும, பல்வேறு கெடுதல்கள் உடல் நலத்திற்கு ஏற்படுத்துகிறது என்று ஆய்வு செய்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஆனாலும் மக்கள் கடைகளில் கிலோ கணக்கில் வாங்கிச் செல்வதால் வேறு எந்தவொரு மாநிலத்திலும் விற்காத அளவிற்கு தமிழகத்தில் அதிக அளவில் விற்பனை ஆகுவதாக மொத்த வியாபாரிகள் கூறுகிறார்கள்.

இந்த நிலையில் முத்துப்பேட்டை பழைய பஸ்டாண்ட் அருகில் பழக்கடை வைத்திருக்கும் பாலகுமார் என்பவர் கடையில் ஏகப்பட்ட பலவித ரகங்கள் கொண்ட ஆப்பிள்கள் குவிக்கப்பட்டுள்ளது. தினமும் அதிக அளவில் ஆப்பிள்களை விற்பனை செய்யும் பாலகுமார் ஒவ்வொரு முறையும் தான் கடையில் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் ஆப்பிள் மீது பூசப்பட்டுள்ள மெழுகை கத்தியால் சுரண்டி காட்டி அதனை கெடுதலையும் உணர்த்துகிறார். மேலும் ஆப்பிள் சாப்பிடும்பொழுது இப்படி சுரண்டிவிட்டு சாப்பிடனும் என்றும,; அல்லது தோலை அகற்றிவிட்டு சாப்பிடுங்கள் என்று அட்வைஸ் செய்கிறார். மக்களின் உடல் நலத்தில் மீது அக்கறை கொண்டு வியாபாரம் செய்யும் பாலகுமார் கடையில் ஆப்பிள் வாங்குவதற்கென மக்கள் கூட்டமாக காணப்படுகிறார்கள். வாடிக்கையாளர்களும் பாலகுமாரை பாராட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.
பரபரப்பு - வரவேற்பு நிகழ்வுகள் தொடரும்...
தொகுப்பு: அதிரை நியூஸ் குழு

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.